Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்லதைச் செய்வதற்காகப் பகைக்கப்படுதல்

நல்லதைச் செய்வதற்காகப் பகைக்கப்படுதல்

அதிகாரம் 27

நல்லதைச் செய்வதற்காகப் பகைக்கப்படுதல்

நல்லதை நீங்கள் நேசிக்கிறீர்களா? — நேசிக்கிறோம் என்று நாம் இருவரும் சொல்லலாம் அல்லவா? ஆனால் நல்லதைச் செய்வதற்காக மற்றவர்கள் நம்மைப் பகைத்தாலுங்கூட அப்படிச் செய்யும்படிக்கு நாம் அதை அவ்வளவாக நேசிக்கிறோமா? — இதைச் செய்வதற்குத் தைரியம் தேவை அல்லவா? —

பெரிய போதகருக்கு இந்த வகையான தைரியம் இருந்ததென்று நீ நினைக்கிறாயா? நல்லதைச் செய்வதற்காக மற்றவர்கள் அவரைப் பகைத்த போதிலுங்கூட அவர் அதைச் செய்தாரா? —

அநேகத் தடவைகளில் இயேசு செய்த நல்ல காரியங்களுக்காக ஜனங்கள் அவரை விரும்பினர். ஒரு சமயத்தில், ஒரு பட்டணத்துக்கு ஜனங்கள் எல்லோரும் அவர் தங்கியிருந்த வீட்டின் கதவண்டையில்தானே வந்து கூடிவிட்டனர். வியாதியாயிருந்த ஆட்களை இயேசு சுகமாக்கிக் கொண்டிருந்ததன் காரணமாக அவர்கள் வந்தார்கள்.—மாற்கு 1:33.

ஆனால் சில சமயங்களில் இயேசு கற்பித்ததானது அந்த ஜனங்கள் சத்தியத்தை நம்பவில்லை என்று காட்டினது. அப்படியானால் எல்லோருமே அவர் சொல்வதைக் கேட்க விரும்பினார்களா? — தங்கள் நம்பிக்கைகளை மாற்றிக்கொள்ள மனமுள்ளவர்களாக இருந்தார்களா? — எல்லோரும் அப்படி இருக்கவில்லை. உண்மையில், இயேசு சத்தியத்தைப் பேசினதற்காக அவர்களில் சிலர் இயேசுவுக்கு மெய்யான பகைமையைக் காட்டினர்.

ஒரு நாள் இயேசுவின் சொந்தப் பட்டணமாகிய நாசரேத்தில் இது நடந்தது. இயேசு ஜெபாலயத்திற்குள் சென்றார். ஜெபாலயமானது யூத ஜனங்கள் கூடும் இடம்.

இயேசு எழுந்திருந்து வேத எழுத்துக்களிலிருந்து ஒரு சிறந்த பேச்சைக் கொடுத்தார். ஜனங்கள் முதலில் அதை விரும்பினார்கள். அவருடைய வாயிலிருந்து வந்த அந்த அழகிய வார்த்தைகளின் பேரில் அவர்கள் ஆச்சரியமடைந்தார்கள். இவர் தங்கள் சொந்த நகரத்தில் வளர்ந்திருந்த வாலிபர் என்று அவர்களால் நம்ப முடியவில்லை.

ஆனால் பின்பு இயேசு வேறு ஒன்றைச் சொன்னார். அவர்களைப் போல் யூதராக இராத ஜனங்களுக்குக் கடவுள் விசேஷித்த தயவைக் காட்டின காலங்களைப் பற்றி அவர் சொன்னார். இயேசு இதைச் சொன்னபோது, ஜெபாலயத்திலிருந்தவர்கள் கோபமூண்டார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா? —

கடவுளுடைய விசேஷித்த தயவைக் கொண்டிருக்க வேண்டியவர்கள் தாங்கள் ஒருவர் மாத்திரமே என்பதாக அவர்கள் எண்ணினார்கள். தாங்கள் மற்ற ஜனங்களைப் பார்க்கிலும் மேலானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆகவே அவர்கள் இயேசு சொன்ன காரியங்களினிமித்தமாக அவரைப் பகைத்தார்கள். அவருக்கு என்ன செய்ய அவர்கள் முயன்றார்கள் என்று உனக்குத் தெரியுமா? —

பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: ‘அவர்கள் இயேசுவைப் பிடித்து பட்டணத்துக்கு வெளியே அவரை வேகமாகத் தள்ளிக் கொண்டுபோனார்கள். அவரை மலைச் சிகரத்தின் முனையில் கொண்டுபோய் அங்கிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிக் கொல்லப் போனார்கள்! ஆனால் இயேசு அவர்களிடத்திலிருந்து கடந்து போய்விட்டார்.’—லூக்கா 4:16-30.

இது உனக்கு நடந்திருக்குமானால் கடவுளைப் பற்றி மறுபடியும் அந்த ஜனங்களிடத்தில் பேச நீ என்றாவது திரும்பிப் போயிருப்பாயா? — இதற்குத் தைரியம் வேண்டியதாக இருக்கும் அல்லவா? — ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு அப்பால் இயேசு நிச்சயமாகவே நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார். “அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் பண்ணினார்,” என்று பைபிள் சொல்லுகிறது. கடவுள்பேரில் அன்பில்லாத மனிதருக்குப் பயப்படும் பயத்தின் காரணமாக இயேசு சத்தியத்தைப் பேசுவதை நிறுத்திவிடவில்லை.—மத்தேயு 13:54.

மற்றொரு நாள் இயேசு, தன்னுடைய கையெல்லாம் சூம்பிப்போன அல்லது பலனற்று வாடிப்போன ஒரு மனிதன் இருந்த இடத்தில் இருந்தார். அந்த மனிதனைச் சுகப்படுத்த இயேசு கடவுளிடத்திலிருந்து பெற்ற வல்லமையை உடையவராக இருந்தார். ஆனால் அங்கிருந்த சில மனிதர் இயேசுவுக்குத் தொந்தரவை உண்டுபண்ண முயற்சி செய்து கொண்டிருந்தனர். பெரிய போதகர் என்ன செய்வார்? —

செய்யவேண்டிய சரியான காரியம் என்னவென்பதை அவர் முதலாவதாகக் காட்டினார். அவர் பின்வருமாறு கேட்டார்: ‘உங்களுக்கு ஒரு செம்மறியாடு இருந்து அது ஓய்வுநாளில் ஒரு பெரிய குழியினுள் விழுந்து விட்டதென்றால், நீங்கள் அதை வெளியே தூக்கிவிடுவீர்களா?’

ஆம், தாங்கள் இளைப்பாற வேண்டிய நாளாகிய ஓய்வு நாளாக அது இருந்தாலுங்கூட, ஒரு செம்மறியாட்டுக்கு அதை அவர்கள் செய்வார்கள். ஆகவே இயேசு: ‘ஓய்வு நாளில் ஒரு மனிதனுக்கு உதவி செய்வது அதைப் பார்க்கிலும் மேலானது. ஏனென்றால் மனிதன் செம்மறியாட்டைப் பார்க்கிலும் அதிக மதிப்புள்ளவன்!’ என்று சொன்னார். அந்த மனிதனைச் சுகப்படுத்துவதன் மூலம் இயேசு அவனுக்கு உதவி செய்யவேண்டும் என்பது எவ்வளவு தெளிவாக இருந்தது!

ஆகவே தன் கையை நீட்டும்படி இயேசு அந்த மனிதனுக்குச் சொன்னார். உடனே அது மற்றக் கையைப் போல் சுகமாய்விட்டது! அந்த மனிதன் ஆ, எவ்வளவு சந்தோஷமுள்ளவனானான்!

ஆனால் அந்த மற்ற மனிதரைப் பற்றியதென்ன? அவர்கள் சந்தோஷப்பட்டார்களா? — இல்லை. அவர்கள் இயேசுவை இன்னும் அதிகமாகப் பகைத்தார்கள். அவர்கள் வெளியே சென்று அவரைக் கொல்லும்படிக்குத் திட்டங்களைப் போட்டனர்!—மத்தேயு 12:9-14.

இன்றும் ஆட்கள் அவ்விதம் இருக்கின்றனர். சிலர் சரியானதை விரும்புகின்றனர். மற்றவர்கள் அப்படி விரும்புவதில்லை. நாம் என்ன செய்தாலும் சரிதான், அவர்கள் எல்லோரையும் நாம் ஒருபோதும் பிரியப்படுத்த முடியாது. ஆகவே யாரை நாம் உண்மையில் பிரியப்படுத்த விரும்புகிறோம் என்பதை நாம் தீர்மானிக்கவேண்டும்.

யாரை உன்னுடைய நண்பர்களாகக் கொண்டிருக்க விரும்புகிறாய்? நல்ல ஆட்கள் உனக்கு நண்பர்களாக வேண்டுமா? — யெகோவா தேவன் உன்னுடைய நண்பராக இருக்க நீ விரும்புகிறாயா? — அப்படியானால் சரியானதை நீ எப்பொழுதும் செய்யவேண்டும்.

ஆனால் நீ நல்லதைச் செய்வாயாகில், பிசாசு உன்பேரில் பிரியப்படுவானா? — உண்மையில், பிசாசு உன்பேரில் பிரியப்பட நீ விரும்புகிறாயா? —

பிசாசு பிரியப்படுகிற ஆட்கள் இருக்கின்றனர். பைபிள் அவர்களை “இந்த உலகம்” என்று அழைக்கிறது. “இந்த உலகம்” ஆனது பெரிய போதகரைப் பின்பற்றாத எல்லா ஆட்களாலும் ஆகியது. “நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இருந்தால், இந்த உலகமானது தன்னுடைய சொந்தமானதை நேசித்திருக்கும். இப்பொழுது நீங்கள் இந்த உலகத்தின் பாகமாக இராமல் நான் உங்களை இந்த உலகத்திலிருந்து தெரிந்து கொண்டிருப்பதனால், இந்தக் காரணத்தின்பேரில் இந்த உலகம் உங்களைப் பகைக்கிறது.—யோவான் 15:18, 19.

இந்த உலகத்தின் ஆட்கள் சிலர், தாங்கள் இயேசுவில் நம்பிக்கை வைத்திருப்பதாகச் சொல்லுகின்றனர். ஆனால் இயேசு செய்தது போல, கடவுளைப் பற்றிய சத்தியத்தை அவர்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறதில்லை. அவர்கள் சத்தியத்தைக் கற்பிக்கிறதில்லை என்று பைபிளிலிருந்து நீ அவர்களுக்குக் காண்பிப்பாயானால், அவர்கள் அதை விரும்புவார்களா? — இல்லை, அவர்களில் பெரும்பாலோர் விரும்பமாட்டார்கள். ஆனால் சூம்பின கையையுடைய அந்த மனிதனைப் போன்ற எவரையாவது நீ காணக்கூடும். இயேசு சத்தியத்தை மறைக்காததற்காக அவன் மிகவும் நன்றியுள்ளவனாக இருந்தான்.

சத்தியத்தை மறைக்கும் ஆட்கள் பலர் இருக்கின்றனர். மற்ற ஆட்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பதைப் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மற்றவர்கள் என்ன சொல்லுவார்களோவென்று அவர்கள் அவ்வளவாய்க் கவலைப்படுவதனால், சரியென்று தாங்கள் தெரிந்திருப்பதைச் செய்வதிலிருந்து தங்கள் வாழ்நாளெல்லாம் தங்களைத் தடுத்து நிறுத்தி வைத்துக்கொள்கின்றனர். எவ்வளவு வெட்கக்கேடு! வாழ்க்கையில் எவ்வளவு அதிக சந்தோஷத்தை அவர்கள் இழந்து விடுகின்றனர்! கடவுளுடைய அங்கீகாரத்தையும் அவர்கள் இழந்து விடுகின்றனர். அவ்விதம் இருக்க நாம் விரும்புகிறதில்லை அல்லவா? —

(மற்றவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்ற பயம் சரியானதைச் செய்வதிலிருந்து நம்மைத் தடுத்துவைக்க நாம் ஒருபோதும் விடக்கூடாது என்று காட்டும் இந்த வேத வசனங்களை ஒன்றாகச் சேர்ந்து வாசியுங்கள்: நீதிமொழிகள் 29:25; 1 சாமுவேல் 15:24 [1 இராஜாக்கள் 15:24, டூ.வெ.]; மத்தேயு 26:69-75; யோவான் 12:42, 43.)