Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 1

கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்

கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்

யெகோவாதான் நம்மைப் படைத்தார். நம்முடைய கண்ணுக்குத் தெரிகிற, கண்ணுக்குத் தெரியாத எல்லாவற்றையும் அவர்தான் படைத்தார். நம் கண்ணுக்குத் தெரிகிற எல்லாவற்றையும் படைப்பதற்கு முன்பாக, நிறைய தேவதூதர்களைப் படைத்தார். தேவதூதர்கள் யார் என்று உனக்குத் தெரியுமா? அவர்கள் யெகோவா கொடுக்கிற வேலையைச் செய்கிறவர்கள். அவர்கள் கடவுள் மாதிரியே இருப்பார்கள். கடவுளை நம்மால் பார்க்க முடியாது, இல்லையா? அதேமாதிரி, அவர்களையும் நம்மால் பார்க்க முடியாது. யெகோவா படைத்த முதல் தேவதூதர் அவருக்கு உதவியாளராக இருந்தார். நட்சத்திரங்களையும் கோள்களையும் மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்கு இந்தத் தேவதூதர் யெகோவாவுக்கு உதவி செய்தார். நாம் வாழ்கிற இந்த அழகான பூமியும் அந்தக் கோள்களில் ஒன்று.

யெகோவா இந்தப் பூமியை மனிதர்களும் மிருகங்களும் வாழ்வதற்கு ஏற்ற மாதிரி தயார்படுத்தினார். சூரிய வெளிச்சத்தைப் பூமிக்கு வர வைத்தார். மலைகளையும் கடல்களையும் ஆறுகளையும் படைத்தார்.

அடுத்து என்ன செய்தார்? ‘புற்களையும் செடிகளையும் மரங்களையும் படைக்கப் போகிறேன்’ என்று யெகோவா சொன்னார். அவற்றிலிருந்து, விதவிதமான பழங்களும் காய்கறிகளும் பூக்களும் கிடைக்க ஆரம்பித்தன. அதற்குப் பிறகு, எல்லாவித மிருகங்களையும் படைத்தார். பறக்கிற, நீந்துகிற, ஊர்ந்து போகிற உயிரினங்கள் எல்லாவற்றையும் படைத்தார். சின்ன முயல்முதல் பெரிய யானைவரைக்கும் எல்லா மிருகங்களையும் அவர்தான் படைத்தார். உனக்கு எந்த மிருகம் ரொம்ப பிடிக்கும்?

பிறகு, யெகோவா அந்த முதல் தேவதூதரிடம் ‘மனிதனை உண்டாக்கலாம்’ என்று சொன்னார். மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மனிதர்களால் புதிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும், பேச முடியும், சிரிக்க முடியும், ஜெபம் செய்ய முடியும். இந்தப் பூமியையும் அதில் இருக்கிற மிருகங்களையும் அவர்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள். கடவுள் படைத்த அந்த முதல் மனிதன் யார் என்று உனக்குத் தெரியுமா? இப்போது பார்க்கலாம்.

“ஆரம்பத்தில் கடவுள் வானத்தையும் பூமியையும் படைத்தார்.”—ஆதியாகமம் 1:1