Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெரிய போதகர் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்தார்

பெரிய போதகர் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்தார்

அதிகாரம் 6

பெரிய போதகர் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்தார்

யாராவது உனக்கு ஏதாவது செய்கையில் அது உனக்குப் பிரியமாக இருக்கிறதா?மற்றவர்களுங்கூட, யாராவது தங்களுக்கு ஏதாவது செய்கையில் அதில் பிரியப்படுகின்றனர். நம்மெல்லோருக்குமே அது பிரியமாயிருக்கிறது. பெரிய போதகர் இதை அறிந்திருந்தார். அவர் எப்பொழுதும் ஆட்களுக்குக் காரியங்களைச் செய்து கொண்டிருந்தார். அவர்: ‘நான் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய வந்தேன்,’ என்று சொன்னார்.—மத்தேயு 20:28.

ஆகவே நாம் இந்தப் பெரிய போதகரைப்போல் இருக்க விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?நாம் மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும். நாம் அவர்களுக்கு நல்ல காரியங்களைச் செய்யவேண்டும்.

பலர் இதைச் செய்கிறதில்லை என்பது மெய்யே. உண்மையில் சொல்லவேண்டுமானால், பெரும்பான்மையர் எப்பொழுதும் மற்றவர்கள் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்றே விரும்புகின்றனர். இயேசுவைப் பின்பற்றினவர்களுங்கூட ஒரு சமயம் இந்தவிதமாக உணர்ந்தனர். மற்ற எல்லோரையும் பார்க்கிலும் தான் மிக முக்கியமானவனாக இருக்க வேண்டும் என்று அவர்கள் ஒவ்வொருவரும் விரும்பினர்.

இந்தவிதமாக அவர்கள் நினைப்பது சரியல்ல என்று இயேசு அறிந்திருந்தார். ஆகவே, ஒரு நாள் அவர், அவர்கள் ஒருபோதும் மறந்து போகக்கூடாத ஒரு பாடத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

அவர்கள் ஒன்றாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், இயேசு மேசையிலிருந்து எழுந்தார். அவர், அலம்பும் பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றினார். அவர்கள் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்கையில், இயேசு அவர்கள் ஒவ்வொருவரிடமும் சுற்றிவந்து, குனிந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவினார். பின்பு அவர் ஒரு துவாலையைக்கொண்டு அவர்களுடைய பாதங்களைத் துடைத்தார். இதைச் சற்று நினைத்துப் பார்! நீ அங்கே இருந்து இயேசு உன்னுடைய பாதங்களைக் கழுவியிருந்திருப்பாரானால் எப்படியிருக்கும்? நீ எப்படி உணர்ந்திருப்பாய்?

பெரிய போதகர் இந்த விதமாய்த் தங்களுக்கு ஊழியஞ்செய்வது சரியென்பதாக அவரைப் பின்பற்றினவர்கள் உணரவில்லை. அவர்கள் சங்கட உணர்ச்சியை அடைந்தனர். உண்மையில், அவர்களில் ஒருவன், இயேசு தனக்கு இந்தத் தாழ்ந்த சேவையைச் செய்ய தான் விடப் போவதில்லை என்றிருந்தான். ஆனால் தாம் அதைச் செய்வது மிகவும் முக்கியமானது என்று இயேசு கூறினார்.

இன்று நாம் வழக்கமாய் ஒருவர் மற்றொருவருடைய பாதங்களைக் கழுவுவதில்லை. ஆனால் இயேசு பூமியில் இருக்கையில் இதைச் செய்வது சாதாரண வழக்கமாக இருந்தது. ஏன் என்று உனக்குத் தெரியுமா?

அவர்கள் வாழ்ந்துவந்த நாட்டில் ஜனங்கள் தங்கள் வெறும் பாதங்களில் திறந்த செருப்புகளை அணிந்தார்கள். ஆகவே அவர்கள் தூசி நிறைந்த பாதைகளில் நடக்கையில் அவர்களுடைய பாதங்கள் தூசியால் மூடப்பட்டன. ஆகவே, ஒருவரைக் காண வீட்டுக்குள் வரும் ஆளின் தூசி நிறைந்த பாதங்களைக் கழுவுவது அந்நாட்களில் அன்பான ஒரு செயலாக இருந்தது.

ஆனால் இந்தச் சமயத்தில் இயேசுவைப் பின்பற்றின இவர்களில் ஒருவருமே மற்றவர்களின் பாதங்களைக் கழுவுவதற்கு முன் வரவில்லை. ஆகவே இயேசு தாமே அதைச் செய்தார். இதைச் செய்வதன் மூலம் இயேசு தம்மைப் பின்பற்றினவர்களுக்கு ஒரு முக்கிய பாடத்தைக் கற்பித்தார். அவர்கள் இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. இது இன்று நாம் கற்றுக்கொள்வதற்கு அவசியமாயிருக்கும் ஒரு பாடமாகவும் இருக்கிறது.

இந்தப் பாடம் என்ன என்று உனக்குத் தெரியுமா?இயேசு மறுபடியுமாக மேசையில் தம்முடைய இடத்தில் உட்கார்ந்தபோது, அவர் பின்வருமாறு விளக்கினார்: ‘நான் உங்களுக்குச் செய்ததை விளங்கிக் கொண்டீர்களா? நீங்கள் என்னைப் “போதகரென்றும்,” “ஆண்டவரென்றும்” சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள்.’—யோவான் 13:2-14.

தம்மைப் பின்பற்றினவர்கள் ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யவேண்டுமென்று தாம் விரும்புகிறார் என்பதைப் பெரிய போதகர் இங்கே காட்டினார். அவர்கள் தங்களைப் பற்றி மாத்திரமே நினைத்துக் கொண்டிருக்க அவர் விரும்பவில்லை. தாங்கள் அவ்வளவு முக்கியமானவர்கள், மற்றவர்களே தங்களை எப்பொழுதும் சேவித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதாக அவர்கள் நினைக்கும்படி அவர் விரும்பவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்ய மன ஆவலுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்றே அவர் விரும்பினார்.

இது சிறந்த ஒரு பாடம் அல்லவா?நீ இந்தப் பெரிய போதகரைப் போல் இருந்து மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்வாயா?நாம் எல்லோரும் மற்றவர்களுக்குக் காரியங்களைச் செய்யக்கூடும்.

மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்வது கடினமான காரியமல்ல. நீ கவனமாக இருப்பாயானால் மற்ற ஆட்களுக்கு நீ செய்யக்கூடிய பல காரியங்களைக் காண்பாய்.

இப்பொழுது யோசி: உன் அம்மாவுக்கு உதவி செய்யும்படி நீ செய்யக்கூடிய ஏதாவது இருக்கிறதா? அவர்கள் உனக்கும் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கும் பல காரியங்களைச் செய்கிறார்களென்று உனக்குத் தெரியும். நீ அவர்களுக்கு உதவி செய்யக்கூடுமா?அவர்களை ஏன் கேட்கக்கூடாது?

ஒருவேளை, குடும்பம் சாப்பிடுவதற்கு முன்பாக நீ மேசையை ஒழுங்குபடுத்தி வைக்கலாம். அல்லது குடும்பம் சாப்பிட்டு முடித்தபின்பு கழுவுவதற்குப் பாத்திரங்களை ஒன்று சேர்த்து வைக்கலாம். சில பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் குப்பையை வெளியே குப்பைத் தொட்டியில் கொண்டுபோய்க் கொட்டுகின்றனர். நீ செய்யக்கூடிய எதுவானாலுஞ்சரி அது, இயேசு தாமேயும் செய்தது போல், மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்வதாக இருக்கும்.

நீ ஊழியஞ்செய்ய உனக்குத் தம்பி தங்கைமார் இருக்கிறார்களா?பெரிய போதகராகிய இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குங்கூட ஊழியஞ்செய்தார் என்பதை நினைவுபடுத்திக் கொள். உன் தம்பி தங்கைமாருக்கு ஊழியஞ்செய்வதன் மூலம் நீ இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுகிறவனாக இருப்பாய்.

நீ அவர்களுக்கு என்ன செய்யலாம்? உன்னால் ஏதாவது நினைக்க முடிகிறதா?ஒருவேளை, அவர்கள் விளையாடி முடித்த பின்பு தங்கள் விளையாட்டுச் சாமான்களை அவற்றிற்குரிய இடத்தில் எடுத்துவைக்கக் கற்றுக்கொள்ளும்படி நீ அவர்களுக்கு உதவி செய்யலாம். அல்லது ஒருவேளை, படுக்கைக்குப் போக ஆயத்தமாக அவர்களுக்கு உதவி செய்யலாம். இயேசுவைப் பின்பற்றினவர்கள் அவரை நேசித்தது போலவே, இந்தக் காரியங்களை நீ அவர்களுக்குச் செய்வதற்காக அவர்கள் உன்னை நேசிப்பார்கள்.

பள்ளியிலுங்கூட நீ மற்றவர்களுக்கு ஊழியஞ்செய்யலாம். யாராவது தன் புத்தகங்களைக் கீழே போட்டுவிட்டால் அவற்றைப் பொறுக்கியெடுக்க அவனுக்கு உதவி செய்வது உன் பங்கில் அன்பான காரியமாயிருக்கும். உன் உபாத்தியாயினிக்காகக் கரும்பலகையைச் சுத்தம் செய்ய, அல்லது அவர்களுக்கு வேறு ஏதாவது காரியத்தைச் செய்ய நீ முன்வரலாம். யாராவது ஒருவருக்குக் கதவைத் திறந்து பிடித்துக்கொண்டிருப்பதுங்கூட ஒரு தயவான ஊழியம்.

சில சமயங்களில் ஆட்கள், நாம் அவர்களுக்கு ஊழியம் செய்ததற்கு நன்றி காட்டாமல் இருப்பதை நாம் காண்போம். இது, நன்மை செய்வதிலிருந்து நம்மை நிறுத்திவிட வேண்டுமென்று நீ நினைக்கிறாயா?இல்லை! இயேசுவுக்குங்கூட, பல ஆட்கள், அவருடைய நல்ல வேலைகளுக்காக நன்றிகாட்ட வில்லை. ஆனால் அது நன்மை செய்வதிலிருந்து அவரை நிறுத்திவிடவில்லை.

ஆகவே ஆட்களுக்கு ஊழியஞ்செய்வதிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்காமலிருப்போமாக. நாம் எப்பொழுதும் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக.

(மற்றவர்களுக்கு உதவி செய்வதைப் பற்றிய மேலுமான வேத வசனங்களுக்கு, ரோமர் 15:1, 2; நீதிமொழிகள் 3:27, 28; கலாத்தியர் 6:2 ஆகியவற்றை வாசியுங்கள்.)