நினைவுகூர நமக்கு உதவிசெய்வதற்கு ஒரு சாப்பாடு
அதிகாரம் 41
நினைவுகூர நமக்கு உதவிசெய்வதற்கு ஒரு சாப்பாடு
யாராவது உனக்கு மிக நல்ல பரிசு ஒன்றைக் கொடுத்தார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீ அதைப் பற்றி எவ்விதம் உணர்வாய்? — “உங்களுக்கு நன்றி,” என்று வெறுமென சொல்லிவிட்டு, அதை உனக்குக் கொடுத்தவரைப் பற்றிப் பின்பு முழுவதுமாக நீ மறந்துவிடுவாயா? அல்லது அவர் செய்ததை நினைவுகூர நீ விரும்புவாயா? —
யெகோவா நமக்கு மிக அதிசயமான ஒரு பரிசைக் கொடுத்திருக்கிறார். நமக்காக மரிக்கும்படித் தம்முடைய சொந்த குமாரனை அவர் பூமிக்கு அனுப்பினார். இதன் காரணமாக நாம் நோயிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையடையக்கூடும். இதைச் செய்வது அவர்கள் பங்கில் ஆ, எப்பேர்ப்பட்ட ஓர் அன்புள்ள காரியமாக இருக்கிறது! கடவுளும் அவருடைய குமாரனும் நமக்குச் செய்திருக்கிறதை மறந்துபோக நாம் நிச்சயமாகவே விரும்பமாட்டோம், அல்லவா? —
தாம் செய்ததை நினைவுகூருவதற்கு ஒரு விசேஷித்த வழியைக் கடவுளுடைய குமாரன் நமக்குக்கொடுத்தார் என்பது உனக்குத் தெரியுமா? — அதைப் பற்றிக் கேட்க உனக்குப் பிரியமா? —
எருசலேமில் ஒரு வீட்டின் மேல் மாடியிலுள்ள ஓர் அறையில் நீ இருப்பதாக மனதில் எண்ணிக்கொள். அது இராக்காலம். அறையில் யார் இருக்கிறார்கள் என்று பார்க்கலாம். பெரிய போதகர் அங்கே இருக்கிறார். அவருடைய அப்போஸ்தலரும் இருக்கின்றனர். அவர்கள் ஒரு மேசையைச் சுற்றிச் சாய்வு கட்டில்களில் சாய்ந்து படுத்திருக்கின்றனர். மேசையில் நெருப்பில் சுடப்பட்ட ஆட்டுக்குட்டி சிறிதும், தட்டையான அப்பங்களும் சிவப்பு திராட்ச மதுவும் இருக்கின்றன. ஆனால் இது வழக்கமாய்ச் சாப்பிடும் சாப்பாடல்ல. அவர்கள் ஒரு விசேஷித்த சாப்பாடு சாப்பிடுகிறார்கள். ஏன் என்று உனக்குத் தெரியுமா? —
இந்தச் சாப்பாடானது, நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக நடந்த மிக முக்கியமான ஒன்றை ஞாபகப்படுத்துவதற்குரியது. அது, யெகோவா தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை
எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்த அந்த இரவில் நடந்தது.‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆட்டுக் குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை உங்கள் வீடுகளின் வாசல் நிலைக்கால்களில் பூசுங்கள்,’ என்று யெகோவா தம்முடைய ஜனத்துக்குச் சொன்னார். பின்பு: ‘உங்கள் வீடுகளுக்கு உள்ளே போய் அந்த ஆட்டுக் குட்டியைச் சாப்பிடுங்கள்,’ என்று அவர் சொன்னார்.
அவர்கள் இதைச் செய்தார்கள். அதே இரவில் கடவுளுடைய தூதன் எகிப்து தேசத்தினூடே கடந்து சென்றான். பெரும்பான்மையான வீடுகளில் அந்தத் தூதன் முதற் பிறந்த பிள்ளையைக் கொன்றான். ஆனால் வாசல் நிலைக்கால்களில் இரத்தத்தை அந்தத் தூதன் கண்டபோது, அந்த வீட்டை விலகிக் கடந்து சென்றான். அந்த வீடுகளில் பிள்ளைகள் ஒருவரும் சாகவில்லை. நீ அங்கே இருந்திருப்பாயானால், அந்த வீடுகளில் எதில் நீ இருக்க விரும்பியிருப்பாய்? —
யெகோவாவின் தூதனின் இந்தச் செயலினால் எகிப்தின் அரசன் பயமடைந்தான். அவன் இஸ்ரவேலரிடம்: ‘உங்களுக்கு விடுதலை. எகிப்தை விட்டு வெளியே போய்விடுங்கள்!’ என்று சொன்னான். ஆகவே அவர்கள் தங்கள் ஒட்டகங்களின் மேலும் கழுதைகளின்மேலும் சுமை ஏற்றிக்கொண்டு போய்விட்டனர்.
ஆனால் தாம் அவர்களை எப்படி விடுவித்தார் என்பதைத் தம்முடைய ஜனங்கள் மறந்துபோகும்படி யெகோவா விரும்பவில்லை. ஆகவே அவர்: ‘வருடத்தில் ஒருமுறை நீங்கள் இன்றிரவு சாப்பிட்டதைப் போன்ற ஒரு சாப்பாட்டைச் சாப்பிடவேண்டும். மேலும் எகிப்தில் இந்த இரவில் நடந்ததைப்பற்றி உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்,’ என்று சொன்னார்.
அவர்கள் இந்த விசேஷித்த சாப்பாட்டைப் பஸ்கா என்று அழைத்தனர். ஏன் என்று உனக்குத் தெரியுமா? — அந்த இரவில், இரத்தத்தால் குறியிடப்பட்ட தங்கள் வீடுகளைக் கடவுளுடைய தூதன் ‘கடந்து சென்று’ விட்டதன் காரணமாகவே. ஞாபகம் இருக்கிறதா?
இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் இந்தப் பஸ்கா சாப்பாட்டைச் சாப்பிடுகையில் இதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதன் பின்பு மிக முக்கியமான ஒன்றை இயேசு செய்கிறார். கூர்ந்து கவனி.
மீந்திருக்கும் அப்பங்களில் ஒன்றை அவர் எடுக்கிறார். அதன்பேரில் ஜெபம் பண்ணின பின்பு, அதைப் பிட்கிறார். அதைத்
தம்முடைய சீஷர்களுக்குக் கடத்தி: ‘எடுத்து சாப்பிடுங்கள்,’ என்று சொல்லுகிறார். பின்பு அவர்: ‘இந்த அப்பம், நான் உங்களுக்காக மரிக்கையில் கொடுக்கப் போகிற என் சரீரத்தைக் குறிக்கிறது,’ என்று அவர்களுக்குச் சொல்லுகிறார்.அடுத்தப்படியாக இயேசு சிவப்பு திராட்ச மதுவைக் கொண்ட ஒரு பாத்திரத்தை எடுக்கிறார். நன்றி செலுத்தும் மற்றொரு ஜெபத்திற்குப் பின், அவர் அதைச் சுற்றி வரும்படி கடத்துகிறார். “நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்,” என்று அவர் சொல்லுகிறார். மேலும் அவர்: ‘இந்தத் திராட்ச மது என் இரத்தத்தைக் குறிக்கிறது. உங்களை உங்கள் பாவங்களிலிருந்து விடுதலையாக்க சீக்கிரத்தில் நான் என் இரத்தத்தைச் சிந்தப் போகிறேன். என்னை நினைவுகூரும்படி இதைத் தொடர்ந்து செய்து கொண்டிருங்கள்,’ என்று அவர்களுக்குச் சொல்லுகிறார்.—மத்தேயு 26:26-28; 1 கொரிந்தியர் 11:23-26.
தம்மை நினைவுகூரும்படி அவர்கள் இதைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டுமென்று இயேசு சொன்னதை நீ கவனித்தாயா? — இனிமேலும் அவர்களுக்கு பஸ்கா சாப்பாடு இராது. அதற்குப் பதிலாக, இயேசுவின் மரணத்தை நினைவுகூருவதற்கு வருடத்தில் ஒரு முறை அவர்களுக்கு இந்த விசேஷித்த சாப்பாடு இருக்கும். இது கர்த்தருடைய இராச் சாப்பாடு அல்லது இராப் போஜனம் என்று அழைக்கப்படுகிறது. இன்று நாம் அதை ஞாபகார்த்தம் என்றுங்கூட அழைக்கிறோம். ஏன்? — ஏனென்றால் இது, இயேசுவும் அவருடைய தகப்பனும் நமக்காகச் செய்திருக்கிறதை நம்முடைய ஞாபகத்திற்குத் திரும்பக் கொண்டுவருகிறது.
அடுத்த சமயம் ஞாபகார்த்தம் வைக்கப்படுகையில் நீ என்னுடன் வருவாயா? — நீ வந்தால், தட்டையான அப்பமும் சிவப்பு திராட்ச மதுவும் சுற்றிக் கடத்தப்படுவதை நீ காண்பாய். அந்த
அப்பமும் திராட்ச மதுவும் எதைப்பற்றி நினைக்கும்படி உன்னைச் செய்விக்கும்? —அப்பம் இயேசுவின் சரீரத்தை நினைக்கும்படி நம்மைச் செய்விக்கவேண்டும். நாம் நித்திய ஜீவனை அடையக்கூடும்படியாக அவர் அந்த சரீரத்தைக் கொடுத்துவிட மனமுள்ளவராக இருந்தார். அந்தச் சிவப்பு திராட்ச மதுவைப் பற்றியதென்ன? — மரிக்கும்படி இயேசுவை, மனிதர் ஒரு கழுமரத்தில் ஆணி அறைந்தபோது சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தை அது நமக்கு ஞாபகப்படுத்தவேண்டும்.
இயேசுவின் இரத்தமானது, எகிப்தில் அந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப் பார்க்கிலும் மிக அதிக அருமையானதாக இருக்கிறது. ஏன் என்று உனக்குத் தெரியுமா? — இயேசுவின் இரத்தம் பாவ மன்னிப்பை நமக்குக் கொண்டுவரக்கூடும்.
நம்முடைய பாவங்கள் யாவும் நீக்கப்படுவதானது எதைக் குறிக்குமென்று உனக்குத் தெரியுமா? — அப்பொழுது மறுபடியுமாகத் தவறான எதையும் நாம் ஒருபோதும் செய்யமாட்டோம். நாம் இனிமேலும் நோயுற்று, வயோதிபமடைந்து மரித்துப் போகமாட்டோம்! நாம் ஞாபகார்த்தத்திற்குப் போகையில் இதைப்பற்றி யோசிக்கவேண்டும்.
ஞாபகார்த்தத்தில் எல்லோருமே அப்பத்தைச் சாப்பிட்டு திராட்ச மதுவைப் பானம் பண்ணவேண்டுமா? — இல்லை, அப்படிச் செய்கிறவர்களிடத்தில் இயேசு: ‘நீங்கள் என் ராஜ்யத்தில் பங்குகொண்டு என்னுடன் பரலோகத்தில் சிங்காசனங்களில் உட்காருவீர்கள்,’ என்று சொன்னார். இது, இயேசுவுடன் அரசராக இருக்கும்படி அவர்கள் பரலோகத்திற்குச் செல்வார்கள் என்று அர்த்தங்கொண்டது. இதைச் செய்யப்போகிறவர்கள் மாத்திரமே அப்பத்தை எடுத்து சாப்பிட்டு திராட்ச மதுவைப் பானம் பண்ணவேண்டும்.
நாம் அந்த அப்பத்தைச் சாப்பிடுகிறதோ திராட்ச மதுபானத்தைப் பானம் பண்ணுகிறதோ இல்லை என்றாலுங்கூட, நாம் அந்த ஞாபகார்த்த ஆசரிப்புக்கு வந்திருக்கவேண்டும். ஏன் என்று உனக்குத் தெரியுமா? — ஏனென்றால் இயேசு தம்முடைய உயிரை நமக்காகவும் கொடுத்தார். நாம் ஞாபகார்த்தத்திற்குப் போகையில், நாம் இதை மறந்துவிடவில்லை என்று காட்டுகிறோம். இயேசுவின் மூலமாகக் கொடுத்த கடவுளுடைய அதிசயமான பரிசை நாம் நினைவுகூருகிறோம்.
(ஞாபகார்த்தத்திற்கு வருவதன் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்கு வாசிக்கவேண்டிய மற்ற வேத வசனங்கள்: லூக்கா 22:19, 20, 28, 30; 1 கொரிந்தியர் 11:27.)