Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 26

பன்னிரண்டு உளவாளிகள்

பன்னிரண்டு உளவாளிகள்

இஸ்ரவேலர்கள் சீனாய் மலையிலிருந்து கிளம்பி, பாரான் வனாந்தரம் வழியாக காதேஸ் என்ற இடத்துக்கு வந்தார்கள். யெகோவா மோசேயிடம், ‘ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஒருவரைத் தேர்ந்தெடு. அந்த 12 பேரையும் கானான் தேசத்தை உளவு பார்க்க அனுப்பு. அந்தத் தேசத்தை இஸ்ரவேலர்களுக்குத் தரப்போகிறேன்’ என்றார். அதனால் மோசே 12 பேரைத் தேர்ந்தெடுத்து, ‘நீங்கள் கானான் தேசத்துக்குப் போங்கள். அங்கே உணவுப் பொருள்கள் விளையுமா என்று பாருங்கள். அந்த மக்கள் பலசாலிகளா, பலம் இல்லாதவர்களா, கூடாரங்களில் வாழ்கிறவர்களா, நகரங்களில் வாழ்கிறவர்களா என்றும் பாருங்கள்’ என்றார். யோசுவாவையும் காலேபையும் சேர்த்து 12 உளவாளிகள் கானானுக்குப் போனார்கள்.

நாற்பது நாட்களுக்குப் பிறகு, அந்த உளவாளிகள் திரும்பி வந்தார்கள். அத்திப்பழங்கள், மாதுளம்பழங்கள், திராட்சைப் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டுவந்தார்கள். ‘அது நல்ல தேசம். ஆனால், அந்த மக்கள் ரொம்பப் பலசாலிகள். நகரங்களைச் சுற்றி பெரிய மதில்சுவர்கள் இருக்கின்றன’ என்று அவர்கள் சொன்னார்கள். அப்போது காலேப், ‘நாம் அவர்களை ஜெயித்து விடலாம். வாருங்கள், உடனே போகலாம்!’ என்று சொன்னார். காலேப் ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா? ஏனென்றால், காலேபும் யோசுவாவும் யெகோவாவை நம்பினார்கள். ஆனால், மற்ற 10 உளவாளிகளும், ‘வேண்டாம்! அந்த மக்கள் ராட்சதர்கள் மாதிரி இருக்கிறார்கள்! அவர்கள் முன்னால் நாங்கள் வெறும் வெட்டுக்கிளிகள் மாதிரி இருந்தோம்’ என்று சொன்னார்கள்.

அதைக் கேட்டதும் இஸ்ரவேலர்கள் பயந்துபோனார்கள், குறை சொல்ல ஆரம்பித்தார்கள். ‘நாம் வேறொரு தலைவரைத் தேர்ந்தெடுத்து எகிப்துக்கே திரும்பிப் போகலாம். ஏன் இந்த இடத்துக்குப் போய் சாக வேண்டும்?’ என்றும் பேசிக்கொண்டார்கள். அப்போது யோசுவாவும் காலேபும், ‘பயப்படாதீர்கள், யெகோவா பேச்சைக் கேளுங்கள். அவர் நம்மைக் காப்பாற்றுவார்’ என்று சொன்னார்கள். ஆனால், இஸ்ரவேலர்கள் அவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை. யோசுவாவையும் காலேபையும் கொன்றுபோட வேண்டும் என்றுகூட நினைத்தார்கள்.

அப்போது யெகோவா என்ன செய்தார்? ‘நான் இஸ்ரவேலர்களுக்கு இவ்வளவு செய்தும்கூட அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை. அதனால், அவர்கள் 40 வருஷங்கள் இந்த வனாந்தரத்திலேயே கிடந்து, இங்கேயே செத்துப்போவார்கள். அவர்களுடைய பிள்ளைகளும் யோசுவாவும் காலேபும் மட்டும்தான் நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்குப் போவார்கள்’ என்று சொன்னார்.

“விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?”—மத்தேயு 8:26