Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பிற்சேர்க்கை

கர்த்தருடைய இராப்போஜனம்—கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு

கர்த்தருடைய இராப்போஜனம்—கடவுளைக் கனப்படுத்துகிற ஓர் ஆசரிப்பு

கிறிஸ்துவின் மரணத்தை ஆசரிக்க வேண்டுமென்று கிறிஸ்தவர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆசரிப்பு “கர்த்தருடைய இராப்போஜனம்” என்றும் அழைக்கப்படுகிறது. (1 கொரிந்தியர் 11:21) இந்த ஆசரிப்பில் அப்படியென்ன முக்கியத்துவம் இருக்கிறது? இதை எப்படி, எப்போது ஆசரிக்க வேண்டும்?

இயேசு கிறிஸ்து இந்த ஆசரிப்பை பொ.ச. 33-ல், யூத பஸ்கா பண்டிகையின் இரவன்று ஆரம்பித்து வைத்தார். இந்தப் பஸ்கா பண்டிகை வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே, அதாவது நிசான் என்ற யூத மாதத்தின் 14-⁠ம் தேதியன்று மட்டுமே கொண்டாடப்பட்டது. அந்தத் தேதியைக் கணக்கிடுவதற்கு, குறிப்பிட்ட ஒரு நாளை யூதர்கள் மையமாக வைத்திருந்தார்கள்; அந்நாள், இளவேனிற்காலத்தில் பகலும் இரவும் ஓரளவு சரிசமமாக இருக்கும் நாளாகும். அந்த நாளுக்குப் பின் எப்போது அமாவாசை வருகிறதோ அப்போதுதான் நிசான் மாதம் துவங்குகிறது. 14 நாட்கள் கழித்து, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுடன் பஸ்காவைக் கொண்டாடினார், பிறகு யூதாஸ் காரியோத்தை அனுப்பிவிட்டு கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆரம்பித்து வைத்தார். இந்த இராப்போஜனம் யூத பஸ்கா பண்டிகைக்குப் பதிலாக ஆசரிக்கப்படுவதால் இது வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே ஆசரிக்கப்பட வேண்டும்.

மத்தேயுவின் சுவிசேஷம் இவ்வாறு சொல்கிறது: “இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம் பண்ணுங்கள்; இது பாவ மன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது” என்றார்.—மத்தேயு 26:26-28.

இயேசு சொல்லர்த்தமாகவே அந்த அப்பத்தை தம்முடைய உடலாகவும், திராட்சரசத்தை தம்முடைய இரத்தமாகவும் மாற்றியதாகச் சிலர் நம்புகிறார்கள். ஆனால், இயேசு அந்த அப்பத்தைக் கொடுத்த சமயத்தில், அவருடைய மாமிச உடல் எந்தக் குறையுமில்லாமல் நல்லபடியாகவே இருந்தது. இயேசுவின் அப்போஸ்தலர்கள் நிஜமாகவே அவருடைய உடலையும் இரத்தத்தையும் புசித்துக் கொண்டிருந்தார்களா? இல்லை, ஏனென்றால் அது நரமாமிசத்தைச் சாப்பிடுவதாக ஆகியிருக்கும், கடவுளுடைய சட்டத்தை மீறுவதாய் இருந்திருக்கும். (ஆதியாகமம் 9:3, 4; லேவியராகமம் 17:10) “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது” என்று இயேசு சொன்னதாக லூக்கா 22:20-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பாத்திரம் சொல்லர்த்தமாகவே ‘புதிய உடன்படிக்கையாக’ மாறியதா? அப்படி ஆகியிருக்கவே முடியாது, ஏனெனில் உடன்படிக்கை என்பது ஒரு பொருளல்ல, அது ஓர் ஒப்பந்தம்.

எனவே, அப்பம், திராட்சரசம் ஆகிய இரண்டும் வெறும் அடையாளச் சின்னங்கள்தான். அப்பம் கிறிஸ்துவின் பரிபூரண உடலை அடையாளப்படுத்துகிறது. பஸ்காவின்போது உபயோகிக்கப்பட்ட அப்பத்தின் மீதியை இயேசு புதிய உடன்படிக்கைக்குப் பயன்படுத்தினார். அந்த அப்பம் புளிப்பில்லாமல், அதாவது ஈஸ்ட் சேர்க்கப்படாமல், தயாரிக்கப்பட்டது. (யாத்திராகமம் 12:8) பைபிளில், புளிப்பு என்பது பெரும்பாலும் பாவத்திற்கு அல்லது களங்கத்திற்கு அடையாளமாக இருக்கிறது. எனவே, இயேசு பலியாகக் கொடுத்த அவருடைய பரிபூரண, அதாவது பாவமற்ற உடலையே அந்த அப்பம் குறிக்கிறது.—மத்தேயு 16:11, 12; 1 கொரிந்தியர் 5:6, 7; 1 பேதுரு 2:22; 1 யோவான் 2:1, 2.

சிவப்பு திராட்சரசம் இயேசுவின் இரத்தத்தைக் குறிக்கிறது. அந்த இரத்தம்தான் புதிய உடன்படிக்கையைச் செல்லுபடியாக்குகிறது. தமது இரத்தம் ‘பாவ மன்னிப்புண்டாவதற்காகச்’ சிந்தப்படுகிறதென்று இயேசு சொன்னார். இதன் மூலம் யெகோவாவுடைய கண்களில் மனிதர்கள் சுத்தமானவர்களாக ஆகி, புதிய உடன்படிக்கைக்குள் வர முடியும். (எபிரெயர் 9:14; 10:16, 17) இந்த உடன்படிக்கையின், அதாவது ஒப்பந்தத்தின், மூலமே விசுவாசமிக்க 1,44,000 கிறிஸ்தவர்களால் பரலோகத்திற்குச் செல்ல முடியும். அங்கே அவர்கள் ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து முழு மனிதகுலத்திற்கும் ஆசீர்வாதத்தைப் பொழிவார்கள்.—ஆதியாகமம் 22:18; எரேமியா 31:31-33; 1 பேதுரு 2:9; வெளிப்படுத்துதல் 5:9, 10; 14:1-3.

இந்த ஞாபகார்த்த சின்னங்களை யார் புசிக்க வேண்டும்? நியாயமாகவே, புதிய உடன்படிக்கையில் உள்ளவர்கள் மட்டும்தான், அதாவது பரலோகத்திற்குச் செல்லும் நம்பிக்கையுடையவர்கள் மட்டும்தான், அப்பத்தையும் திராட்சரசத்தையும் புசிக்க வேண்டும். அவர்கள் பரலோக ராஜாக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதைக் கடவுளுடைய பரிசுத்த ஆவி அவர்களுடைய மனதிலே உறுதிப்படுத்துகிறது. (ரோமர் 8:16) அவர்கள் இயேசுவுடன் ராஜ்ய உடன்படிக்கையிலும் இருக்கிறார்கள்.—லூக்கா 22:29.

பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடைய மற்றவர்களைப் பற்றியென்ன? அவர்கள் இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்பட்டு, கர்த்தருடைய இராப்போஜன நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்; பார்வையாளர்களாக மட்டுமே இருந்து அந்நிகழ்ச்சிக்கு மரியாதை காட்டுகிறார்கள், அப்பத்தையும் திராட்சரசத்தையும் அவர்கள் புசிப்பதில்லை. வருடத்திற்கு ஒருமுறை, நிசான் 14 அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின் யெகோவாவின் சாட்சிகள் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிக்கிறார்கள். உலகெங்கும் சில ஆயிரம் பேர் மட்டுமே தங்களுக்குப் பரலோக நம்பிக்கை இருப்பதாகச் சொன்னாலும், எல்லாக் கிறிஸ்தவர்களுக்குமே இந்த ஆசரிப்பு மதிப்புமிக்க ஒன்றாக இருக்கிறது. யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் காண்பித்துள்ள மிக உயர்ந்த அன்பைப் பற்றி நாம் எல்லாருமே சிந்தித்துப் பார்ப்பதற்கு அது ஏற்ற சமயமாக இருக்கிறது.—யோவான் 3:16.