Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 17

ஜெபம்​—⁠நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்

ஜெபம்​—⁠நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்

“வானத்தையும் பூமியையும் படைத்தவர்” நம் ஜெபங்களைக் கேட்க விரும்புகிறார். —சங்கீதம் 115:15

1, 2. ஜெபம் ஒரு அருமையான பரிசு என்று ஏன் நினைக்கிறீர்கள்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?

இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிடும்போது பூமி ரொம்பவும் சின்னதாக இருக்கிறது. யெகோவாவுடைய பார்வையில், இந்தப் பூமியிலுள்ள எல்லா தேசத்து மக்களும் வாளியிலிருந்து சிந்தும் ஒரு துளி தண்ணீரைப் போல இருக்கிறார்கள். (சங்கீதம் 115:15; ஏசாயா 40:15) இந்தப் பிரபஞ்சத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது நாம் மிக அற்பமாக இருப்பது உண்மைதான்; ஆனாலும், “யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். உண்மையோடு தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார். தனக்குப் பயந்து நடக்கிறவர்களின் ஆசையை அவர் நிறைவேற்றுகிறார். உதவிக்காக அவர்கள் கதறுவதைக் கேட்டு, அவர்களைக் காப்பாற்றுகிறார்” என்று சங்கீதம் 145:18, 19 சொல்கிறது. ஜெபம் நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! சர்வவல்லமையுள்ள படைப்பாளரான யெகோவா நம்மோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருக்க விரும்புகிறார்; நம் ஜெபங்களைக் கேட்கவும் அவர் விரும்புகிறார். ஜெபம் என்பது உண்மையிலேயே நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம், நம் ஒவ்வொருவருக்கும் யெகோவா கொடுத்திருக்கிற அருமையான பரிசு!

2 ஆனால், யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் நாம் அவரிடம் பேசினால் மட்டும்தான் அவர் கேட்பார். அப்படியென்றால், அவரிடம் எப்படிப் பேச வேண்டும்? இதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

ஏன் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்?

3. நீங்கள் ஏன் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்?

3 நீங்கள் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டுமென்று, அதாவது பேச வேண்டுமென்று, அவர் விரும்புகிறார். இது நமக்கு எப்படித் தெரியும்? தயவுசெய்து பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள். அந்த அன்பான அழைப்பைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தை ஆளுகிறவர் உங்கள்மேல் ரொம்பவும் அக்கறையாக இருக்கிறார்; உங்களுடைய உணர்ச்சிகளைப் பற்றியும் பிரச்சினைகளைப் பற்றியும் நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறார்.

4. யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்யும்போது, அவரோடு இருக்கும் உங்கள் நட்பு எப்படிப் பலமாகும்?

4 யெகோவாவிடம் நெருங்கிய நட்பை வளர்க்க ஜெபம் நமக்கு உதவுகிறது. நண்பர்கள் தங்களுடைய எண்ணங்களையும் கவலைகளையும் உணர்ச்சிகளையும் பற்றி அடிக்கடி பேசிக்கொள்ளும்போது, அவர்களுடைய நட்பு பலமாகிறது. யெகோவாவிடம் ஜெபம் செய்கிற விஷயத்திலும் இதுதான் உண்மை. பைபிளின் மூலம் அவர் தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் உங்களிடம் சொல்லியிருக்கிறார்; அதோடு, எதிர்காலத்தில் என்ன செய்யப்போகிறார் என்றும் சொல்லியிருக்கிறார். நீங்களும் அவரிடம் அடிக்கடி பேச வேண்டும்; உங்கள் அடிமனதில் இருக்கிற உணர்ச்சிகளைக்கூட அவரிடம் கொட்ட வேண்டும். அப்போது, அவரோடு உங்களுக்கு இருக்கும் நட்பு இன்னும் பலமாகும்.—யாக்கோபு 4:8.

கடவுள் நம் ஜெபங்களைக் கேட்க நாம் என்ன செய்ய வேண்டும்?

5. யெகோவா எல்லா ஜெபங்களையும் கேட்பதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்?

5 யெகோவா எல்லா ஜெபங்களையுமே கேட்கிறாரா? இல்லை. ஏசாயா தீர்க்கதரிசியின் காலத்தில் யெகோவா இஸ்ரவேலர்களிடம், “உங்கள் கைகளில் இரத்தக்கறை படிந்திருக்கிறது. அதனால், . . . நீங்கள் எவ்வளவுதான் ஜெபம் செய்தாலும் நான் கேட்க மாட்டேன்” என்று சொன்னார். (ஏசாயா 1:15) நாம் கவனமாக இல்லாவிட்டால், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்ய ஆரம்பித்துவிடுவோம்; அதன்பின், அவர் நம்முடைய ஜெபங்களைக் கேட்க மாட்டார்.

6. விசுவாசம் ஏன் ரொம்ப முக்கியமானது? உங்களுக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை எப்படிக் காட்டுகிறீர்கள்?

6 யெகோவா நம் ஜெபங்களைக் கேட்க வேண்டுமென்றால், நமக்கு அவர்மேல் விசுவாசம் இருக்க வேண்டும். (மாற்கு 11:24) “விசுவாசமில்லாமல் யாரும் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது. ஏனென்றால், கடவுளை அணுகுகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார் என்றும் நம்ப வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் விளக்குகிறார். (எபிரெயர் 11:6) ஆனால், நமக்கு விசுவாசம் இருக்கிறது என்று சொன்னால் மட்டும் போதாது. நமக்கு விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிக்க, ஒவ்வொரு நாளும் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.யாக்கோபு 2:26-ஐ வாசியுங்கள்.

7. (அ) நாம் ஏன் மனத்தாழ்மையோடும் மரியாதையோடும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்? (ஆ) நாம் இதயத்திலிருந்து ஜெபம் செய்வதை எப்படிக் காட்டலாம்?

7 நாம் மனத்தாழ்மையோடும் மரியாதையோடும் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும். ஏன்? நாம் ஒரு ராஜாவிடம் அல்லது ஜனாதிபதியிடம் பேசுகிறோம் என்றால், எந்தளவு மரியாதையோடு பேசுவோம்! அப்படியென்றால், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவிடம் பேசும்போது இன்னும் எந்தளவுக்கு மரியாதையோடும் மனத்தாழ்மையோடும் பேச வேண்டும்! (ஆதியாகமம் 17:1; சங்கீதம் 138:6) சொன்ன வார்த்தைகளையே திரும்பத் திரும்பச் சொல்வதற்குப் பதிலாக, நம்முடைய இதயத்திலிருந்து யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்.—மத்தேயு 6:7, 8.

8. நாம் ஒரு விஷயத்துக்காக ஜெபம் செய்யும்போது, வேறு எதையும் செய்ய வேண்டும்?

8 அதுமட்டுமல்ல, நாம் ஒரு விஷயத்துக்காக ஜெபம் செய்யும்போது, நம் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்ய முழு முயற்சி எடுக்க வேண்டும். உதாரணத்துக்கு, தினசரி தேவைகளுக்காக நாம் ஜெபம் செய்யும்போது, யெகோவா எல்லாவற்றையும் கொடுப்பார் என்று எதிர்பார்த்துக்கொண்டு சோம்பேறித்தனமாக இருந்துவிடக் கூடாது. அதுவும், நம்மால் உழைத்து சம்பாதிக்க முடியும் என்ற சூழ்நிலையில் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடக் கூடாது. என்ன வேலை கிடைத்தாலும் சரி, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் கடினமாக உழைக்க வேண்டும். (மத்தேயு 6:11; 2 தெசலோனிக்கேயர் 3:10) அதேபோல், ஒரு கெட்ட பழக்கத்தை விட்டுவிடுவதற்கு யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்யும்போது, கெட்ட ஆசையைத் தூண்டும் எந்தவொரு சூழ்நிலையையும் நாம் தவிர்க்க வேண்டும். (கொலோசெயர் 3:5) இப்போது, ஜெபத்தைப் பற்றிப் பொதுவாகக் கேட்கப்படும் சில கேள்விகளைக் கவனிக்கலாம்.

ஜெபம் பற்றிப் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்

9. நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? ஜெபம் செய்வதைப் பற்றி யோவான் 14:6-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?

9 நாம் யாரிடம் ஜெபம் செய்ய வேண்டும்? ‘பரலோகத்தில் இருக்கிற தகப்பனிடம்’ ஜெபம் செய்யும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத்தேயு 6:9) அதோடு, “நானே வழியும் சத்தியமும் வாழ்வுமாக இருக்கிறேன். என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று சொன்னார். (யோவான் 14:6) அப்படியென்றால், நாம் யெகோவாவிடம் மட்டும்தான் ஜெபம் செய்ய வேண்டும், அதுவும் இயேசுவின் மூலமாகத்தான் ஜெபம் செய்ய வேண்டும். இயேசுவின் மூலமாக ஜெபம் செய்ய வேண்டும் என்றால் என்ன? யெகோவா இயேசுவிடம் ஒப்படைத்திருக்கிற விசேஷ பொறுப்புக்கு நாம் மதிப்புக் காட்ட வேண்டும் என்று அர்த்தம். நாம் ஏற்கெனவே தெரிந்துகொண்டபடி, நம்மைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் காப்பாற்றுவதற்காக இயேசுவை அவர் இந்தப் பூமிக்கு அனுப்பினார். (யோவான் 3:16; ரோமர் 5:12) அதோடு, அவர் இயேசுவைத் தலைமை குருவாகவும் நீதிபதியாகவும் நியமித்திருக்கிறார்.—யோவான் 5:22; எபிரெயர் 6:20.

எந்த நேரத்திலும் நீங்கள் ஜெபம் செய்யலாம்

10. நாம் ஏதோவொரு குறிப்பிட்ட நிலையில் இருந்தபடிதான் ஜெபம் செய்ய வேண்டுமா? விளக்கவும்.

10 ஏதோவொரு குறிப்பிட்ட நிலையில் இருந்தபடிதான் ஜெபம் செய்ய வேண்டுமா? இல்லை. நாம் மண்டிபோட்டுதான் அல்லது உட்கார்ந்துதான் அல்லது நின்றுதான் ஜெபம் செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்வதில்லை. மரியாதையான எந்தவொரு நிலையிலும் நாம் யெகோவாவிடம் பேசலாம் என்று பைபிள் சொல்கிறது. (1 நாளாகமம் 17:16; நெகேமியா 8:6; தானியேல் 6:10; மாற்கு 11:25) நாம் எந்த நிலையில் இருந்தபடி ஜெபம் செய்தாலும், சரியான மனப்பான்மையோடு ஜெபம் செய்ய வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார். ராத்திரியோ பகலோ எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நாம் ஜெபம் செய்யலாம்; நாம் சத்தமாகவும் ஜெபம் செய்யலாம், மனதுக்குள்ளும் ஜெபம் செய்யலாம். மனதுக்குள் நாம் செய்யும் ஜெபத்தை வேறு யாரும் கேட்காவிட்டாலும் யெகோவா கேட்பார் என்று நாம் உறுதியாக நம்பலாம்.—நெகேமியா 2:1-6.

11. என்ன விஷயங்களைப் பற்றி நாம் யெகோவாவிடம் பேசலாம்?

11 நாம் என்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்? யெகோவாவின் விருப்பத்துக்கு எதிராக இல்லாதவரை, எந்த விஷயத்துக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். “கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 5:14) அப்படியென்றால், நம்முடைய சொந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாமா? கண்டிப்பாகச் செய்யலாம். ஜெபம் செய்யும்போது, நெருங்கிய நண்பரிடம் பேசுவதுபோல் நாம் யெகோவாவிடம் பேச வேண்டும். நம் மனதிலும் இதயத்திலும் இருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் சொல்லலாம். (சங்கீதம் 62:8) சரியானதைச் செய்ய அவருடைய சக்தி நமக்கு உதவும் என்பதால் அதைக் கேட்டும் நாம் ஜெபம் செய்யலாம். (லூக்கா 11:13) சரியான தீர்மானங்கள் எடுப்பதற்கு நாம் ஞானத்தைக் கேட்கலாம். பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குப் பலத்தையும் கேட்கலாம். (யாக்கோபு 1:5) நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி நாம் யெகோவாவிடம் கேட்க வேண்டும். (எபேசியர் 1:3, 7) நாம் மற்றவர்களுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, நம்முடைய குடும்பத்துக்காகவும், சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காகவும் ஜெபம் செய்ய வேண்டும்.—அப்போஸ்தலர் 12:5; கொலோசெயர் 4:12.

12. நம் ஜெபங்களில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்?

12 நம்முடைய ஜெபங்களில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும்? யெகோவாவுக்கும் அவருடைய விருப்பத்துக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அவர் நமக்குச் செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் நாம் அவருக்கு இதயப்பூர்வமாக நன்றி சொல்ல வேண்டும். (1 நாளாகமம் 29:10-13) இயேசு இந்தப் பூமியில் இருந்தபோது தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்த ஜெபத்திலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். (மத்தேயு 6:9-13-ஐ வாசியுங்கள்.) முதலில், கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டுமென்று ஜெபம் செய்யும்படி அவர் சொன்னார். பிறகு, கடவுளுடைய அரசாங்கம் வருவதற்காகவும் அவருடைய விருப்பம் பூமி முழுவதும் நிறைவேறுவதற்காகவும் ஜெபம் செய்யும்படி சொன்னார். இந்த மிக முக்கியமான விஷயங்களுக்காக ஜெபம் செய்த பிறகுதான், நம்முடைய சொந்த தேவைகளைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டுமென்று அவர் சொன்னார். நம்முடைய ஜெபங்களில் யெகோவாவுக்கும் அவருடைய விருப்பத்துக்கும் முதலிடம் கொடுக்கும்போது, நம் வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம் என்பதைக் காட்டுவோம்.

13. நாம் எவ்வளவு நேரத்துக்கு ஜெபம் செய்ய வேண்டும்?

13 நாம் எவ்வளவு நேரத்துக்கு ஜெபம் செய்ய வேண்டும்? இதைப் பற்றி பைபிள் திட்டவட்டமாக எதுவும் சொல்வதில்லை. சூழ்நிலையைப் பொறுத்து நாம் சுருக்கமாகவும் ஜெபம் செய்யலாம், நிறைய நேரமும் ஜெபம் செய்யலாம். உதாரணமாக, சாப்பிடுவதற்கு முன் நாம் சுருக்கமாக ஜெபம் செய்யலாம்; ஆனால், யெகோவாவுக்கு நன்றி சொல்லும்போது அல்லது நம் கவலைகளைப் பற்றிச் சொல்லும்போது நிறைய நேரம் ஜெபம் செய்யலாம். (1 சாமுவேல் 1:12, 15) மற்றவர்களைக் கவருவதற்காக நிறைய நேரம் ஜெபம் செய்யக் கூடாது. இயேசுவின் காலத்தில் சிலர் அப்படித்தான் செய்தார்கள். (லூக்கா 20:46, 47) அப்படிப்பட்ட ஜெபங்களை யெகோவா விரும்புவதில்லை. நாம் இதயத்திலிருந்து ஜெபம் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

14. நாம் எத்தனை முறை ஜெபம் செய்ய வேண்டும்? இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?

14 நாம் எத்தனை முறை ஜெபம் செய்ய வேண்டும்? அடிக்கடி தன்னிடம் பேசும்படி யெகோவா நம்மை அழைக்கிறார். நாம் ‘தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும்,’ ‘விடாமல் ஜெபம் செய்ய வேண்டும்,’ ‘எப்போதும் ஜெபம் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் பைபிள் சொல்கிறது. (மத்தேயு 26:41; ரோமர் 12:12; 1 தெசலோனிக்கேயர் 5:17) நம் ஜெபங்களைக் கேட்க யெகோவா எப்போதும் தயாராக இருக்கிறார். அவருடைய அன்புக்காகவும் தாராள குணத்துக்காகவும் நாம் தினமும் அவருக்கு நன்றி சொல்லலாம். அதோடு, வழிநடத்துதலையும் பலத்தையும் ஆறுதலையும் அவரிடம் கேட்கலாம். யெகோவாவிடம் ஜெபம் செய்வதை ஒரு பெரிய பாக்கியமாக நாம் மதித்தால், கிடைக்கிற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவரிடம் பேசுவோம்.

15. ஜெபத்தின் முடிவில் நாம் ஏன் “ஆமென்” என்று சொல்ல வேண்டும்?

15 ஜெபத்தின் முடிவில் நாம் ஏன் “ஆமென்” என்று சொல்ல வேண்டும்? “ஆமென்” என்றால் “நிச்சயமாகவே” அல்லது “அப்படியே ஆகட்டும்” என்று அர்த்தம். நாம் தனிப்பட்ட விதமாகச் செய்யும் ஜெபத்தின் முடிவில் “ஆமென்” என்று சொல்லும்போது, உள்ளப்பூர்வமாக ஜெபம் செய்தோம் என்பதைக் காட்டுகிறோம். (சங்கீதம் 41:13) இன்னொருவர் செய்கிற பொது ஜெபத்தின் முடிவில்கூட, நாம் “ஆமென்” என்று சத்தமாகவோ மனதுக்குள்ளோ சொல்ல வேண்டும். அப்போதுதான், ஜெபத்தில் சொல்லப்பட்ட விஷயங்களை நாம் ஒத்துக்கொள்கிறோம் என்பதைக் காட்ட முடியும்.—1 நாளாகமம் 16:36; 1 கொரிந்தியர் 14:16.

கடவுள் நம் ஜெபங்களுக்கு எப்படிப் பதில் கொடுக்கிறார்?

16. யெகோவா உண்மையிலேயே நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறாரா? விளக்கவும்.

16 யெகோவா உண்மையிலேயே நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறாரா? ஆம். அவர் ‘ஜெபத்தைக் கேட்கிறவர்.’ (சங்கீதம் 65:2) உண்மை மனதோடு லட்சக்கணக்கான மனிதர்கள் செய்யும் ஜெபங்களை அவர் கேட்கிறார்; பல வழிகளில் பதிலும் கொடுக்கிறார்.

17. யெகோவா எப்படித் தேவதூதர்களின் மூலமாகவும் பூமியிலுள்ள தன் ஊழியர்களின் மூலமாகவும் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார்?

17 யெகோவா தேவதூதர்களின் மூலமாகவும் பூமியிலுள்ள தன் ஊழியர்களின் மூலமாகவும் நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார். (எபிரெயர் 1:13, 14) பைபிளைப் புரிந்துகொள்ள உதவும்படி எத்தனையோ பேர் ஜெபம் செய்திருக்கிறார்கள்; சீக்கிரத்தில் அவர்களை யெகோவாவின் சாட்சிகள் சந்தித்திருக்கிறார்கள். இது, “நல்ல செய்தியை” பூமி முழுவதும் அறிவிக்கும் வேலையில் தேவதூதர்களும் பங்கு பெறுவதைக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 14:6-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மூலமாகவும் யெகோவா நமக்கு உதவி செய்கிறார். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அல்லது தேவையைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்த பிறகு, ஒரு கிறிஸ்தவ சகோதரர் அல்லது சகோதரி மூலமாக உதவியைப் பெற்ற அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும்.—நீதிமொழிகள் 12:25; யாக்கோபு 2:16.

கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் மூலமாக யெகோவா நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கலாம்

18. நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க யெகோவா எப்படித் தன்னுடைய சக்தியையும் பைபிளையும் பயன்படுத்துகிறார்?

18 நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்க யெகோவா தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துகிறார். ஒரு பிரச்சினையைச் சமாளிக்க உதவும்படி நாம் ஜெபம் செய்யும்போது, நமக்கு வழிநடத்துதலையும் பலத்தையும் தருவதற்கு அவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தலாம். (2 கொரிந்தியர் 4:7) நம் ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கவும் ஞானமான தீர்மானங்களை எடுக்க உதவவும் யெகோவா பைபிளைக்கூட பயன்படுத்துகிறார். நாம் பைபிளை வாசிக்கும்போது, நமக்கு உதவும் வசனங்களைப் பார்க்கலாம். சபையில் யாராவது பதில் சொல்லும்போது, நமக்குத் தேவையான ஒரு குறிப்பைச் சொல்லும்படி யெகோவா அவரைத் தூண்டலாம். அல்லது, பைபிளிலிருந்து ஒரு குறிப்பை நம்மிடம் சொல்லும்படி சபையிலுள்ள மூப்பரை அவர் தூண்டலாம்.—கலாத்தியர் 6:1.

19. சிலசமயங்களில், யெகோவா நம் ஜெபத்துக்குப் பதில் தராததுபோல் ஏன் தெரியலாம்?

19 சிலசமயங்களில், ‘யெகோவா ஏன் இன்னமும் என் ஜெபத்துக்குப் பதில் தரவில்லை?’ என்று நாம் யோசிக்கலாம். நம் ஜெபத்துக்கு எப்போது பதில் தர வேண்டும் என்பதும், எப்படிப் பதில் தர வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும். நமக்கு என்ன தேவை என்பதும் அவருக்குத் தெரியும். நாம் உண்மை மனதோடுதான் ஜெபம் செய்கிறோம் என்பதையும், உண்மையிலேயே அவர்மேல் விசுவாசம் வைத்திருக்கிறோம் என்பதையும் காட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து ஜெபம் செய்துகொண்டே இருக்க வேண்டும். (லூக்கா 11:5-10) சிலசமயங்களில், நாம் எதிர்பார்க்காத விதத்தில் யெகோவா நம் ஜெபத்துக்குப் பதில் கொடுக்கிறார். உதாரணத்துக்கு, ஒரு கஷ்டமான சூழ்நிலையைப் பற்றி நாம் ஜெபம் செய்யலாம். அந்தக் கஷ்டத்தைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதைத் தாங்கிக்கொள்வதற்கான பலத்தை அவர் நமக்குக் கொடுக்கலாம்.பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.

20. நாம் ஏன் யெகோவாவிடம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும்?

20 ஜெபம் என்பது எப்பேர்ப்பட்ட அற்புதமான ஒரு பாக்கியம்! யெகோவா நம் ஜெபங்களைக் கேட்பார் என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம். (சங்கீதம் 145:18) நாம் இதயத்திலிருந்து எவ்வளவு அதிகமாக யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவரோடு உள்ள நம் நட்பு பலமாகும்.