நம்முடைய சகோதரர் சகோதரிகளிடத்தில் அன்பாயிருப்பது
அதிகாரம் 19
நம்முடைய சகோதரர் சகோதரிகளிடத்தில் அன்பாயிருப்பது
உனக்கு எத்தனை சகோதரரும் சகோதரிகளும் இருக்கிறார்கள்? — வீட்டில் அவரவருடைய குடும்பத்தில் ஒரு சகோதரனோ சகோதரியோ எல்லோருக்கும் இருப்பதில்லை. உனக்கு யாராவது ஒருவர் மட்டுமே இருந்தாலுங்கூட நீ நன்றியுள்ளவனாக இருக்கலாம்.
சில ஆட்களுடன் நாம் விசேஷமாய் நெருங்கியவர்களாக உணரும்படி கடவுள் நம்மை உண்டாக்கியிருக்கிறார். நமக்குப் பல நண்பர்கள் இருக்கக்கூடும், ஆனால் சாதாரணமாய் சகோதரரும் சகோதரிகளும் நண்பர்களைப் பார்க்கிலுங்கூட அதிகமாய் ஒருவருக்கொருவர் கவலை கொள்வார்கள். ஒருவன் துன்பத்தில் இருக்கையில், மற்றவன், அதிலிருந்து வெளியேற அவனுக்கு உதவி செய்கிறான். இப்படிப்பட்ட சகோதரனே உனக்கு இருக்க நீ விரும்புவாய் அல்லவா? —
ஆனால் எல்லோரும் தங்கள் சகோதரனிடத்திலோ சகோதரியினிடத்திலோ அன்புள்ளவர்களாக இருப்பதில்லை. தன்னுடைய சகோதரனை அடித்த ஒருவனைப்பற்றி பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அவனுடைய பெயர் உனக்குத் தெரியுமா? — அவன் காயீன், முதல் மனிதனுடைய ஒரு குமாரன்.
குடியானவனாக ஒரு நாள் காயீன் தான் பயிர் செய்த உணவுப் பொருட்கள் சிலவற்றை எடுத்தான். இந்த உணவுப் பொருட்களை யெகோவாவுக்கு நன்கொடையாக அல்லது காணிக்கையாக அவன் செலுத்தினான். அவனுடைய சகோதரனாகிய ஆபேலுங்கூட யெகோவாவுக்குக் காணிக்கை செலுத்தினான். ஆபேல் தனக்கிருந்த மிகச் சிறந்த செம்மறியாடுகளைக் கடவுளுக்குச் செலுத்தினான். கடவுள் ஆபேலிலும் அவனுடைய காணிக்கையிலும் பிரியங்கொண்டார். ஆனால் காயீனிலும் அவனுடைய காணிக்கையிலும் அவர் பிரியங்கொள்ளவில்லை.
இது ஏன்? — ஆபேல் மிக அதிகத்தைச் செலுத்தினதன் காரணமாக அல்ல.
மேலும் அவன் செம்மறியாட்டைச் செலுத்தின அதுதானேயும் வித்தியாசத்தை உண்டுபண்ணிவிடவில்லை. ஆட்களின் இருதயங்களில் என்ன இருக்கிறதென்று கடவுள் காணக்கூடும் என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. நம்முடைய உள்ளத்தின் ஆழத்தில் எப்படி உணருகிறோம் என்பதை அவர் அறிந்திருக்கிறார்.காயீனின் இருதயத்தில் கடவுள் கண்டது என்ன? — காயீன் தன் சகோதரனை உண்மையில் நேசிக்கவில்லை என்பதை அவர் கண்டார். ஆபேலிலும் அவனுடைய காணிக்கையிலும் யெகோவா பிரியங்கொண்டார் என்று காயீன் காணக்கூடியவனாயிருந்தான். ஆனால் காயீன் தன் சகோதரனைப்போல் இருக்கும்படியாகத் தன்னை மாற்றிக்கொள்ள பிரயாசப்பட்டானா? — இல்லை. அவன் கோபமடைந்தான்.
காயீன் தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்று யெகோவா அவனுக்குச் சொன்னார். ஆனால் காயீன் செவிகொடுக்கவில்லை. அவன் கடவுளை உண்மையில் நேசித்திருந்தால், அவருக்குக் கவனத்தைச் செலுத்தியிருப்பான். ஆனால் அவன் கடவுளை நேசிக்கவில்லை. தன்னுடைய சகோதரனையும் நேசிக்கவில்லை.
ஆகவே, ஒரு நாள் அவன் ஆபேலினிடம்: “நாம் வயல் வெளிக்குள் போகலாம்,” என்று சொன்னான். காயீன் தன் இருதயத்தில் கெட்ட காரியத்தை வைத்திருந்தான். ஆனால் ஆபேலுக்கு அது தெரியாது. ஆபேல் காயீனுடன் சென்றான். அவர்கள் அங்கே வயல்வெளியில் தனிமையாக இருக்கையில், காயீன் தன் சகோதரனை அடித்தான். அவனை அவ்வளவு மூர்க்கமாக அடித்ததனால் அவன் அவனைக் கொன்றுவிட்டான். இது பயங்கரமாக இருக்கிறதல்லவா? — —ஆதியாகமம் 4:2-8.
நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய ஒரு முக்கிய பாடம் இருக்கிறதென்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. அது என்னவென்று உனக்குத் தெரியுமா? — “நாம் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. பொல்லாங்கனால் உண்டாயிருந்த காயீனைப் போலிருக்க வேண்டாம்.” ஆகவே சகோதரரும் சகோதரிகளும் ஒருவருக்கொருவர் அன்புள்ளவர்களாக இருக்கவேண்டும். அவர்கள் காயீனைப்போல் இருக்கக்கூடாது.—1 யோவான் 3:11, 12.
காயீனைப்போல் இருப்பது ஏன் அவ்வளவு கெட்டதாயிருக்கும்? — ஏனென்றால் அவன் “பொல்லாங்கனால் உண்டாயிருந்தான்,” என்று பைபிள் சொல்லுகிறது. காயீன் பிசாசைப்போல் நடந்துகொண்டதால், பிசாசு அவனுடைய தகப்பனாக இருந்தான் என்றதுபோல் இருந்தது. இதை நினைத்துப்பார்!
உன் சகோதரரையும் சகோதரிகளையும் நேசிப்பது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை நீ காண்கிறாயா? — நீ அவர்களை நேசிக்காவிட்டால், யாருடைய பிள்ளையாக இருப்பாய்? — நீ பிசாசின் ஒரு பிள்ளையாக இருப்பாய். நீ அப்படி இருக்க விரும்பமாட்டாய் அல்லவா? — ஆகவே கடவுளுடைய ஒரு பிள்ளையாக இருக்க விரும்புகிறாய் என்பதை நீ எப்படி நிரூபிக்கக்கூடும்? — உன் சகோதரர் சகோதரிகளை உண்மையில் நேசிப்பதன் மூலமே.
ஆனால் அன்பு என்றால் என்ன? — அன்பானது மற்ற ஆட்களுக்கு நல்ல காரியங்களைச் செய்ய விரும்பும்படி நம்மைச் செய்விக்கிற நமக்குள் இருக்கும் ஆழ்ந்த உணர்ச்சியேயாகும். மற்றவர்களிடத்தில் நல்ல உணர்ச்சி நமக்கு இருக்கையில் நாம் அவர்களை நேசிக்கிறோம் என்று காட்டுகிறோம். அவர்களுக்கு நல்ல காரியங்களை நாம் செய்கையில் அந்த அன்பை வெளிக்காட்டுகிறோம். நாம் யாரையாவது உண்மையில் நேசிப்போமானால், அவன் நமக்கு நல்ல ஏதாவதொன்றை முதல் செய்யும் வரையாக நாம் அவனுக்கு நல்லதைச் செய்வதை நிறுத்தி வைத்திருப்போமா? —
கடவுள் அப்படிச் செய்கிறதில்லை. நாம் கடவுளை நேசிப்பதற்கு முன்பாகவே, கடவுள் நம்மை நேசித்தார். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். மற்றவர்கள் நமக்கு அன்பைக் காட்டுவதற்கு முன்பாகவே, நாம் அவர்களை நேசிக்கிறோம் என்று நாம் காட்டலாம்.
ஒரே வீட்டில் தங்களோடு வாழ்ந்துவருகிற அந்தச் சகோதரர் மட்டுமல்லாமல் மேலும் பல சகோதரரும் சகோதரிகளும் கிறிஸ்தவர்களுக்கு இருக்கின்றனர் என்று பைபிள் சொல்லுகிறது. அவர்கள் யாவர் என்று உனக்குத் தெரியுமா? — “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்,” என்று இயேசு சொன்னார். கடவுளுடைய சித்தத்தைச் செய்கிற எல்லோரும் சகோதரரும் சகோதரிகளுமாக இருக்கின்றனர் என்பது இதன் அர்த்தம். இவர்கள் சகோதரர் சகோதரிகளாலாகிய ஒரு விசேஷித்தக் குடும்பமாக இருக்கின்றனர். இது உனக்குத் தெரியுமா? — —இந்தப் பெரிய கிறிஸ்தவ குடும்பத்திலுள்ள எல்லா சகோதரர் சகோதரிகளையும் நீ நேசிக்கிறாயா? — நாம் அப்படிச் செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதனால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்,” என்று அவர் சொன்னார். இவர்களில் ஒரு சிலரை மாத்திரமே நாம் நேசிக்க முடியாது. நம்முடைய சகோதரர் சகோதரிகள் எல்லோரையும் நாம் நேசிக்கவேண்டும்.—யோவான் 13:35.
நாம் அவர்களை உண்மையில் நேசிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காண்பிக்கக்கூடும்? — நாம் அவர்களை நேசிப்போமானால், அவர்களிடம் பேச நாம் விரும்பாததன் காரணமாக அவர்களிடத்திலிருந்து நம்மைத் தூர ஒதுக்கி வைத்துக்கொள்ள மாட்டோம். அவர்கள் எல்லோரிடத்திலும் நாம் சிநேகபாவத்துடன் இருப்போம். நாம் எப்பொழுதும் அவர்களுக்கு நல்லதைச் செய்வோம். அவர்கள் எப்பொழுதாவது கஷ்டத்தில் இருப்பார்களேயாகில் நாம் அவர்களுக்கு உதவிசெய்ய முன்வருவோம், ஏனென்றால் நாம் மெய்யாகவே ஒரு பெரிய குடும்பமாக இருக்கிறோம்.
நம்முடைய சகோதரர் சகோதரிகள் யாவரையும் நாம் உண்மையில் நேசிக்கையில், இது எதை நிரூபிக்கிறது? — இது, நாம் பெரிய போதகராகிய இயேசுவின் சீஷராக இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. நாம் இருக்க விரும்புவது இதுவே அல்லவா? —
(நம்முடைய சகோதரர் சகோதரிகளிடத்தில் அன்பு காட்டுவதைப் பற்றி 1 யோவான் 4:8, 20, 21-லும் கலாத்தியர் 6:10-லுங்கூட பேசப்பட்டிருக்கிறது. உன் சொந்த பைபிளை எடுத்து இந்த வசனங்களை ஏன் வாசிக்கக்கூடாது?)