நிச்சயச் சுட்டிடைச்சொல்
இது, சில மொழிகளில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லிலக்கணக் கூறு. இது பயன்படுத்தப்படும் விதம் மொழிக்கு மொழி வேறுபடுகிறது. ஆங்கிலத்தில், ஒரு பெயர்ச்சொல்லுக்குக் குறிப்பான அர்த்தத்தைக் கொடுக்க, அதாவது ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அல்லது நன்கு அறியப்பட்ட ஒருவரையோ ஒன்றையோ குறிக்க, தி (“the”) என்ற நிச்சயச் சுட்டிடைச்சொல் (definite article) பயன்படுத்தப்படுகிறது. ஒரு விஷயத்தை வலியுறுத்துவதற்காகக்கூட அது பயன்படுத்தப்படுகிறது.
கொய்னி கிரேக்கில் ஹோ என்ற நிச்சயச் சுட்டிடைச்சொல் சில விதங்களில் ஆங்கில நிச்சயச் சுட்டிடைச்சொல்லைப் போலவே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட ஒருவரையோ ஒன்றையோ சுட்டிக்காட்டுவதற்காக அது பெயர்ச்சொல்லுக்கு முன்பு பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்கு, டியேபோலோஸ் என்ற கிரேக்க வார்த்தை (அர்த்தம், “அவதூறு பேசுகிறவன்”) அடிக்கடி நிச்சயச் சுட்டிடைச்சொல்லோடு பயன்படுத்தப்பட்டுள்ளதால் (ஹோ டியேபோலோஸ்), அது குறிப்பாகப் பிசாசை அர்த்தப்படுத்துகிறது. சிலசமயங்களில், “கிறிஸ்து” என்ற பட்டப்பெயரோடு நிச்சயச் சுட்டிடைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஹோ கிறிஸ்டோஸ்) மேசியாவாக இயேசு வகிக்கும் பொறுப்பை வலியுறுத்துவதற்காக இது அநேகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். பால்வகை, எண், வேற்றுமை ஆகியவற்றைப் பொறுத்து, கிரேக்கில் நிச்சயச் சுட்டிடைச்சொல்லின் வடிவம் மாறுகிறது. சிலசமயங்களில், ஒரு பெயர்ச்சொல் எழுவாயாக (subject) இருக்கிறதா செயப்படுபொருளாக (object) இருக்கிறதா, ஒரு பெயர் ஆண்பாலில் இருக்கிறதா பெண்பாலில் இருக்கிறதா போன்றவற்றை இது சுட்டிக்காட்டுகிறது. கிரேக்க நிச்சயச் சுட்டிடைச்சொல்லின் சில வடிவங்களை ஆங்கிலத்திலோ மற்ற மொழிகளிலோ மொழிபெயர்க்கும்போது, ஒரு முன்னிடைச்சொல்லை (preposition) சேர்க்க வேண்டியிருக்கிறது.
கொய்னியில், ஒரு பெயர்ச்சொல்லுக்கு எந்தச் சுட்டிடைச்சொல்லும் இல்லாவிட்டால், சூழமைவைப் பொறுத்து அது நிச்சயமற்ற சுட்டிடைச்சொல்லோடு (indefinite article) சேர்த்து மொழிபெயர்க்கப்படலாம் அல்லது ஒரு பெயரடைச்சொல்லாக (adjective) மொழிபெயர்க்கப்படலாம். உதாரணத்துக்கு, டியேபோலோஸ் என்ற கிரேக்க வார்த்தை எந்தச் சுட்டிடைச்சொல்லும் இல்லாமல் பயன்படுத்தப்பட்டிருந்தால், நிச்சயமற்ற சுட்டிடைச்சொல்லோடு சேர்த்து, ‘அவதூறு பேசுகிற ஒருவன்’ என்று மொழிபெயர்க்கப்படலாம். (யோவா 6:70) அல்லது, “அவதூறான” என்ற பெயரடைச்சொல்லாக மொழிபெயர்க்கப்படலாம்.—கிரேக்க நிச்சயச் சுட்டிடைச்சொல்லைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்வதற்கு, கிரேக்க வேதாகமத்தின் தி கிங்டம் இண்டர்லீனியர் மொழிபெயர்ப்பில், இணைப்பு 7B, “பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க மொழியின் அம்சங்கள்—சுட்டிடைச்சொல்” என்ற தலைப்பைப் பாருங்கள்.