Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளை மறந்துவிட்ட மனிதன்

கடவுளை மறந்துவிட்ட மனிதன்

அதிகாரம் 22

கடவுளை மறந்துவிட்ட மனிதன்

ஒரு நாள் ஒரு மனிதன் இயேசுவைப் பார்க்க வந்தான். இயேசு மிகவும் ஞானமுள்ளவர் என்று அவன் அறிந்திருந்தான். அவன் இயேசுவினிடம்: ‘போதகரே, என் சகோதரன் வைத்திருக்கிற பொருட்களில் சிலவற்றை எனக்குக் கொடுக்கும்படி அவனுக்குச் சொல்லும்,’ என்று சொன்னான். அந்தப் பொருட்கள் சிலவற்றை அடைய தனக்கு உரிமை இருந்ததென்று அந்த மனிதன் நினைத்தான்.

நீ இயேசுவாக இருந்திருப்பாயானால் என்ன சொல்லியிருப்பாய்? — அந்த மனிதனுக்கு ஒரு பிரச்னை இருந்ததென்று இயேசு கண்டார். ஆனால் அந்தப் பிரச்னையானது, அவனுடைய சகோதரனுக்கு இருந்த பொருட்கள் தனக்குத் தேவையாக இருந்ததல்ல. வாழ்க்கையில் எது உண்மையில் முக்கியமானதாக இருந்ததென்பதை அவன் அறியாமல் இருந்ததே அந்த மனிதனின் பிரச்னை.

ஆகவே இயேசு அவனுக்கு ஒரு கதையைச் சொன்னார். அது கடவுளை மறந்துவிட்ட ஒரு மனிதனைப் பற்றியது. அதைக் கேட்க உனக்குப் பிரியமா? —

ஒரு மனிதன் மிகுந்த செல்வம் உடையவனாக இருந்தான். அவனுக்கு நிலங்களும் களஞ்சியங்களும் சொந்தமாக இருந்தன. அவன் பயிரிட்ட பயிர்கள் வெகு நன்றாய் விளைந்தன. விளைந்த தானியங்களையெல்லாம் சேர்த்து வைக்க தன்னுடைய களஞ்சியங்களில் அவனுக்கு இடம் இருக்கவில்லை. அவன் என்ன செய்யப்போகிறவனாக இருந்தான்?

அந்த செல்வந்தன் தனக்குத்தானே பின்வருமாறு சொல்லிக்கொண்டான்: ‘என் களஞ்சியங்களை இடித்துப் பெரியவையாகக் கட்டுவேன். பின்பு எனக்கு விளைந்த தானியங்களையும் என்னுடைய எல்லா நல்ல பொருட்களையும் இந்தப் புதிய களஞ்சியங்களில் சேர்த்து வைப்பேன்.’

இதுவே செய்ய வேண்டிய விவேகமான காரியம் என்று அந்த செல்வந்தன் நினைத்தான். அநேக பொருட்களைச் சேர்த்து வைத்ததில் தான் வெகு புத்திசாலி என்பதாக அவன் நினைத்தான். அவன் தனக்குத்தானே இவ்வாறு சொல்லிக் கொண்டான்: ‘எனக்கு அநேக நல்ல பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவை எனக்கு அநேக வருடங்களுக்கு இருந்துவரும். ஆகவே இப்பொழுது நான் கவலைப்படவேண்டியதில்லை. நான் சாப்பிட்டு, குடித்து, பூரிப்பாயிருப்பேன்.’

ஆனால் அந்த செல்வந்தனின் சிந்தனையில் ஏதோ தவறு இருந்தது. அது என்ன? — அவன் தன்னையும் தன் சொந்த இன்பத்தையும் பற்றி மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருந்தான். ஆனால் அவன் கடவுளை மறந்துவிட்டான்.

ஆகவே கடவுள் அந்த செல்வந்தனிடம் பேசினார். அவர் அவனிடம்: ‘முட்டாள் மனிதனே, நீ இன்றிரவு மரிக்கப்போகிறாய். அப்பொழுது நீ சேர்த்து வைத்தப் பொருட்கள் யாருடையதாகும்?’ என்றார்.

அந்தச் செல்வந்தன் தான் மரித்தப் பின் அந்தப் பொருட்களை உபயோகிக்க முடியுமா? — முடியாது; வேறு யாராவது அவற்றை எடுத்துக் கொள்வார்கள். “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கிறவன் இப்படியே இருக்கிறான்,” என்று இயேசு சொன்னார்.—லூக்கா 12:13-21.

நீ அந்த செல்வந்தனைப்போல் இருக்க விரும்புகிறதில்லை அல்லவா? — பொருள் சம்பந்தமான காரியங்களைச் சேர்ப்பதே வாழ்க்கையில் அவனுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. அவனுடைய தவறு அதுவே. அவன் எப்பொழுதும் இன்னும் அதிகத்தையே விரும்பிக் கொண்டிருந்தான்.

பலர் அந்தச் செல்வந்தனைப் போலவே இருக்கின்றனர். அவர்களுக்கு எப்பொழுதும் இன்னும் அதிகம் வேண்டும். ஆனால் இது பெரிய பிரச்னைகளுக்கு வழிநடத்தக்கூடும்.

உதாரணமாக, உனக்கு விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன அல்லவா? — உனக்கு இருக்கும் சில விளையாட்டுப் பொருட்கள் யாவை? சொல். —

உன்னுடைய நண்பர்களில் ஒருவனுக்கு ஒரு மாதிரி வண்டியோ ஒரு பொம்மையோ அல்லது உனக்கு இராத வேறு ஏதாவது விளையாட்டுப் பொருளோ இருக்கிறதென்றால் எப்படி? அதை அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ள நீ முயற்சி செய்வது சரியாக இருக்குமா? —

விளையாட்டுப் பொருள் ஒன்று மிக முக்கியமானதாகத் தோன்றுகிற சமயங்கள் இருக்கக்கூடும். ஆனால் சிறிது காலத்திற்குப் பின்பு அதற்கு என்ன நடக்கிறது? — அது பழையதாகிவிடுகிறது. அது உடைந்து பிளந்து போகலாம், பின்பு அது இனிமேலும் வேண்டுமென்றுங்கூட நாம் விரும்புகிறதில்லை. நிச்சயமாகவே, விளையாட்டுப் பொருட்களைப் பார்க்கிலும் மிக அதிக அருமையான ஒன்று உனக்கு இருக்கிறது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா? — அதுவே உன் உயிர். கடவுளுக்குப் பிரியமானதைச் செய்வதில் உன் உயிர் சார்ந்திருக்கிறது அல்லவா? — ஆகவே அந்த முட்டாள் செல்வந்தனைப் போல் நீ இராதே.

அந்தச் செல்வந்தனைப்போல் காரியங்களைச் செய்கிறவர்கள் பிள்ளைகள் மட்டுமே அல்லர். பெரியவர்கள் பலருங்கூட அப்படிச் செய்கின்றனர். இவர்களில் சிலர் எப்பொழுதும், தங்களுக்கு இருப்பதைப் பார்க்கிலும் இன்னும் அதிகம் வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். அந்நாளுக்குரிய உணவும், உடுத்துவதற்கு உடையும், வசிப்பதற்கு ஓர் இடமும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இன்னும் அதிகம் ஆசையாக இருக்கிறது. அவர்களுக்கு நிறைய உடைகள் வேண்டும். அவர்களுக்கு மேலும் பெரிய வீடுகள் வேண்டும். இவற்றிற்குப் பணம் தேவையாக இருக்கிறது. ஆகவே நிறைய பணத்தைச் சம்பாதிக்க அவர்கள் கடினமாய் உழைக்கின்றனர். எவ்வளவுக்கெவ்வளவு அதிக பணம் அவர்களுக்குக் கிடைக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு இன்னும் அதிகம் வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகின்றனர்.

பெரியவர்களில் சிலர் பணத்தைச் சம்பாதிக்கப் பிரயாசப்படுவதில் அவ்வளவு ஆழ்ந்திருப்பதால் தங்கள் குடும்பத்தோடு இருக்க அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கின்றனர். கடவுளுக்குக் கவனத்தைச் செலுத்தவும் அவர்களுக்கு நேரமில்லை. அவர்களுடைய பணம் அவர்களை உயிரோடு வைக்கக்கூடுமா? — இல்லை; கடவுள் மாத்திரமே இதைச் செய்யக்கூடும். தாங்கள் மரித்தப் பின்பு தங்கள் பணத்தை அவர்கள் உபயோகிக்க முடியுமா? — முடியாது; ஏனென்றால் மரித்தோர் ஒன்றுமே செய்ய முடியாதவர்களாக இருக்கின்றனர்.

அப்படியானால் பணத்தை உடையவர்களாக இருப்பது தவறா? — இல்லை. நாம் அதைக்கொண்டு உணவுப் பொருட்களை வாங்கலாம். அதைக்கொண்டு உடைகளை வாங்கலாம். பணத்தைக்கொண்டிருப்பது ஒரு பாதுகாப்பு என்று பைபிள் சொல்லுகிறது. ஆனால் நாம் பணத்தை “நேசிப்போமானால்” அப்பொழுது நமக்குத் தொந்தரவு உண்டாகும். தனக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைத்து கடவுளிடமாக ஐசுவரியவானாக இராத அந்த முட்டாள் செல்வந்தனைப்போல் நாம் இருப்போம்.—பிரசங்கி 7:12.

அந்தச் செல்வந்தன் “தேவனிடத்தில் ஐசுவரியவானாயிரா”ததால் முட்டாளாக இருந்தான் என்று பெரிய போதகர் சொன்னார். “தேவனிடத்தில் ஐசுவரியவானாக” இருப்பதென்றால் அர்த்தமென்ன? — இது நம்முடைய வாழ்க்கையில் கடவுளை முதலாவதாக வைப்பது என்று அர்த்தங்கொள்ளுகிறது. தாங்கள் கடவுளில் நம்புவதாகச் சில ஆட்கள் சொல்லுகின்றனர். அவர்கள் ஒருவேளை எப்பொழுதாவது ஒருதடவை பைபிளை வாசிக்கக்கூடும். அது போதுமானதென்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் உண்மையில் கடவுளிடமாக ‘ஐசுவரியவான்களாக’ இருக்கிறார்களா? —

ஐசுவரியவானாக இருக்கிற ஓர் ஆளுக்கு கொஞ்சத்தைப் பார்க்கிலும் அதிகம் இருக்கும். அவனுக்கு நிறைய இருக்கிறது. அவன் “தேவனிடத்தில் ஐசுவரியவானாக” இருப்பானாகில் அவனுடைய வாழ்க்கை கடவுளைப் பற்றிய மிகுதியான எண்ணங்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. அடிக்கடி கடவுளைப் பற்றிப் பேசுவதில் அவன் சந்தோஷம் கொள்ளுகிறான். அவன் செய்யும்படி கடவுள் சொல்லுகிற காரியங்களையே அவன் எப்பொழுதும் செய்து கொண்டிருக்கிறான். மேலும் கடவுளை நேசிக்கும் ஆட்களுடன் அவன் தன் நேரத்தைச் செலவிடுகிறான்.

நாம் இந்த வகையான ஆட்களாக இருக்கிறோமா? நாம் “தேவனிடத்தில் ஐசுவரியவான்”களாக இருக்கிறோமா? — நாம் பெரிய போதகரிடத்திலிருந்து உண்மையில் கற்றுக்கொள்வோமானால் அப்படி இருப்போம்.

(பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களிடமாக இருக்க வேண்டிய சரியான நோக்குநிலையைக் காட்டும் அதிகப்படியான சில வசனங்கள் இதோ பின்வருமாறு: 1 தீமோத்தேயு 6:6-10; நீதிமொழிகள் 23:4; 28:20; எபிரெயர் 13:5.)