Skip to content

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா?

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா?

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா?

ஏன் பைபிள் வாசிக்க வேண்டும்?

பைபிள் மற்ற புத்தகங்கள் மாதிரி அல்ல​—⁠இது கடவுளுடைய அன்பான போதனைகள் அடங்கிய புத்தகம். (1 தெசலோனிக்கேயர் 2:13) பைபிள் சொல்வதை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் நீங்கள் அதிக பயனடைவீர்கள். கடவுள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு பெருகும், ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அளிப்பவரிடம் அண்டியும் வருவீர்கள். (யாக்கோபு 1:17) மேலும், ஜெபத்தில் அவரை அணுகுவது எப்படி என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். கஷ்ட காலங்களில் கடவுளுடைய துணை இருப்பதை அனுபவப்பூர்வமாக அறிந்துகொள்ளலாம். பைபிள் தராதரங்களுக்கு இசைவாக வாழ்ந்தால் கடவுள் உங்களுக்கு நித்திய ஜீவனை பரிசாக வழங்குவார்.​—ரோமர் 6:23.

அறிவொளியூட்டும் சத்தியங்கள் பைபிளில் உள்ளன. பைபிள் அறிவை பெறுகிறவர்கள் லட்சோப லட்சம் மக்களுடைய வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் தவறான கருத்துக்களிலிருந்து விடுதலை அடைகிறார்கள். உதாரணமாக, இறந்தபின் என்ன நேரிடுகிறது என்பதைப் பற்றிய சத்தியத்தை அறிவது, இறந்தவர்கள் நமக்கு தீங்கு செய்வார்கள் அல்லது இறந்துபோன நம் உறவினர்களோ நண்பர்களோ கஷ்டப்படுகிறார்கள் போன்ற பயத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. (எசேக்கியேல் 18:4) உயிர்த்தெழுதலைப் பற்றிய பைபிள் போதனை அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்களுக்கு ஆறுதலளிக்கிறது. (யோவான் 11:25) பொல்லாத தேவதூதர்களைப் பற்றிய உண்மையை அறிவது, ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்வதால் வரும் ஆபத்துகளைக் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க உதவுகிறது; இந்தப் பூமியில் ஏன் இவ்வளவு தொல்லைகள் என்பதை புரிந்துகொள்ளவும் நமக்கு உதவுகிறது.

பைபிளில் கடவுள் தந்துள்ள நியமங்கள் எப்படி சரீர நன்மைகளைப் பெறும் வகையில் வாழலாம் என்பதை காட்டுகின்றன. உதாரணமாக, “பழக்கங்களில் மிதமாக” இருப்பது நல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. (1 தீமோத்தேயு 3:2, NW) “உடலிலும் உள்ளத்திலும் மாசு எதுவுமின்றி நம்மையே தூய்மைப்படுத்து”வதால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதை தடுக்கிறோம். (2 கொரிந்தியர் 7:1, பொது மொழிபெயர்ப்பு) பைபிளில் கடவுள் தரும் புத்திமதியை பின்பற்றுவது மணவாழ்வில் மகிழ்ச்சி பொங்கச் செய்கிறது, சுயமரியாதையை கூட்டுகிறது.​—1 கொரிந்தியர் 6:18.

கடவுளுடைய வார்த்தைக்கு இசைய வாழ்ந்தால் நீங்கள் அதிக சந்தோஷமுள்ளவராக இருப்பீர்கள். நிம்மதியையும் திருப்தியையும் கண்டடைய பைபிள் அறிவு நமக்கு உதவுகிறது, நம்பிக்கையையும் அளிக்கிறது. இரக்கம், அன்பு, சந்தோஷம், சமாதானம், தயவு, விசுவாசம் போன்ற இனிய பண்புகளை வளர்க்க உதவுகிறது. (கலாத்தியர் 5:22, 23; எபேசியர் 4:24, 32) இப்படிப்பட்ட பண்புகள் சிறந்த கணவனாக அல்லது மனைவியாக, தகப்பனாக அல்லது தாயாக, மகனாக அல்லது மகளாக ஆவதற்கு உதவுகின்றன.

எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா? கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனங்கள் நமக்குக் காட்டுகின்றன. இத்தீர்க்கதரிசனங்கள் இன்றைய உலக நிலைமையை படம்பிடித்துக் காட்டுவதோடு, விரைவில் இந்தப் பூமியை பூங்காவனம் போன்ற பரதீஸாக கடவுள் மாற்றுவார் என்றும் காட்டுகின்றன.​—வெளிப்படுத்துதல் 21:3, 4.

பைபிளை புரிந்துகொள்ள உதவி

ஒருவேளை பைபிளை வாசிக்க முயற்சி செய்தும் அதைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்திருக்கலாம். ஒருவேளை உங்கள் கேள்விகளுக்கு பதில்களை பைபிளில் எங்கே கண்டுபிடிப்பது என்று தெரியாமல் இருக்கலாம். அப்படியானால், இந்தப் பிரச்சினையை எதிர்ப்படுவது நீங்கள் மட்டுமல்ல. கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ள நம் அனைவருக்கும் உதவி தேவை. சுமார் 235 நாடுகளிலுள்ள யெகோவாவின் சாட்சிகள் லட்சக்கணக்கானோருக்கு பைபிளை இலவசமாக கற்றுக்கொடுக்கிறார்கள். உங்களுக்கும் உதவ அதிக ஆவலோடு இருக்கிறார்கள்.

பொதுவாக, பைபிளின் அடிப்படை போதனைகளில் ஆரம்பித்து படிப்படியாக படிப்பதே சிறந்த வழி. (எபிரெயர் 6:1) தொடர்ந்து படிக்கும்போது ‘பலமான ஆகாரத்தை,’ அதாவது ஆழமான சத்தியங்களை நன்கு கிரகித்துக்கொள்ள முடியும். (எபிரெயர் 5:14) பைபிளே அதிகாரப்பூர்வமான தகவல்களின் ஊற்றுமூலம். கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டைப் போன்ற பைபிள் பிரசுரங்கள் பல்வகை விஷயங்களைப் பற்றி பைபிள் சொல்வதைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

பைபிளை புரிந்துகொள்ள ஒவ்வொரு வாரமும் நேரத்தை ஒதுக்க விருப்பமா?

உங்களுக்கு வசதியான நேரத்திலும் இடத்திலும் படிப்பை ஏற்பாடு செய்துகொள்ளலாம். அநேகர் தங்கள் வீடுகளிலேயே படிக்கிறார்கள். சிலர் தொலைபேசி வாயிலாகவும் படிக்கிறார்கள். இது வகுப்பில் அநேக மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல இருக்காது. ஆனால் உங்களுடைய அறிவு, படிப்பு போன்ற தனிப்பட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நடத்தப்படும் ஓர் ஏற்பாடு. இந்தப் படிப்பில் பரீட்சைகள் எதுவும் இருக்காது. ஆகவே நீங்கள் சங்கடப்பட வேண்டிய நிலையும் ஏற்படாது. பைபிளிலிருந்து நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும், கடவுளிடம் நெருங்கி வருவது எப்படி என்பதையும் கற்றுக்கொள்வீர்கள்.

இப்படிப்பட்ட பைபிள் படிப்பிற்கு நீங்கள் எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. (மத்தேயு 10:8) கடவுளுடைய வார்த்தையை நன்கு அறிந்துகொள்ள உண்மையில் ஆர்வமுள்ளோர்​—⁠எம்மதத்தை சார்ந்தவராயினும் சாராதவராயினும்​—⁠அனைவருக்கும் இலவசமாக பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது.

யாரெல்லாம் இதில் கலந்து கொள்ளலாம்? உங்கள் முழு குடும்பமும் கலந்து கொள்ளலாம். உங்களுடைய நண்பர்களை அழைக்க விரும்பினால் அவர்களும் கலந்து கொள்ளலாம். அல்லது உங்களுக்கு விருப்பமென்றால், உங்களுக்கு மட்டும்கூட தனியாக நடத்தப்படும்.

பைபிளை கற்றுக்கொள்வதற்கு வாரத்தில் ஒரு மணி நேரத்தை அநேகர் ஒதுக்குகிறார்கள். ஒவ்வொரு வாரமும் அதிக நேரமோ குறைந்த நேரமோ ஒதுக்க முடிந்தால் யெகோவாவின் சாட்சிகள் அந்த நேரத்திற்கு வந்து உங்களுக்கு உதவி செய்வார்கள்.

பைபிளை கற்றுக்கொள்ள அழைப்பு

யெகோவாவின் சாட்சிகளை தொடர்புகொள்ளும்படி உங்களை அழைக்கிறோம். கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு நீங்கள் எழுதலாம். யாராவது வந்து உங்களுக்கு இலவசமாக பைபிளை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலைப் பெற விரும்புகிறேன்.

□இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக்குறிப்புகளுடன்.