Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 43

தாவீது ராஜா செய்த தவறு

தாவீது ராஜா செய்த தவறு

சவுல் இறந்த பிறகு, தாவீது ராஜாவானார். அப்போது அவருக்கு 30 வயது. சில வருஷங்களுக்குப் பிறகு, அவர் மோசமான ஒரு தவறைச் செய்தார். ஒருநாள் ராத்திரி அரண்மனை மொட்டைமாடியிலிருந்து ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். அவளுடைய பெயர் பத்சேபாள் என்றும், அவள் உரியா என்ற போர்வீரனின் மனைவி என்றும் தெரிந்துகொண்டார். தாவீது அவளைத் தன் அரண்மனைக்கு வர வைத்தார். அவர்கள் இரண்டு பேரும் உறவுகொண்டார்கள். அதனால், அவள் கர்ப்பமானாள். தாவீது அந்தத் தவறை மறைக்க முயற்சி செய்தார். போர் நடக்கும் இடத்தில் உரியாவை முன்னால் நிற்க வைத்துவிட்டு, மற்ற எல்லாரும் பின்னால் வந்துவிட வேண்டும் என்று தன் தளபதியிடம் சொன்னார். போரில் உரியா இறந்த பிறகு, பத்சேபாளை தாவீது கல்யாணம் செய்தார்.

நடந்த எல்லாவற்றையும் யெகோவா பார்த்தார். அவர் என்ன செய்தார்? தீர்க்கதரிசியான நாத்தானை தாவீதிடம் அனுப்பினார். நாத்தான் தாவீதிடம் ஒரு கதையைச் சொன்னார். ‘ஒரு பணக்காரனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. ஒரு ஏழையிடம் ஒரேவொரு ஆட்டுக்குட்டி மட்டும் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தப் பணக்காரன் அந்த ஏழையிடம் இருந்த ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான்’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் தாவீதுக்குப் பயங்கர கோபம் வந்தது. அவர் உடனே, ‘அந்தப் பணக்காரனைக் கொல்ல வேண்டும்!’ என்று சொன்னார். அப்போது நாத்தான், ‘நீதான் அந்தப் பணக்காரன்!’ என்றார். அதைக் கேட்டதும் தாவீது மனம் உடைந்துபோனார். ‘நான் யெகோவாவுக்கு விரோதமாகத் தவறு செய்துவிட்டேன்’ என்று ஒத்துக்கொண்டார். இந்தத் தவறால் தாவீதுக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நிறைய கஷ்டங்கள் வந்தன. தாவீதுக்கு யெகோவா தண்டனை கொடுத்தார். ஆனால், தாவீது நேர்மையாகவும் மனத்தாழ்மையாகவும் இருந்ததால் அவரைக் கொல்லாமல் விட்டுவிட்டார்.

தாவீது யெகோவாவுக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அதைக் கட்ட அவருடைய மகன் சாலொமோனை யெகோவா தேர்ந்தெடுத்தார். அந்த வேலைக்குத் தேவையான பொருள்களை தாவீது சேர்த்து வைக்க ஆரம்பித்தார். ‘யெகோவாவின் ஆலயம் அருமையாக இருக்க வேண்டும். சாலொமோன் சின்னப் பையனாக இருக்கிறான். அதனால் ஆலய வேலைக்குத் தேவையானதை நான் தயாராக வைத்தால், அவனுக்கு உதவியாக இருக்கும்’ என்றார். தாவீது தன்னுடைய பணத்தை இந்த வேலைக்காகத் தாராளமாகக் கொடுத்தார். வேலை செய்வதற்குத் திறமையான ஆட்களைக் கண்டுபிடித்தார். தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்தார். தேவதாரு மரங்களை தீரு, சீதோன் ஆகிய இடங்களிலிருந்து வர வைத்தார். ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான விவரங்களை, அவர் இறப்பதற்கு முன்பு சாலொமோனிடம் கொடுத்தார். ‘யெகோவா இதையெல்லாம் உனக்காக எழுதி வைக்கச் சொன்னார். யெகோவா உனக்கு உதவி செய்வார். பயப்படாதே, தைரியமாக வேலையை ஆரம்பி’ என்று சொன்னார்.

“ஒருவன் தன்னுடைய குற்றங்களை மறைக்கப் பார்த்தால், அவன் நினைத்தது நடக்காது. ஆனால், குற்றங்களை ஒத்துக்கொண்டு திரும்பவும் செய்யாமல் இருப்பவன் இரக்கம் பெறுவான்.”—நீதிமொழிகள் 28:13