Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 41

தாவீதும் சவுலும்

தாவீதும் சவுலும்

தாவீது கோலியாத்தைக் கொன்ற பிறகு, சவுல் ராஜா தன்னுடைய படைக்கு தாவீதைத் தலைவராக்கினார். தாவீது நிறைய போர்களில் ஜெயித்தார், அதனால் எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடித்துவிட்டது. அவர் போரில் ஜெயித்துவிட்டு திரும்பி வந்தபோதெல்லாம், ‘சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பல ஆயிரம்’ என்று சொல்லி பெண்கள் ஆடிப்பாடினார்கள். அதனால், தாவீதுமேல் சவுல் பொறாமைப்பட்டார், அவரைக் கொல்ல நினைத்தார்.

தாவீது நன்றாக யாழ் வாசிப்பார். ஒருநாள் சவுலுக்காக தாவீது யாழ் வாசித்த சமயத்தில், அவர்மேல் சவுல் ஈட்டியை எறிந்தார். அவர் சட்டென நகர்ந்துவிட்டார், அந்த ஈட்டி சுவரில் போய்க் குத்தியது. அதன் பிறகு, சவுல் நிறைய தடவை தாவீதைக் கொல்ல முயற்சி செய்தார். அதனால், தாவீது அங்கிருந்து தப்பித்து ஒரு பாலைவனத்தில் ஒளிந்துகொண்டார்.

சவுல் 3,000 வீரர்களோடு தாவீதைப் பிடிக்கப் போனார். அப்போது சவுல், தனக்கே தெரியாமல் தாவீதும் அவருடைய ஆட்களும் ஒளிந்திருந்த குகைக்குள் போய்விட்டார். ‘சவுலைக் கொல்ல இதுதான் சரியான சமயம்’ என்று தாவீதின் ஆட்கள் கிசுகிசுத்தார்கள். தாவீது சத்தமில்லாமல் சவுலிடம் போய் அவருடைய உடையின் ஓரத்தை வெட்டி எடுத்தார். அதை சவுல் கவனிக்கவில்லை. ஆனால், யெகோவா அபிஷேகம் செய்த ராஜாவுக்கு மதிப்புக் கொடுக்காமல் இப்படிச் செய்துவிட்டோமே என்று நினைத்து தாவீது ரொம்ப வருத்தப்பட்டார். தன் ஆட்கள் சவுலைத் தாக்க அவர் விடவில்லை. அவர் சவுலைச் சத்தமாகக் கூப்பிட்டு, அவரைக் கொல்ல வாய்ப்பு கிடைத்தும் தான் கொல்லவில்லை என்று சொன்னார். அதற்குப் பிறகாவது, சவுல் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாரா?

இல்லை. தாவீதைக் கொல்ல மறுபடியும் தேடி அலைந்தார். ஒருநாள் ராத்திரி, தாவீதும் அவருடைய சகோதரியின் மகன் அபிசாயும் சவுல் முகாம்போட்டிருந்த இடத்துக்கு மெதுவாகப் போனார்கள். சவுலுக்குப் பாதுகாப்பாக வந்த அப்னேர்கூட தூங்கிக்கொண்டிருந்தார். அபிசாய் தாவீதிடம், ‘இதுதான் சரியான சமயம்! நான் சவுலைக் கொன்றுவிடுகிறேன்’ என்றார். தாவீது அவரிடம், ‘சவுலை யெகோவா பார்த்துக்கொள்வார். நாம் அவருடைய ஈட்டியையும் தண்ணீர் ஜாடியையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்’ என்றார்.

சவுலின் முகாமுக்கு எதிரில் இருந்த ஒரு மலைமேல் தாவீது ஏறினார். அங்கிருந்து, ‘அப்னேரே, நீங்கள் ஏன் உங்கள் ராஜாவைப் பாதுகாக்கவில்லை? ராஜாவின் ஜாடியும் ஈட்டியும் எங்கே?’ என்று சத்தமாகக் கேட்டார். அது தாவீதின் குரல் என்பதை சவுல் புரிந்துகொண்டார். சவுல் தாவீதிடம், ‘நீ நினைத்திருந்தால் என்னைக் கொலை செய்திருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை. நீதான் இஸ்ரவேலின் அடுத்த ராஜா என்று எனக்குத் தெரியும்’ என்றார். பிறகு, சவுல் தன் அரண்மனைக்குப் போய்விட்டார். ஆனால், சவுலின் குடும்பத்தில் இருந்த எல்லாருமே தாவீதை வெறுக்கவில்லை.

‘கூடுமானால், உங்களால் முடிந்தவரை எல்லாரோடும் சமாதானமாக இருங்கள். அன்புக் கண்மணிகளே, . . . நீங்கள் பழிக்குப்பழி வாங்காமல் அதைக் கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்.’—ரோமர் 12:18, 19