Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பகுதி 15

சிறைபிடிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசிக்குத் தரிசனம் கிடைக்கிறது

சிறைபிடிக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசிக்குத் தரிசனம் கிடைக்கிறது

கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் மேசியாவின் வருகையைப் பற்றியும் தானியேல் முன்னறிவிக்கிறார். பாபிலோன் வீழ்ச்சியடைகிறது

எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு, உத்தமரான இளம் தானியேல் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவருக்கும், யூதா ராஜ்யம் வீழ்ச்சியடைந்தபின் சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கும் ஓரளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. தானியேல் நீண்ட காலமாய் பாபிலோனில் வாழ்ந்துவந்த சமயத்தில் ஆண்டவரிடமிருந்து அநேக ஆசிகளைப் பெற்றார்; ஏன், சிங்கக் குகையில் போடப்பட்டபோதிலும் உயிர்தப்பினார். எதிர்காலத்தைப் பற்றிய தரிசனங்களைப் பெற்றார். அவர் உரைத்த தீர்க்கதரிசனங்கள் முக்கியமாக மேசியாவையும் அவருடைய ஆட்சியையும் பற்றியவை.

மேசியாவின் வருகை தானியேலுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. “பிரபுவாகிய மேசியா” எப்போது தோன்றுவார் என்று தானியேலுக்குத் தெரிவிக்கப்பட்டது; அதாவது, எருசலேமின் மதிற்சுவர்களைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளை பிறப்பிக்கப்பட்டதிலிருந்து 69 வாரங்களுக்குப் பிறகு தோன்றுவார் என்று தெரிவிக்கப்பட்டது. பொதுவாக ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள்; ஒவ்வொரு நாளையும் ஒரு வருடமாகக் கணக்கிட்டால், ஒரு வாரத்திற்கு ஏழு வருடங்கள். மதிற்சுவர்களைத் திரும்பக் கட்டுவதற்கான கட்டளை தானியேல் காலமாகி பல வருடங்களுக்குப் பிற்பாடு, அதாவது கி.மு. 455-ல், பிறந்தது. 69 “வாரங்கள்” கழித்து (69x7 வருடங்கள்), அதாவது 483 வருடங்கள் கழித்து, கி.பி. 29-ல் மேசியா தோன்றினார். அந்த வருடத்தில் என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம். மக்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைப்பதற்காக மேசியா “கொலை செய்யப்படுவார்” என்பதையும் தரிசனத்தில் தானியேல் கண்டார்.—தானியேல் 9:24-26, பொ.மொ.

விண்ணுலகில் மன்னராக மேசியா முடிசூட்டப்படுதல். அபூர்வமாய் கிடைக்கப்பெற்ற ஒரு தரிசனத்தில், தானியேல் விண்ணுலகைப் பார்த்தார். அதில் “மானிட மகனைப் போன்ற ஒருவர்,” அதாவது மேசியா, யெகோவாவின் சிம்மாசனத்திற்கு அருகில் செல்வதைக் கண்டார். யெகோவா அவருக்கு “ஆட்சியுரிமையும் மாட்சிமையும் அரசும்” கொடுத்தார். அந்த அரசு என்றென்றும் நிலைத்திருக்கும். மேசியாவின் அரசாங்கத்தைப் பற்றிய மெய்சிலிர்க்க வைக்கும் மற்றொரு விஷயத்தையும் தானியேல் அறிந்துகொண்டார். ஆம், வேறு சிலரும் அந்த அரசாங்கத்தில் மேசியாவுக்கு உடன் அரசர்களாக ஆட்சி செய்வார்கள். அவர்கள் ‘உன்னதரின் புனித மக்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.—தானியேல் 7:13, 14, 27, பொ.மொ.

அந்த அரசாங்கம் உலக அரசாங்கங்களை அழித்துவிடும். பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரை அலைக்கழித்த கனவிற்கு அர்த்தம் சொல்ல தானியேலுக்குக் கடவுள் அருள்புரிந்தார். அந்த ராஜா பிரம்மாண்டமான ஒரு சிலையைக் கனவில் பார்த்திருந்தார். அதன் தலை தங்கத்தாலும், மார்பும் கைகளும் வெள்ளியாலும், வயிறும் தொடைகளும் வெண்கலத்தாலும், கால்கள் இரும்பாலும், பாதங்கள் இரும்பும் களிமண்ணும் கலந்த கலவையாலும் ஆனது. மலையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கல், அந்தச் சிலையின் வலுவற்ற பாதங்களில் மோத அது சுக்குநூறானது. அந்தச் சிலையின் ஒவ்வொரு பாகமும் அடுத்தடுத்து வரவிருந்த உலக வல்லரசுகள் என்றும், தங்கத் தலை பாபிலோன் வல்லரசு என்றும் தானியேல் விளக்கினார். கடைசி வல்லரசு ஆட்சி செய்யும்போது கடவுளுடைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று தானியேல் முன்னறிவித்தார். உலக அரசாங்கங்கள் அனைத்தையும் அந்த அரசாங்கம் நொறுக்கிப்போடும். பிறகு அதுவே என்றென்றும் ஆட்சிசெய்யும்.—தானியேல் 2-ஆம் அதிகாரம்.

தள்ளாத வயதிலிருந்த தானியேல், பாபிலோன் வல்லரசு வீழ்ச்சியடைந்ததைக் கண்ணாரக் கண்டார். தீர்க்கதரிசிகள் முன்னறிவித்திருந்தபடியே கோரேசு ராஜா அந்த நகரத்தைக் கைப்பற்றினார். சிறைபிடிக்கப்பட்டிருந்த யூதர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள்; ஆம், ஏற்கெனவே முன்னறிவிக்கப்பட்டபடி, எருசலேம் பாழாய்க் கிடந்து சரியாக 70 வருடம் கடந்தபின் விடுதலை செய்யப்பட்டார்கள். உண்மையுள்ள ஆளுநர்களும் குருக்களும் தீர்க்கதரிசிகளும் தந்த வழிநடத்துதலால் எருசலேமையும் யெகோவாவின் கோயிலையும் யூதர்கள் மீண்டும் கட்டினார்கள். ஆனால், 483 வருடங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்?

—ஆதாரம்: தானியேல் புத்தகம்.