பிற்சேர்க்கை
பண்டிகைகளை நாம் கொண்டாட வேண்டுமா?
உலகின் அநேக பாகங்களில் பிரபலமான மதப் பண்டிகைகளும் விடுமுறை நாட்களும் கொண்டாடப்படுகின்றன. இவற்றைக் கொண்டாடும்படி பைபிள் சொல்வதில்லை. அப்படியானால், இவை எப்படி ஆரம்பமாயின? நீங்கள் வசிக்கிற பகுதியில் பிரபலமாக உள்ள பண்டிகைகளைப் பற்றி ஆய்வுப் புத்தகங்கள் என்ன சொல்கின்றன என்பதை லைப்ரரிக்குச் சென்று பார்ப்பது ஆர்வமூட்டுவதாக இருக்கும். சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
ஈஸ்டர். “ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டதாக புதிய ஏற்பாட்டில் எந்தவொரு குறிப்பும் இல்லை” என தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா சொல்கிறது. அப்படியானால், ஈஸ்டர் எப்படி ஆரம்பமானது? அது புறமத வணக்கத்திலிருந்து ஆரம்பமானது. இந்தப் பண்டிகை இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதை நினைவுகூருவதற்காகவே கொண்டாடப்படுகிறது எனச் சொல்லப்பட்டாலும், அதனுடன் சம்பந்தப்பட்ட சில பழக்கவழக்கங்கள் கிறிஸ்தவமற்றவை ஆகும். உதாரணத்திற்கு, பிரபலமான ‘ஈஸ்டர் முயல்குட்டியைப்’ பற்றி த கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “முயல் என்பது ஒரு புறமதச் சின்னமாகும், கருவளத்தின் அடையாளமாகவே அது எப்போதும் இருந்து வந்திருக்கிறது.”
புத்தாண்டுக் கொண்டாட்டங்கள். புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் தேதியும் பழக்கவழக்கங்களும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தின் ஆரம்பத்தைக் குறித்து த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “ரோம ஆட்சியாளரான ஜூலியஸ் சீசர் ஜனவரி 1-ம் தேதியை கி.மு. 46-ல் புத்தாண்டு தினமாக அறிவித்தார். கதவுகள், நுழைவாயில்கள், துவக்கங்கள் ஆகியவற்றின் தெய்வமான ஜானஸுக்கு ரோமர்கள் இந்தத் தினத்தை அர்ப்பணித்தார்கள். ஜனவரி என்ற மாதத்தின் பெயர் ஜானஸ் என்ற தெய்வத்தின் நினைவாக வைக்கப்பட்டது; அந்தத் தெய்வத்திற்கு இரண்டு முகங்கள் இருந்தன, ஒன்று முன்புறம் பார்த்தவாறும் மற்றொன்று பின்புறம் பார்த்தவாறும் இருந்தன.” ஆகவே, புத்தாண்டு கொண்டாட்டங்கள் புறமதப் பாரம்பரியங்களிலிருந்து தோன்றியிருக்கின்றன.
வாலன்டைன் தினம். த உவர்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு சொல்கிறது: “வாலன்டைன் என்ற பெயரைக் கொண்ட இரு கிறிஸ்தவ உயிர்த் தியாகிகளின் நினைவாக வாலன்டைன் தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்தத் தினத்துடன் சம்பந்தப்பட்ட பழக்கவழக்கங்கள் . . . லூப்பர்கேலியா என்ற பூர்வ ரோம பண்டிகையிலிருந்து ஒருவேளை தோன்றியிருக்கலாம். ரோமர்களின் இந்தப் பண்டிகை ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 15-ம் தேதியன்று கொண்டாடப்பட்டு வந்தது. பெண்களுக்கும் திருமணத்திற்குமான தேவதையாகிய ஜூனோவை அது கெளரவித்தது, பான் என்ற இயற்கை தெய்வத்தையும்கூட அது கெளரவித்தது.
மற்ற பண்டிகைகள். உலகெங்கும் கொண்டாடப்படுகிற எல்லாப் பண்டிகைகளையும் இங்கே கலந்தாலோசிப்பது சாத்தியமல்ல. ஆனால், மனிதர்களையோ மனித அமைப்புகளையோ கௌரவிக்கிற எந்தவொரு பண்டிகையையும் கொண்டாட்டங்களையும் யெகோவா ஏற்றுக்கொள்வதில்லை. (எரேமியா 17:5-7; அப்போஸ்தலர் 10:25, 26) இதையும் நினைவில் வையுங்கள்: மதக் கொண்டாட்டங்கள் கடவுளுக்குப் பிரியமானவையா இல்லையா என்பதை அவற்றின் ஆரம்பம் தீர்மானிக்கிறது. (ஏசாயா 52:11; வெளிப்படுத்துதல் 18:4) மதச்சார்பற்ற கொண்டாட்டங்களில் கலந்துகொள்வதைக் கடவுள் எப்படிக் கருதுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள, இப்புத்தகத்தின் 16-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்.