Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 32

புதிய தலைவரும் தைரியமுள்ள இரண்டு பெண்களும்

புதிய தலைவரும் தைரியமுள்ள இரண்டு பெண்களும்

யோசுவா நிறைய வருஷங்களுக்கு இஸ்ரவேலர்களின் தலைவராக இருந்தார். அவர் 110 வயதில் இறந்துபோனார். அவர் உயிரோடு இருந்தவரைக்கும் இஸ்ரவேலர்கள் யெகோவாவை வணங்கினார்கள். ஆனால், யோசுவா இறந்த பிறகு, கானானியர்களைப் போல சிலைகளை வணங்க ஆரம்பித்தார்கள். அதனால், கானானிய ராஜாவான யாபீன் அவர்களைக் கொடுமைப்படுத்த யெகோவா விட்டுவிட்டார். அப்போது, மக்கள் யெகோவாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சினார்கள். அதனால், அவர்களுக்கு ஒரு புதிய தலைவரை யெகோவா கொடுத்தார். அவர் பெயர் பாராக். மக்கள் மறுபடியும் யெகோவாவை வணங்குவதற்கு அவர் உதவி செய்தார்.

பெண் தீர்க்கதரிசியான தெபொராள், பாராக்கை வரச் சொன்னாள். அவரிடம், ‘நீ 10,000 பேரைக் கூட்டிக்கொண்டு கீசோன் நீரோடைக்குப் போ. அங்கே யாபீனின் படைக்கு எதிராக நீ சண்டை போட வேண்டும். யாபீனின் படைத் தளபதியான சிசெராவை அங்கே தோற்கடிப்பாய்’ என்று யெகோவா சொல்லச் சொன்னதாக அவரிடம் தெரிவித்தாள். அந்தச் செய்தியைக் கேட்டபோது பாராக், ‘நீங்கள் என்னோடு வந்தால்தான் நான் போவேன்’ என்று சொன்னார். அதற்கு தெபொராள், ‘நான் வருகிறேன். ஆனால், சிசெராவை நீங்கள் கொல்ல மாட்டீர்கள். ஒரு பெண்தான் கொன்றுபோடுவாள் என்று யெகோவா சொல்லியிருக்கிறார்’ என்றாள்.

போருக்குத் தயாராவதற்காக பாராக்கோடும் அவருடைய படையோடும் தாபோர் மலைக்கு தெபொராள் போனாள். இதைக் கேள்விப்பட்ட உடனே, சிசெரா தன்னுடைய போர் ரதங்களையும் படைகளையும் கீழே இருந்த பள்ளத்தாக்கில் ஒன்றுகூட்டினான். அப்போது தெபொராள், ‘இன்று யெகோவா உங்களுக்கு வெற்றி கொடுப்பார்’ என்று பாராக்கிடம் சொன்னாள். உடனே, பாராக்கும் அவருடன் இருந்த 10,000 பேரும் சிசெராவின் பெரிய படையோடு போர் செய்வதற்காக மலையிலிருந்து வேகமாக இறங்கிப் போனார்கள்.

அப்போது யெகோவா, கீசோன் நீரோடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓட வைத்தார். சிசெராவின் போர் ரதங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டன. அதனால், சிசெரா தன்னுடைய ரதத்திலிருந்து இறங்கி ஓடினான். பாராக்கும் அவருடைய வீரர்களும் சிசெராவின் படையைத் தோற்கடித்தார்கள். ஆனால், சிசெரா தப்பித்துவிட்டான்! அவன் ஓடிப்போய் யாகேல் என்ற பெண்ணின் கூடாரத்துக்குள் ஒளிந்துகொண்டான். அவன் குடிப்பதற்கு அவள் பாலைக் கொண்டுவந்து கொடுத்தாள். பிறகு, ஒரு போர்வையால் அவனை மூடினாள். ரொம்பக் களைப்பாக இருந்ததால் சிசெரா தூங்கிவிட்டான். அப்போது யாகேல் மெதுவாக அவன் பக்கத்தில் போய், ஒரு கூடார ஆணியை அவன் தலையில் அடித்தாள். அவன் செத்துப்போனான்.

சிசெராவைத் தேடிக்கொண்டு பாராக் அங்கே வந்தார். யாகேல் தன்னுடைய கூடாரத்திலிருந்து வெளியே வந்து, ‘உள்ளே வாருங்கள். நீங்கள் தேடுகிற ஆளை நான் காட்டுகிறேன்’ என்று சொன்னாள். பாராக் உள்ளே போனபோது, அங்கே சிசெரா செத்துக் கிடப்பதைப் பார்த்தார். இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கொடுத்ததற்காக பாராக்கும் தெபொராளும் யெகோவாவைப் புகழ்ந்து பாடினார்கள். அடுத்த 40 வருஷங்களுக்கு, இஸ்ரவேலர்கள் எந்தத் தொல்லையும் இல்லாமல் நிம்மதியாக இருந்தார்கள்.

“நல்ல செய்தியை அறிவிக்கிற பெண்கள் படைபோல் ஏராளமாக இருக்கிறார்கள்.”—சங்கீதம் 68:11