Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுவிசேஷம்

சுவிசேஷம்

கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் முதல் நான்கு புத்தகங்கள் இப்படி அழைக்கப்படுகின்றன. இந்தப் புத்தகங்களில், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய சரித்திரப் பதிவுகள் அடங்கியிருக்கின்றன.

“சுவிசேஷம்” என்ற வார்த்தை, காட்ஸ்பெல் என்ற பழங்கால ஆங்கில வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. அதன் அர்த்தம், “நல்ல செய்தி; சந்தோஷமான செய்தி.” யூயாஜீலியான் என்ற கிரேக்க வார்த்தையை (அர்த்தம், “நல்ல செய்தி”) சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “சுவிசேஷம்” என்று மொழிபெயர்த்திருக்கின்றன. (மத் 4:23; 24:14; மாற் 1:4) பைபிள் சொல்லும் சுவிசேஷம் அல்லது நல்ல செய்தி என்பது, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியையும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பவர்களுக்குக் கிடைக்கும் மீட்பைப் பற்றிய செய்தியையும் குறிக்கிறது.

மாற்குவின் பதிவு, “கடவுளுடைய மகன் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியின் [அதாவது, “சுவிசேஷத்தின்”] ஆரம்பம்” என்ற வார்த்தைகளோடு தொடங்குகிறது. இதனால்தான், அந்த நான்கு புத்தகங்களுமே “சுவிசேஷம்” என்று அழைக்கப்படுவதாகச் சில அறிஞர்கள் சொல்கிறார்கள்.

சுவிசேஷப் புத்தகங்களை எழுதிய யாருமே தாங்கள்தான் அந்தப் புத்தகங்களை எழுதியதாக எங்கும் குறிப்பிடவில்லை; ஆனாலும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேர்தான் அவற்றை எழுதினார்கள் என்பதற்குப் போதுமான அத்தாட்சிகள் இருக்கின்றன. முதல் மூன்று சுவிசேஷ புத்தகங்கள் சிலசமயங்களில் “ஒத்த சுவிசேஷங்கள் (நற்செய்திகள்)” என்று அழைக்கப்படுகின்றன. ஏனென்றால், இயேசு சொன்ன விஷயங்களையும் செய்த விஷயங்களையும் அவை ஒரேபோல் பதிவு செய்திருக்கின்றன. இருந்தாலும், அந்த நான்கு பேரும் அவரவருடைய குணாதிசயத்துக்கு ஏற்றபடி அவரவருடைய பாணியில் அந்தப் பதிவுகளை எழுதுவதற்குக் கடவுள் அனுமதித்தார்.