Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 24

கொடுத்த வாக்கை மீறினார்கள்

கொடுத்த வாக்கை மீறினார்கள்

யெகோவா மோசேயிடம், ‘மலைமேல் ஏறி வா. நான் என்னுடைய சட்டங்களை கற்பலகைகளில் எழுதி உன்னிடம் தருவேன்’ என்று சொன்னார். மோசே மலைக்குப் போய் 40 நாட்கள் ராத்திரியும் பகலும் அங்கே தங்கினார். அப்போது, யெகோவா பத்துக் கட்டளைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி மோசேயிடம் கொடுத்தார்.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, மோசே தங்களை விட்டுவிட்டு போய்விட்டார் என்று இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள். அவர்கள் ஆரோனிடம், ‘எங்களைக் கூட்டிக்கொண்டு போக ஒருவர் வேண்டும். எங்களுக்கு ஒரு கடவுளைச் செய்துகொடுங்கள்!’ என்று சொன்னார்கள். அதற்கு ஆரோன், ‘உங்களிடம் இருக்கிற தங்க நகைகளைக் கொடுங்கள்’ என்று கேட்டார். அவர் அதை உருக்கி ஒரு கன்றுக்குட்டி சிலையைச் செய்தார். உடனே மக்கள், ‘எகிப்திலிருந்து நம்மைக் கூட்டிக்கொண்டு வந்த கடவுள் இதுதான்’ என்று சொன்னார்கள். அந்தக் கன்றுக்குட்டியை வணங்கி, பண்டிகை கொண்டாட ஆரம்பித்தார்கள். அவர்கள் செய்தது தப்பா? தப்புதான். ஏனென்றால், யெகோவாவை மட்டுமே வணங்குவோம் என்று அவர்கள் வாக்குக் கொடுத்திருந்தார்கள். ஆனால், இப்போது அதை மீறினார்கள்.

எல்லாவற்றையும் யெகோவா பார்த்துக்கொண்டிருந்தார். அவர் மோசேயிடம், ‘நீ கீழே இறங்கிப் போ. மக்கள் என் பேச்சைக் கேட்காமல், பொய் கடவுளை வணங்குகிறார்கள்’ என்று சொன்னார். மோசே இரண்டு கற்பலகைகளையும் எடுத்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கினார்.

முகாமுக்கு பக்கத்தில் மோசே வந்தபோது, மக்கள் பாட்டு பாடுகிற சத்தம் கேட்டது. பிறகு, அந்த மக்கள் நடனம் ஆடுவதையும் கன்றுக்குட்டியை வணங்குவதையும் பார்த்தார். மோசேக்குப் பயங்கர கோபம் வந்தது. உடனே, இரண்டு கற்பலகைகளையும் கீழே எறிந்தார். அவை துண்டு துண்டாக சிதறின. அந்தச் சிலையையும் உடனடியாக அழித்துப்போட்டார். பிறகு, ஆரோனிடம் ‘இப்படியொரு மோசமான காரியத்தைச் செய்ய எப்படி ஒத்துக்கொண்டீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு ஆரோன், ‘கோபப்படாதீர்கள். இந்த மக்களைப் பற்றி உங்களுக்கே தெரியும். ஒரு கடவுள் வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அதனால், அவர்கள் கொடுத்த தங்கத்தை நெருப்பில் போட்டேன், இந்தக் கன்றுக்குட்டி வந்தது’ என்று சொன்னார். ஆரோன் செய்தது தப்பு. மோசே மறுபடியும் மலைக்கு ஏறிப் போய், அந்த மக்களை மன்னிக்கச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சினார்.

தனக்குக் கீழ்ப்படியத் தயாராக இருந்த எல்லாரையும் யெகோவா மன்னித்தார். இஸ்ரவேலர்கள் தங்களுடைய தலைவரான மோசேயின் பேச்சைக் கேட்பது எவ்வளவு முக்கியம் என்று உனக்குப் புரிகிறதா?

“நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே. ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது. நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.”—பிரசங்கி 5:4