வணக்கம் கடவுளுக்குரியது
அதிகாரம் 34
வணக்கம் கடவுளுக்குரியது
நான் உன்னை ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகிறேன். அது அவ்வளவு முக்கியமாக இருப்பதால் நீ அதற்குப் பதிலளிக்கும் முறை உன் எதிர்கால வாழ்க்கையைப் பாதிக்கிறது. உன்னுடைய கடவுள் யார்? —
நீ யாரை வணங்குகிறாயோ அவரே உன் கடவுள். பூமி முழுவதிலுமுள்ள மக்கள் பலவகையான கடவுட்களை வணங்குகின்றனர். அந்தக் கடவுட்களில் சில வெறுமென மரக்கட்டையிலிருந்தும் கல்லிலிருந்தும் செதுக்கப்பட்டவை அல்லது உண்டாக்கப்பட்டவை. மற்றக் கடவுட்கள் விளையாட்டுப் போட்டிகளில் அல்லது இன்னிசையில் புகழ்பெற்ற ஆட்களாக இருக்கின்றனர். அவர்கள் “நட்சத்திரங்கள்” என்றும் “தெய்வங்கள்” என்றும் பேசப்படுகின்றனர். இந்த மற்ற கடவுட்களுக்கு மகிமையை கொடுப்பது சரியா? —
‘உன் கடவுளாகிய யெகோவாவையே நீ வணங்க வேண்டும். அவர் ஒருவருக்கே நீ பரிசுத்த சேவையைச் செலுத்த வேண்டும்,’ என்று பெரிய போதகர் சொன்னார்.—மத்தேயு 4:10.
ஆகவே இயேசு இதைத் தெளிவாக்கினார். நம்முடைய வணக்கம் யெகோவா தேவனுக்கு மாத்திரமே உரியது. நம்முடைய வணக்கத்தின் ஒரு மிகச் சிறிய அளவுங்கூட வேறு எந்தக் கடவுளுக்கும் நாம் கொடுக்க முடியாது. இதை அறிந்திருந்த சில வாலிபரைப் பற்றிய கிளர்ச்சியூட்டும் ஒரு கதை பைபிளில் இருக்கிறது.
அவர்களுடைய பெயர் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ. அவர்கள் எபிரெயராக இருந்தனர், ஆனால் பாபிலோன் தேசத்தில் வாழ்ந்து வந்தனர். பாபிலோனின் அரசன் ஒரு மிகப் பெரிய பொற்சிலையைக் கட்டினான். இன்னிசை வாசிக்கப்படுகையில் தன்னுடைய அந்தச் சிலையை எல்லோரும் குனிந்து வணங்க வேண்டுமென்று அவன் கட்டளையிட்டான். ‘எவனாகிலும் குனிந்து வணங்காமற்போனால் அவன் அந்த விநாடியிலேயே எரிகிற நெருப்பு சூளைக்குள் போடப்படுவான்,’
என்று அவன் எச்சரித்தான். நீ என்ன செய்திருப்பாய்? —சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியவர்கள் சாதாரணமாய் அரசன் கட்டளையிட்ட எல்லாவற்றையும் செய்து வந்தனர். ஆனால் இதைச் செய்ய அவர்கள் மறுத்துவிட்டனர். ஏன் என்று உனக்குத் தெரியுமா? — ஏனென்றால், ‘என்னைத் தவிர வேறு எந்தக் கடவுட்களும் உனக்கு இருக்கக் கூடாது. செதுக்கப்பட்ட ஒரு சிலையை நீ உனக்கு உண்டாக்கி அதை வணங்கக் கூடாது,’ என்று கடவுளுடைய சட்டம் சொன்னது. ஆகவே சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத்நேகோவும் அரசனுடைய கட்டளையைப் பார்க்கிலும் யெகோவாவின் சட்டத்திற்கே கீழ்ப்படிந்தனர்.—யாத்திராகமம் 20:3, 4.
இதைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அரசன் மிகவும் கோபமடைந்தான். உடனே சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகியவர்கள் தன் முன் கொண்டுவரப்படும்படி செய்தான். அவன் அவர்களைப் பின்வருமாறு கேட்டான்: ‘என் சொந்தக் கடவுட்களை நீங்கள் சேவிக்கிறதில்லை என்பது உண்மைதானா? நான் உங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பைக் கொடுப்பேன். இப்பொழுது, இன்னிசையை நீங்கள் கேட்கையில், தாழ விழுந்து நான் செய்திருக்கிற அந்தச் சிலையை வணங்குங்கள். நீங்கள் வணங்காமற்போனால், எரிகிற நெருப்பு சூளைக்குள் நீங்கள் போடப்படுவீர்கள். என்னுடைய கைகளிலிருந்து உங்களைத் தப்புவிக்கக்கூடிய அந்தக் கடவுள் யார்?’
சாத்ராக்கும், மேஷாக்கும், ஆபேத்நேகோவும் இப்பொழுது என்ன செய்வார்கள்? நீ என்ன செய்திருப்பாய்? — அவர்கள் யெகோவாவில் நம்பிக்கை வைத்தார்கள். அவர்கள் உடனே பேசுகிறவர்களாய் அரசனிடம்: ‘நாங்கள் சேவிக்கிற எங்கள் கடவுள் எங்களைத் தப்புவிக்கக் கூடியவராக இருக்கிறார். அவர் அதைச் செய்யாமற்போனாலுங்கூட உம்முடைய கடவுட்களை நாங்கள் சேவிக்கப் போவதில்லை. உம்முடைய பொற்சிலையை நாங்கள் வணங்கமாட்டோம்,’ என்று சொன்னார்கள்.
அரசன் கடுங்கோபமூண்டான். ‘அந்தச் சூளை சாதாரணமாய்ச் சூடாக்கப்படுவதைப் பார்க்கிலும் ஏழு மடங்குகள் அதிகமாய்ச் சூடாக்கப்படட்டும்!’ என்று அவன் கட்டளையிட்டான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவைக் கட்டும்படி தன் பலமுள்ள மனிதருக்கு அவன் உத்தரவிட்டான். பின்பு: ‘அவர்களைச் சூளைக்குள் எறியுங்கள்!’ என்று அவன் சொன்னான்.
அரசனின் வேலைக்காரர்கள் அவர்களை அதற்குள் எறிந்தார்கள். ஆனால் சூளை அவ்வளவு அதிகச் சூடாக இருந்ததனால் அரசனின் சொந்த மனிதர் தாமே அந்த சுவாலைகளால் கொல்லப்பட்டனர்! அந்த மூன்று எபிரெயர்களைப் பற்றியதென்ன?
சாத்ராக்கும், மேஷாக்கும் ஆபேத்நேகோவும் சரியாக அந்த நெருப்பின் நடுவில் போய் விழுந்தார்கள். ஆனால் பின்பு அவர்கள் எழுந்திருந்தார்கள்! அவர்களுக்குத் தீங்கு உண்டாகவில்லை. அவர்கள் இனிமேலும் கட்டப்பட்டவர்களாக இல்லை. இது எப்படிக் கூடியதாயிருக்கும்?
அரசன் சூளைக்குள் பார்த்தான். அவன் அங்கே கண்டது அவனைப் பயமடையச் செய்தது. ‘நெருப்பிற்குள் மூன்று பேரை அல்லவா நாம் எறிந்தோம்?’ என்று அவன் கேட்டான்.
‘ஆம், அரசரே,’ என்று அவனுடைய ஊழியர் பதிலளித்தனர்.
ஆனால் அரசன்: ‘இதோ! நான்கு மனிதர் அங்கே உள்ளே உலாவுகிறதை நான் காண்கிறேனே. நெருப்பு அவர்களில் எவருக்கும் தீங்கு செய்கிறதில்லை,’ என்று சொன்னான்.
அந்த நாலாவது ஆள் யாரென்று உனக்குத் தெரியுமா? — அது யெகோவாவின் தூதன். மெய்த்தேவனின் அந்த உண்மையுள்ள மூன்று எபிரெய ஊழியரைப் பாதுகாக்கும்படி அவன் அங்கே இருந்தான்.
இதைக் கண்டபோது, அரசன் அந்தச் சூளையின் கதவண்டை வந்து: “உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள்,” என்று சத்தமிட்டு சொன்னான். அவர்கள் வெளியே வந்தபோது அவர்கள் எரிக்கப்பட்டில்லை என்பதை எல்லோரும் காணக்கூடியதாக இருந்தது. நெருப்பின் வாசனையுங்கூட அவர்கள் மேல் இருக்கவில்லை.
அப்பொழுது அரசன்: ‘தங்கள் சொந்தக் கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுட்களையும் வணங்காததன் காரணமாக, தம்முடைய ஊழியரைக் காப்பாற்றின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களின் கடவுள் துதிக்கப்படுவாராக,’ என்று சொன்னான்.—தானியேல் மூன்றாம் அதிகாரம்.
இது அதிசயமாக இருக்கிறதல்லவா? — அந்த மூன்று வாலிபர் செய்த காரியத்தில் யெகோவா சந்தோஷமடைந்தார். இதிலிருந்து நாம் ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.
இன்றுங்கூட மனிதர் வணக்கத்திற்காக சிலைகளை ஏற்படுத்தி வைக்கின்றனர். சில, மரத்தால் அல்லது கல்லால் அல்லது உலோகத்தால் செய்யப்படுகின்றன. இந்தச் சிலைகளை நீ வணங்குவாயா? —
வேறு சிலைகள் துணியால் செய்யப்படுகின்றன. இந்த வகையான சிலைகளை நீ எப்பொழுதாவது பார்த்திருக்கிறாயா? — துணியாலோ மரத்தாலோ கல்லாலோ அது செய்யப்பட்டிருப்பது கடவுளுக்கு ஏதாவது வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதென்று நீ நினைக்கிறாயா? — இப்படிப்பட்ட ஒரு சிலைக்கு முன்னால் ஒரு வணக்கச் செயலைச் செய்வது யெகோவாவின் ஓர் ஊழியனுக்குச் சரியாக இருக்குமா? —
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆனவர்கள் வணக்கத்தை யெகோவாவுக்கு மாத்திரமே கொடுப்பவர்களாக இருந்தார்கள். கடவுள் அவர்கள் பேரில் சந்தோஷப்பட்டார். அவர்களுடைய முன்மாதிரியை நீ பின்பற்றுகிறாயா? —
(யெகோவாவைச் சேவிக்கிறவர்கள் சிலைகளையும் கூடுதலாக வணங்க முடியாது. இதைப் பற்றி ஏசாயா 42:8-லும் யோசுவா 24:14, 15, 19-22-லும் சொல்லியிருப்பதை வாசியுங்கள்.)