கடவுளுடைய வீட்டிற்கான வாஞ்சை
அதிகாரம் 38
கடவுளுடைய வீட்டிற்கான வாஞ்சை
யாரோ ஒருவருடைய வீட்டிற்குச் சாப்பிட வரும்படி நாம் அழைக்கப்பட்டிருக்கையில் அது உனக்குப் பிரியமாக இருக்கிறதா? — நாம் கடவுளுடைய வீட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தால் எப்படி, நீ போக விரும்புவாயா? —
கடவுள் ஒரு வீட்டில் வசிக்கிறதில்லை என்று நீ ஒருவேளை சொல்லலாம். நாம் வசிக்கிற விதமாய்க் கடவுள் ஒரு வீட்டில் வசிக்கிறதில்லை என்பது மெய்யே.
ஆனால் கடவுளுக்கு ஒரு “வீடு” இருந்ததென்று பெரிய போதகர் சொன்னார். மேலும் இயேசு தாம் சிறு பையனாக இருக்கும்பொழுதுங்கூட, கடவுளுடைய வீட்டிற்கு வழக்கமாய்ப் போய்வந்தார். அந்த வீடானது, எருசலேம் நகரத்தில் இருந்த யெகோவாவின் அந்த அழகிய ஆலயமே. அந்த ஆலயம் கடவுளுக்கு உரியதாக இருந்தது. அவருடைய வணக்கத்திற்காக அது உபயோகப்படுத்தப்பட்டது. ஆகவே அது “யெகோவாவின் வீடு” என்று அழைக்கப்பட்டது.
இயேசு ஒரு பையனாக இருந்தபொழுது அவர் “யெகோவாவின் வீட்டிற்கு” வெகுதூரத்தில் வாழ்ந்து வந்தார். அந்நாட்களில் ஒருவருக்கும் மோட்டார் கார் இருக்கவில்லை. அவர்கள் ஏறிச் செல்வதற்கு ரயில் வண்டிகளுங்கூட இருக்கவில்லை. ஆலயத்திற்குப் போக அவர்கள் நடக்க வேண்டும். அது அவர்கள் வாழ்ந்திருந்த இடத்திலிருந்து ஒன்றிரண்டு மணிநேர பிரயாணமாக இருக்கவில்லை. அங்கு போய்ச் சேர குறைந்தபட்சம் மூன்று நாட்களாவது அவர்கள் நடக்க வேண்டியதாக இருக்கும். திரும்பி வருவதற்கும் இன்னும் மூன்று நாட்கள் எடுக்கும். இப்படிப்பட்ட ஒரு பிரயாணம் செய்வதற்கு எடுக்கப்படும் எல்லா முயற்சியும் தகுதியானதா? “கடவுளுடைய வீட்டில்” நேரத்தைச் செலவிடுவதற்கு நீ அவ்வளவு தூரம் நடந்திருப்பாயா? —
“கடவுளுடைய வீட்டை” நேசித்த ஆட்கள் அது வெகு தூரம் என்பதாக நினைக்கவில்லை. ஒவ்வொரு வருடமும்
இயேசுவின் பெற்றோர் வணங்குவதற்காக எருசலேமுக்குப் போவார்கள். இயேசுவும் அவர்களுடன் சென்றார்.ஒரு வருடம், அவர்கள் வீட்டிற்குத் திரும்பப் பிரயாணத்தை ஆரம்பித்தபோது, இயேசு தம்முடைய குடும்பத்தாருடன் இல்லை. அவர்கள் வெகுதூரம் பிரயாணப்பட்டாகும் வரையில் ஒருவரும் கவனிக்கவில்லை. பின்பு அவருடைய பெற்றோர் அவரைத் தேடிக் கண்டுபிடிக்கத் திரும்பிச் சென்றனர். அவர் எங்கே இருந்திருப்பார் என்று நீ நினைக்கிறாய்? —
அவர்கள் அவரைச் சரியாய் ஆலயத்தில் கண்டுபிடித்தார்கள். அவர் அந்தப் போதகர்களுக்குச் செவிகொடுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் அவரை ஏதாவது கேட்கையில் அவர் அவர்களுக்குப் பதிலளிப்பார். அவர் கொடுத்த சிறந்த பதில்களைக் கண்டு அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
நிச்சயமாகவே, அவருடைய பெற்றோர் கடைசியாக அவரைக் கண்டுபிடித்தபோது வெகுவாய் மன ஆறுதலடைந்தனர். ஆனால் இயேசு கவலைப்பட்டுக் கொண்டிருக்கவில்லை. இருப்பதற்கு ஆலயம் ஒரு நல்ல இடம் என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர்: “நான் என் தகப்பனுடைய வீட்டில்தான் கட்டாயமாக இருப்பேன் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கேட்டார். அந்த ஆலயம் “கடவுளுடைய வீடு” என்பதை அவர் அறிந்திருந்தார். அங்கே இருப்பதை அவர் மிகவும் விரும்பினார்.—லூக்கா 2:41-49.
இயேசுவும் அவருடைய பெற்றோரும் வணக்கத்திற்குரிய கூட்டங்களுக்குச் சென்றது வருடத்தில் ஒருமுறை மட்டுமே அல்ல. அவர்கள் வசித்து வந்த நகரத்தில் வணக்கத்திற்குரிய கூட்டங்கள் ஒவ்வொரு வாரமும் இருந்தன.
இந்தக் கூட்டங்களில் யாராவது எழுந்திருந்து பைபிளிலிருந்து வாசிப்பார்கள். பைபிள் முழுவதையும் அவர்கள் ஒரே புத்தகத்தில் அடங்கியதாகக் கொண்டில்லை. அது நீண்ட சுருள்களில் எழுதப்பட்டிருந்தது. ஆகவே அவர்கள் தாங்கள் வாசிக்க விரும்பும் இடத்திற்கு அதை விவரித்து, பின்பு வாசிக்கத் தொடங்குவார்கள். அதன் பின்பு அது விளக்கப்படும். இந்தக் கூட்டங்களுக்குப் போவது இயேசுவின் “வழக்கமாக” இருந்ததென்று பைபிள் சொல்லுகிறது. இது இயேசு தவறாமல் சென்றார் என்று அர்த்தங்கொள்ளுகிறது.—லூக்கா 4:16.
நாமுங்கூட அதையே செய்யவேண்டும். ஆனால் இன்று “கடவுளுடைய வீடு” எங்கே இருக்கிறது? அவரை வணங்க நாம் எங்கே போக வேண்டும்? —
எருசலேமில் இயேசு சென்ற அந்த ஆலயம் அங்கே இனிமேலும் இல்லை. அது அழிக்கப்பட்டுப் போயிற்று. ஆகவே நாம் அங்கே போக முடியாது?
என்றபோதிலும் கடவுளுக்கு இன்னும் ஒரு “வீடு” இருக்கிறது. இது கற்களால் உண்டாக்கப்பட்ட ஒரு வீடு அல்ல. இது ஆட்களால் உண்டாக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி இருக்கக்கூடும்? ஒரு வீடானது வசிப்பதற்குரிய ஓர் இடம். கடவுள் தம்முடைய ஜனத்துடன் இருப்பதாகச் சொல்லுகிறார். அவர் பரலோகத்தை விட்டுவிட்டு கீழே பூமிக்கு வந்துவிடுவதில்லை. ஆனால் கடவுள் தம்முடைய ஜனத்தினிடம் அவ்வளவு நெருங்கியவராக இருப்பதால் அவர் அங்கேதானே அவர்களுடன் இருப்பதுபோல் அவர்கள் உணருகின்றனர்.—1 பேதுரு 2:5; எபேசியர் 2:22; 1 தீமோத்தேயு 3:15.
ஆகவே, நாம் “கடவுளுடைய வீட்டிற்குப்” போகையில், நாம் எங்கே போகவேண்டும்?—வணக்கத்திற்காகக் கடவுளுடைய ஜனங்கள் கூடியிருக்கிற இடத்திற்கே போக வேண்டும். அது ஒருவேளை ஒரு பெரிய கட்டடத்தில் இருக்கலாம். அல்லது சிறிய ஒன்றில் இருக்கலாம். முக்கிய காரியமானது அவர்கள் உண்மையில் கடவுளுடைய ஜனங்களாக இருப்பதே. ஆனால் அவர்கள் அவருடைய ஜனங்கள்தானா என்பதை நாம் எப்படிச் சொல்லக்கூடும்? —
அவர்களுடைய கூட்டங்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் உண்மையில் பைபிளில் இருக்கிறதைக் கற்பிக்கிறார்களா?
அவர்கள் அதை வாசித்து ஆராய்கிறார்களா? இவ்விதமே நாம் கடவுளுக்குச் செவி கொடுக்கிறோம், அல்லவா? — மேலும் “கடவுளுடைய வீட்டில்” கடவுள் சொல்வதைக் கேட்கவே நாம் எதிர்பார்ப்போம், அல்லவா? —ஆனால், பைபிள் சொல்லுகிற முறையில் நீ வாழ வேண்டியதில்லை என்று ஆட்கள் சொல்வார்களேயானால் எப்படி? அவர்கள் கடவுளுடைய ஜனங்கள் என்று நீ சொல்வாயா? —
இங்கே யோசிப்பதற்கு வேறு ஒன்றும் இருக்கிறது. கடவுளுடைய ஜனங்கள் ‘தம்முடைய பெயருக்கென்று ஒரு ஜனமாக’ இருப்பார்கள் என்பதாய் பைபிள் சொல்லுகிறது. கடவுளுடைய பெயர் என்ன? — யெகோவா என்பதே. ஆகவே அவர்களுடைய கடவுள் யெகோவாதானா என்று நாம் ஆட்களைக் கேட்கலாம். “இல்லை” என்று அவர்கள் சொல்வார்களானால், அப்பொழுது அவர்கள் அவருடைய ஜனங்கள் அல்ல என்று நாம் தெரிந்துகொள்வோம்.—அப்போஸ்தலர் 15:14.
ஆனால் யெகோவாவே தங்களுடைய கடவுள் என்று வெறுமென சொல்வது போதுமானதல்ல. அதற்கு அத்தாட்சி என்ன? அவர்கள் அவரைப்பற்றி மற்ற ஆட்களிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். ஜனங்களுக்குக் கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அவருடைய குமாரனில் அவர்களுக்கு விசுவாசம் இருக்கவேண்டும். கடவுளுடைய கட்டளைகளைக் கைக்கொள்வதன் மூலம் அவர்கள் அவருக்குத் தங்கள் அன்பைக் காட்ட வேண்டும்.—ஏசாயா 43:10.
இந்தக் காரியங்களை எல்லாம் செய்கிற ஆட்கள் நமக்குத் தெரியுமா? — அப்படியானால் நாம் அவர்களுடன் வணக்கத்திற்காகக் கூடிவர வேண்டும். மேலும் நாம் தவறாமல் அங்கே இருக்கவேண்டும். கற்பிக்கிறவர்களுக்குக் கவனமாகச் செவிகொடுத்துக்கொண்டும், கேள்விகள் கேட்கப்படுகையில் அவற்றிற்குப் பதிலளித்துக்கொண்டும் நாம் இருக்கவேண்டும். இயேசு “கடவுளுடைய வீட்டில்” இருக்கையில் அதையே செய்தார். இதை நாம் செய்வோமாகில், நாமுங்கூட “கடவுளுடைய வீட்டை” உண்மையில் வாஞ்சிக்கிறோம் என்று காட்டுகிறோம்.
(கடவுளுடைய ஜனங்களோடு கூட்டங்களில் தவறாமல் இருந்துவருவதில் நாம் இன்பங்கொள்ள வேண்டும். சங்கீதம் 122:1 [121:1, டூ.வெ.]; எபிரெயர் 10:23-25 ஆகியவற்றில் இதைப்பற்றிச் சொல்லியிருப்பதை வாசியுங்கள்.)