Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது”

“உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது”

அதிகாரம் 21

“உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது”

ரியானதைச் செய்கையில் அது உனக்குள் நல்ல உணர்ச்சியை உண்டாக்குகிறது அல்லவா? — உன் தகப்பனும் தாயும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்பது உனக்குத் தெரியும், யெகோவா தேவனுங்கூட மகிழ்ச்சியடைகிறார். ஆனால் எவ்வளவு கடினமாய் நாம் பிரயாசப்பட்டாலுங்கூட, சில சமயங்களில் தவறானதை நாம் செய்துவிடுகிறோம் அல்லவா? — தவறு என்று கடவுள் சொல்வதை நாம் செய்கையில், அதுவே பாவம்.

பாவமானது நம்மெல்லாருக்கும் ஏதோ கெடுதலைச் செய்கிறதென்று பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்து காட்டினார். தம்முடைய அதிசயமான செயல்களில் அல்லது அற்புதங்களில் ஒன்றை அவர் செய்தபோது இதைக் காட்டினார்.

இந்தச் சமயத்தில் இயேசு, கலிலேயாக் கடலுக்கு அருகிலுள்ள ஒரு பட்டணத்தில் தங்கியிருந்தார். அங்கே அவரைப் பார்க்க ஒரு பெருங்கூட்டமான ஜனங்கள் வந்தனர். அத்தனை அநேக ஜனங்கள் வந்ததனால் வீட்டிற்குள் பிரவேசிப்பதற்கு மற்றவர்களுக்கு இனிமேலும் இடம் இல்லாதிருந்தது. கதவுக்கு அருகில் வருவதற்குங்கூட இனி எவருக்கும் முடியாமற்போயிற்று.

ஆனால் அதிகமதிகமாக ஜனங்கள் வந்துகொண்டேயிருந்தனர். ஒரு கூட்டமான ஆட்கள் மிகவும் நோயுற்றிருந்த ஒரு மனிதனைக் கொண்டுவந்தார்கள். அவன் திமிர்வாதமுள்ளவனாக இருந்தான். அவனை ஒரு சிறிய படுக்கையில் அல்லது கட்டிலில் வைத்துத் தூக்கிக் கொண்டுபோக நான்கு மனிதர் வேண்டியதாய் இருந்தது, ஏனென்றால் அவன் நடக்க முடியாதவனாக இருந்தான்.

இந்த நோயுற்ற மனிதனை இயேசுவினிடத்தில் கொண்டுவர அவர்கள் ஏன் விரும்பினார்கள் என்று உனக்குத் தெரியுமா? — அந்த நோயிலிருந்து இயேசு அவனைச் சுகப்படுத்தக்கூடும் என்று அவர்கள் நம்பினார்கள்.

ஆனால் வீட்டில் இவ்வளவு ஜனங்கள் நிறைந்திருக்க, இந்தத் திமிர்வாதக்காரனை அவர்கள் எப்படி இயேசுவினிடத்தில் கொண்டுசேர்க்க முடியும்? — இந்த மனிதர் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக் கூரையின் மேல் ஏறினார்கள். அது தட்டையான கூரையாக இருந்தது. அவர்கள் அதில் ஒரு பெரிய துவாரத்தை உண்டாக்கினார்கள். பின்பு அவர்கள் நேரே அந்தத் துவாரத்தின் வழியாய்க் கீழேயிருந்த அறைக்குள் அந்த நோயுற்ற மனிதனை அவனுடைய கட்டிலோடு இறக்கினார்கள். ஆ, அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட விசுவாசம் இருந்தது!

நடந்துகொண்டிருந்ததைக் கண்டபோது, வீட்டுக்குள்ளிருந்த எல்லா ஜனங்களும் ஆச்சரியமடைந்தனர். திமிர்வாதங்கொண்ட அந்த மனிதன் தன்னுடைய கட்டிலில் கிடப்பவனாய் நேராகக் கீழே அந்த அறைக்குள் இறக்கப்பட்டான். அந்த மனிதர் செய்த அந்தக் காரியத்தினிமித்தமாக இயேசு கோபங்கொண்டாரா? — இல்லவே இல்லை! அவர்கள் விசுவாசத்தைக் கண்டு அவர் மகிழ்ச்சியடைந்தார். அந்தத் திமிர் வாதக்காரனிடம்: “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.

இயேசு இதைச் சொல்வது சரி என்பதாக ஜனங்களில் சிலர் நினைக்கவில்லை. அவர் பாவங்களை மன்னிக்கக்கூடுமென்று அவர்கள் நினைக்கவில்லை. ஆகவே, தாம் உண்மையில் மன்னிக்கக்கூடும் என்று காட்டுவதற்கு, இயேசு அந்த மனிதனிடம்: “நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ,” என்று சொன்னார்.

இயேசு இதைச் சொன்னபோது, அந்த மனிதன் சுகமடைந்தான்! அவன் அதற்கு மேலும் திமிர்வாதமுள்ளவனாய் இருக்கவில்லை. இப்பொழுது மற்ற ஆட்கள் அவனை இங்குமங்கும் தூக்கிச் செல்ல அவனுக்குத் தேவையாக இல்லை. அவன் தானாகவே எழுந்திருந்து நடக்கவும் தன்னுடைய கட்டிலையுங்கூட தூக்கிக்கொண்டு செல்லவும் கூடியவனாயிருந்தான்.

இதைக் கண்ட ஜனங்கள் மிகவும் ஆச்சரியமடைந்தார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதிலுமே இதைப் போன்ற இவ்வளவு அதிசயமான எதையும் அவர்கள் ஒருபோதும் கண்டதேயில்லை.—மாற்கு 2:1-12.

இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளுகிறோம்? — பாவங்களை மன்னிப்பதற்கும் நோயுள்ள ஆட்களைச் சுகப்படுத்துவதற்கும் இயேசுவுக்கு வல்லமை இருந்ததென்பதை நாம் கற்றுக்கொள்ளுகிறோம். வேறு ஒன்றையுங்கூட நாம் கற்றுக்கொள்ளுகிறோம். பாவத்தின் காரணமாக ஆட்கள் நோயடைகிறார்கள் என்பதையும் நாம் கற்றுக்கொள்ளுகிறோம்.

நீ எப்பொழுதாவது நோய்ப்பட்டிருக்கிறாயா? — நாம் எல்லோரும் நோய்ப்படக்கூடியவர்களாக இருப்பதால், இது நாம் எல்லோரும் பாவிகள் என்று அர்த்தங்கொள்ளுகிறதா? — ஆம், நாமெல்லோரும் பாவத்தில் பிறந்திருக்கிறோமென்று பைபிள் சொல்லுகிறது.

பாவத்தில் பிறந்திருப்பது என்றால் அர்த்தம் என்னவென்று உனக்குத் தெரியுமா? — இது, நாமெல்லோரும் அபூரணமாய்ப் பிறந்திருக்கிறோமென்று அர்த்தங்கொள்ளுகிறது. நாம் விரும்பாவிட்டாலுங்கூட சில சமயங்களில் நாமெல்லோரும் தவறான காரியங்களைச் செய்கிறோம். நாம் இந்தப் போக்கை உடையவர்களாக இருப்பதன் காரணம் என்னவென்றால், முதல் மனிதனும் மனுஷியுமாகிய ஆதாமும் ஏவாளும் கடவுளுக்குக் கீழ்ப்படியவில்லை. கடவுளுடைய சட்டத்தை மீறினபோது அவர்கள் பாவஞ்செய்தார்கள். நாமெல்லோரும் ஆதாமிலிருந்து பாவத்தை அடைந்திருக்கிறோம்.

நம்முடைய பாவத்தை அவனிடத்திலிருந்து நாம் எப்படி அடைந்தோம் என்பது உனக்குத் தெரியுமா? — நீ விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு முறையில் நான் அதை உனக்கு விளக்க முயற்சி செய்கிறேன். ஒருவேளை நீ ஒரு விளையாட்டுத் தட்டில் களிமண் வைத்துத் தட்டி மண் பலகாரம் செய்திருப்பாய். அந்தத் தட்டில் ஒரு பள்ளம் பண்ணுவாயானால் அதில் நீ செய்யும் மண் பலகாரங்களுக்கு என்ன நடக்கும்? உனக்குத் தெரியுமா? — பள்ளமான அதே குறி அந்தத் தட்டில் நீ செய்யும் எல்லா மண் பலகாரங்களிலும் காணப்படும் அல்லவா? —

ஆதாம் அந்தத் தட்டைப் போலிருந்தான். நாம் எல்லோரும் அந்த மண் பலகாரங்களைப்போல் இருக்கிறோம். கடவுளுடைய சட்டத்தை மீறினபோது அவன் அபூரணன் ஆனான். இது அவன் ஒரு பள்ள வடுவை அல்லது கெட்ட குறியைப் பெற்றதுபோல் இருந்தது. ஆகவே அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தபோது, அவர்கள் எவ்விதம் இருப்பார்கள்? — அவனுடைய பிள்ளைகள் எல்லோரும் அந்த அதே அபூரணக் குறியைப் பெற்றிருப்பார்கள்.

நீ காணக்கூடிய பெரிய அபூரணம் ஏதோ ஒன்றுடன் பெரும்பான்மையான பிள்ளைகள் பிறந்தில்லை. அவர்கள் ஒரு கை இல்லாமலோ அல்லது ஒரு பக்கம் ஒரு பள்ளத்துடனோ இருப்பதில்லை. ஆனால் அந்த அபூரணமானது, அவர்கள் நோயடைந்து காலாகாலத்தில் மரித்துப்போகச் செய்வதற்குப் போதுமான அளவு பெரிதாயிருக்கிறது.

ஆம், சில ஆட்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் அதிகமாய் அடிக்கடி வியாதிப்படுகின்றனர். இது ஏன்? இது அவர்கள் அதிகப் பாவத்துடன் பிறந்திருப்பதன் காரணமாகவா? — இல்லை. ஒருவேளை அவர்களுக்குச் சாப்பிடுவதற்குப் போதுமான உணவு இராததன் காரணமாக இருக்கலாம். அல்லது ஒருவேளை அவர்கள் மட்டுக்கு மீறிய கேக்கும் மிட்டாயும் சாப்பிடுகிறவர்களாக இருக்கலாம். ஒருவேளை அவர்கள் இரவில் வெகு நேரம் கண்விழித்திருந்து போதுமான தூக்கத்தைப் பெறாமல் இருக்கலாம். அல்லது ஒருவேளை அவர்கள், மழையிலோ, குளிரிலோ வெளியே போவதற்கு முன்பு தகுந்த உடையை அணியாமல் போகிறவர்களாக இருக்கலாம்.

நாம் நோய்ப்படாமல் இருக்கக்கூடிய காலம் எப்பொழுதாவது வருமா? நாம் என்றாவது பாவத்திலிருந்து விடுவிக்கப்படுவோமா? — அந்தத் திமிர்வாதக்காரனுக்கு இயேசு என்ன செய்தார்? — அவர் அவனுடைய பாவங்களை மன்னித்து அவனைச் சுகப்படுத்தினார். இவ்விதமாய் இயேசு, சரியானதைச் செய்ய கடினமாய்ப் பிரயாசப்படுகிற யாவருக்கும், தாம் செய்யப்போவதைக் காட்டினார்.

பாவத்தை நாம் விரும்புகிறதில்லை என்றும், தவறை வெறுக்கிறோம் என்றும் நாம் காட்டுவோமானால், அவர் நம்மைச் சுகப்படுத்துவார். நமக்கு இப்பொழுது இருக்கிற பாவத்தை அவர் நீக்கிப் போடுவார். கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமாய் அவர் இதை நமக்குச் சீக்கிரத்தில் செய்வார்.

பாவம் நம்மிலிருந்து ஒரே வேளையில் முழுவதுமாய் நீக்கிப் போடப்படாது. ஒரு காலப் பகுதியில் அது செய்யப்படும். பின்பு, நம்முடைய பாவம் கடைசியாக நீக்கப்பட்டான பின், நாம் மறுபடியும் ஒருபோதும் நோய்ப்படமாட்டோம். நாமெல்லோருக்கும் பரிபூரண சுகம் இருக்கும். ஆ, அது எப்பேர்ப்பட்ட ஓர் ஆசீர்வாதமாயிருக்கும்!

(பாவம் எல்லோரையும் எப்படிப் பாதிக்கிறது, அதைக் குறித்து நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றியதில் மேலும் உதவியான எண்ணங்களுக்கு, ரோமர் 3:23; 5:12; 6:12-14, 23; 1 யோவான் 2:1 ஆகியவற்றை வாசியுங்கள்.)