Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காற்றின்மீதும் அலைகளின்மீதும் அதிகாரம்

காற்றின்மீதும் அலைகளின்மீதும் அதிகாரம்

அதிகாரம் 14

காற்றின்மீதும் அலைகளின்மீதும் அதிகாரம்

புயல் ஏற்பட்டு காற்று வெகு கடுமையாக அடித்துக்கொண்டிருக்கும் ஓர் சமயத்தில் நீ எப்பொழுதாவது இருந்திருக்கிறாயா? — நீ பயப்பட்டாயா? — அப்படிப்பட்ட ஒரு நேரத்தில் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் ஒரு கடுமையான புயலில் உனக்குத் தீங்கு நேரிடக்கூடும்.

ஆகவே காற்று பலமாக அடிக்க ஆரம்பிக்கையில், அல்லது வானத்திலிருந்து மின்னல் மின்னிட்டு மறைந்துகொண்டிருப்பதைக் காண்கையில் நீ என்ன செய்யவேண்டும்? நீ என்ன நினைக்கிறாய்? — வீட்டிற்குள் சென்றுவிடுவதே செய்யவேண்டிய விவேகமான காரியம். அப்படி நீ செய்யாவிட்டால், காற்றடித்து மரத்திலிருந்து ஒரு கிளையை உன் மேல் விழச் செய்யக்கூடும். அல்லது மின்னல் உன்னைத் தாக்கக் கூடும். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஆட்கள் புயல்களில் கொல்லப்படுகின்றனர்.

பலத்தக் காற்றுகள் வீசாதபடி, நீயும் நானும் அவற்றைத் தடுத்து நிறுத்தமுடியாது. கடலின் பெரும் அலைகளை நாம் அமர்த்த முடியாது. உண்மையில், இதைச் செய்யக்கூடிய உயிருள்ள மனிதன் ஒருவனுமில்லை; ஆனால் காற்றின் மீதும் அலைகளின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிருந்த ஒருவர் ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்தார் என்பது உனக்குத் தெரியுமா? — அவரே பெரிய போதகராகிய இயேசு. அவர் என்ன செய்தார் என்பதைக் கேட்க உனக்குப் பிரியமா? —

ஒரு நாள் மாலை வெகு பிந்தின நேரத்தில் கலிலேயா கடலோரத்தில் அவர் கற்பித்திருந்த பின்பு தம்முடைய சீஷரிடத்தில்: “அக்கரைக்குப் போவோம் வாருங்கள்,” என்று சொன்னார். ஆகவே அவர்கள் ஒரு படகில், ஏரியைக் கடந்து செல்லப் பிரயாணப்பட்டனர்.

இயேசு அதிகக் களைப்பாயிருந்தார். அவர் நாள் முழுவதும் கடினமாக உழைத்திருந்தார். ஆகவே அவர் அந்தப் படகின் பின்புறம் சென்று ஒரு தலையணையை வைத்துப் படுத்துக் கொண்டார். சீக்கிரத்தில் அவர் நன்றாய்த் தூங்கிவிட்டார்.

படகை அதன் போக்கில் செலுத்தும்படியாக சீஷர்கள் விழித்திருந்தனர். சிறிது நேரத்திற்கு எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் பின்பு ஒரு பலத்தக் காற்று எழும்பிற்று. அது மேலும் மேலும் கடுமையாக அடித்துக் கொண்டிருந்தது, அலைகள் விடாமல் மேலும் மேலும் பெரியவைகளாக எழும்பிக் கொண்டிருந்தன. அலைகள் படகின்மேல் மோத ஆரம்பித்துவிட்டன. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கிவிட்டது. தாங்கள் அமிழ்ந்துவிடப் போவதாக சீஷர்கள் பயப்பட்டார்கள்.

ஆனால் இயேசு பயப்படவில்லை. அவர் படகின் பின்புறத்தில் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தார். கடைசியாக, சீஷர்கள் அவரை எழுப்பி: ‘போதகரே, போதகரே, எங்களைக் காப்பாற்றும்; நாங்கள் இந்தப் புயலில் சாகப்போகிறவர்களாக இருக்கிறோம்,’ என்று சொன்னார்கள்.

இதைக் கேட்டு, இயேசு எழுந்து காற்றையும் அலைகளையும் நோக்கிப் பேசினார். “இரையாதே! அமைதலாயிரு!’ என்று அவர் சொன்னார். உடனே காற்று அடிப்பது நின்று போயிற்று. ஏரி அமைதலாயிற்று.

சீஷர்கள் ஆச்சரியமடைந்தனர். இதைப் போன்ற ஒன்றை அவர்கள் இதற்கு முன்பாக ஒருபோதும் பார்த்திருக்கவில்லை. அவர்கள்: “இவர் உண்மையில் யார், காற்றுகளுக்கும் தண்ணீருக்குங்கூட கட்டளையிடுகிறார், அவை அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே?” என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.—மாற்கு 4:35-41; லூக்கா 8:22-25.

இயேசு யார் என்று உனக்குத் தெரியுமா? — அவர் தம்முடைய மிகுந்த வல்லமையை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகிறார் என்று உனக்குத் தெரியுமா? — இயேசு அங்கே தங்களோடு இருக்கையில் சீஷர்கள் பயப்பட்டிருக்கக் கூடாது. ஏனென்றால் இயேசு சாதாரண ஒரு மனிதர் அல்ல. வேறு எந்த ஆளும் செய்யக் கூடாத அதிசயமான காரியங்களை அவர் செய்யக்கூடும். புயல் அடித்துக்கொண்டிருந்த ஒரு கடலில் அவர் ஒருமுறை செய்த வேறொன்றைப் பற்றி நான் உனக்குச் சொல்லப் போகிறேன்.

இது சிறிது காலத்திற்குப் பின்னால், வேறொரு நாளில் நடந்தது. சாயங்காலமான போது இயேசு தம்முடைய சீஷரிடம், ஒரு படகில் ஏறி தமக்கு முன்னே கடலின் அடுத்தக் கரைக்குப் போகும்படி சொன்னார். பின்பு இயேசு தனியே மலையின் மேல் ஏறினார். அங்கே தம்முடைய தகப்பனாகிய யெகோவா தேவனிடத்தில் ஜெபிப்பதற்கு அது அமைதியான ஓர் இடமாக இருந்தது.

சீஷர்கள் படகில் ஏறி, கடலைக் கடந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சீக்கிரத்திலேயே ஒரு காற்று அடிக்க ஆரம்பித்துவிட்டது. அது மேலும் மேலும் அதிகக் கடுமையாக அடித்துக்கொண்டிருந்தது. இப்பொழுது இரவு நேரமாய்விட்டது.

அந்த மனிதர் பாய்களை இறக்கிவிட்டு படகைத் துடுப்புகளால் செலுத்த ஆரம்பித்தனர். ஆனால் அவர்கள் அதிக தூரம் போகமுடியவில்லை. ஏனென்றால் அந்தப் பலத்தக் காற்று அவர்களுக்கு எதிராக அடித்துக்கொண்டிருந்தது. உயர்ந்த பெரும் அலைகளில் படகு முன்னும் பின்னுமாக ஆடி அலைவுபட்டது. தண்ணீர் உள்ளே மோதி வந்துகொண்டிருந்தது. அந்த மனிதர் கரையை அடைய முயற்சி செய்பவர்களாய்க் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தனர், ஆனால், அவர்களால் முடியவில்லை.

இயேசு இன்னும் மலையில் தனிமையாக இருந்தார். அங்கே அவர் வெகு நேரம் இருந்திருந்தார். ஆனால் இப்பொழுது தம்முடைய சீஷர் உயர்ந்தெழும்பும் அலைகளில் அபாயத்தில் இருப்பதை அவர் காண முடிந்தது. ஆகவே அவர் மலையிலிருந்து இறங்கி கடற்கரையோரத்திற்கு வந்தார். அவர் கடலில் குதித்து நீந்த ஆரம்பிக்கவில்லை, தண்ணீருக்குள் நடந்து செல்லவும் இல்லை. இல்லை, பசும் புல்லின் மேல் நாம் எவ்விதம் நடப்போமோ அவ்விதமே அந்தப் புயல் அடித்துக் கொண்டிருந்த கடலின் மேற்பரப்பின்மேல் இயேசு நடக்க ஆரம்பித்தார்.

நீ இப்படித் தண்ணீரில் நடக்க முயற்சி செய்வாயானால் என்ன நடக்கும்? உனக்குத் தெரியுமா? — நீ அமிழ்ந்து போவாய், மூழ்கிவிடவுங்கூடும். ஆனால் இயேசு வித்தியாசமானவராக இருந்தார். அவருக்கு விசேஷித்த வல்லமைகள் இருந்தன.

அந்தப் படகை அடைய வெகு தூரம், சுமார் மூன்று அல்லது நான்கு மைல்கள் இயேசு நடக்க வேண்டியதாக இருந்தது. ஆகவே இயேசு தங்களை நோக்கி தண்ணீரின் மேல் நடந்து வருவதை சீஷர்கள் கண்டபோது அது ஏறக்குறைய விடியற்காலமாக இருந்தது. ஆனால் தாங்கள் கண்டதை அவர்கள் நம்ப முடியவில்லை. அவர்கள் மிகவும் திகிலடைந்து பயத்தால் அலறினார்கள்.

அப்பொழுது இயேசு அவர்களிடம் பேசி: “திடன் கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள்,” என்றார்.

இயேசு படகிற்குள் ஏறினவுடனே புயல் நின்றுபோயிற்று. சீஷர்கள் மறுபடியுமாக ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் இயேசுவுக்கு முன்பாகத் தாழ விழுந்து: “மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன்,” என்று சொன்னார்கள்.—மத்தேயு 14:23-33; யோவான் 6:16-21.

அக்காலத்தில் வாழ்ந்திருந்து இதைப்போன்ற காரியங்களை இயேசு செய்வதைக் காண்பது எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் அல்லவா? — அதைப்போலவே அதிசயமான காரியங்களை இயேசு செய்யப்போகும் ஒரு காலத்தில் நாம் வாழக்கூடும்.

கடவுள் இயேசுவைத் தம்முடைய ராஜ்யத்தின் அரசராக்கியிருக்கிறார் என்றும், சீக்கிரத்தில் அவருடைய அரசாங்கம் மாத்திரமே இந்தப் பூமியின் மேல் ஆட்சி செய்யும் என்றும் பைபிள் சொல்லுகிறது. அப்பொழுது வாழும் எவரும் ஒரு புயலைப் பற்றி ஒருபோதும் பயப்பட வேண்டியதில்லை. தமக்குக் கீழ்ப்படிகிற யாவருக்கும் ஆசீர்வாதம் உண்டாக, இயேசு காற்றின்மீதும் அலைகளின்மீதும் தமக்கிருக்கும் அதிகாரத்தை உபயோகிப்பார். வாழ்வதற்கு அது அதிசயமான ஒரு காலமாயிருக்கும் அல்லவா? —

(கடவுள் தம்முடைய ராஜ்யத்தில் அரசராக்குகிற அரசராக இயேசுவின் இந்தப் பெரிய அதிகாரத்தைக் காட்டும் மற்ற வசனங்கள்: மத்தேயு 28:18; தானியேல் 7:13, 14; எபேசியர் 1:20-22.)