Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 85

ஓய்வுநாளில் இயேசு குணமாக்குகிறார்

ஓய்வுநாளில் இயேசு குணமாக்குகிறார்

பரிசேயர்களுக்கு இயேசுவைப் பிடிக்கவில்லை. அதனால், அவரைக் கைது செய்ய வழிதேடினார்கள். ஓய்வுநாளில் நோயாளிகளைக் குணப்படுத்தக் கூடாது என்று அவரிடம் சொன்னார்கள். ஒரு ஓய்வுநாளில், கண் தெரியாத ஒருவன் தெருவில் பிச்சை எடுப்பதை இயேசு பார்த்தார். அவர் தன் அப்போஸ்தலர்களிடம், ‘கடவுளுடைய சக்தி இவனுக்கு எப்படி உதவி செய்யப் போகிறது என்று பாருங்கள்’ என்றார். பிறகு, இயேசு தன் எச்சிலை மண்ணில் குழைத்து, அவனுடைய கண்ணில் தடவினார். பிறகு, ‘நீ போய் சீலோவாம் குளத்தில் உன் கண்களைக் கழுவு’ என்று சொன்னார். அவன் அப்படியே செய்தான். வாழ்க்கையில் முதல் தடவையாக பார்க்க ஆரம்பித்தான்.

மக்களுக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ‘இவன் இங்கே உட்கார்ந்து பிச்சை எடுத்தவனா? அல்லது, அவனை மாதிரியே இருக்கிற வேறொரு ஆளா?’ என்று பேசிக்கொண்டார்கள். அதற்கு அவன், ‘அந்தப் பிறவிக் குருடன் நான்தான்’ என்று சொன்னான். அப்போது மக்கள், ‘இப்போது எப்படி உனக்குக் கண் தெரிகிறது?’ என்று கேட்டார்கள். நடந்ததை எல்லாம் அவன் சொன்னான். மக்கள் அவனைப் பரிசேயர்களிடம் கூட்டிக்கொண்டு போனார்கள்.

அவன் பரிசேயர்களிடம், ‘இயேசு மண்ணைக் குழைத்து என் கண்ணில் தடவினார். பிறகு, அதைக் கழுவச் சொன்னார். அப்படிச் செய்தேன், இப்போது என்னால் பார்க்க முடிகிறது’ என்றான். அதற்குப் பரிசேயர்கள், ‘இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியிருக்கிறார் என்றால், கடவுளுடைய சக்தியால் இதைச் செய்திருக்க முடியாது’ என்று சொன்னார்கள். ஆனால் மற்றவர்கள், ‘கடவுள் அவருக்குச் சக்தி கொடுக்கவில்லை என்றால், அவரால் இப்படிக் குணமாக்க முடியாது’ என்றார்கள்.

பரிசேயர்கள் அவனுடைய அப்பா அம்மாவைக் கூப்பிட்டார்கள். அவர்களிடம், ‘உங்கள் மகனுக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?’ என்று கேட்டார்கள். அவர்கள் பரிசேயர்களைப் பார்த்து பயந்தார்கள். ஏனென்றால், இயேசுமேல் யாராவது நம்பிக்கை வைத்தால், அவரை ஜெபக்கூடத்திலிருந்து தள்ளிவைத்து விடுவோம் என்று பரிசேயர்கள் சொல்லியிருந்தார்கள். அதனால் அவனுடைய அப்பாவும் அம்மாவும், ‘எங்களுக்குத் தெரியாது. அவனிடமே கேளுங்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். பரிசேயர்கள் அவனிடம் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள். கடைசியில் அவன், ‘எனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லிவிட்டேன். ஏன் திரும்பத் திரும்பக் கேள்வி கேட்கிறீர்கள்?’ என்று சொன்னான். அதைக் கேட்டு பரிசேயர்களுக்குப் பயங்கர கோபம் வந்தது. அதனால் அவனைத் துரத்திவிட்டார்கள்.

இயேசு அவனைத் தேடிப் போனார். அவனைப் பார்த்ததும், ‘மேசியாவை நீ நம்புகிறாயா?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘அவர் யார் என்று தெரிந்தால் அவர்மேல் நம்பிக்கை வைப்பேன்’ என்று சொன்னான். அப்போது இயேசு, ‘நான்தான் மேசியா’ என்று சொன்னார். இயேசு எவ்வளவு அன்பாக நடந்துகொண்டார் என்று பார்த்தாயா? அவனுக்குப் பார்வை கொடுத்தது மட்டும் இல்லாமல், அவர்மேல் நம்பிக்கை வைக்கவும் அவனுக்கு உதவி செய்தார்.

“உங்கள் எண்ணம் தவறாக இருக்கிறது; ஏனென்றால், உங்களுக்கு வேதவசனங்களும் தெரியவில்லை, கடவுளுடைய வல்லமையும் தெரியவில்லை.”—மத்தேயு 22:29