Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வேலையின் ஆசீர்வாதம்

வேலையின் ஆசீர்வாதம்

அதிகாரம் 23

வேலையின் ஆசீர்வாதம்

வேலையா விளையாட்டா, எது உனக்கு அதிகப் பிரியம்? — ஆனால் நாம் எல்லா நேரத்திலும் விளையாடிக்கொண்டே இருந்தால் அது உண்மையில் நல்லதாக இருக்குமா? — ஒருவரும் ஒருபோதும் வேலை செய்யாவிட்டால் என்ன நடக்குமென்று நீ எப்பொழுதாவது நினைத்திருக்கிறாயா? —

நீ சாப்பிடும் உணவைப் பற்றி நினைத்துப்பார். அது எங்கிருந்து வருகிறதென்று உனக்குத் தெரியுமா? — அதில் பேரளவு செடிகளிலும் மரங்களிலும் வளருகிறது. ஆனால் ஒருவரும் அவற்றைக் கவனித்துக் காப்பாற்றாமலும் பழங்களையும் காய்கறிகளையும் பறிக்காமலும் இருந்தால் நீ என்ன சாப்பிடுவாய்? உனக்கு உணவு இருக்கும்படியாக ஆட்கள் வேலைசெய்வது நல்லதாக இருக்கிறதல்லவா? —

நீ வாழும் வீட்டைச் சுற்றிப்பார். படுத்துத் தூங்குவதற்கு உனக்கு ஒரு படுக்கை இருக்கிறதா? — உட்காருவதற்கு நாற்காலிகளும் ஒரு மேசையுங்கூட இருக்கின்றனவா? — இந்தப் பொருட்களைச் செய்ய யாரோ வேலை செய்தார்கள் என்பது உனக்குச் சந்தோஷமாக இருக்கிறதல்லவா? —

வேலையைப் பற்றி பெரிய போதகர் எப்படி உணர்ந்தார்? நாம் பார்க்கலாம்.

சிறு பையனாக இருக்கையிலுங்கூட அவர் தச்சுப் பட்டறையில் வேலை செய்தார். மரத்திலிருந்து பொருட்களை அவர் செய்தார். யோசேப்பு ஒரு தச்சனாயிருந்தான். அவன் இயேசுவைத் தன்னுடைய சொந்த மகனாக வளர்த்தான். இதன் காரணமாகவே பைபிள் இயேசுவைத் “தச்சனுடைய குமாரன்” என்று அழைக்கிறது. அந்நாட்களில் சிறு பையன் தன் தகப்பன் செய்த அதே வேலைகளைச் செய்ய கற்றுக்கொள்வான்.—மத்தேயு 13:55.

முதலில் இயேசுவுக்கு இது கடினமாக இருந்திருக்கலாம். ஆனால் பழகின பின், அந்த வேலையை அவர் நன்றாகச் செய்ய கற்றுக் கொண்டார். இயேசுவுங்கூட தச்சனாகிவிட்டார்.—மாற்கு 6:3.

இந்த வேலை இயேசுவுக்கு இன்பத்தைக் கொடுத்தது என்று நீ நினைக்கிறாயா? — ஜனங்களுடைய உபயோகத்திற்காக மேசைகளையும் நாற்காலிகளையும் மற்றப் பொருட்களையும் நீ செய்யக்கூடுமென்றால் நீ சந்தோஷமாக இருப்பாயா? — ஒருவன் “தான் செய்யும் வேலைகளில் களிகூருவது” நல்லதென்று பைபிள் சொல்லுகிறது. விளையாட்டிலிருந்து நீ அடைய முடியாத ஒருவகையான இன்பத்தை வேலை கொடுக்கிறது. விளையாடுவது தவறல்ல, ஆனால் முழு நேரமும் விளையாடுவது நல்லதல்ல.—பிரசங்கி 3:22.

இயேசு தம்முடைய வாழ்நாள் முழுவதும் தச்சனாக வேலை செய்யவில்லை. பூமியில் அவர் செய்வதற்கு யெகோவா தேவன் விசேஷித்த வேலையை வைத்திருந்தார். அந்த வேலை என்னவென்று உனக்குத் தெரியுமா? — “நான் கடவுளின் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன்,” என்று இயேசு சொன்னார். ஆம், இயேசு செய்வதற்குக் கடவுள் ஒரு பிரசங்க வேலையை அவருக்கு வைத்திருந்தார்.—லூக்கா 4:43.

இந்த வேலையைச் செய்வதைக் குறித்து இயேசு எப்படி உணர்ந்தார்? இதைச் செய்ய அவர் விரும்பினாரா? —

“என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என் போஜனம்,” என்று இயேசு சொன்னார். உனக்கு மிக அதிக விருப்பமான உணவை நீ எவ்வளவாய்ச் சாப்பிட விரும்புகிறாய்? — கடவுள் இயேசுவுக்குக் கொடுத்த வேலையை அவர் எவ்வளவாய் விரும்பினார் என்பதைப் பற்றிய ஒரு அபிப்பிராயத்தை உனக்குக் கொடுக்கிறது.—யோவான் 4:34.

வேலைசெய்ய கற்றுக் கொள்கையில் நாம் சந்தோஷமாக இருக்கும் வண்ணமாய்க் கடவுள் நம்மை உண்டாக்கினார். வேலை, மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட அவருடைய பரிசு என்றும், அவன் “தன் உழைப்பிலே மகிழ்ந்திருக்க” வேண்டுமென்றும் அவர் சொல்லுகிறார். ஆகவே, நீ சிறுவனாயிருக்கையில் வேலை செய்ய கற்றுக் கொள்வாயானால், உன்னுடைய முழு வாழ்க்கையும் அதிகப் படியாய் மகிழ்ச்சி அனுபவிக்கத் தக்கதாக இருக்கும்.—பிரசங்கி 5:19.

இது, ஒரு இளம் பிள்ளை ஒரு பெரிய மனிதனின் வேலையைச் செய்யக்கூடுமென்று அர்த்தம் கொள்வதில்லை, ஆனால் நாம் எல்லோரும் ஏதோ ஓரளவான வேலையைச் செய்யக்கூடும். நமக்குச் சாப்பிடுவதற்கு உணவும் வசிப்பதற்கு ஒரு வீடும் இருக்கும்படியாக உன் தகப்பன் நாள்தோறும் வேலைசெய்து வருகிறார். உன் தகப்பன் என்ன வகையான வேலையைச் செய்கிறார் என்று உனக்குத் தெரியுமா? — அவர் தனக்காக மாத்திரமே வேலை செய்கிறதில்லை. முழு குடும்பத்தின் நலனுக்காகவும் வேலை செய்கிறார். உன் தாய் நம்முடைய சாப்பாட்டைத் தயார் செய்ய வேலை செய்கிறார்கள். அவர்கள் நம்முடைய வீட்டையும் நம்முடைய உடைகளையும் சுத்தமாக வைக்கிறார்கள்.

முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதமாக இருக்கும்படி, நீ செய்யக்கூடிய என்ன வேலை இருக்கிறது? — மேசையை ஒழுங்குபடுத்த நீ உதவி செய்யலாம், பாத்திரங்களைத் துடைத்து வைக்கலாம், உன் அறையைச் சுத்தம் செய்யலாம், உன் விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைக்கலாம். ஒருவேளை இந்தக் காரியங்கள் சிலவற்றை நீ ஏற்கெனவே செய்து கொண்டிருக்கலாம். இந்த வேலை உண்மையில் ஆசீர்வாதமாக இருக்கிறதா? —

இதைப் போன்ற வேலை எப்படி ஆசீர்வாதமாக இருக்கிறதென்று நாம் பார்க்கலாம். நீ விளையாடின பிறகு விளையாட்டுப் பொருட்கள் அவற்றிற்குரிய இடத்தில் வைக்கப்பட வேண்டும். இது முக்கியம் என்று நீ ஏன் சொல்வாய்? — இது வீட்டை ஒழுங்காக்குவதற்கு உதவி செய்கிறது. மேலும் இது விபத்துக்களைத் தவிர்க்கக் கூடியதாக இருப்பதாலும் முக்கியமானது. நீ உன் விளையாட்டுப் பொருட்களைப் பொறுக்கி வைக்காவிட்டால், ஒருவேளை ஏதோ ஒரு நாள் உன் அம்மா கைகளில் நிறைய பொருட்களை வைத்துக்கொண்டு வந்து அவற்றில் ஒன்றின்மேல் தெரியாமல் காலை வைத்து விடக்கூடும். அவர்கள் வழுக்கி விழுந்து தன் தலையைக் காயப்படுத்திக் கொள்ளக்கூடும். அவர்கள் ஒருவேளை வைத்தியசாலைக்குங்கூட போக வேண்டியதாகி விடலாம். இது பயங்கரமாயிருக்கும் அல்லவா? — ஆகவே, நீ விளையாடின பிறகு விளையாட்டுப் பொருட்களை எடுத்து வைக்கையில், அது நம்மெல்லாருக்கும் ஆசீர்வாதமாக இருக்கிறது.

பிள்ளைகளுக்கு வேறு வேலையுங்கூட இருக்கிறது. நான் பள்ளிக்கூட வேலையைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பது எப்படியென்று நீ பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொள்ளுகிறாய். வாசிப்பது மிகுந்த மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பதாய் சில பிள்ளைகள் காண்கின்றனர், ஆனால் வேறு சிலர் அது கடினமாக இருக்கிறதென்று சொல்லுகின்றனர். அது முதலில் கடினமாகத் தோன்றினாலுங்கூட நீ நன்றாய் வாசிக்கக் கற்றுக் கொள்வாயானால் சந்தோஷமடைவாய். உனக்கு வாசிக்கத் தெரிகையில், நீ கற்றுக் கொள்ளக்கூடிய உற்சாகந்தரும் காரியங்கள் மிகப் பல இருக்கின்றன. கடவுளுடைய சொந்த புத்தகமாகிய பைபிளையுங்கூட, நீயே வாசித்துக் கொள்ளக்கூடியவனாய் இருப்பாய். ஆகவே, உன்னுடைய பள்ளிக்கூட வேலையை நீ நன்றாகச் செய்கையில், அது உண்மையில் ஆசீர்வாதமாக இருக்கிறது அல்லவா? —

வேலையைத் தவிர்க்கப் பிரயாசப்படுகிற ஆட்கள் சிலர் இருக்கின்றனர். இப்படிச் செய்கிற ஒருவர் ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் நாம் வேலை செய்யும்படி கடவுள் நம்மை உண்டாக்கினதினால், வேலையில் மகிழ்ச்சியடைவது எப்படியென்று நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

இதோ, உதவக்கூடிய சில யோசனைகள், செய்வதற்கு உனக்கு வேலை இருக்கும் பொழுது உன்னை நீயே பின்வருமாறு கேட்டுக்கொள்: இது ஏன் செய்யப்படவேண்டும்? ஒரு வேலை ஏன் முக்கியமானது என்பதை நீ தெரிந்திருக்கையில், அதைச் செய்வது சுலபமாயிருக்கிறது. அந்த வேலை பெரியதாயிருந்தாலுஞ்சரி சிறியதாயிருந்தாலுஞ்சரி, அதை நன்றாகச் செய்து முடி. அப்படிச் செய்வாயானால், உன் கைகளின் வேலையில் நீ களிகூரலாம். அப்பொழுது வேலை உண்மையில் ஓர் ஆசீர்வாதம் என்பதை நீயே தெரிந்துகொள்வாய்.

(ஓர் ஆள் நல்ல வேலையாளனாவதற்கு பைபிள் உதவி செய்யக்கூடும். கொலோசெயர் 3:23; நீதிமொழிகள் 10:4; 22:29; பிரசங்கி 3:12, 13, 22 ஆகியவற்றில் பைபிள் சொல்வதை வாசியுங்கள்.)