Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெறுமையாயிருந்த ஒரு கல்லறை

வெறுமையாயிருந்த ஒரு கல்லறை

அதிகாரம் 42

வெறுமையாயிருந்த ஒரு கல்லறை

பெரிய போதகர் அந்த வாதனைக்குரிய கழுமரத்தில் உண்மையில் மரித்தாரா? — ஆம், அவர் மரித்தார். இது நடப்பதைப் பல ஆட்கள் கண்டனர். ஒரு போர்ச்சேவகன் வந்து இயேசுவின் விலாவிற்குள் ஈட்டியைக் குத்தினபோதுங்கூட சிலர் கண்டனர். இரத்தம் வெளியில் வடிவதை அவர்கள் கண்டனர். ஆம், பெரிய போதகர் இறந்து விட்டார்.

பின்னால் யோசேப்பு என்ற பெயரையுடைய ஒரு மனிதன் அந்த ரோம தேசாதிபதியினிடம் சென்றான். யோசேப்பு பெரிய போதகரில் நம்பிக்கை வைத்திருந்தான். ‘கழுமரத்திலிருந்து இயேசுவின் உடலை நாம் இறக்கி அதை அடக்கம் செய்ய என்னை நீர் அனுமதிப்பீரா?’ என்று அவன் கேட்டான். அந்த ரோம அதிபதி, ‘சரி, எடுத்துக்கொள்,’ என்றான். ஆகவே யோசேப்பு ஒரு கல்லறை இருந்த ஒரு தோட்டத்திற்கு இயேசுவின் உடலைக் கொண்டுசென்றான். கல்லறை என்றால் என்னவென்று உனக்குத் தெரியுமா? —

அது, செத்த உடல்கள் வைக்கப்படும் ஓர் இடம். இயேசுவின் உடல் அந்தக் கல்லறைக்குள் வைக்கப்பட்டது. பின்பு ஒரு பெரிய வட்டமான கல் அந்தக் கல்லறையின் வாசலுக்கு முன்னால் உருட்டி வைக்கப்பட்டது. கல்லறை மூடப்பட்டாய் விட்டது.

இயேசு மரித்தவராக இருந்தார். ஆனால் தம்மைக் கடவுள் மறுபடியும் உயிரடைய செய்வார் என்று இயேசு தம்முடைய சீஷருக்குச் சொல்லியிருந்தார். எப்பொழுது? ‘நான் மரித்தப்பின் மூன்றாம் நாளில்,’ என்று இயேசு சொல்லியிருந்தார். இதுவே நடந்ததா? நாம் பார்க்கலாம்.

அது, சூரியன் உதிப்பதற்கு முன்பாக, அதிகாலையாக இருக்கிறது. ஆகவே இன்னும் இருளாக இருக்கிறது. சில போர்ச் சேவகர் அங்கே அந்தக் கல்லறையைக் காவல் காத்துக் கொண்டிருக்கின்றனர். காவல் காக்கும்படி தலைமை ஆசாரியர்கள் அவர்களை அனுப்பினர். ஏன்? இயேசுவின் சீஷர்களைத் தடுத்து வைக்கவே. ஆனால் இப்பொழுது அதிர்ச்சியூட்டும் ஒன்று நடக்கிறது.

திடீரென்று தரை அதிர ஆரம்பிக்கிறது. அந்த இருட்டில் திடீர் ஒளி வீசுகிறது. பார்! அதோ யெகோவாவின் ஒரு தூதன்! அந்தப் போர்ச் சேவகர் அவ்வளவு அதிகம் பயந்து போய் அசையவும் முடியாதவர்களாக இருக்கின்றனர். தேவ தூதன் கல்லறையினிடம் போகிறான். அந்தக் கல்லை அவன் புரட்டித் தள்ளுகிறான். உள்ளே பார். கல்லறை வெறுமையாக இருக்கிறது!

ஆம், யெகோவா தேவன் இயேசுவைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவந்து விட்டார். இயேசு பூமிக்கு வருவதற்கு முன்பாக அவருக்கு இருந்ததைப் போன்ற ஒரு சரீரத்தில் அவர் இயேசுவை உயிரோடு எழுப்பியிருக்கிறார். அது என்ன வகையான சரீரம் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா? — அது தேவதூதர்களுக்கு இருப்பதைப்போன்ற ஒரு சரீரம், ஆவி சரீரம்.—1 பேதுரு 3:18.

ஒரு ஆவி சரீரத்தை நீ பார்க்க முடியுமா? — முடியாது. ஆகவே ஒரு தூதன் தன்னை ஆட்கள் பார்க்க வேண்டுமென்று விரும்புவானேயானால் அவன் தனக்கு நம்முடையதைப் போன்ற ஒரு சரீரத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும். அப்பொழுது ஆட்கள் அவனைப் பார்க்கக்கூடும். அதன் பின்பு அந்தத் தூதன் காணப்படாமற்போவான்.

இப்பொழுது சூரியன் எழும்பி வருகிறது. அந்தப் போர்ச் சேவகர் போய்விட்டனர். இயேசுவை நேசித்த சில பெண்கள் கல்லறையை நோக்கி வருகின்றனர். ‘நமக்காக அந்தக் கனத்தக் கல்லைப் புரட்டித் தள்ள நாம் யாரைக் கேட்போம்?’ என்று அவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் பார்க்கையில், அந்தக் கல் ஏற்கெனவே புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறது. மேலும் பார், கல்லறை வெறுமையாக இருக்கிறது! இயேசுவின் மரித்த மாம்ச உடல் அங்கே இல்லை! இயேசுவின் அப்போஸ்தலர் சிலருக்கு இதைச் சொல்ல அந்தப் பெண்களில் ஒருத்தி உடனே ஓடுகிறாள்.

மற்ற பெண்கள் கல்லறையின் பக்கத்தில் இருக்கின்றனர். ‘இயேசுவின் உடல் எங்கே இருக்கக்கூடும்?’ என்று அவர்கள் சொல்லிக் கொள்ளுகின்றனர். திடீரென்று, பிரகாசமான உடையில் இரண்டு மனிதர் தோன்றுகின்றனர். அவர்கள் தேவதூதர்கள். அவர்கள் இந்தப் பெண்களிடத்தில்: ‘இயேசுவுக்காக இங்கே ஏன் தேடுகிறீர்கள்? அவர் உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார். சீக்கிரமாய்ப் போய் அவருடைய சீஷருக்குச் சொல்லுங்கள்,’ என்று சொல்லுகிறார்கள்.

அந்தப் பெண்கள், ஆ, எவ்வளவு வேகமாய் ஓடுகிறார்கள் என்பதை நீ எண்ணிப்பார்க்கக்கூடும்! வழியில் ஒரு மனிதர் அவர்களைச் சந்திக்கிறார். அவர் யார் என்று உனக்குத் தெரியுமா? — இயேசுவே! அவருங்கூட அந்தப் பெண்களிடம்: ‘போய் என் சீஷருக்குச் சொல்லுங்கள்,’ என்கிறார்.

அந்தப் பெண்கள் உணர்ச்சியால் பொங்குகின்றனர். அவர்கள் சீஷரைக் கண்டுபிடித்து: ‘இயேசு உயிருடன் இருக்கிறார்! நாங்கள் அவரைக் கண்டோம்!’ என்று அவர்களுக்குச் சொல்லுகின்றனர்.

முதலில் சீஷர்கள் இதை நம்புவதைக் கடினமாய்க் காண்கின்றனர். என்றபோதிலும், கல்லறை வெறுமையாக இருக்கிறதென்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். பேதுருவும் யோவானும் அங்கே போய் அது வெறுமையாக இருப்பதைக் கண்டிருக்கின்றனர். இயேசு மறுபடியும் உயிரோடிருக்கிறார் என்று நம்பவே சீஷர்கள் விரும்புகின்றனர். ஆனால் இது உண்மையாக இருப்பதற்கு மிக மீறிய அதிசயமானதாகத் தோன்றுகிறது. அவர்களை எது நம்ப வைக்கும்? —

பின்னால் இந்த சீஷரில் சிலருக்கு இயேசு தோன்றுகிறார். இவர்களில் இருவர் ஒரு பாதை வழியாய் நடந்து கொண்டிருக்கையில், இயேசு அவர்களோடு சேர்ந்து நடக்க ஆரம்பிக்கிறார். அவர் அவர்களிடத்தில் பேசுகிறார், பின்பு மறைந்துபோகிறார். அவர் பேதுருவுக்குங்கூட தோன்றுகிறார்.

பின்னால் அதே நாளில் சீஷர்கள் பலர் ஓர் அறையில் கூடியிருக்கின்றனர். கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றன, ஏனென்றால் அவர்கள் ஆசாரியர்களுக்குப் பயந்திருக்கிறார்கள். திடீரென்று இயேசு அங்கேதானே அறைக்குள் அவர்களுடன் இருக்கிறார்! இப்பொழுது பெரிய போதகர் உண்மையில் மறுபடியுமாக உயிரோடிருக்கிறார் என்று அவர்கள் அறிந்து கொண்டனர். அவர்கள் ஆ, எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்களென்று எண்ணிப்பார்!—மத்தேயு 28:1-15; லூக்கா 24:1-49; யோவான் 19:38–20:21.

பல நாட்களுக்குப் பின்பு, இயேசு பூமியை விட்டுவிட்டு பரலோகத்திலுள்ள தம்முடைய தகப்பனிடத்திற்குத் திரும்பிப் போய்விடுகிறார். சீக்கிரத்தில் சீஷர்கள், கடவுள் இயேசுவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பினார் என்று எல்லோருக்கும் சொல்லத் தொடங்குகின்றனர். பல ஆட்கள் நம்பி சீஷராகின்றனர்.

இது தலைமை ஆசாரியர்களுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அவர்கள் அப்போஸ்தலரைக் கைது செய்கின்றனர். ‘ஜனங்களுக்கு இந்தக் காரியங்களைப் போதிப்பதை நிறுத்துங்கள்,’ என்று அவர்கள் அப்போஸ்தலருக்குச் சொல்லுகின்றனர். அப்போஸ்தலர் வாரினால் அடிக்கப்படும்படியும்கூட அவர்கள் செய்கின்றனர். அவர்கள் ஜனங்களுக்குப் போதிப்பதை நிறுத்திவிடுகிறார்களா? நீ என்ன செய்திருப்பாய்? —

அப்போஸ்தலர் நிறுத்துகிறதில்லை. அவர்கள் இப்பொழுது பயப்படுகிறதில்லை. தாங்கள் மரிக்க வேண்டியதிருந்தால் மரிக்கவுங்கூட அவர்கள் மனமுள்ளவர்களாக இருக்கின்றனர். கடவுள் இயேசுவை மறுபடியும் உயிர்ப்பித்தார் என்பது அவர்களுக்குத் தெரியும். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு அவர்கள் அவரைப் பார்த்தார்கள். தாங்கள் கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக மரிப்பார்களேயானால் தங்களையுங்கூட கடவுள் உயிர்ப்பிக்கக் கூடுமென்று அவர்கள் நிச்சயமாய் இருக்கின்றனர்.—அப்போஸ்தலர் 1:3-11; 5:40-42.

இன்றிருக்கும் பல ஆட்களிலிருந்து ஆ, அவர்கள் எவ்வளவு வித்தியாசமானவர்களாக இருந்தனர்! சில ஆட்கள், இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதைப்பற்றி நினைக்கையில், ஈஸ்டர் முயல்களையும் வர்ணம் பூசிய ஈஸ்டர் முட்டைகளையும்பற்றி மாத்திரமே நினைக்கின்றனர். ஆனால் ஈஸ்டர் முயல்களையும் முட்டைகளையும் பற்றி பைபிள் ஒன்றுமே சொல்லுகிறதில்லை. கடவுளைச் சேவிப்பதைப் பற்றியே அது பேசுகிறது.

நாம் இயேசுவின் சீஷர்களைப்போல் இருக்கலாம். கடவுள் தம்முடைய குமாரனை மறுபடியும் உயிருக்குக் கொண்டுவந்தபோது எப்பேர்ப்பட்ட அதிசயமான காரியத்தைச் செய்தார் என்பதை நாம் ஜனங்களுக்குச் சொல்லலாம். இயேசு செய்ததைப் போலவே நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியலாம். ஆனால், இயேசு மரித்ததுபோலவே, கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் காரணமாக நாம் மரிப்போமானால் எப்படி? — நாம் ஒருபோதும் பயப்படவேண்டியதில்லை. தம்முடைய நீதியுள்ள ராஜ்யத்தின்கீழ் யெகோவா நம்மைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவரக்கூடும்.

(இயேசுவின் உயிர்த்தெழுதலில் கொண்டுள்ள நம்பிக்கையானது நமக்கு உறுதியான நம்பிக்கையைக் கொடுத்து நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும். 1 கொரிந்தியர் 15:3-8, 20-23; அப்போஸ்தலர் 2:22-36; 4:18-20 ஆகியவற்றை வாசியுங்கள்.)