Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 55

யெகோவாவின் தூதர் எசேக்கியாவைக் காப்பாற்றினார்

யெகோவாவின் தூதர் எசேக்கியாவைக் காப்பாற்றினார்

அசீரிய பேரரசு இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யத்தை ஏற்கெனவே பிடித்திருந்தது. இப்போது அசீரிய ராஜாவான சனகெரிப் யூதாவின் இரண்டு கோத்திர ராஜ்யத்தையும் பிடிக்க நினைத்தான். அவன் யூதாவின் நகரங்களை ஒவ்வொன்றாகப் பிடிக்க ஆரம்பித்தான். முக்கியமாக எருசலேமைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால், எருசலேமை யெகோவா பாதுகாக்கிறார் என்பது சனகெரிப்புக்குத் தெரியவில்லை.

யூதாவின் ராஜாவான எசேக்கியா, எருசலேமை விட்டுவிடச் சொல்லி சனகெரிப்புக்கு நிறைய பணம் கொடுத்தார். அதையெல்லாம் வாங்கிய பிறகும், எருசலேமைத் தாக்குவதற்காகத் தன்னுடைய பெரிய படையை அவன் அனுப்பினான். அசீரியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் வந்துகொண்டிருப்பது தெரிந்ததும், எருசலேம் மக்கள் பயந்துபோனார்கள். அப்போது எசேக்கியா அவர்களிடம், ‘பயப்படாதீர்கள். அசீரியர்கள் பலசாலிகள்தான். ஆனால், யெகோவா அவர்களைவிட நம்மை அதிக பலிசாலிகளாக ஆக்குவார்’ என்று சொன்னார்.

எருசலேம் மக்களைக் கேலி செய்வதற்காக ரப்சாக்கே என்ற தூதுவனை சனகெரிப் அனுப்பினான். ரப்சாக்கே நகரத்தின் வெளியே நின்றுகொண்டு, ‘யெகோவாவினால் உங்களைக் காப்பாற்ற முடியாது. எசேக்கியா பேச்சைக் கேட்டு நீங்கள் ஏமாந்துபோகாதீர்கள். எந்தக் கடவுளாலும் எங்கள் கையிலிருந்து உங்களைக் காப்பாற்ற முடியாது’ என்று கத்தினான்.

அப்போது எசேக்கியா யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தார். ‘ரப்சாக்கே சொன்னதைக் கேட்டு பயப்படாதீர்கள். சனகெரிப் எருசலேமைப் பிடிக்க மாட்டான்’ என்று யெகோவா சொன்னார். அடுத்ததாக, சனகெரிப் எசேக்கியாவுக்குக் கடிதங்களை அனுப்பினான். அதில், ‘பேசாமல் சரணடைந்து விடு. யெகோவாவினால் உன்னைக் காப்பாற்ற முடியாது’ என்று எழுதியிருந்தான். அப்போது எசேக்கியா, ‘யெகோவாவே, தயவுசெய்து எங்களைக் காப்பாற்றுங்கள். அப்போதுதான், உண்மையான கடவுள் நீங்கள்தான் என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள்’ என்று ஜெபம் செய்தார். அதற்கு யெகோவா, ‘அசீரிய ராஜா எருசலேமுக்குள் வர மாட்டான். என் நகரத்தை நான் பாதுகாப்பேன்’ என்று சொன்னார்.

எருசலேமைச் சீக்கிரத்தில் பிடித்துவிடலாம் என்று சனகெரிப் நம்பினான். ஆனால் அன்று ராத்திரி, நகரத்துக்கு வெளியே அசீரிய வீரர்கள் முகாம் போட்டிருந்த இடத்துக்கு யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார். அந்தத் தூதர் 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். சனகெரிப் ராஜாவின் படையில் இருந்த மாவீரர்கள் எல்லாரும் செத்துப்போனார்கள். சனகெரிப் தோற்றுப்போனதால் வேறு வழியில்லாமல் தன் ஊருக்குத் திரும்பிப் போனான். யெகோவா தான் சொன்னபடியே எசேக்கியாவையும் எருசலேமையும் காப்பாற்றினார். நீ அப்போது எருசலேமில் இருந்திருந்தால், யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருப்பாயா?

“யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களை அவருடைய தூதர் சூழ்ந்து நின்று, காப்பாற்றுகிறார்.”—சங்கீதம் 34:7