Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நான்கு நாட்கள் மரித்தவனாயிருந்த மனிதன்

நான்கு நாட்கள் மரித்தவனாயிருந்த மனிதன்

அதிகாரம் 16

நான்கு நாட்கள் மரித்தவனாயிருந்த மனிதன்

உயிருடன் இருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறதல்லவா? வாழ்ந்திருப்பதில் நீ மகிழ்ச்சியடைகிறாயா? — நான் மகிழ்ச்சியடைகிறேன். நாம் உயிரோடிருக்கையில் உற்சாகமூட்டும் வெகு பல காரியங்களைச் செய்யக் கூடியவர்களாக இருக்கிறோம்.

ஆனால் ஒரு மனிதனும் என்றுமாக வாழ்ந்திருக்கவில்லை என்பது உனக்குத் தெரியுமா? — சீக்கிரத்திலோ பிந்தியோ எல்லா மனிதரும் மரித்துவிட்டிருக்கின்றனர். மரித்துப் போயிருக்கும் எவராவது உனக்குத் தெரியுமா? —

ஒரு சமயத்தில் இயேசுவின் நல்ல நண்பன் ஒருவன் மரித்துப்போனான். இந்த நண்பன் பெத்தானியாவில் வாழ்ந்து வந்தான். இது எருசலேமுக்குச் சிறிது தூரத்திலிருக்கும் ஒரு சிறிய பட்டணம். இவனுடைய பெயர் லாசரு. இவனுக்கு மார்த்தாள், மரியாள் என்ற பெயர்களையுடைய இரண்டு சகோதரிகள் இருந்தனர்.

ஒரு நாள் லாசரு மிகவும் வியாதியாயிருந்தான். அந்தச் சமயத்தில் இயேசு வெகு தூரத்தில் இருந்தார். ஆகவே மார்த்தாளும் மரியாளும் தங்களுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருக்கிறான் என்று அவருக்குச் சொல்லியனுப்பினார்கள். அவர்கள் ஏன் இதைச் செய்தார்கள்? ஏனென்றால் இயேசு தங்கள் சகோதரனைச் சுகமாக்கக்கூடும் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். இயேசு ஒரு வைத்தியனாக இருக்கவில்லை, ஆனால் அவர் எல்லா வகையான வியாதியையும் சுகப்படுத்தக் கூடும்படி கடவுளிடத்திலிருந்து பெற்ற வல்லமையை உடையவராக இருந்தார்.

ஆனால் இயேசு வருவதற்கு முன்பாக, வியாதி வெகு அதிகமாகிவிட லாசரு மரித்துவிட்டான். இயேசு தம்முடைய சீஷரிடம் லாசரு தூங்கிக்கொண்டிருக்கிறான் என்று கூறினார். ஆனால் அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்குத் தாம் போவதாக இயேசு கூறினார். இயேசு என்ன அர்த்தங்கொண்டார் என்பதை சீஷர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. ஆகவே, பிறகு இயேசு வெளிப்படையாய், லாசரு மரித்துவிட்டான் என்று கூறினார். மரணம் ஓர் ஆழ்ந்த தூக்கத்தைப் போல் இருக்கிறது, அது அவ்வளவு ஆழ்ந்த ஒரு தூக்கமாக இருப்பதால் ஒரு ஆள் சொப்பனமுங்கூட காண்பதில்லை.

இயேசு இப்பொழுது மார்த்தாளையும் மரியாளையும் காணச் சென்றார். அந்தக் குடும்பத்தின் பல நண்பர்களுங்கூட அங்கே இருந்தனர். மார்த்தாள், மரியாளின் சகோதரன் மரித்துப் போய் விட்டதனால் அவர்களை ஆறுதல்படுத்த அவர்கள் வந்திருந்தார்கள்.

இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவரைச் சந்திக்க அவள் வெளியே சென்றாள். சீக்கிரத்திலேயே மரியாளுங்கூட இயேசுவைப் பார்க்க வெளியே வந்தாள். அவள் மிக அதிக விசனமாயிருந்து அழுது கொண்டிருந்தாள், அவள் அவருடைய பாதங்களில் விழுந்தாள். மரியாளைப் பின்தொடர்ந்து வந்திருந்த மற்ற நண்பர்களுங்கூட அழுது கொண்டிருந்தார்கள். எல்லா ஜனங்களும் அழுவதை இயேசு கண்டபோது, அவர் மிகவும் விசனமடைந்து அவருங்கூட அழ ஆரம்பித்துவிட்டார்.

அவர்கள் லாசருவை எங்கே வைத்தார்களென்று பெரிய போதகர் கேட்டார். அப்பொழுது லாசரு அடக்கம் பண்ணப்பட்டிருந்த அந்தக் குகைக்கு ஜனங்கள் இயேசுவை அழைத்துச் சென்றனர். அப்பொழுது இயேசு அங்கிருந்த மனிதரிடம்: “குகையின் முன்னாலிருந்து அந்தக் கல்லை உருட்டித் தள்ளுங்கள்,” என்று சொன்னார். அவர்கள் அப்படிச் செய்யலாமா? —

அப்படிச் செய்வது சரியென்று மார்த்தாள் நினைக்கவில்லை. அவள்: ‘ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, அவன் மரித்து நாலு நாளாயிற்றே,’ என்று கூறினாள். அது உண்மை, சிறிது காலமான பின் செத்த உடல்கள் நிச்சயமாகவே துர்நாற்றம் அடிக்கும்.

ஆனால் இயேசு அவளிடம்: “நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா?” என்றார். இதனால் கடவுளுக்குக் கனத்தைக் கொண்டுவரப் போகிற ஒரு காரியத்தை மார்த்தாள் காண்பாள் என்று இயேசு அர்த்தங்கொண்டார். இயேசு என்ன செய்யப் போகிறவராக இருந்தார்?

அந்தக் கல்லை எடுத்துப் போட்டபோது, இயேசு யெகோவாவினிடம் சத்தமாய் ஜெபித்தார். பின்பு இயேசு உரத்தக் குரலில்: “லாசருவே, வெளியே வா!” என்று சொன்னார். அவன் வெளியே வருவானா? அவனால் வரமுடியுமா? —

தூங்கிக் கொண்டிருக்கிற எவரையாவது நீ எழுப்பக் கூடுமா? — ஆம், உரத்தக் குரலில் கூப்பிடுவாயானால் அவன் விழித்தெழும்புவான். ஆனால் மரணத்தில் தூங்கிக் கொண்டிருக்கிற எவரையாவது நீ விழித்தெழுப்பக் கூடுமா? — முடியாது. நீ எவ்வளவு சத்தமாய்க் கூப்பிட்டாலும் சரிதான், மரித்தவனுக்குக் கேட்காது. மரித்தவர்களை எழுப்ப நீயோ நானோ செய்யக்கூடிய எதுவுமில்லை.

ஆனால் இயேசு வித்தியாசமானவர். அவர் விசேஷித்த வல்லமையைக் கடவுளிடத்திலிருந்து பெற்றிருக்கிறார். ஆகவே, இயேசு லாசருவைக் கூப்பிட்டபோது ஓர் அதிசயமான காரியம் நடந்தது. நான்கு நாட்களாக மரித்தவனாயிருந்த அந்த மனிதன் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்தான்! அவன் திரும்ப உயிருக்குக் கொண்டுவரப்பட்டிருந்தான்! அவன் மறுபடியுமாக சுவாசிக்கவும் நடக்கவும் பேசவும் கூடியவனாயிருந்தான்! ஆம், லாசரு மரித்து நான்கு நாட்களாகியிருந்த பின்பு இயேசு அவனை உயிர்த்தெழுப்பினார்! இது மிக அதிசயமான காரியம் அல்லவா? — —யோவான் 11:1-44.

ஆனால், லாசரு மரித்தவனாயிருந்த அந்த நான்கு நாட்களின்போது அவன் எங்கேயிருந்தான்? என்று நீ ஒருவேளை கேட்கலாம். லாசரு மரித்தபோது அவன் பரலோகத்துக்குப் போனானா? அங்கே மேலே கடவுளுடனும் பரிசுத்த தூதர்களுடனும் அவன் உயிருடன் இருந்தானா? —

இப்பொழுது யோசித்துப் பார்: அந்த நான்கு நாட்களின் போது லாசரு பரலோகத்தில் இருந்திருப்பானேயாகில் அதைப் பற்றி ஏதாவது அவன் சொல்லியிருப்பான் அல்லவா? — அவன் பரலோகத்தில் இருந்திருப்பானேயாகில், அந்த மிக நல்ல இடத்திலிருந்து அவன் திரும்பி வரும்படி இயேசு செய்திருப்பாரா? — லாசரு பரலோகத்தில் இருந்தான் என்று பைபிள் சொல்லுகிறதில்லை.

லாசரு தூங்கிக் கொண்டிருந்தான் என்று இயேசு சொன்னதை நினைவில் வைத்திரு. நீ தூங்குகையில் எப்படி இருக்கிறது? —

நீ வெகு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கையில், உன்னைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது உனக்குத் தெரியாது அல்லவா? — நீ விழித்தெழும்புகையில் கடிகாரத்தைப் பார்க்கும் வரையில், எவ்வளவு நேரம் நீ தூங்கிக்கொண்டு இருந்திருக்கிறாய் என்பதும் உனக்குத் தெரியாது.

மரித்த ஆட்களைக் குறித்ததிலும் இதைப் போலவே இருக்கிறது. நடந்து கொண்டிருக்கிற எதுவும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் எதையும் உணருகிறதில்லை. அவர்கள் எதையும் செய்யவும் முடியாது.

ஆனால் சிலர் மரித்தோருக்குப் பயப்படுகின்றனர். மரித்தோர் தங்களுக்குத் தீங்கு செய்யக் கூடுமென்று அவர்கள் நினைப்பதனால், அவர்கள் கல்லறைத் தோட்டத்துக்கு அருகில் போக மாட்டார்கள். நீ இதை எண்ணிப் பார்க்க முடிகிறதா? மரித்த ஓர் ஆள் உயிரோடிருக்கிற எவருக்காவது தீங்கு செய்யக்கூடுமா? — இல்லை, மரித்தோர் ஒன்றுமே செய்ய முடியாது என்று பைபிள் சொல்லுகிறது.

ஒரு குறிப்பிட்ட நாளில் மரித்தோர் உயிருள்ளோரைப் பார்க்கும்படி ஆவிகளாகத் திரும்பி வருகின்றனர் என்று எவராவது சொல்வதை நீ எப்பொழுதாவது கேட்டிருக்கிறாயா? — சில ஆட்கள் இதை நம்புகின்றனர், ஆகவே அவர்கள் அந்த மரித்தோருக்காக உணவைப் பரிமாறி வைக்கின்றனர். அல்லது அந்த நாட்களில் விசேஷித்த விருந்துகள் வைக்கக் கூடும். ஆனால் இந்தக் காரியங்களைச் செய்கிற ஆட்கள், மரித்தோரைப் பற்றிக் கடவுள் சொல்வதை உண்மையில் நம்புகிறார்களென்று நீ நினைக்கிறாயா? —

கடவுள் சொல்வதை நீ நம்புகிறாயா? — நாம் நம்புகிறோமென்றால், மரித்தோரைப் பற்றி நாம் பயங்கொள்ள மாட்டோம். நாம் உயிரோடிருப்பதைப் பற்றி சந்தோஷப்படுவோம். மேலும் உயிருக்காக நாம் உண்மையில் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என்றால், நாம் ஒவ்வொரு நாளும் வாழும் வாழ்க்கை முறையால் அதை நாம் காண்பிப்போம். கடவுள் ஏற்றுக்கொள்ளுகிற காரியங்களையே நாம் செய்வோம்.

(மரித்தோரின் நிலைமைக்கு எதிர்மாறாக, அனுதின வாழ்க்கைக்கு நன்றியுணர்வை அறிவுறுத்த, பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4; சங்கீதம் 115: 17 [113:17, டூ.வெ.] ஆகியவற்றை வாசியுங்கள்.)