Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 15

கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி

கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி

1. கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி எது என்று யாரால் மட்டும்தான் சொல்ல முடியும்?

கடவுளைப் பற்றிய உண்மையைக் கற்றுத்தருவதாகப் பெரும்பாலான மதங்கள் சொல்கின்றன. ஆனால், கடவுள் யார், அவரை நாம் எப்படி வணங்க வேண்டும் போன்ற விஷயங்களை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதமாகக் கற்றுக்கொடுக்கிறது. அப்படியென்றால், கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி எது என்று நாம் எப்படித் தெரிந்துகொள்ளலாம்? யெகோவாவை நாம் எப்படி வணங்க வேண்டுமென்று அவரால் மட்டும்தான் சொல்ல முடியும்.

2. கடவுளை வணங்குவதற்குச் சரியான வழியை எப்படித் தெரிந்துகொள்வீர்கள்?

2 யெகோவாவை வணங்குவதற்குச் சரியான வழி எது என்று நாம் தெரிந்துகொள்வதற்காக அவர் நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார். அதனால் பைபிளைப் படியுங்கள்; அதிலுள்ள போதனைகளிலிருந்து பயனடைய யெகோவா உங்களுக்கு உதவி செய்வார். ஏனென்றால், அவர் உங்கள்மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறார்.—ஏசாயா 48:17.

3. நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்?

3 கடவுள் எல்லா மதங்களையும் ஏற்றுக்கொள்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இயேசு அப்படிச் சொல்லவில்லை. “என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் சொன்னார். அதனால், நாம் கடவுளுடைய விருப்பத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதன்படி செய்ய வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். ஏனென்றால், கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்களை ‘அக்கிரமக்காரர்கள்’ என்று இயேசு குறிப்பிட்டார்.—மத்தேயு 7:21-23.

4. கடவுளுடைய விருப்பத்தின்படி செய்வதைப் பற்றி இயேசு என்ன சொன்னார்?

4 கடவுளுடைய விருப்பத்தின்படி நாம் செய்வது அவ்வளவு சுலபம் கிடையாது என்று இயேசு எச்சரித்தார். “இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்; ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 7:13, 14) குறுகலான பாதை, அதாவது கடவுளை வணங்குவதற்கான சரியான வழி, முடிவில்லாத வாழ்வுக்கு நம்மை வழிநடத்தும். ஆனால் விசாலமான பாதை, அதாவது கடவுளை வணங்குவதற்கான தவறான வழி, அழிவுக்குத்தான் வழிநடத்தும். யாரும் அழிந்துபோவதை யெகோவா விரும்புவதில்லை. அவரைப் பற்றிக் கற்றுக்கொள்ள அவர் எல்லாருக்குமே வாய்ப்புக் கொடுக்கிறார்.—2 பேதுரு 3:9.

கடவுளை வணங்குவதற்குச் சரியான வழி

5. சரியான வழியில் கடவுளை வணங்குகிறவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள்?

5 சரியான வழியில் கடவுளை யார் வணங்குகிறார்கள் என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியுமென்று இயேசு சொன்னார். அவர்கள் எதை நம்புகிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து நாம் அவர்களைக் கண்டுபிடிக்க முடியும். “அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்” என்று இயேசு சொன்னார். அதோடு, “நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும்” என்றும் சொன்னார். (மத்தேயு 7:16, 17) கடவுளை வணங்குகிறவர்கள் எந்தத் தவறுமே செய்ய மாட்டார்கள் என்று இது அர்த்தப்படுத்துவது கிடையாது. ஆனால், கடவுளுடைய ஊழியர்கள் சரியானதைச் செய்ய எப்போதுமே முயற்சி செய்வார்கள். சரியான வழியில் கடவுளை யார் வணங்குகிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க நமக்கு எது உதவும் என்று இப்போது பார்க்கலாம்.

6, 7. உண்மை வணக்கம் ஏன் பைபிளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது? இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

6 பைபிள் சொல்கிறபடி நாம் கடவுளை வணங்க வேண்டும். “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை கற்றுக்கொடுப்பதற்கும், கண்டிப்பதற்கும், காரியங்களைச் சரிசெய்வதற்கும், கடவுளுடைய நீதிநெறியின்படி திருத்துவதற்கும் பிரயோஜனமுள்ளவையாக இருக்கின்றன. அதனால், கடவுளுடைய ஊழியன் எந்தவொரு நல்ல வேலையையும் செய்வதற்கு எல்லா திறமையையும், எல்லா விதமான தகுதிகளையும் பெற்றவனாக இருப்பான்” என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) “நீங்கள் கடவுளுடைய வார்த்தையை எங்கள் மூலம் கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதர்களுடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள். . . . அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். (1 தெசலோனிக்கேயர் 2:13) உண்மை வணக்கம் மனித கருத்துகளையோ பாரம்பரியங்களையோ வேறு எதையோ அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. அது கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை மட்டும்தான் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

7 இயேசு எல்லா விஷயங்களையுமே கடவுளுடைய வார்த்தையிலிருந்துதான் கற்றுக்கொடுத்தார். (யோவான் 17:17-ஐ வாசியுங்கள்.) அவர் அடிக்கடி வேதவசனங்களை மேற்கோள் காட்டினார். (மத்தேயு 4:4, 7, 10) கடவுளுடைய உண்மையான ஊழியர்கள் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் பைபிளிலிருந்துதான் எல்லாவற்றையுமே கற்றுக்கொடுக்கிறார்கள்.

8. யெகோவாவை வணங்குவது சம்பந்தமாக இயேசு என்ன கற்றுக்கொடுத்தார்?

8 நாம் யெகோவாவை மட்டும்தான் வணங்க வேண்டும். “யெகோவா என்ற பெயருள்ள நீங்கள் ஒருவர்தான், இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்” என்று சங்கீதம் 83:18 சொல்கிறது. உண்மையான கடவுளை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று இயேசு விரும்பினார். அதனால், கடவுளுடைய பெயரை அவர் மக்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (யோவான் 17:6-ஐ வாசியுங்கள்.) “உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 4:10) அதனால், கடவுளுடைய ஊழியர்கள் இயேசுவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் யெகோவாவை மட்டும்தான் வணங்குகிறார்கள், அவருடைய பெயரைப் பயன்படுத்துகிறார்கள், கடவுளுடைய பெயரைப் பற்றியும் அவர் நமக்காக என்ன செய்யப்போகிறார் என்பதைப் பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

9, 10. நாம் எப்படி ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுகிறோம்?

9 நாம் மக்கள்மேல் உண்மையான அன்பு காட்ட வேண்டும். ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்று இயேசு தன் சீஷர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (யோவான் 13:35-ஐ வாசியுங்கள்.) நம்முடைய ஊர் எது, கலாச்சாரம் எது, நாம் ஏழையா பணக்காரரா என்பதெல்லாம் முக்கியமல்ல. சகோதர சகோதரிகளாக நாம் எல்லாரும் பாசத்தினால் பிணைக்கப்பட்டிருப்பதுதான் முக்கியம். (கொலோசெயர் 3:14) அதனால், நாம் போருக்குப் போவதும் இல்லை, மற்றவர்களைக் கொலை செய்வதும் இல்லை. “நீதியான செயல்களைச் செய்துகொண்டே இருக்காத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. அதேபோல், தன் சகோதரன்மேல் அன்பு காட்டாத யாரும் கடவுளின் பக்கம் இல்லை. கடவுளுடைய பிள்ளைகள் யார் என்றும், பிசாசின் பிள்ளைகள் யார் என்றும் இந்த உண்மையிலிருந்து தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, “நாம் ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும் . . . பொல்லாதவனின் பக்கம் இருந்த காயீனைப் போல் நாம் இருக்கக் கூடாது. அவன் தன்னுடைய சகோதரனைப் படுகொலை செய்தான்” என்று பைபிள் சொல்கிறது.—1 யோவான் 3:10-12; 4:20, 21.

10 ஒருவருக்கு ஒருவர் உதவியும் உற்சாகமும் தருவதற்கு நம்முடைய நேரம், சக்தி, பொருள்கள் எல்லாவற்றையும் நாம் பயன்படுத்துகிறோம். (எபிரெயர் 10:24, 25) நாம் ‘எல்லாருக்கும் நன்மை செய்கிறோம்.’—கலாத்தியர் 6:10.

11. நாம் ஏன் இயேசுவுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

11 மீட்புப் பெற நாம் இயேசுவுக்குக் கீழ்ப்படிய வேண்டும். “அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை; ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 4:12) இந்தப் புத்தகத்தின் 5-ஆம் அதிகாரத்தில் நாம் பார்த்தபடி, இயேசுவை யெகோவா இந்தப் பூமிக்கு அனுப்பினார்; கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்காக இயேசு தன் உயிரை மீட்புவிலையாகக் கொடுத்தார். (மத்தேயு 20:28) இந்தப் பூமியை ஆட்சி செய்ய இயேசுவை ராஜாவாக யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார். அதனால்தான், நாம் என்றென்றும் வாழ விரும்பினால் இயேசுவுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது.யோவான் 3:36-ஐ வாசியுங்கள்.

12. நாம் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது?

12 நாம் அரசியலில் ஈடுபடக் கூடாது. இயேசு அரசியலில் ஈடுபடவில்லை. அவர் விசாரணை செய்யப்பட்டபோது, “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்று ரோம ஆளுநரான பிலாத்துவிடம் சொன்னார். (யோவான் 18:36-ஐ வாசியுங்கள்.) இயேசுவைப் போலவே நாமும் கடவுளுடைய பரலோக அரசாங்கத்துக்கு உண்மையாக இருக்கிறோம். அதனால், நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, அரசியலில் ஈடுபடுவது கிடையாது. அதேசமயத்தில், “அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு,” அதாவது அரசாங்கங்களுக்கு, கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 13:1) நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம். ஆனால், ஏதோவொரு சட்டம் கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமாக இருக்கும்போது என்ன செய்கிறோம்? “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று சொன்ன அப்போஸ்தலர்களைப் பின்பற்றுகிறோம்.—அப்போஸ்தலர் 5:29; மாற்கு 12:17.

13. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் என்ன பிரசங்கிக்கிறோம்?

13 உலகப் பிரச்சினைகளுக்குக் கடவுளுடைய அரசாங்கம்தான் ஒரே தீர்வு என்று நாம் நம்புகிறோம். ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி’ உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்று இயேசு சொன்னார். (மத்தேயு 24:14-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அரசாங்கம் நமக்காகச் செய்யப்போகிற நன்மைகளை எந்த மனித அரசாங்கத்தாலும் செய்ய முடியாது. (சங்கீதம் 146:3) கடவுளுடைய அரசாங்கத்துக்காக நாம் இப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்று இயேசு சொன்னார்: “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்.” (மத்தேயு 6:10) கடவுளுடைய அரசாங்கம் எல்லா மனித அரசாங்கங்களையும் அழித்துவிட்டு, “அது மட்டும் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று பைபிள் சொல்கிறது.—தானியேல் 2:44.

14. கடவுளை யார் சரியான வழியில் வணங்குவதாக நினைக்கிறீர்கள்?

14 இப்போது நாம் படித்த குறிப்புகளை மனதில் வைத்து உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யார் பைபிளிலிருந்து கற்றுக்கொடுக்கிறார்கள்? கடவுளுடைய பெயரை யார் மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள்? யார் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுகிறார்கள்? நம்மை மீட்பதற்காக இயேசுவைக் கடவுள் அனுப்பினார் என்று யார் நம்புகிறார்கள்? யார் அரசியலில் ஈடுபடாமல் இருக்கிறார்கள்? கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் நம் பிரச்சினைகளைத் தீர்க்கும் என்று யார் பிரசங்கிக்கிறார்கள்?’ யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் இதையெல்லாம் செய்கிறார்கள்.—ஏசாயா 43:10-12.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

15. நம் வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

15 கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நம்புவது மட்டுமே போதாது. பேய்கள்கூட அதை நம்புகின்றன, ஆனால் கடவுளுக்குக் கீழ்ப்படிவதில்லை. (யாக்கோபு 2:19) நம் வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவர் இருக்கிறார் என்று நம்புவது மட்டும் போதாது. அவர் சொல்கிறபடி செய்யவும் வேண்டும்.

16. நாம் ஏன் பொய் மதத்தைவிட்டு விலக வேண்டும்?

16 நம் வணக்கத்தைக் கடவுள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நாம் பொய் மதத்தைவிட்டு விலக வேண்டும். “அங்கிருந்து கிளம்பி வாருங்கள்; உங்களைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று ஏசாயா தீர்க்கதரிசி எழுதினார். (ஏசாயா 52:11; 2 கொரிந்தியர் 6:17) அதனால்தான், பொய் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றையுமே நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும்.

17, 18. “மகா பாபிலோன்” என்றால் என்ன? ஏன் உடனடியாக அதைவிட்டு வெளியே வர வேண்டும்?

17 பொய் மதம் என்றால் என்ன? கடவுளுடைய வார்த்தை சொல்கிற விதத்தில் கடவுளை வணங்காத எல்லா மதங்களுமே பொய் மதம்தான். எல்லா பொய் மதங்களையும் ஒட்டுமொத்தமாக “மகா பாபிலோன்” என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 17:5) ஏன்? நோவாவின் காலத்தில் பெருவெள்ளம் வந்த பிறகு, நிறைய பொய் மதப் போதனைகள் பாபிலோன் நகரத்தில் உருவாயின. அங்கிருந்து அவை உலகம் முழுவதும் பரவின. உதாரணத்துக்கு, பாபிலோனில் வாழ்ந்த மக்கள் மும்மூன்று தெய்வங்களை வணங்கிவந்தார்கள். இன்றுகூட, கடவுள் ஒரு திரித்துவம், அதாவது ஒரு திரியேகக் கடவுள், என்று நிறைய மதங்கள் கற்றுக்கொடுக்கின்றன. ஆனால், யெகோவா என்ற ஒரே உண்மையான கடவுள் மட்டும்தான் இருக்கிறார் என்றும், இயேசு அவருடைய மகன் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (யோவான் 17:3) ஒருவர் இறக்கும்போது அவருக்குள் இருக்கும் ஏதோவொன்று தொடர்ந்து உயிர்வாழ்கிறது என்று பாபிலோன் மக்கள் நம்பினார்கள். அது நரகத்தில் வதைக்கப்படலாம் என்றும்கூட அவர்கள் நம்பினார்கள். ஆனால், அது உண்மை அல்ல.—பின்குறிப்பு 14, 17, 18-ஐப் பாருங்கள்.

18 எல்லா பொய் மதங்களும் சீக்கிரத்தில் அழிக்கப்படும் என்று கடவுள் சொல்லியிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 18:8) நீங்கள் ஏன் உடனடியாகப் பொய் மதத்தைவிட்டு வெளியே வர வேண்டுமென்று இப்போது உங்களுக்குப் புரிகிறதா? நிலைமை கைமீறிப் போவதற்கு முன்பு நீங்கள் அதைச் செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்.—வெளிப்படுத்துதல் 18:4.

யெகோவாவை அவருடைய மக்களோடு சேர்ந்து வணங்குவதன் மூலம் நீங்கள் ஒரு உலகளாவிய குடும்பத்தின் பாகமாக ஆவீர்கள்

19. நீங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்ய தீர்மானம் எடுக்கும்போது, அவர் எப்படி உங்களைக் கவனித்துக்கொள்வார்?

19 நீங்கள் பொய் மதத்தைவிட்டு வெளியே வரவும் யெகோவாவுக்குச் சேவை செய்யவும் தீர்மானம் எடுக்கும்போது, சிலர் எதிர்க்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் நண்பர்களிலும் குடும்பத்தாரிலும் சிலர் உங்கள் தீர்மானத்தைப் புரிந்துகொள்ளாமல், உங்களுக்குக் கஷ்டம் கொடுக்கலாம். ஆனால், யெகோவா உங்களைக் கைவிட மாட்டார். உண்மையான அன்பு காட்டும் லட்சக்கணக்கான மக்கள் அடங்கிய உலகளாவிய குடும்பத்தின் பாகமாக நீங்கள் ஆவீர்கள். அதோடு, கடவுள் கொண்டுவரப்போகும் புதிய உலகத்தில் என்றென்றும் வாழும் நம்பிக்கையைப் பெறுவீர்கள். (மாற்கு 10:28-30) ஆரம்பத்தில் உங்களை எதிர்க்கிற நண்பர்களும் குடும்பத்தாரும் பிற்பாடு பைபிளைப் படிக்க முடிவு செய்யலாம்.

20. கடவுளைச் சரியான வழியில் வணங்குவது ஏன் முக்கியம்?

20 ரொம்ப சீக்கிரத்தில், கடவுள் எல்லா அக்கிரமத்துக்கும் முடிவுகட்டப் போகிறார்; அவருடைய அரசாங்கம் இந்தப் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும். (2 பேதுரு 3:9, 13) அது எவ்வளவு அருமையான காலமாக இருக்கும்! யெகோவா விரும்புகிற விதத்தில் எல்லாரும் அவரை வணங்குவார்கள். அதனால், கடவுளைச் சரியான வழியில் வணங்க நீங்கள் உடனடியாக முடிவெடுக்க வேண்டியது முக்கியம்.