Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்”

“கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்”

அதிகாரம் 35

“கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம்”

எனக்கு ஓர் இரகசியம் தெரியும், அதைக் கேட்க உனக்குப் பிரியமா? — அது சந்தோஷத்தின் இரகசியம்.

சந்தோஷமில்லாத ஆட்கள் மிகப் பலர் இருக்கின்றனர். சிலர் மற்ற ஆட்கள் செய்யும் காரியங்களின் பேரில் மட்டுக்கு மீறி சார்ந்திருக்கின்றனர். யாராவது அவர்களுக்கு ஒரு நல்ல பொருளைக் கொடுக்கையில் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏதாவது விசேஷித்த ஒன்றை ஒருவரும் அவர்களுக்குச் செய்யவில்லையென்றால், அவர்கள் சந்தோஷமாக இருப்பதில்லை.

இதோ, இதுவே அந்த இரகசியம். ‘வாங்குவதில் இருப்பதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது,’ என்று பெரிய போதகர் சொன்னார். ஆகவே, மிக அதிக சந்தோஷமாக இருப்பவன் பொருட்களை வாங்கிக் கொள்ளுகிற ஆளல்ல, மற்றவர்களுக்குக் கொடுப்பவனே. இது உனக்குத் தெரியுமா? — —அப்போஸ்தலர் 20:35.

இது எதைக் குறிக்கிறதென்று சற்று யோசித்துப் பார். ஒரு பரிசைப் பெற்றுக் கொண்டவன் சந்தோஷமாக இருக்கமாட்டான் என்று இயேசு சொன்னாரா? — இல்லை. பரிசுகளைப் பெற்றுக்கொள்ள உனக்குப் பிரியம், அல்லவா? — எனக்குங்கூட பிரியம். நல்ல காரியங்களைப் பெற்றுக் கொள்கையில் நாம் சந்தோஷமாக இருக்கிறோம்.

ஆனால், நாம் கொடுக்கையில் அதைப் பார்க்கிலுங்கூட அதிக சந்தோஷம் இருக்கிறது என்று இயேசு சொன்னார். இயேசு எப்பொழுதும் சரியானதையே சொன்னார், அல்லவா? —

மற்றவர்களுக்கு நாம் கொடுக்கக்கூடியது எது? நீ என்ன சொல்வாய்? —

சில சமயங்களில் ஒரு பரிசைக் கொடுக்க நீ விரும்புகையில், அதற்குப் பணம் வேண்டியதாக இருக்கிறது. ஒரு கடையிலிருந்து நீ வாங்கும் ஒரு பரிசாக அது இருக்குமானால், நீ அதற்காகப் பணத்தைச் செலுத்த வேண்டியதாக இருக்கிறது. ஆகவே, இந்த வகையான பரிசை நீ கொடுக்க விரும்பினால், அந்தப் பரிசை வாங்குவதற்குப் போதுமான தொகையாகும் வரையில் நீ பணத்தைச் சேர்த்து வைக்கவேண்டியதாக இருக்கும்.

ஆனால் எல்லா பரிசுகளும் கடைகளிலிருந்து வருகிறதில்லை. நான் உனக்கு விளக்கிச் சொல்லுகிறேன். வெகு உஷ்ணமான ஒரு நாளில் ஒரு குவளை சுத்தமான குளிர்ந்த நீரைப் போல் நல்லது வேறொன்றும் இராது. அதற்காக நீ கடைக்குப் போகவேண்டியதில்லை. என்றபோதிலும் தாகமாக இருக்கிற ஒருவருக்கு நீ அதை கொடுக்கையில் கொடுப்பதிலிருந்து வரும் சந்தோஷம் உனக்கு உண்டாகக்கூடும்.

ஏதாவது ஒரு நாள் நீயும் உன் அம்மாவும் கொஞ்சம் பலகாரங்கள் செய்யலாம். அது விளையாட்டாக இருக்கும். அவை முதலாவதாக அடுப்பிலிருந்து எடுக்கப்படுகையில், விசேஷமாய் நல்ல ருசியுள்ளவையாக இருக்கும். அவை எல்லாவற்றையும் நாமே சாப்பிடுவதைப் பார்க்கிலும் நமக்கு அதிக சந்தோஷத்தை உண்டாக்கக்கூடிய எதை நாம் இந்தப் பலகாரங்களில் சிலவற்றைக்கொண்டு செய்யலாம்? —

ஆம், கொடுப்பதிலிருந்தே அதிகப்படியான சந்தோஷம் வருகிறது. அவற்றில் சிலவற்றை நாம் சாப்பிடுவதன் மூலம் சந்தோஷமான நல்ல நேரத்தை நாம் அனுபவிக்கலாம். ஆனால், அதைப் பார்க்கிலும் அதிக சந்தோஷம் நமக்கு வேண்டுமென்றால், அப்பொழுது அவற்றில் சிலவற்றைப் பொட்டலமாகச் சுற்றி நம்முடைய நண்பர்களில் ஒருவருக்குப் பரிசாகக் கொடுக்கலாம். எப்பொழுதாவது அப்படிச் செய்ய உனக்குப் பிரியமா? —

அப்போஸ்தலனாகிய பவுல், கொடுப்பதில் உண்டாகும் சந்தோஷத்தை அறிந்திருந்த ஒருவனாக இருந்தான். அவன் மற்றவர்களுக்கு எதைக் கொடுத்தான்? — கொடுப்பதற்கு, உலகத்திலேயே மிகச்சிறந்த பொருள் அவனிடத்தில் இருந்தது. கடவுளையும் இயேசுவையும் பற்றிய சத்தியத்தை அவன் அறிந்திருந்தான். அவன் இதைச் சந்தோஷமாய் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டான். மேலும் தன்னுடைய உதவிக்காக எவரும் தனக்குப் பணம் கொடுக்க அனுமதியாமல் அவன் இதைச் செய்தான்.

கொடுக்கும் சந்தோஷத்தைக் கொண்டிருக்க விரும்பின ஒரு பெண்ணை ஒரு சமயம் அப்போஸ்தலனாகிய பவுலும் அவனுடைய தோழனாகிய லூக்காவும் சந்தித்தார்கள். ஒரு ஆற்றின் அருகில் அவளை அவர்கள் சந்தித்தார்கள். அது ஜெபம் பண்ணுகிற ஓர் இடம் என்று தாங்கள் கேள்விப்பட்டதனால் பவுலும் லூக்காவும் அங்கே போயிருந்தார்கள். நிச்சயமாகவே, அங்கே சில பெண்களை அவர்கள் கண்டார்கள்.

யெகோவா தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றிய நல்ல காரியங்களைப் பவுல் இந்தப் பெண்களுக்குச் சொல்ல ஆரம்பித்தான். இவர்களில் ஒருத்தியாகிய லீதியாள் என்ற பெயருடையவள் கூர்ந்த கவனத்தைச் செலுத்தினாள். தான் கேட்டதை அவள் மிகவும் அதிகமாய் விரும்பினாள். தன்னுடைய நன்றியுணர்வைக் காட்ட தான் எதையாவது செய்ய வேண்டுமென்று அவள் விரும்பினாள்.

லூக்கா நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறான்: ‘அவள்: “நீங்கள் என்னை யெகோவாவினிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள்,” என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். நாங்கள் கட்டாயமாக வரும்படி செய்தாள்.’—அப்போஸ்தலர் 16:11-15.

கடவுளுடைய இந்த ஊழியரைத் தன்னுடைய வீட்டில் வைத்திருந்த லீதியாள் சந்தோஷங்கொண்டாள். ஆட்கள் என்றுமாக வாழ்ந்திருப்பதற்கான கடவுளுடைய வழியைப் பற்றிக் கற்றுக்கொள்ள அவர்கள் தனக்கு உதவி செய்திருந்ததன் காரணமாக அவள் அவர்களை நேசித்தாள். அவர்களுக்குச் சாப்பிடுவதற்கு உணவும் இளைப்பாறுவதற்கு ஓர் இடமும் தான் கொடுக்கக் கூடியவளாக இருந்தது அவளுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கியது.

ஆகவே, லீதியாள் கொடுத்தது அவளைச் சந்தோஷமுள்ளவளாக்கியது. ஏனென்றால் அவள் உண்மையில் கொடுக்க விரும்பினாள். இது நாம் நினைவுகூர வேண்டிய ஒன்றாக இருக்கிறது. யாராவது ஒரு பரிசைக் கொடுக்கும்படி நமக்குச் சொல்லலாம். ஆனால் அதைக் கொடுக்க நாம் உண்மையில் விரும்பாவிட்டால், கொடுப்பது அப்பொழுது நமக்குச் சந்தோஷத்தை உண்டாக்காது.

உதாரணமாக, நீ சாப்பிட விரும்பின ஒரு மைசூர்பாக்கை வைத்திருந்தால் எப்படி? நீ அதை மற்றொரு பிள்ளைக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னேன் என்றால், அதைக் கொடுத்து விடுவது உனக்குச் சந்தோஷத்தை உண்டாக்குமா? — ஆனால் உனக்கு மிகவும் பிரியமான ஒரு நண்பனை நீ சந்திக்கையில் நீ ஒருவேளை ஒரு மைசூர்பாக்கை வைத்திருப்பாய். அந்த மைசூர்பாக்கைப் பிட்டு உன்னுடைய நண்பனுக்குப் பாதி கொடுத்தால் நன்றாயிருக்கும் என்று உனக்கே தானாக இந்த எண்ணம் உண்டாகுமென்றால், அதைச் செய்வதில் நீ சந்தோஷப்படுவாய், அல்லவா? —

மேலும், சில சமயங்களில் நாம் ஒருவரை அவ்வளவு அதிகமாக நேசிப்பதால், நமக்காக எதையுமே வைத்துக்கொள்ளாமல், எல்லாவற்றையும் அவருக்குக் கொடுத்துவிட வேண்டுமென்று நாம் விரும்புகிறோம், அல்லவா? நாம் அன்பில் வளர்ந்துகொண்டு போகையில் இவ்விதமே நாம் கடவுளிடமாக உணரவேண்டும்.

இந்த விதமாய் உணர்ந்த ஒரு பெண் பெரிய போதகருக்குத் தெரியும். அவர் அவளை எருசலேமில் இருந்த ஆலயத்தில் கண்டார். அவளிடத்தில் இரண்டு சிறிய காசுகள் மாத்திரமே இருந்தன; அவளுக்கு இருந்ததெல்லாம் அதுவே. ஆனால் அவள் அவை இரண்டையும் ஒரு காணிக்கையாக அல்லது ஆலயத்திற்கு ஒரு பரிசாகப் பெட்டியில் போட்டாள். ஒருவரும் அவளை அப்படிச் செய்ய வைக்கவில்லை. அப்படிச் செய்ய அவள்தானே விரும்பினதன் காரணமாக அதைச் செய்தாள், ஏனென்றால் அவள் கடவுளை உண்மையில் நேசித்தாள். அவள் கொடுக்கக் கூடியவளாக இருந்தது அவளுக்குச் சந்தோஷத்தை உண்டாக்கியது.

ஆகவே, நாம் கொடுக்கக்கூடிய பல வழிகள் இருக்கின்றன, அல்லவா? — நாம் கொடுக்க விரும்புவதன் காரணமாக அப்படிச் செய்கையில் சந்தோஷமுள்ளவர்களாக இருப்போம் என்பது பெரிய போதகருக்குத் தெரியும். இதன் காரணமாகவே அவர்: ‘கொடுத்துப் பழகுங்கள்,’ என்று நமக்குச் சொல்லுகிறார். அதாவது, மற்றவர்களுக்குக் கொடுப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளுங்கள் என்பதாகும். இதை நாம் செய்வோமாகில், வேறு எவராவது நல்ல ஏதாவதொன்றை நமக்குச் செய்யும்படி காத்துக் கொண்டிருப்பதன் காரணமாக நாம் விசனமாயிருக்க மாட்டோம். மற்றவர்களைச் சந்தோஷப்படுத்துவதில் நாம் முற்றிலும் ஆழ்ந்திருப்போம். இதை நாம் செய்கையில், நாமே எல்லோரையும் பார்க்கிலும் மிக சந்தோஷமுள்ளவர்கள்!—லூக்கா 6:38.

(சந்தோஷத்தைக் கொண்டுவருகிற வகையான கொடுத்தலைப் பற்றிய மேலுமான சிறந்த எண்ணங்கள் மத்தேயு 6:1-4; 2 கொரிந்தியர் 9:7; லூக்கா 14:12-14 ஆகியவற்றில் காணப்படுகின்றன.)