Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு நல்ல அயலான்

ஒரு நல்ல அயலான்

அதிகாரம் 8

ஒரு நல்ல அயலான்

ன்னுடைய தோலின் நிறத்தைப்போல் இராமல் வேறு நிறமுள்ளவராக இருக்கும் எவராவது உனக்குத் தெரியுமா?சில இடங்களில் பெரும்பான்மையான ஆட்களுடைய தோல் கருப்பாக அல்லது பழுப்பு நிறமாக இருக்கிறது. வேறு இடங்களில் ஏறக்குறைய எல்லோருக்குமே வெள்ளைத் தோல் இருக்கிறது. அவர்கள் அவ்விதம் பிறந்திருக்கிறார்கள்.

மற்ற ஆட்களுக்கு இருப்பதைப் பார்க்கிலும் வித்தியாசமான தோல் நிறம் உனக்கு இருக்குமானால் அது உன்னை அவர்களைப் பார்க்கிலும் மேலானவனாக ஆக்கிவிடுகிறதா?கருப்பு தோலையுடைய ஒரு ஆள் வெள்ளைத் தோலையுடைய வேறு எவரையோ பார்க்கிலும் தான் மேலானவன் என்று நினைக்க வேண்டுமா? அல்லது வெள்ளைத் தோலையுடைய ஒருவன் கருப்பு தோலையுடைய ஒரு ஆளைப் பார்க்கிலும் தான் மேலானவன் என்று நினைக்கவேண்டுமா? நீ என்ன நினைக்கிறாய்?

பெரிய போதகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நாம் செவிகொடுப்போமாகில் நாம் எல்லோரிடமும் அன்பாக இருப்போம். ஒரு ஆள் எந்தத் தேசத்திலிருந்து வருகிறான் அல்லது அவனுடைய தோல் நிறம் என்ன என்பது எவ்வித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை. எல்லா வகையான ஆட்களையும் நாம் கட்டாயமாகவே நேசிக்கவேண்டும். இயேசு இதையே கற்பித்தார்.

ஒரு நாள் ஒரு யூதன் இயேசுவை ஒரு கடினமான கேள்வி கேட்கும்படி வந்தான். அதற்குப் பதில் இயேசுவுக்குத் தெரியாது என்று இந்த மனிதன் நினைத்தான். அவன் கேட்டதாவது: ‘நித்தியமாய் வாழ்ந்திருக்க நான் என்ன செய்யவேண்டும்?’

இது பெரிய போதகருக்குச் சுலபமான ஒரு கேள்வியாக இருந்தது. ஆனால் அதற்குத் தாமே பதிலளித்துவிடுவதற்குப் பதிலாக இயேசு அந்த மனிதனிடம்: ‘நாம் என்ன செய்யவேண்டும் என்று கடவுளுடைய சட்டம் சொல்லுகிறது?’ என்று கேட்டார்.

அந்த மனிதன்: ‘“உன் கடவுளாகிய யெகோவாவை நீ உன் முழு இருதயத்தோடும் நேசிக்கவேண்டும், உன் அயலானை நீ உன்னைப் போல் நேசிக்கவேண்டும்,” என்று கடவுளுடைய சட்டம் சொல்லுகிறது,’ என்று பதிலளித்தான்.

அதற்கு இயேசு: ‘நீ சரியாகப் பதில் சொன்னாய். இதை விடாமல் செய்துகொண்டிரு, நீ நித்திய ஜீவனை அடைவாய்,’ என்று சொன்னார்.

ஆனால் அந்த மனிதனுக்கு எல்லோரையும் நேசிக்க மனமில்லை. ஆகவே அவன் சாக்குப்போக்கு ஒன்றைத் தேட முயன்றான். அவன் இயேசுவினிடம்: “எனக்கு அயலான் யார்?” என்று கேட்டான். நீ அதற்கு எப்படிப் பதில் அளித்திருப்பாய்? யார் உண்மையில் உன்னுடைய அயலான்?

‘உன்னுடைய சிநேகிதரே உன் அயலார்,’ என்று இயேசு சொல்லும்படி அந்த மனிதன் ஒருவேளை விரும்பியிருக்கக்கூடும். ஆனால் மற்ற ஜனங்களைப் பற்றியதென்ன? அவர்களுங்கூட நம்முடைய அயலார்தானா?

இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க இயேசு ஒரு கதையைச் சொன்னார். அது ஒரு யூதனையும் ஒரு சமாரியனையும் பற்றியது. அது பின்வருமாறு சென்றது:

ஒரு மனிதன் எருசலேம் நகரத்திலிருந்து எரிகோவுக்குச் செல்லும் பாதையில் போய்க்கொண்டிருந்தான். இவன் ஒரு யூதன். அவன் நடந்துபோய்க்கொண்டிருக்கையில், திருடர்கள் அவனைத் திடீரென்று தாக்கிக் கொள்ளையிட்டனர். அவர்கள் அவனைக் கீழே தள்ளி, அவனுடைய பணத்தையும் அவனுடைய உடைகளையும் எடுத்துக்கொண்டனர். அந்தத் திருடர்கள் அவனை அடித்து அந்தப் பாதைக்கருகில் அவனைக் குற்றுயிராக விட்டுச் சென்றனர்.

சிறிது நேரத்திற்கப்பால் ஓர் ஆசாரியன் அந்தப் பாதை வழியே வந்தான். மிகவும் காயப்பட்டிருந்த அந்த மனிதனை அவன் பார்த்தான். அவன் என்ன செய்தான்? நீ என்ன செய்திருப்பாய்?

அந்த ஆசாரியன் வெறுமென பாதையின் அடுத்தப் பக்கத்துக்கு விலகிப் போய்விட்டான். அவன் சற்று நிற்கவுங்கூட இல்லை. அந்த மனிதனுக்கு உதவிசெய்ய எதுவுமே அவன் செய்யவில்லை.

பின்பு வெகு மதப்பற்றுள்ள மற்றொரு மனிதன் அந்தப் பாதை வழியாய் வந்தான். அவன், எருசலேமின் ஆலயத்தில் சேவிக்கும் ஒரு லேவியன். உதவி செய்வதற்கு அவன் சற்று நிற்பானா? அந்த ஆசாரியன் செய்த அதே காரியத்தைத்தான் இவனும் செய்தான். எந்த உதவியையும் அளிக்க இவன் முன்வரவில்லை. இது செய்யவேண்டிய சரியான காரியம் ஆகுமா?

கடைசியாக ஒரு சமாரியன் அந்தப் பாதை வழியாக வந்தான். அந்த யூதன் வெகு மோசமாய்க் காயப்பட்டுக் கிடப்பதை அவன் பார்த்தான். பெரும்பாலரான சமாரியரும் யூதரும் ஒருவரையொருவர் விரும்பவில்லை. ஆகவே இந்தச் சமாரியன் இந்த மனிதனுக்கு உதவி செய்யாமல் விட்டுப் போய்விடுவானா? ‘இந்த யூதனுக்கு நான் ஏன் உதவிசெய்ய வேண்டும்? நான் காயப்பட்டிருப்பேனானால் அவன் எனக்கு உதவி செய்யமாட்டான்,’ என்று அவன் தனக்குள் சொல்லிக்கொள்வானா?

இந்தச் சமாரியன் பாதையின் அருகில் கிடந்த அந்த மனிதனைப் பார்த்தான். அவனுக்காக இவன் மிகவும் மனதுருகினான். அவன் மரித்துப் போகும்படி அவனை விட்டுவிட்டுப் போக இவனால் முடியவில்லை.

ஆகவே அந்தச் சமாரியன் தான் ஏறிவந்த மிருகத்திலிருந்து இறங்கினான். அந்த மனிதனிடம் சென்று, அவனுடைய காயங்களைக் கவனிக்க ஆரம்பித்தான். அவன் அவற்றின்மேல் எண்ணெயையும் திராட்ச மதுபானத்தையும் ஊற்றினான். இது அந்தக் காயங்கள் ஆறும்படி உதவிசெய்யும். பின்பு அந்தக் காயங்களைத் துணியால் கட்டினான்.

காயப்பட்ட மனிதனை அந்தச் சமாரியன் மெதுவாகத் தன் மிருகத்தின் மேல் தூக்கிவைத்தான். பின்பு அவர்கள் ஒரு சத்திரத்துக்கு, அல்லது சிறிய உணவு விடுதிக்குப் போய்ச் சேரும்வரை பாதையில் மெள்ள சென்றனர். இங்கே அந்த சமாரியன் அந்த மனிதன் தங்குவதற்கு ஓர் இடத்தைப் பெற்று அவனை நன்றாகக் கவனித்தான்.

இப்பொழுது இயேசு தாம் பேசிக்கொண்டிருந்த அந்த மனிதனை: ‘இந்த மூன்று மனிதரில் எவன் நல்ல அயலான் என்று நீ நினைக்கிறாய்?’ என்று கேட்டார். நீ இதற்கு எப்படிப் பதிலளிப்பாய்? அந்த ஆசாரியனா, அந்த லேவியனா அல்லது அந்தச் சமாரியனா?

‘அந்தச் சமாரியனே அந்த நல்ல அயலான், அவனே நின்று காயப்பட்ட அந்த மனிதனைப் பாதுகாத்தான்,’ என்று அந்த மனிதன் பதில் சொன்னான்.

இயேசு அவனிடம்: ‘நீ சரியாய்ச் சொன்னாய். ஆகவே நீயும் போய் அந்தப்படியே செய்,’ என்று சொன்னார்.—லூக்கா 10:25-37.

இது மிக நல்ல ஒரு கதை அல்லவா?நம்முடைய அயலார் யார் என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. நம்முடைய அயலார் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அல்லர். நம்முடைய அயலார் நம் நாட்டின் ஆட்கள் மட்டுமே அல்லர், அல்லது நமக்கு இருப்பதைப் போன்ற அதே தோல் நிறத்தை உடைய ஆட்கள் மட்டுமே அல்லர். எல்லா வகையான ஆட்களும் நம்முடைய அயலாரே.

ஆகவே யாருக்காவது தீங்கு ஏற்பட்டிருப்பதை நீ காண்பாயானால் என்ன செய்வாய்?அந்த ஆள் வித்தியாசமான ஒரு தேசத்தைச் சேர்ந்தவராக அல்லது உன்னுடையதைப் பார்க்கிலும் வித்தியாசமான தோல் நிறத்தை உடையவராக இருப்பாரானால் எப்படி?அவர் அப்படியும் உன் அயலார்தான். ஆகவே நீ அவருக்கு உதவிசெய்ய வேண்டும். உதவிசெய்வதற்கு நீ வெகு சிறியவனாக இருக்கிறாய் என்று உணருவாயானால் அப்பொழுது நீ உதவிசெய்யும்படி என்னைக் கேட்கலாம். அல்லது ஒரு காவல்துறை ஆளையோ, பள்ளி உபாத்தியாயரையோ கூப்பிடலாம். இது அந்த சமாரிய மனிதனைப் போல் இருப்பதாகும்.

பெரிய போதகர் நாம் அன்புள்ளவர்களாக இருக்கும்படி விரும்புகிறார். மற்றவர்கள் யாராக இருந்தாலுஞ்சரி, அவர்களுக்கு நாம் உதவிசெய்ய வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இதன் காரணமாகவே, நல்ல அயலானாக இருந்த அந்த மனிதனைப் பற்றிய இந்தக் கதையை அவர் சொன்னார்.

(மற்ற ஜாதியாராகவும் தேசத்தவராகவும் இருக்கும் ஆட்களை நாம் எப்படிக் கருதவேண்டும் என்ற இந்தக் காரியத்தின்பேரில், அப்போஸ்தலர் 10:34, 35; 17:26; மத்தேயு 5:44-48 ஆகியவற்றையுங்கூட வாசியுங்கள்.)