பிற்சேர்க்கை
இயேசு டிசம்பர் மாதத்தில் பிறந்தாரா?
இயேசு எப்போது பிறந்தார் என பைபிள் நமக்குச் சொல்வதில்லை. என்றாலும், அவர் டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதற்கு அது வலுவான அத்தாட்சியை அளிக்கிறது.
இயேசு பிறந்த பெத்லகேமில், டிசம்பர் மாத சீதோஷ்ண நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். (நவம்பர்/டிசம்பருக்கு ஒத்த) சிஸ்லெவ் என்ற யூத மாதம், குளிரும் மழையுமிக்க ஒரு மாதமாகும். அதற்கடுத்து வருவது டிபெத் (டிசம்பர்/ஜனவரி) என்ற மாதமாகும். வருடத்திலேயே கடுங்குளிரான மாதம் அது; மேட்டுநிலப் பகுதிகளில் அவ்வப்போது பனிகூடப் பெய்யும். அந்தப் பகுதியின் தட்பவெப்ப நிலையைக் குறித்து பைபிள் என்ன சொல்கிறது என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
சிஸ்லெவ் என்ற மாதம் குளிருக்கும் மழைக்கும் பெயர்போன மாதம் என்பதை பைபிள் எழுத்தாளரான எஸ்றா காண்பிக்கிறார். “ஒன்பதாம் மாதம் [சிஸ்லெவ்] இருபதாந் தேதி” ஜனக்கூட்டம் எருசலேமில் கூடியிருந்தது எனக் குறிப்பிட்ட பிறகு, அந்த ஜனங்கள் ‘அடைமழையினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்’ என்று அவர் எழுதுகிறார். வருடத்தின் அந்தச் சமயத்திலுள்ள சீதோஷ்ண நிலையைக் குறித்து, “இது மாரி காலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது” என்று அங்கு கூடியிருந்த ஜனங்கள்கூட சொன்னார்கள். (எஸ்றா 10:9, 13; எரேமியா 36:22) அதனால்தான், பெத்லகேமைச் சுற்றியிருந்த பகுதிகளிலிருந்த மேய்ப்பர்கள், டிசம்பர் மாதத்தில், அதுவும் இரவு நேரங்களில் மந்தைகளுடன் வெளியே தங்கியிருந்திருக்கவே மாட்டார்கள்.
ஆனால், இயேசு பிறந்த இரவன்று, வயல்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள் என பைபிள் சொல்கிறது. ஆம், பெத்லகேமுக்கு அருகே மேய்ப்பர்கள் “வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள்” என்று பைபிள் எழுத்தாளரான லூக்கா குறிப்பிடுகிறார். (லூக்கா 2:8-12) மேய்ப்பர்கள் அன்று பகலில் வெறுமனே வெளியில் நடந்து கொண்டிருக்கவில்லை, ஆனால் வயல்வெளியில் தங்கியிருந்தார்கள் என்பதைக் கவனியுங்கள். இராத்திரியிலே அவர்கள் தங்களுடைய மந்தைகளுடன் வயல்களில் இருந்தார்கள். மேய்ப்பர்கள் வெளியில் தங்கியிருந்ததைப் பற்றிய இந்த விவரிப்பு, டிசம்பர் மாதத்திலே பெத்லகேமிலுள்ள குளிருக்கும் மழைக்கும் பொருந்துகிறதா? இல்லை, பொருந்துகிறதில்லை. ஆக, இயேசுவுடைய பிறப்பின்போது இருந்த சூழ்நிலைகள், அவர் டிசம்பர் மாதத்தில் பிறக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. *
இயேசு எப்போது மரித்தார் என்பதைக் கடவுளுடைய வார்த்தை மிகத் துல்லியமாக நமக்குச் சொல்கிறது, ஆனால் அவர் எப்போது பிறந்தார் என்பதைக் குறித்து வெகு சில விவரங்களையே அளிக்கிறது. இது சாலொமோன் ராஜாவுடைய வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டு வருகிறது: “பரிமள தைலத்தைப் பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜனன நாளைப் பார்க்கிலும் மரண நாளும் நல்லது.” (பிரசங்கி 7:1) அப்படியானால், இயேசுவின் ஊழியத்தையும் மரணத்தையும் குறித்து ஏராளமான விவரங்களை அளிக்கிற பைபிள் அவருடைய பிறப்பைக் குறித்து வெகு சில விவரங்களை மட்டுமே அளித்திருப்பதில் ஆச்சரியமே இல்லை.
^ பாரா. 1 கூடுதல் விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் என்ற புத்தகத்தில், பக்கங்கள் 176-9-ஐக் காண்க.