Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’

‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’

அதிகாரம் 32

‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்’

எப்பொழுதும் கர்வத்துடனும் முரட்டுத்தனமாயும் நடந்துகொள்ள முயலும் பையன்கள் எவராவது உனக்குத் தெரியுமா? — அவர்களோடு இருக்க உனக்கு விருப்பமா? அல்லது அதைப் பார்க்கிலும் சமாதானம் பண்ணுகிற ஒருவனோடேயே இருக்க நீ விரும்புவாயா? —

என்ன வகையான ஆளைக் கடவுள் விரும்புகிறார் என்பது பெரிய போதகருக்குத் தெரியும். ‘சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்,’ ஏனென்றால் அவர்கள் “கடவுளுடைய குமாரர்” என்று அழைக்கப்படுவார்கள், என்று அவர் சொன்னார். இந்த வகையான ஆளாகவே நாம் இருக்க விரும்புகிறோம், அல்லவா? — நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க விரும்புகிறோம். — மத்தேயு 5:9.

ஆனால் சில சமயங்களில் நம்மைக் கோபமூட்டுகிற காரியங்களை மற்றவர்கள் செய்கின்றனர். அப்பொழுது நாம் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்பதுபோல் உணரக்கூடும். ஒரு சமயத்தில் இயேசுவின் சீஷருக்கு இது நடந்தது.

அவர்கள் இயேசுவுடன் எருசலேமை நோக்கிப் பிரயாணஞ்செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சிறிது தூரம் சென்றபோது, இயேசு, தாங்கள் இளைப்பாற ஓர் இடத்தைக் கண்டுபிடிக்கும்படி, சிலரைத் தங்களுக்கு முன்னால் ஒரு கிராமத்துக்கு அனுப்பினார். ஆனால் அங்கிருந்த ஜனங்கள் அவர்கள் அங்கே தங்கும்படி விரும்பவில்லை. அந்த ஜனங்கள் வித்தியாசமான மதத்தை உடையவர்களாக இருந்தனர். வணங்குவதற்காக எருசலேம் நகரத்திற்குச் சென்ற எவரையும் அவர்கள் விரும்பவில்லை.

இது உனக்குச் சம்பவித்திருக்குமானால், நீ என்ன செய்திருப்பாய்? நீ கோபமூண்டிருப்பாயா? அவர்களுக்குப் பழிக்குப் பழி செய்யவேண்டுமென்று விரும்பியிருப்பாயா? —

அதையே சீஷராகிய யாக்கோபும் யோவானும் செய்ய விரும்பினர். அவர்கள் இயேசுவினிடத்தில்: “வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசு, மற்ற ஆட்களை அந்த விதமாய் நடத்துவது சரியானதல்ல என்று அவர்களுக்குச் சொன்னார்.—லூக்கா 9:51-56.

சில சமயங்களில் ஆட்கள் நம்மை இழிவாய் நடத்தக்கூடும் என்பது மெய்யே. மற்றப் பிள்ளைகள் தங்களுடைய விளையாட்டில் உன்னைச் சேர்த்துக்கொள்ள மனமில்லாதவர்களாக இருக்கலாம். “நீ இங்கே இருக்க வேண்டியதில்லை,” என்றுங்கூட அவர்கள் ஒருவேளை சொல்லலாம். இதைப் போன்ற ஏதாவது நடக்கையில், அது நாம் வருத்த உணர்ச்சியடையும்படி செய்யக்கூடும், அல்லவா? — அவர்களிடத்தில் பழிக்குப் பழி வாங்கும்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்பதுபோல் நாம் உணரக்கூடும். ஆனால் அப்படி நாம் செய்யலாமா? —

உன்னுடைய பைபிள் பிரதியை எடுப்பாயா? நீதிமொழிகள் இருபத்திநான்காம் அதிகாரம், இருபத்தொன்பதாம் வசனத்திற்கு நாம் திருப்பலாம். அங்கே அது வாசிப்பதாவது: “அவன் எனக்குச் செய்த பிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத் தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே.”

இது உனக்கு எதைக் குறிக்கிறது? — இது நாம் பழிக்குப் பழி செய்ய பிரயாசப்படக் கூடாது என்று சொல்லுகிறது. மற்ற ஒருவன் நம்மை இழிவாக நடத்தினதற்காக நாம் அவனை இழிவாக நடத்தக் கூடாது. நாம் அப்படிச் செய்யும்படி கடவுள் விரும்புகிறதில்லை.

ஆனால் யாராவது ஒருவன் உன்னைச் சண்டைக்கு இழுக்க முயற்சி செய்வானானால் அப்பொழுது எப்படி? இழிவான பெயர்களைக்கொண்டு உன்னைக் கூப்பிடுவதன் மூலம் உன்னைக் கோபமூட்ட அவன் பிரயாசப்படுவான். அவன் உன்னைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்து நீ பயங்காளி என்று சொல்லக்கூடும். நீ ஆணல்ல, பெண் என்று உன்னை அழைக்கக்கூடும். நீ என்ன செய்ய வேண்டும்? சண்டைக்கு இழுக்கப்பட நீ உன்னை விடவேண்டுமா? —

மறுபடியுமாக, பைபிள் என்ன சொல்லுகிறதென்று நாம் பார்க்கலாம். மத்தேயு ஐந்தாம் அதிகாரம் முப்பத்தொன்பதாவது வசனத்திற்குத் திருப்பு. அங்கே இயேசு பின்வருமாறு சொல்லுகிறார்: “தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.”

இதனால் இயேசு அர்த்தங்கொண்டது என்ன? எவனாவது தன் கைமுட்டியினால் உன் முகத்தில் ஒரு பக்கம் குத்துவானானால், மறுபக்கத்திலும் அவன் உன்னைக் குத்தும்படி விடவேண்டும் என்று அவர் அர்த்தங் கொண்டாரா? — இல்லை, அவர் அப்படி அர்த்தங்கொள்ளவில்லை.

அறைவதானது கைமுட்டியினால் குத்துவதைப்போல் இல்லை. அது பிடித்துத் தள்ளுவதை அல்லது இடித்துக் தள்ளுவதைப்போல் அநேகமாய் இருக்கிறது. சண்டைக்கு இழுப்பதற்காகவே ஒருவன் இதைச் செய்கிறான். நாம் கோபம் மூளும்படி அவன் விரும்புகிறான். நாம் மெய்யாகவே கோபம் மூண்டு பதிலுக்கு அவனைப் பிடித்து அல்லது இடித்துத் தள்ளுவோமாகில், என்ன நடக்கிறது? — நாம் ஒருவேளை சண்டையில் உட்பட்டு விடுவோம்.

தம்மைப் பின்பற்றுவோர் இந்த விதமாய் நடந்து கொள்வதை இயேசு விரும்பவில்லை. ஆகவே எவனாவது நமக்கு ஒரு அறை கொடுப்பானாகில், நாம் பதிலுக்கு அவனை அறைந்துவிடக் கூடாது என்றே அவர் சொன்னார். நாம் கோபமூண்டு சண்டையில் உட்பட்டுவிடக் கூடாது. அப்படி நாம் செய்வோமானால், சண்டையை ஆரம்பித்தவனைப் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக நாம் இல்லை என்று காட்டுகிறோம்.

தொந்தரவு ஆரம்பிக்கிறதென்றால், மிகச் சிறந்த காரியமானது அங்கிருந்து போய்விடுவதேயாகும். அந்த மற்றவன் இன்னும் ஒரு சில தடவைகள் பிடித்துத் தள்ளவோ இடிக்கவோ கூடும். ஆனால் அதுவே அநேகமாய் அதன் முடிவாக இருக்கும். நீ அங்கிருந்து போய் விடுகையில், நீ கோழை என்று அது காட்டுகிறதில்லை. சரியான காரியத்தின் சார்பாக நீ உறுதி வாய்ந்தவன் என்றே அது காட்டுகிறது.

மற்ற ஆட்கள் சண்டை செய்வதைக் காண்கையில் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் அதில் உட்புகுந்து ஒருவன் சார்பிலோ மற்றவன் சார்பிலோ சேர்ந்துகொள்ள வேண்டுமா? —

எது சரியென்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. நீதிமொழிகள் இருபத்தாறாம் அதிகாரம் பதினேழாம் வசனத்திற்குத் திருப்பு. அது சொல்வதாவது: “வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப் போலிருக்கிறான்.”

ஒரு நாயின் காதுகளைப் பிடித்து இழுப்பாயானால் என்ன நடக்கும்? அது நாய்க்கு வலியுண்டாக்கும், அது வெடுக்கென்று உன்னைக் கடித்துவிடும், அல்லவா? — அந்த நாய் தன்னை விடுவித்துக் கொள்ள எவ்வளவு அதிகமாய் முயற்சி செய்கிறதோ அவ்வளவு இறுக்கமாய் நீயும் அதன் காதுகளை அழுத்திப் பிடிப்பாய். நாயும் அவ்வளவு அதிகமாய்க் கோபமூண்டதாகும். அதைப் போகவிடுவாயாகில், அது அநேகமாய் உன்னைக் கடுமையாகக் கடித்துவிடும். ஆனால் நீ அங்கே வெறுமென நின்று அதன் காதுகளை என்றுமாகப் பிடித்துக் கொண்டிருக்க முடியுமா? —

மற்ற ஆட்களுக்கு இடையில் நடக்கும் சண்டையில் நாம் கலந்து கொள்வோமானால் இந்த வகையான தொந்தரவே உண்டாகும். சண்டையை ஆரம்பித்தவன் யார் அல்லது அவர்கள் ஏன் சண்டை போடுகிறார்கள் என்பதை நாம் தெரிந்திருக்க மாட்டோம். ஒருவேளை ஒரு ஆள் அடிக்கப்பட்டுக் கொண்டிருப்பான். அவன் ஒருவேளை அந்த மற்றவனிடத்திலிருந்து எதையாவது திருடியிருக்கலாம். நாம் அவனுக்கு உதவி செய்வோமானால், நாம் ஒரு திருடனுக்கு உதவி செய்கிறவர்களாக இருப்போம். அது நல்லதாக இராது, அல்லவா? —

ஆகவே, ஒரு சண்டையை நீ காண்பாயானால் நீ என்ன செய்யவேண்டும்? — அது பள்ளிக் கூடத்தில் நடந்தால், நீ ஓடி ஒரு உபாத்தியாயரிடத்தில் சொல்லலாம். பள்ளிக்கூடத்திற்கு வெளியே எங்கேயாவது என்றால், ஒரு போலீஸ்காரரைக் கூப்பிடலாம்.

மற்ற ஆட்கள் சண்டை செய்ய விரும்பினாலுங்கூட, நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்கலாம். அவர்களுக்குச் சண்டை செய்ய விருப்பம் இருக்கலாம். ஆனால் நாம் சரியானதன் சார்பாக உறுதியுள்ளவர்கள் என்பதைக் காட்டலாம்.

(சண்டையிலிருந்து விலகியிருக்க ஓர் ஆளுக்கு உதவி செய்யக்கூடிய மேலுமான நல்ல ஆலோசனைகள் ரோமர் 12:17-21; சங்கீதம் 34:14 [33:15, டூ.வெ.]; 2 தீமோத்தேயு 2:24 ஆகியவற்றில் காணப்படுகின்றன.)