Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிசாசால் சோதிக்கப்படுதல்

பிசாசால் சோதிக்கப்படுதல்

அதிகாரம் 12

பிசாசால் சோதிக்கப்படுதல்

தவறான ஏதோ ஒன்றைச் செய்யும்படி உன்னை எவனாவது எப்பொழுதாவது கேட்டிருக்கிறானா? — நீ அதைச் செய்வதற்குத் துணிகரம் கொள்ளும்படி அவன் உன்னைச் செய்வித்தானா? அல்லது அது வேடிக்கையாக இருக்கும் என்றோ அதைச் செய்வது உண்மையில் தவறு ஒன்றும் அல்ல என்றோ அவன் சொன்னானா? — யாராவது இப்படி நமக்குச் செய்கையில், அவன் நம்மைச் சோதிக்க முயலுகிறான்.

நாம் சோதிக்கப்படுகையில் என்ன செய்யவேண்டும்? நாம் அதற்கு இணங்கி தவறானதைச் செய்யவேண்டுமா? — அது யெகோவா தேவனுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்காது. ஆனால் அது யாருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று உனக்குத் தெரியுமா? — பிசாசாகிய சாத்தானுக்கே சந்தோஷத்தைக் கொடுக்கும்.

சாத்தான் கடவுளுக்குச் சத்துருவாக இருக்கிறான், நமக்கும் சத்துருவாக இருக்கிறான். நாம் அவனைப் பார்க்க முடியாது, ஏனென்றால் அவன் ஒரு ஆவியாக இருக்கிறான். ஆனால் அவன் நம்மைப் பார்க்கக்கூடும். ஒருநாள் பிசாசு பெரிய போதகராகிய இயேசுவுடன் பேசி, அவரைச் சோதிக்க முயன்றான். இது சம்பவித்தபோது இயேசு என்ன செய்தார் என்பதை நாம் பார்க்கலாம். அப்பொழுது நாம் சோதிக்கப்படுகையில் செய்யவேண்டிய சரியான காரியம் என்னவென்பதைத் தெரிந்துகொள்வோம்.

இயேசு கடவுளிடம் ஜெபிக்கும்படி மலைகளுக்குப் போயிருந்தார். கடவுள் தனக்குக் கொடுத்த வேலையைப் பற்றிச் சிந்திக்க அவர் விரும்பினார்.

இயேசு அங்கே மலைகளில் இருக்கையில் நாற்பது பகல்களும் இரவுகளும் கடந்து சென்றுவிட்டன! இந்தக் காலமெல்லாம் இயேசு ஒன்றுமே சாப்பிடவில்லை. இயேசு இப்பொழுது மிகவும் பசியாக இருந்தார்.

இந்தச் சமயத்தின்போதே சாத்தான் இயேசுவைச் சோதிக்க முயற்சி செய்தான். பிசாசு அவரை நோக்கி: “நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும்,” என்று சொன்னான். அப்பங்கள்! ஆ, எவ்வளவு நல்ல ருசியுள்ளவையாக இருக்கும்!

ஆனால் இயேசு ஒரு கல்லை அப்பமாக மாற்றியிருக்கக்கூடுமா? — ஆம். அவரால் கூடும். ஏனெனில் இயேசு கடவுளுடைய குமாரனாயிருக்கிறார். அவருக்கு விசேஷித்த வல்லமைகள் இருக்கின்றன.

இதைச் செய்யும்படி பிசாசு உன்னைக் கேட்டிருந்தால் நீ அந்தக் கல்லை அப்பமாக்கியிருப்பாயா? — இயேசு பசியாக இருந்தார். ஆகவே இந்த ஒருமுறை மாத்திரமே அப்படிச் செய்வது சரியாக இருந்திருக்குமா? — தம்முடைய வல்லமைகளை இந்த முறையில் உபயோகிப்பது தவறு என்று இயேசு அறிந்திருந்தார். தமக்காக உபயோகப்படுத்திக்கொள்வதற்கல்ல, ஆட்களைக் கடவுளிடம் கவர்ச்சித்து இழுக்கும்படிக்கே யெகோவா அவருக்கு இந்த வல்லமைகளைக் கொடுத்தார்.

ஆகவே, அதற்குப் பதிலாக, இயேசு சாத்தானிடம்: ‘மனிதன் அப்பத்தினால் மாத்திரமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைக்கவேண்டும்,’ என்பதாக பைபிளில் எழுதப்பட்டிருக்கிறதென்று சொன்னார். யெகோவாவுக்குப் பிரியமானதைச் செய்வதே, சாப்பிடுவதற்கு உணவைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிக முக்கியமானது என்று இயேசு அறிந்திருந்தார்.

ஆனால் பிசாசு மறுபடியும் முயற்சி செய்தான். அவன் இயேசுவை எருசலேமுக்குள் கொண்டுசென்று, அவரை ஆலயத்தின் உயர்ந்த பாகம் ஒன்றில் நிற்க வைத்தான். பின்பு பிசாசு இயேசுவை நோக்கி: ‘நீர் கடவுளுடைய குமாரனேயானால் இங்கேயிருந்து தாழக் குதியும். ஏனெனில் உமக்குத் தீங்கு ஏற்படாதபடி கடவுளுடைய தூதர்கள் உம்மைக் காப்பார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறதே,’ என்றான். இயேசு என்ன செய்தார்? —

மறுபடியுமாக, இயேசு சாத்தானுக்குச் செவிகொடுக்கவில்லை. துணிந்து தன்னுடைய உயிருக்கு ஏதாவது நேரிடும்படி விடுவதன்மூலம் யெகோவாவைப் பரீட்சை பார்ப்பது தவறு என்று அவர் சாத்தானிடம் சொன்னார்.

சாத்தான் இன்னும் விட்டுவிடவில்லை. அவன் இயேசுவை மிக உயர்ந்த ஓர் மலைக்குக் கொண்டுசென்றான். இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவற்றின் மகிமையையும் அவன் அவருக்குக் காண்பித்தான். பின்பு சாத்தான் இயேசுவினிடம்: ‘நீர் குனிந்து வணக்கத்திற்குரிய ஒரு செயலை எனக்குச் செய்வீரானால் இவற்றையெல்லாம் உமக்குக் கொடுப்பேன்,’ என்று சொன்னான். நீ என்ன செய்திருப்பாய்? —

இயேசு அதைச் செய்ய மறுத்துவிட்டார். தனக்கு என்ன கிடைக்கும் என்றாலும் பரவாயில்லை, பிசாசை வணங்குவது தவறு என்று அவர் அறிந்திருந்தார். ஆகவே இயேசு பிசாசினிடம்: ‘அப்பாலே போ, சாத்தானே! உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும். அவர் ஒருவரையே நீ சேவிக்க வேண்டும் என்று பைபிள் சொல்லுகிறது,’ என்று சொன்னார்.—லூக்கா 4:1-13; மத்தேயு 4:1-10.

நாமுங்கூட சோதனைகளை எதிர்ப்படுகிறோம். எப்படியென்று உனக்குத் தெரியுமா? — இதோ ஓர் உதாரணம்.

உன் தாய் உனக்கு ருசிகரமான பலகாரம் அல்லது கேக் ஒன்றைப் பிற்பகல் சாப்பாட்டுக்காகச் செய்திருக்கலாம். ஆனால் சாப்பாட்டு வேளை வரும்வரை அதில் எதையும் சாப்பிடக்கூடாது என்று அவர்கள் ஒருவேளை உனக்குச் சொல்லக்கூடும். நீ ஒருவேளை அதிகப் பசியாயிருக்கலாம். ஆகவே அதைச் சாப்பிடும்படி தூண்டப்படுகிறவனாய் நீ உணரக்கூடும். நீ உன் தாய்க்குக் கீழ்ப்படிவாயா? — நீ கீழ்ப்படியாமற்போகும்படி சாத்தான் விரும்புகிறான்.

ஆனால் இயேசுவை நினைத்துப் பார். அவருங்கூட வெகு பசியாயிருந்தார். ஆனால் கடவுளைப் பிரியப்படுத்துவதே அதிக முக்கியமானதென்று அவர் அறிந்திருந்தார்.

நீ சிறிது பெரியவனாக வளர்ந்து வருகையில், சில பிள்ளைகள் ஒருவேளை ஏதோ மாத்திரைகளை விழுங்கும்படி உன்னைக் கேட்கலாம். அல்லது புகைபிடிக்கும்படி ஒரு சிகரெட்டை உனக்குக் கொடுக்கக்கூடும். இவை உன்னை உண்மையில் நல்ல உணர்ச்சியடையும்படி செய்யும் என்று அவர்கள் ஒருவேளை உனக்குச் சொல்வார்கள். ஆனால் இவை போதை மருந்துகளாக இருக்கக்கூடும். அவை உன்னை வெகு அசெளக்கியமடையும்படி செய்யக்கூடும். உன்னைக் கொல்லவும்கூடும். நீ என்ன செய்வாய்? —

இயேசுவை நினைத்துப் பார். ஆலயத்திலிருந்து தாழக்குதிக்கும்படி சொல்லுவதன் மூலம் துணிந்து தம்முடைய உயிருக்கு ஆபத்து நேரிடும்படி விட இயேசுவைச் செய்விக்க வேண்டுமென்று சாத்தான் பிரயாசப்பட்டான். ஆனால் இயேசு அதைச் செய்ய மறுத்துவிட்டார். அவர் சாத்தானுக்குச் செவிகொடுக்கவில்லை. நீயுங்கூட, போதை மருந்துகளைச் சாப்பிடும்படி உன்னைச் செய்விக்க முயற்சி செய்யும் எவருக்கும் செவி கொடுக்கக்கூடாது.

எல்லோரும் சரியானதைச் செய்கையில் அதைச் செய்வது சுலபமாயிருக்கும். ஆனால் நம்மைத் தவறு செய்ய வைக்க மற்றவர்கள் முயற்சி செய்துகொண்டிருக்கையில் அது மிகக் கடினமாக இருக்கலாம். தாங்கள் செய்துகொண்டிருப்பது அவ்வளவு ஒன்றும் கெட்டதல்ல என்று அவர்கள் சொல்லக்கூடும். ஆனால் பெரிய கேள்வி என்னவென்றால், அதைப் பற்றிக் கடவுள் என்ன சொல்லுகிறார்? என்பதே. அவரே மிக நன்றாய் அறிந்திருக்கிறார்.

ஆகவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் கவலையில்லை, சரியல்ல என்று கடவுள் சொல்லுகிற காரியங்களை நாம் செய்ய மாட்டோம். இந்த விதமாய் நாம் எப்பொழுதும் கடவுளைச் சந்தோஷப்படுத்துவோம், பிசாசை ஒருபோதும் சேவிக்க மாட்டோம்.

(தவறு செய்யத் தூண்டும் சோதனையை எதிர்ப்பது எப்படி என்பதைப் பற்றிய மேலும் நல்ல ஆலோசனை மத்தேயு 26:41; நீதிமொழிகள் 22:24, 25; சங்கீதம் 1:1, 2 ஆகியவற்றில் காணப்படுகிறது.)