Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாடம் 54

யோனாவிடம் கடவுள் காட்டிய பொறுமை

யோனாவிடம் கடவுள் காட்டிய பொறுமை

அசீரியாவில் நினிவே என்ற நகரம் இருந்தது. அங்கே வாழ்ந்த மக்கள் கெட்டவர்களாக இருந்தார்கள். அவர்களைத் திருந்தி வாழச் சொல்வதற்காக, யெகோவா தன்னுடைய தீர்க்கதரிசி யோனாவை அங்கே போகச் சொன்னார். ஆனால், யோனா நினிவேக்குப் போகாமல், எதிர் திசையில் ஓடிப்போக நினைத்தார். அதனால், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலில் ஏறினார்.

அந்தக் கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, பயங்கரமான புயல் வீசியது. கப்பலை ஓட்டியவர்கள் பயந்து போனார்கள். தங்கள் கடவுள்களிடம் வேண்டி, ‘ஏன் இப்படி நடக்கிறது’ என்று கேட்டார்கள். கடைசியில் யோனா அவர்களிடம், ‘என்னால்தான் இப்படி நடக்கிறது. யெகோவா சொன்னதைச் செய்யாமல் நான் ஓடிவந்துவிட்டேன். என்னைத் தூக்கி கடலில் போடுங்கள். அப்போது, புயல் நின்றுவிடும்’ என்று சொன்னார். யோனாவைத் தூக்கி கடலில் போட அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், தன்னைக் கடலில் போடும்படி யோனா சொல்லிக்கொண்டே இருந்தார். அவரைக் கடலில் போட்டதும், புயல் நின்றுவிட்டது.

‘இனி அவ்வளவுதான்’ என்று யோனா நினைத்தார். அவர் கடலுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கிக்கொண்டிருந்தபோது, யெகோவாவிடம் ஜெபம் செய்தார். அப்போது, யெகோவா ஒரு பெரிய மீனை அனுப்பினார். அது யோனாவை விழுங்கியது. ஆனால், அவர் சாகவில்லை. அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்து யோனா ஜெபம் செய்தார். ‘இனி எப்போதும் உங்கள் பேச்சைக் கேட்பேன்’ என்று கடவுளிடம் சத்தியம் செய்தார். மீனின் வயிற்றில் யோனாவை மூன்று நாட்கள் யெகோவா பத்திரமாகப் பாதுகாத்தார். பிறகு, அந்த மீன் அவரைத் கரையில் துப்பும்படிச் செய்தார்.

நினிவேக்குப் போகும்படி மறுபடியும் யோனாவிடம் யெகோவா சொன்னார். இந்தத் தடவை, யெகோவா பேச்சை யோனா கேட்டார். அவர் நினிவேக்குப் போய், ‘இன்னும் 40 நாட்களில், நினிவே அழிந்துவிடும்’ என்று அந்தக் கெட்ட மக்களிடம் சொன்னார். ஆனால், எதிர்பார்க்காத ஒன்று நடந்தது! நினிவே மக்கள் யோனா சொன்னதைக் கேட்டு திருந்தினார்கள். நினிவேயின் ராஜா தன் மக்களிடம், ‘நீங்கள் கடவுளிடம் வேண்டுங்கள். திருந்தி வாழுங்கள். ஒருவேளை, கடவுள் நம்மை அழிக்காமல் விட்டுவிடலாம்’ என்று சொன்னான். மக்கள் திருந்தியதை யெகோவா பார்த்தார். அதனால், நினிவேயை அழிக்கவில்லை.

நினிவேயை கடவுள் அழிக்காததைப் பார்த்து யோனா கோபப்பட்டார். கொஞ்சம் யோசித்துப் பார்: யோனாவிடம் யெகோவா பொறுமையாக இருந்தார், இரக்கம் காட்டினார். ஆனால் யோனா, அந்த நினிவே மக்களுக்கு இரக்கம் காட்டவில்லை. அதற்குப் பதிலாக, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அந்த நகரத்துக்கு வெளியே இருந்த சுரைக்காய்க் கொடியின் நிழலில் உட்கார்ந்தார். சீக்கிரத்தில், அந்தக் கொடி பட்டுப்போய்விட்டது. அதனால் யோனாவுக்கு இன்னும் கோபம் கோபமாக வந்தது. அப்போது யெகோவா அவரிடம், ‘நினிவே மக்களுக்காக கவலைப்படாமல் இந்தக் கொடிக்காக நீ ரொம்பக் கவலைப்படுகிறாய். நான் அவர்களுக்கு இரக்கம் காட்டினேன், அதனால்தான் அவர்கள் பிழைத்தார்கள்’ என்று சொன்னார். செடி கொடிகளைவிட நினிவே மக்கள்தான் ரொம்ப முக்கியம் என்று யோனாவுக்குப் புரிய வைத்தார்.

“யெகோவா . . . ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று . . . விரும்புகிறார். அதனால்தான் உங்கள்மேல் பொறுமையாக இருக்கிறார்.”—2 பேதுரு 3:9