Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தற்பெருமை பேசிய பரிசேயன்

தற்பெருமை பேசிய பரிசேயன்

அதிகாரம் 36

தற்பெருமை பேசிய பரிசேயன்

தற்பெருமை பேசுவதென்றால் அர்த்தமென்ன? உனக்குத் தெரியுமா? —

இதோ ஓர் உதாரணம். உன்னால் அவ்வளவு நன்றாய்ச் செய்ய முடியாத ஏதோ ஒன்றைச் செய்ய நீ எப்பொழுதாவது முயன்றிருக்கிறாயா? ஒருவேளை விளையாட்டில் பந்தை மட்டையால் அடிக்க நீ முயன்றிருக்கலாம். அல்லது கயிற்றைச் சுழற்றிக்கொண்டு குதிக்க நீ முயன்றிருக்கலாம். அப்பொழுது எவனாவது, “ஹா! ஹா! ஹா! உன்னைப் பார்க்கிலும் நான் அதை நன்றாய்ச் செய்யக்கூடும்,” என்று என்றைக்காவது சொன்னானா? — அவன் தற்பெருமை பேசினான். அவன் தன்னைப் பற்றிப் பெருமை பாராட்டினான்.

மற்றவர்கள் இப்படிச் செய்கையில் நீ எப்படி உணருகிறாய்? உனக்கு அது பிரியமாயிருக்கிறதா? — அப்படியானால், நீ தற்பெருமை பேசுகையில் மற்றவர்கள் எந்த விதமாக உணருவார்கள் என்று நீ நினைக்கிறாய்? — “நான் உன்னைப் பார்க்கிலும் மேலானவன்,” என்று எவரிடமாவது சொல்வது அன்பாகுமா? — இப்படிச் செய்கிற ஆட்களை யெகோவா விரும்புகிறாரா? —

இப்படிப்பட்ட காரியங்களைச் செய்த சில ஆட்களைப் பெரிய போதகர் அறிந்திருந்தார். ஒருநாள் அவர் அவர்களுக்கு ஒரு கதை சொன்னார். அது ஒரு பரிசேயனையும் வரி வசூலிப்பவனையும் பற்றியது.

பரிசேயர் பெருமையுள்ள மத போதகராக இருந்தனர். மற்ற ஆட்களைப் பார்க்கிலும் தாங்களே அதிக நீதியுள்ளவர்கள் அல்லது பரிசுத்தமுள்ளவர்கள் என்பதுபோல் அவர்கள் அடிக்கடி நடந்துகொண்டனர். இயேசுவின் கதையிலிருந்த பரிசேயன் ஜெபிக்கும்படி எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்திற்குச் சென்றான்.

வரி வசூலிப்பவன் ஒருவனுங்கூட ஜெபிப்பதற்கு அங்கே போனான் என்று இயேசு சொன்னார். ஜனங்களில் மிகப் பலர் வரி வசூலிப்பவர்களை விரும்பவில்லை. வரி வசூலிப்பவர்கள் தங்களுக்கு விரோதமானவர்கள் என்பதாக அவர்கள் உணர்ந்தனர். மேலும், அதைத் தவிர, வரி வசூலிப்பவர்களில் சிலர் நேர்மையுள்ளவர்களாக எப்பொழுதும் இருக்கவில்லை.

ஆலயத்தில் அந்தப் பரிசேயன் பின்வரும் விதமாய்க் கடவுளிடம் ஜெபிக்க ஆரம்பித்தான்: ‘கடவுளே, மற்ற ஆட்களைப்போல் நான் ஒரு பாவியாக இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் ஜனங்களை மோசடி செய்கிறதில்லை அல்லது மற்றக் கெட்ட காரியங்களைச் செய்கிறதில்லை. அங்கே இருக்கிற அந்த வரி வசூலிப்பவனைப் போல் நான் இல்லை. நான் நீதியுள்ள மனிதன். வாரத்தில் இருமுறை உணவு சாப்பிடாமல் இருக்கிறேன், இவ்விதம் உம்மைப்பற்றி நினைக்க எனக்கு அதிக நேரம் இருக்கிறது. எனக்குக் கிடைக்கிற எல்லா பொருட்களிலும் பத்தில் ஒரு பங்கை நான் ஆலயத்திற்குக் கொடுக்கிறேன்.’ இந்தப் பரிசேயன், தான் நீதிமான் என்று உண்மையில் நினைத்தான், அல்லவா? — அதைப் பற்றிக் கடவுளிடத்திலுங்கூட அவன் சொல்லிவிட்டான்.

ஆனால் அந்த வரி வசூலிப்பவன் அப்படி இருக்கவில்லை. கடவுளுடைய ஆலயத்திற்கு அருகில் நெருங்கி வரவுங்கூட தான் போதிய நல்லவனாக இருப்பதாய் அவன் உணரவில்லை. தன் கண்களைப் பரலோகத்தை நோக்கி ஏறெடுக்கவுங்கூட துணியவில்லை. ஆகவே அவன் தன் தலை குனிந்தவனாய் தூரத்தில் நின்று கொண்டிருந்தான். தன்னுடைய பாவங்களைப் பற்றி அவன் வருந்தினான். மன வருத்தத்தால் தன் மார்பை அவன் அடித்துக்கொண்டான். தான் எவ்வளவு நல்லவனாக இருந்தான் என்று கடவுளிடத்தில் சொல்ல அவன் முயலவில்லை. ஆனால் அவன்: ‘கடவுளே, பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்,’ என்று ஜெபித்தான்.

இந்த மனிதரில் யார் கடவுளுக்குப் பிரியமாயிருந்தான் என்று நீ நினைக்கிறாய்? தான் அவ்வளவு நல்லவன் என்று எண்ணினவனாகிய, தற்பெருமை பேசின அந்தப் பரிசேயனா? அல்லது தன் பாவங்களைக் குறித்து மனம் வருந்தின அந்த வரி வசூலிப்பவனா? —

இயேசு பின்வருமாறு சொன்னார்: ‘கடவுளுக்கு அந்தப் பரிசேயனைப் பார்க்கிலும் அந்த வரி வசூலிப்பவனே அதிக நீதியுள்ளவனாயிருந்தான். ஏனென்றால் மற்ற ஆட்களைப் பார்க்கிலும் தான் மேலானவன் என்பது போல் காணப்படச் செய்ய முயலுகிற ஒவ்வொருவனும் தாழ்த்தப்படுவான். ஆனால் தன் சொந்தக் கண்களில் தாழ்ந்தவனாக இருக்கிறவன் உயர்த்தப்படுவான்.’—லூக்கா 18:9-14.

இயேசு கற்பித்துக் கொண்டிருந்த இந்தப் பாடத்தை நீ விளங்கிக் கொண்டாயா? — மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் மேலானவர்கள் என்று நினைப்பது தவறு என்று அவர் காட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடம் நம்முடைய வாழ்க்கையில் எப்படிப் பொருந்துகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

பள்ளிக்கூடத்தில் நீயும் மற்றொரு பிள்ளையும் சில கேள்விகள் கேட்கப்படுகிறீர்களென்று வைத்துக் கொள்வோம். நீ உடனுக்குடனே பதில்களைக் கொடுக்கக் கூடியவனாக இருந்து, அந்த மற்றப்பிள்ளை தாமதமாக பதில் சொல்லுகிறவனாக இருந்தால் எப்படி? பதில்கள் உனக்குத் தெரிந்திருக்கையில் நிச்சயமாகவே நீ நல்ல உணர்ச்சியை அடைகிறாய். ஆனால் அந்த மற்ற மாணாக்கனை மக்கு என்று சொல்வது அன்பான காரியமாக இருக்குமா? — மற்றவனைக் கெட்டவனாகக் காணப்படும்படி செய்வதன் மூலம் உன்னை நல்லவனாகக் காணப்படும்படிச் செய்ய முயலுவது சரியா? —

இதையே அந்தப் பரிசேயன் செய்தான். அந்த வரி வசூலிப்பவனைப் பார்க்கிலும் தான் மேன்மையானவன் என்று அவன் தற்பெருமை பேசினான். ஆனால் அவன் நினைத்தது தவறு என்று பெரிய போதகர் சொன்னார்.

ஏதோ ஒரு காரியத்தை ஒருவன் வேறு ஒருவனைப் பார்க்கிலும் நன்றாய்ச் செய்யக்கூடியவனாக இருக்கலாம் என்பது மெய்யே. ஆனால் அது, அவன் மேம்பட்ட ஆள் என்று அர்த்தங்கொள்ளுகிறதா? —

இதை யோசித்துப் பார். நமக்கு அதிகம் தெரியுமென்றால் நாம் தற்பெருமை பாராட்ட வேண்டுமா? — நம்முடைய சொந்த மூளையை நாமே உண்டாக்கிக் கொண்டோமா? — இல்லை, கடவுளே மனிதனுக்கு மூளையைக் கொடுத்தவர். மேலும் நாம் தெரிந்திருக்கிற எல்லா காரியங்களையும் யாரோ ஒருவரிடத்திலிருந்தே நாம் கற்றறிந்தோம். ஒருவேளை நாம் ஒரு புத்தகத்திலிருந்து வாசித்திருக்கலாம். அல்லது ஒருவேளை யாராவது ஒருவர் நமக்குச் சொல்லியிருக்கலாம். நாம் நாமே கவனித்து யோசித்துக் கண்டுபிடித்தோம் என்றாலுங்கூட, நாம் அதை எப்படிச் செய்தோம்? கடவுள் உண்டாக்கியிருந்த காரியங்களைப் பார்ப்பதன்மூலமே அப்படிச் செய்தோம். நமக்கு இருக்கும் எல்லாம் யாரோ ஒருவரிடத்திலிருந்து வந்தது.

சிலர் பலமுள்ளவர்களாக இருக்கின்றனர். அது அவர்களை மற்ற எல்லோரையும் பார்க்கிலும் மேம்பட்டவர்களாக ஆக்கிவிடுகிறதா? — தங்கள் சொந்த உடல்களை அவர்கள் தாங்களே உண்டாக்கிக்கொள்ளவில்லை, அல்லவா? — மனிதனுக்குத் தசைகளைத் தந்தவர் கடவுளே. நாம் சாப்பிட்டு பலமுள்ளவர்களாக இருக்கும்படி உணவை வளரச் செய்கிறவருங்கூட கடவுளே.

ஆகவே, தற்பெருமை பேசுவதற்கு நம்மில் எவருக்காவது காரணம் இருக்கிறதா? நாம் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலானவர்களா? — நாம் எவ்வளவு நல்லவர்களாக இருக்கிறோம் என்று மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருப்பதற்குப் பதிலாக, யெகோவா எவ்வளவு மிக நல்லவராக இருக்கிறார் என்பதையே நாம் உண்மையில் அவர்களுக்குச் சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும், அல்லவா? — ஏனென்றால் நாம் காரியங்களை நன்றாகச் செய்யக்கூடும்படிச் செய்கிறவர் அவரே.

ஒருவன் கடுமையாக முயற்சி செய்கையில், அவனுக்கு நல்ல உற்சாக உணர்ச்சியை உண்டாக்கக்கூடிய ஏதோ ஒன்றைச் சொல்வதே அன்பான காரியம். அவன் செய்தது உனக்குப் பிரியமாக இருக்கிறது என்று அவனுக்குச் சொல். அதைப் பார்க்கிலும் நன்றாகச் செய்யும்படி நீ அவனுக்கு உதவியுங்கூட செய்யலாம். அதையே மற்றவர்கள் உனக்குச் செய்ய நீ விரும்புவாய், அல்லவா? — ‘மற்றவர்கள் உங்களுக்கு எப்படி செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்,’ என்று இயேசு சொன்னார். பின்பற்றுவதற்கு இது ஒரு நல்ல விதி, அல்லவா? — —லூக்கா 6:31.

இதை நாம் செய்வோமானால் நாம் ஒருபோதும் பெருமை பாராட்டவோ தற்பெருமை பேசவோ மாட்டோம். தற்பெருமை பேசின அந்தப் பரிசேயனைப்போல் நாம் இருக்கமாட்டோம்.

(பெருமையும் தற்பெருமை பேசுவதும் தவிர்க்க வேண்டிய காரியங்கள். நீதிமொழிகள் 16:5, 18; 1 கொரிந்தியர் 4:7; 13:4 ஆகிய இந்த வேத வசனங்கள் சொல்வதை வாசியுங்கள்.)