Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது

அதிகாரம் 4

கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறது

உன் பெயர் என்ன?உனக்கு ஒரு பெயர் இருக்கிறது. அப்படியே எனக்கும் இருக்கிறது. பூமியில் இருந்த முதல் மனிதனுக்கும் ஒரு பெயர் இருந்தது. கடவுள் அவனை ஆதாம் என்று அழைத்தார். முதல் மனுஷி ஏவாள் என்று பெயரிடப்பட்டாள். ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும், பிள்ளைக்கும் ஒரு பெயர் இருக்கிறது.

இரவில் காணப்படும் அந்த மிக மிகப் பல நட்சத்திரங்களை நோக்கிப் பார். அவற்றிற்குப் பெயர்கள் உண்டு என்று நினைக்கிறாயா?ஆம், வானத்திலிருக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பெயரைக் கடவுள் கொடுத்தார். “அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்,” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது.—சங்கீதம் 147:4.

ஆட்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எல்லாவற்றிற்கும் பெயர்கள் இருக்கின்றன. அப்படியானால் கடவுளுக்கு ஒரு பெயர் இருக்கிறதென்று நீ நினைக்கிறாயா?இருக்கிறது என்று பெரிய போதகர் சொன்னார். ஒரு தடவை அவர் ஜெபத்தில் கடவுளிடம்: ‘உம்முடைய பெயரை என்னைப் பின்பற்றினவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன்,’ என்று சொன்னார்.—யோவான் 17:26.

கடவுளுடைய பெயர் உனக்குத் தெரியுமா?அது என்னவென்று கடவுள் தாமே நமக்குச் சொல்லுகிறார். அவர் சொல்வதாவது: “நானே யெகோவா, என் நாமம் இதுவே.” ஆகவே கடவுளுடைய பெயர் யெகோவா என்பதாகும்.—ஏசாயா 42:8.

மற்றவர்கள் உன் பெயரை நினைவில் வைத்திருக்கையில் அது உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறதா?ஆட்கள் தங்கள் பெயரால் அழைக்கப்படும்படி விரும்புகின்றனர். யெகோவாவுங்கூட ஜனங்கள் தம்முடைய பெயரைத் தெரிந்திருக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஆகவே கடவுளைப் பற்றி நாம் பேசுகையில் யெகோவா என்ற பெயரை நாம் உபயோகப்படுத்தவேண்டும்.

பெரிய போதகர் ஜனங்களிடம் பேசுகையில் கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதை உபயோகித்தார். ஒரு சமயத்தில் அவர்: “உன் கடவுளாகிய யெகோவாவை நீ உன் முழு இருதயத்தோடும் நேசிக்கவேண்டும்,” என்று சொன்னார்.—மாற்கு 12:30.

“யெகோவா” என்பது வெகு முக்கியமான ஒரு பெயர் என்று இயேசு அறிந்திருந்தார். ஆகவே கடவுளுடைய பெயரை உபயோகிக்கும்படி அவர் தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். தங்கள் ஜெபங்களிலுங்கூட கடவுளுடைய பெயரைப் பற்றிப் பேசும்படி அவர் அவர்களுக்குக் கற்பித்தார்.

வெகு காலத்திற்கு முன்பாகக் கடவுள் தம்முடைய பெயரின் முக்கியத்துவத்தை மோசே என்ற மனிதனுக்குக் காண்பித்தார். மோசே இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனாயிருந்தான். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து எனப்பட்ட ஒரு தேசத்தில் வாழ்ந்துகொண்டிருந்தனர். எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரை அடிமைகளாக்கி அவர்களை வெகு இழிவாக நடத்தினர். மோசே பெரியவனாக வளர்ந்தபோது, தன்னுடைய ஜனங்களில் ஒருவனுக்கு உதவி செய்ய முயன்றான். இது எகிப்தின் அரசனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. அவன் மோசேயைக் கொல்ல விரும்பினான்! ஆகவே மோசே எகிப்திலிருந்து ஓடிப்போய்விட்டான்.

மோசே வேறொரு தேசத்திற்குச் சென்றான். அது மீதியான் தேசமாக இருந்தது. அங்கே அவன் ஒரு மேய்ப்பனாக வேலை செய்து, ஆடுகளைப் பராமரித்து வந்தான். ஒரு நாள் ஓர் அதிசயமான காரியத்தை அவன் கண்டான். ஒரு முட்புதர் எரிந்துகொண்டிருந்தது. ஆனால் அது பொசுங்கி கரிந்து போகாமல் இருந்தது! மோசே அதைக் கூர்ந்து பார்க்கும்படி அருகில் நெருங்கிச் சென்றான்.

என்ன நடந்ததென்று உனக்குத் தெரியுமா?எரிந்து கொண்டிருந்த அந்தப் புதரின் நடுவிலிருந்து வரும் ஒரு குரலை மோசே கேட்டான். அந்தக் குரல் “மோசே! மோசே!” என்று அழைத்தது.

இப்படி அழைத்தது யார்?கடவுள் பேசிக்கொண்டிருந்தார்! மோசே செய்யும்படி கடவுள் அவனுக்கு ஒரு பெரிய வேலையை வைத்திருந்தார். கடவுள் பின்வருமாறு கூறினார்: ‘நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னை எகிப்தின் அரசனாகிய பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா.’ மோசேக்கு உதவி செய்வதாகக் கடவுள் வாக்கு கொடுத்தார்.

ஆனால் மோசே கடவுளிடம்: ‘நான் எகிப்திலிருக்கும் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், கடவுள் என்னை அனுப்பினார் என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். அவருடைய பெயர் என்ன? என்று அவர்கள் என்னைக் கேட்பார்கள் என்றால் நான் என்ன சொல்வது?’ என்றான். அதற்குக் கடவுள், ‘யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார். யெகோவாவே என்றுமாக என்னுடைய பெயர்,’ என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி மோசேயினிடம் கூறினார்.—யாத்திராகமம் 3:1-15.

யெகோவா என்னும் இந்தப் பெயரைக் கடவுள் வைத்துக்கொள்ளப் போகிறார் என்று இது காட்டுகிறது. யெகோவா என்னும் இந்தப் பெயரால் தாம் என்றுமாக அறியப்படும்படி கடவுள் விரும்பினார்.

மோசே எகிப்துக்குத் திரும்பிச் சென்றான். அங்கேயிருந்த எகிப்தியர் யெகோவாவை உண்மையில் அறியவில்லை. அவர் வெறுமென இஸ்ரவேல் புத்திரரின் ஒரு சிறிய கடவுளே என்பதாக அவர்கள் நினைத்தனர். யெகோவா பூமி முழுவதினுடைய கடவுள் என்று எகிப்தியர் நினைக்கவில்லை. ஆகவே யெகோவா எகிப்தின் அரசனிடம்: ‘என் பெயர் பூமி முழுவதிலும் அறியப்படும்படி நான் செய்யப் போகிறேன்,’ என்று கூறினார்.—யாத்திராகமம் 9:16.

யெகோவா நிச்சயமாகவே தம்முடைய பெயர் பூமி முழுவதிலும் அறியப்படும்படி செய்தார். மோசே இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக்கொண்டு வரும்படி செய்தார். பூமி முழுவதிலுமிருந்த ஜனங்கள் சீக்கிரத்தில் யெகோவாவைப் பற்றிக் கேள்விப்பட்டனர்.

இன்று பல ஜனங்கள் அந்த எகிப்தியரைப் போலவே இருக்கின்றனர். யெகோவா பூமி முழுவதினுடைய கடவுள் என்பதை அவர்கள் நம்புகிறதில்லை. ஆகவே தம்முடைய ஜனங்கள் மற்றவர்களுக்குத் தம்மைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். இயேசு இதையே செய்தார்.

இயேசுவைப் போல் இருக்க நீ விரும்புகிறாயா?அப்படியானால் கடவுளுடைய பெயர் யெகோவா என்று மற்றவர்களுக்குச் சொல். பல ஆட்களுக்கு இது தெரியாமலிருப்பதை நீ காண்பாய். பைபிளில் சங்கீதம் 83:17-லுள்ள வேதவசனத்தை நீ ஒருவேளை அவர்களுக்கு எடுத்துக் காட்டலாம். இப்பொழுதே நாம் பைபிளில் அந்த வேதவசனத்தை ஒன்றாக எடுத்துப்பார்க்கலாம். அது சொல்வதாவது: “யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர்.”

“யேகோவா” என்பதே இருக்கும் எல்லாவற்றிலும் மிக அதிக முக்கியமான பெயர். அதுவே எல்லாவற்றையும் உண்டாக்கினவருடைய பெயர். யெகோவாவை நம்முடைய முழு இருதயத்தோடும் நேசிக்க வேண்டும் என்று இயேசு சொன்னதையும் நினைவில் வைத்துக்கொள். நீ யெகோவாவை நேசிக்கிறாயா?

நாம் அவரை நேசிப்பதை எப்படிக் காட்டலாம்?ஒரு வழியானது, யெகோவா என்ற அவருடைய பெயரை மற்றவர்களுக்குச் சொல்வதாகும். மேலும், அவர் செய்திருக்கிற அதிசயமான காரியங்களைப் பற்றியும் நாம் அவர்களுக்குச் சொல்லலாம். இது யெகோவாவை மகிழ்விக்கும், ஏனென்றால் மக்கள் தம்மைப் பற்றி அறிய வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருக்கிறார். இதைச் செய்வதில் நாம் பங்குகொள்ளலாம் அல்லவா?

நாம் யெகோவாவைப் பற்றிப் பேசுகையில் எல்லோரும் செவிகொடுக்க விரும்பமாட்டார்கள். இயேசு அவரைப் பற்றிப் பேசினபோதுங்கூட பல ஆட்கள் செவிகொடுத்துக் கேட்கவில்லை. ஆனால் அது யெகோவாவைப் பற்றிப் பேசுவதிலிருந்து இயேசுவை நிறுத்திவிடவில்லை.

ஆகவே நாம் இயேசுவைப் போல் இருப்போமாக. யெகோவாவைப் பற்றித் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போமாக. இப்படிச் செய்வோமானால், நாம் அவருடைய பெயருக்கு அன்பைக் காட்டுவதனால் யெகோவா தேவன் நம்மைக் குறித்து மகிழ்ச்சி அடைவார்.

(இப்பொழுது கடவுளுடைய பெயருக்கு முக்கியத்துவத்தைக் காட்டும் இன்னும் சில வசனங்களைப் பைபிளிலிருந்து ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்: யோவான் 17:26; ஏசாயா 12:4, 5; ரோமர் 10:13.)