Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிள்ளைகள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுகின்றனர்

பிள்ளைகள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுகின்றனர்

அதிகாரம் 20

பிள்ளைகள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுகின்றனர்

ஒருவர் உன்னை நேசிக்கிறார் என்பதை அறிவது எவ்வளவு நன்றாயிருக்கிறதல்லவா? — உனக்காக உண்மையில் கவலைப்படுகிற ஆட்களைக் கொண்டிருப்பது மிகச் சிறந்த ஒரு காரியம். ஆனால் பூமியிலிருக்கிற எவரையும் பார்க்கிலும் அதிகமாக உன்னை நேசிக்கிற ஒருவர் இருக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? — யெகோவா தேவனே அவர்.

யெகோவா நம்மை எவ்வளவாய் நேசிக்கிறார்? — நாம் இங்கே இருக்கையில் மாத்திரமே அவர் நம்மைப் பற்றி நினைத்து, பின்பு நாம் போய்விட்ட பிறகு நம்மை மறந்துவிடுவாரா? அல்லது அவர் நம்மை உண்மையில் நினைவுகூருகிறாரா? — ‘மரணமானாலும் ஜீவனானாலும், இங்கிருந்து கொண்டிருக்கிற காரியங்களானாலும் வரப்போகிற காரியங்களானாலும், தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது,’ என்று பைபிள் சொல்லுகிறது.—ரோமர் 8:38, 39.

ஆகவே கடவுள் மறந்து விடுகிறதில்லை. தம்மைச் சேவிக்கிற ஆட்களை அவர் நினைவுகூருகிறார். அவர்களுடைய சிறிய பிள்ளைகளையுங்கூட அவர் நினைவுகூருகிறார். அவர்கள் மரித்துவிட்டாலுங்கூட அவர் அவர்களை மறுபடியுமாக உயிருக்குத் திரும்பக் கொண்டுவருவார்.

கடவுளுடைய குமாரனாகிய இயேசு பூமியில் இருக்கையில், யெகோவா சிறு பிள்ளைகளுக்காகக் கவலைப்படுகிறார் என்று அவர் காட்டினார். கடவுளைப் பற்றிப் பிள்ளைகளிடத்தில் பேசுவதற்கு இயேசு நேரம் செலவிடுவார். இளைஞரை மரித்தோரிலிருந்து திரும்பக் கொண்டுவருவதற்குங்கூட அவர் கடவுளுடைய வல்லமையை உபயோகித்தார்! இயேசு இதை ஒரு குடும்பத்திற்கு எப்படிச் செய்தார் என்பதைக் கேட்க உனக்குப் பிரியமா? —

யவீரு என்ற பெயரையுடைய ஒரு மனிதன் இருந்தான். அவனும் அவனுடைய மனைவியும் அவர்களுடைய பன்னிரண்டு வயதுள்ள மகளும் கலிலேயாக் கடலுக்குச் சற்று தூரத்தில் வசித்து வந்தனர். அந்தத் தகப்பனும் தாயும் தங்கள் மகளை மிகவும் அதிகமாய் நேசித்தனர். அவள் அவர்களுடைய ஒரே பிள்ளையாக இருந்தாள்.

ஆகவே தங்கள் சிறு பெண் மிகவும் வியாதிப்பட்டவளானபோது அவர்கள் எவ்வளவு விசனமாக இருந்திருப்பார்களென்று நீ நினைத்துப் பார்க்கக்கூடும். அவளைச் சுகமாக்குவதற்கு அவர்கள் தங்களால் செய்யக்கூடிய எல்லாவற்றையும் செய்தார்கள். ஆனால் அவள் மோசமாகிக் கொண்டேதான் போனாள். தன் மகள் மரிக்கப் போகிறாள் என்று யவீரு காணக்கூடியவனாக இருந்தான். அவளுக்கு உதவி செய்ய தானோ வைத்தியர்களோ செய்யக்கூடிய எதுவும் இருக்கவில்லை.

ஆனால் ஒருவேளை இயேசு உதவி செய்யக்கூடும். இந்த அதிசயமான மனிதனையும் அவர் எப்படி ஆட்களைச் சுகப்படுத்தக்கூடும் என்பதையும் பற்றி யவீரு கேள்விப்பட்டிருந்தான். ஆகவே யவீரு அவரைத் தேடிக் கண்டுபிடிக்கச் சென்றான். அவன் இயேசுவைக் கலிலேயாக் கடற்கரையில் பல ஜனங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருப்பவராகக் கண்டான்.

யவீரு கூட்டத்தினூடே நுழைந்து சென்று இயேசுவின் பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடத்தில் பின்வருமாறு சொன்னான்: ‘என் சிறிய மகள் மிகவும் வியாதிப்பட்டிருக்கிறாள். நீர் தயவுசெய்து வந்து அவளுக்கு உதவி செய்வீரா? வரும்படியாக நான் உம்மைக் கெஞ்சுகிறேன்.’

உடனே இயேசு யவீருவுடன் சென்றார். பெரிய போதகரைப் பார்க்க வந்திருந்த அந்தக் கூட்டமும் அவரைப் பின்தொடர்ந்து சென்றது. ஆனால் அவர்கள் சிறிது தூரம் சென்ற பின்பு, சில மனிதர் யவீருவின் வீட்டிலிருந்து வந்து, அவனிடம்: ‘உமது மகள் மரித்துப் போனாள்! இனிப் போதகரைத் தொந்தரவு செய்வானேன்?’ என்று சொன்னார்கள்.

அந்த மனிதர் இதைச் சொன்னது இயேசுவின் செவிகளில் விழுந்தது. தன்னுடைய ஒரே பிள்ளையை இழந்தது யவீருவுக்கு எவ்வளவு விசனமாக இருந்தது என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆகவே அவர் அவனிடம்: ‘பயப்படாதே, கடவுளில் விசுவாசமுள்ளவனாக மாத்திரம் இரு. உன்னுடைய மகள் சுகமடைவாள்,’ என்று சொன்னார்.

ஆகவே அவர்கள் யவீருவின் வீட்டைச் சேரும் வரையில் போய்க்கொண்டே இருந்தார்கள். இங்கே அந்தக் குடும்பத்தின் நண்பர்கள் அழுது கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சிறிய சிநேகிதி மரித்துவிட்டதனால் அவர்கள் விசனமாக இருந்தார்கள். ஆனால் இயேசு அவர்களிடத்தில்: ‘அழுவதை நிறுத்துங்கள். இந்த இளம் பிள்ளை மரித்துவிடவில்லை. அவள் தூங்கிக் கொண்டிருக்கிறாள்,’ என்று சொன்னார்.

இயேசு இதைச் சொன்னபோது, ஜனங்கள் அவரைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். ஏனென்றால் அந்தப் பெண் மரித்துவிட்டாள் என்று அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்த ஜனங்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கும்படியே இயேசு, அந்தப் பெண் தூங்கிக் கொண்டுதானே இருந்ததாகச் சொன்னார். தூக்கத்திலிருக்கும் ஓர் ஆளை நாம் எவ்வளவு சுலபமாக எழுப்பக் கூடுமோ அவ்விதமே அவர், மரித்த ஓர் ஆளை கடவுளுடைய வல்லமையின் மூலமாய்த் திரும்ப உயிருக்குக் கொண்டுவரக்கூடுமென்பதை அவர்கள் அறிய வேண்டுமென்று அவர் விரும்பினார்.

இயேசு இப்பொழுது, தம்முடைய அப்போஸ்தலரில் மூவரையும் அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர மற்ற எல்லோரும் அந்த அறையை விட்டுப் போகும்படி செய்தார். பின்பு அவர் அந்த இளம் பிள்ளை இருந்த இடத்திற்குச் சென்றார். அவளுடைய கையைப் பிடித்து: ‘சிறு பெண்ணே, எழுந்திரு!’ என்றார். உடனே அவள் எழுந்திருந்து நடக்க ஆரம்பித்தாள்! தகப்பனும் தாயும் மகிழ்ச்சியால் பொங்கினார்கள்.—மாற்கு 5:21-24, 35-43; லூக்கா 8: 40-42, 49-56.

உனக்கு என்றாவது சிநேகிதனாயிருந்தவன் மரித்துப் போய் விட்டிருக்கிறானா? — அவனுடைய தோழமையை நீ அனுபவித்துக் களிக்கும்படிக்கு அவன் திரும்ப உயிருக்கு வரக்கூடுமென்றால் உனக்குப் பிரியமாயிருக்குமா? — இது நடக்கக்கூடுமென்று நீ நினைக்கிறாயா? —

அந்தச் சிறு பெண்ணை இயேசு திரும்ப உயிருக்குக் கொண்டுவரக் கூடுமென்றால், மற்றவர்களுக்குங்கூட அதையே அவர் செய்யக்கூடும், அல்லவா? — ஆனால் அவர் உண்மையில் அதைச் செய்வாரா? — ஆம், ஏனென்றால் இயேசுதாமே பின்வருமாறு கூறினார்: ‘அந்த மணி நேரம் வருகிறது, அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள யாவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள்.’ கடவுளுடைய ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் அந்தக் காலம் சீக்கிரமாய் வருகிறது.—யோவான் 5:28, 29.

திரும்ப உயிருக்கு வரும் ஆட்களை வரவேற்பது, ஆ எவ்வளவு அதிசயமாயிருக்கும் என்பதைச் சற்று எண்ணிப் பார்! இவர்களில் சிலர் நமக்குத் தெரிந்த ஆட்களாக இருப்பார்கள். யவீருவின் மகளை இயேசு எழுப்பினபோது யவீரு தன் மகளைத் தெரிந்து கொண்டது போலவே, அவர்கள் மரித்தோரிலிருந்து திரும்ப வருகையில் அவர்கள் யார் என்று நாம் தெரிந்துகொள்வோம். மற்றவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக மரித்த ஆட்களாக இருப்பார்கள். அவர்கள் வெகு காலத்திற்கு முன்பாக வாழ்ந்ததன் காரணமாகத்தானே, கடவுள் அவர்களை மறந்துவிடமாட்டார்.

யெகோவா தேவனும் அவருடைய குமாரனாகிய இயேசுவும் நம்மை இவ்வளவு அதிசயமாய் நேசிக்கிறார்கள் என்பதை அறிவது எவ்வளவு நன்றாயிருக்கிறதல்லவா? — நாம், ஒரு சில வருடங்களுக்கு அல்ல, என்றுமாக வாழ்ந்திருக்கும்படி அவர்கள் விரும்புகின்றனர்!

(மரித்தோருக்கு அளிக்கும் பைபிளின் இந்த அதிசயமான நம்பிக்கையைக் குறித்து, அப்போஸ்தலர் 24:15; 1 கொரிந்தியர் 15:20-22; ஏசாயா 25:8 ஆகியவற்றிலும் வாசியுங்கள்.)