Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மிகச் சிறந்த இடங்களைத் தெரிந்துகொள்ளுகிறவர்கள்

மிகச் சிறந்த இடங்களைத் தெரிந்துகொள்ளுகிறவர்கள்

அதிகாரம் 25

மிகச் சிறந்த இடங்களைத் தெரிந்துகொள்ளுகிறவர்கள்

சில ஆட்கள் தங்களுக்கு எப்பொழுதும் மிகச் சிறந்த காரியங்கள் வேண்டுமென்று விரும்புகின்றனர். வேறு எவரும் அவற்றை அடைவதற்கு முன்பாக அவர்கள் அவற்றை எடுத்துக் கொள்வர். இதை நீ கவனித்திருக்கிறாயா? — நான் கவனித்திருக்கிறேன்.

உதாரணமாக, சாப்பாட்டு சமயத்தில் ஒரு பெரிய தட்டு எல்லோரிடத்திலும் கடத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது ருசிகரமான பலகாரத் துண்டுகளால் நிரம்பியிருந்தது. அந்தத் தட்டு சுற்றி வருகையில், ஒவ்வொருவரும் தான் மிகப் பெரிய துண்டை எடுக்கும்படி நிச்சயப்படுத்திக் கொள்ள அந்தத் துண்டுகளைக் கவனமாகப் பார்வையிட்டனர். இப்படிச் செய்வது சரியென்று நீ நினைக்கிறாயா? —

வேறு ஒன்றுங்கூட நடப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு தகப்பனும் தாயும் தங்கள் பிள்ளைகளைத் தங்களோடு கூட்டிக்கொண்டு ஒரு நண்பரைப் பார்க்கச் சென்றனர். அவர்கள் தங்கள் நண்பரின் வீட்டிற்குள் வந்தபோது, அந்தப் பிள்ளைகள் மிகவும் செளகரியமான நாற்காலிகளை அடையும்படி விரைந்தோடினர். இது சரியா? —

பெரிய போதகர் பூமியில் இருந்தபோது இதைப் போன்ற ஒன்று நடந்தது. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பரிசேயனின் வீட்டில் ஒரு பெரிய விருந்துக்கு அவர் அழைக்கப்பட்டார். பல விருந்தாளிகள் அழைக்கப்பட்டிருந்தனர். சாப்பாட்டிற்காக விருந்தாளிகள் உள்ளே வருகையில், மேசையின் முதன்மை இடத்திற்கருகில் மிக உயர்ந்த இடங்களை அவர்கள் தெரிந்து கொள்வதை இயேசு கவனித்தார். அவர்கள் மதிப்பிற்குரிய இடங்களை விரும்பினார்கள். இயேசு அவர்களிடத்தில் என்ன சொன்னார் என்பதைக் கேட்க உனக்குப் பிரியமா?—

அவர் அவர்களுக்கு ஒரு கதையைச் சொன்னார். அந்த விருந்தாளிகளுக்கு அது நல்ல புத்திமதியைக் கொண்டிருந்தது. இன்று நமக்குங்கூட அது நல்ல புத்திமதியைக் கொண்டதாக இருக்கிறது.

இயேசு சொன்னதாவது: ‘யாராவது உன்னை ஒரு பெரிய விவாக விருந்திற்கு அழைக்கலாம். நீ அதற்குப் போகையில், உட்காருவதற்கு மிக உயர்ந்த மதிப்பிற்குரிய இடத்தைத் தெரிந்துகொள்ளாதே. ஏனெனில் உன்னைப் பார்க்கிலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஒருவனுங்கூட அழைக்கப்பட்டிருக்கலாம். அப்பொழுது விருந்தளிப்பவன் உன்னிடத்தில் வந்து, “இவர் உன்னுடைய இடத்தை எடுத்துக் கொள்ளட்டும்,” என்று சொல்லக்கூடும். அப்பொழுது நீ மிகத் தாழ்ந்த இடத்திற்குப் போவதை மற்ற எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கையில் நீ வெட்க உணர்ச்சியை அடைவாய்.’

செய்யவேண்டிய சரியான காரியத்தை அந்த விருந்தாளிகளுக்குக் காட்ட இயேசு விரும்பினார். ஆகவே அவர் மேலும் தொடர்ந்து பின்வருமாறு அவர்களிடத்தில் சொன்னார்:

‘நீ ஒரு கலியாண விருந்திற்கு அழைக்கப்பட்டிருக்கையில் மிகத் தாழ்ந்த இடத்தில் போய் உட்காரு. அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து, “சிநேகிதனே, இதைப் பார்க்கிலும் உயர்வான இடம் நாங்கள் உனக்கு வைத்திருக்கிறோம்!” என்று சொல்லக்கூடும். அப்பொழுது நீ அதைப் பார்க்கிலும் உயர்ந்த இடத்திற்குப் போகையில் மற்ற எல்லாருக்கும் முன்பாக உனக்குக் கனமுண்டாகும்.’—லூக்கா 14:1-11.

இயேசுவினுடைய கதையின் குறிப்பை நீ விளங்கிக் கொண்டாயா? — நாம் ஒரு உதாரணத்தை எடுத்து, நீ விளங்கிக் கொண்டாயா என்று பார்க்கலாம். ஒருவருடைய வீட்டில் நாம் சாப்பிடப் போகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நீ உட்காருவதற்குத் தயாராக இருக்கையில் மிகச் சிறந்த இடத்தை நீ தெரிந்து கொள்வாயா? அல்லது அந்தச் சிறந்த இடத்தை வேறு எவருக்காவது நீ விட்டு விடுவாயா? — நீ எதைச் செய்யும்படி இயேசு விரும்புவார் என்று நீ நினைக்கிறாய்? —

மற்றொரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நீ கூட்டம் நிறைந்த ஒரு பஸ்ஸில் ஏறுகிறாய் என்று நினைத்துக்கொள். ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்ள நீ விரைந்தோடி, வயதான ஒருவர் நின்று கொண்டிருக்கும்படி விடவேண்டுமா? — நீ இப்படிச் செய்யும்படி இயேசு விரும்புவாரா? —

நாம் என்ன செய்கிறோம் என்பது இயேசுவுக்கு எவ்வித வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறதில்லை என்று யாராவது சொல்லலாம். ஆனால் நீ அதை நம்புகிறாயா? — இயேசு, அந்தப் பரிசேயனின் வீட்டில் நடந்த அந்தப் பெரிய விருந்தில் இருக்கும்பொழுது, ஆட்கள் தாங்கள் உட்காரும் இடங்களைத் தெரிந்து கொள்வதை அவர் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். இன்று நாம் என்ன செய்கிறோம் என்பதிலும் அவர் அவ்விதமே அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று நீ நினைக்கிறதில்லையா? — இப்பொழுது இயேசு பரலோகத்தில் இருப்பதால், நம்மைக் கவனித்துப் பார்ப்பதற்கு அதைப் பார்க்கிலும் நல்ல நிலையில் அவர் நிச்சயமாகவே இருக்கிறார்.

ஒவ்வொருவரும் சிறந்த இடத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கையில், அது தொந்தரவை உண்டுபண்ணும். பிள்ளைகள் ஒன்றாகக் காரில் போகையில் சில சமயங்களில் இது நடக்கிறது. காரின் கதவு திறக்கப்பட்டவுடனே, சிறந்த இடங்களை, ஜன்னலுக்கு அருகிலுள்ள இடங்களை எடுத்துக்கொள்ள அவர்கள் வேகமாய்ப் பாய்ந்து செல்கின்றனர். உடனே அங்கே வாக்குவாதம் உண்டாகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் மிகச் சிறந்த இடம் வேண்டுமென்று விரும்புவதால் அவர்கள் ஒருவரொருவருடன் கோபமடைகின்றனர்.

பிள்ளைகள் பந்து விளையாடப் போகையிலுங்கூட இது நடக்கக்கூடும். விளையாடத் தொடங்குவதற்கு முன்பே, யார் முதலாவது இருக்கப் போகிறான் என்பதன்பேரில் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டாகிவிடும். இந்தக் காரியங்கள் நடப்பது மிகவும் மோசமாயிருக்கிறதல்லவா? —

எப்பொழுதும் முதலாவதாக இருக்க வேண்டுமென்று விரும்புவது மிகுந்தத் தொந்தரவை விளைவிக்கக்கூடும். இயேசுவின் அப்போஸ்தலரின் மத்தியிலுங்கூட இது தொந்தரவை உண்டாக்கியது. இது உனக்குத் தெரிந்திருந்ததா? —

இயேசு அவர்கள் எல்லோருக்கும் சிறிது நல்ல புத்திமதி கொடுக்க வேண்டியதாக இருந்தது. ராஜ்யங்களின் அதிபதிகளே பெரியவர்களாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவும் இருக்க ஆசைப்படுகின்றனர். எல்லோரும் தங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று விரும்புகின்றனர் என்று இயேசு அவர்களுக்குச் சொன்னார். ஆனால் தம்மைப் பின்பற்றுகிறவர்கள் அந்த விதமாய் இருக்கக் கூடாதென்று இயேசு அவர்களுக்குச் சொன்னார். அதற்கு மாறாக, “உங்களுக்குள் முதல்வனாக இருக்க விரும்புகிறவன் எவனோ அவன் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும்,” என்று இயேசு சொன்னார். இதை நினைத்துப்பார்!—மாற்கு 10:35-45.

ஓர் அடிமை என்ன செய்கிறான் என்று உனக்குத் தெரியுமா? — மற்றவர்கள் தன்னைச் சேவிப்பதைப் பார்க்கிலும், அவனே மற்ற ஆட்களுக்குச் சேவை செய்கிறான். அவன் முதல் இடத்தை அல்ல, இருக்கும் மிகத் தாழ்ந்த இடத்தை எடுத்துக் கொள்ளுகிறான். இருப்பவர்களில் மிக அதிக முக்கியத்துவம் வாய்ந்தவனாக அல்ல, மிகக் குறைந்த முக்கியத்துவமுள்ளவனாகவே நடந்து கொள்ளுகிறான். முதல்வனாக இருக்க விரும்புகிறவன் மற்றவர்களிடத்தில் அடிமைபோல் நடந்துகொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னதை நினைவில் வைத்துக்கொள்.

இப்பொழுது, இது நமக்கு எதைக் குறிக்கிறதென்று நீ நினைக்கிறாய்? — மிகச் சிறந்த இடத்தை யார் எடுத்துக் கொள்ளபோகிறான் என்பதன் பேரில் ஓர் அடிமை தன் எஜமானரிடம் வாக்குவாதம் செய்வானா? — அல்லது யார் முதலாவது சாப்பிடப் போகிறார்கள் என்பதைப் பற்றி அவன் தர்க்கிப்பானா? — ஓர் அடிமை தனக்கு முன்னால் தன் எஜமானரையே எப்பொழுதும் முதல் வைப்பான் என்று இயேசு காட்டினார். நாமுங்கூட அந்த விதமாகவே செய்ய வேண்டுமல்லவா? — —லூக்கா 17:7-10.

ஆம், நமக்கு மேலாக மற்றவர்களை முதல் வைப்பதே கிறிஸ்தவ முறையாக இருக்கிறது. பெரிய போதகர் இதையே செய்தார். அவருடைய முன்மாதிரியை நாம் பின்பற்றுவோமானால் நாம் கடவுளுக்குப் பிரியமுள்ளவர்களாக இருப்போம்.

(நமக்கு முன்னால் மற்றவர்களை வைக்கும்படி நம்மை ஊக்குவிக்கிற மேலும் அதிகமான வசனங்கள் ரோமர் 12:3-லும் பிலிப்பியர் 2:3, 4-லும் காணப்படுகின்றன.)