பகுதி 4
வரவுசெலவை சமாளிப்பது எப்படி?
“நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்.”—நீதிமொழிகள் 20:18, பொ.மொ.
குடும்பத்தைக் கவனித்துக்கொள்ள பணம் நமக்கு முக்கியம். (நீதிமொழிகள் 30:8) “பணம் பாதுகாப்பு தரும்” என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12, NW) கணவன் மனைவியாகச் சேர்ந்து பண விஷயங்களைப் பற்றி பேசும்போது சில சமயம் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம். இருந்தாலும், பணப்பிரச்சினை உங்கள் வாழ்க்கையில் பெரிய விரிசலை ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். (எபேசியர் 4:32) பணத்தை எப்படிச் செலவிடலாம் என்பதைப் பற்றி இருவரும் சேர்ந்து முடிவெடுங்கள், ஒருவரையொருவர் நம்புங்கள்.
1 நன்கு திட்டமிடுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? “உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், அதைக் கட்டி முடிக்கப் போதுமான வசதி தனக்கு இருக்கிறதா என்று முதலில் உட்கார்ந்து செலவைக் கணக்கிட்டுப் பார்க்காமல் இருப்பானா?” (லூக்கா 14:28) வரவுசெலவைப் பற்றி இருவரும் கலந்துபேசி திட்டமிடுவது ரொம்பவே முக்கியம். (ஆமோஸ் 3:3) என்ன வாங்க போகிறீர்கள், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள். (நீதிமொழிகள் 31:16) பணம் இருப்பதால் நீங்கள் ஆசைப்பட்டதையெல்லாம் வாங்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். கடன் வாங்குவதைத் தவிர்த்துவிடுங்கள். வரவுக்கேற்ற செலவு செய்யுங்கள்.—நீதிமொழிகள் 21:5; 22:7.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
மாதக் கடைசியில் உங்களிடம் பணம் மிச்சம் இருந்தால் அதை என்ன செய்வதென இருவராகத் தீர்மானியுங்கள்
-
பண நெருக்கடி ஏற்பட்டால், உங்கள் செலவுகளை எப்படிக் குறைக்கலாம் என்று திட்டமிடுங்கள். உதாரணத்திற்கு, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்
2 நேர்மையாக இருங்கள், வெளிப்படையாகப் பேசுங்கள்
பைபிள் என்ன சொல்கிறது? ‘யெகோவாவுடைய பார்வையில் மட்டுமல்ல, மனிதர்களுடைய பார்வையிலும் நேர்மையாக இருங்கள்.’ (2 கொரிந்தியர் 8:21) நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள், எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை உங்கள் கணவரிடம் அல்லது மனைவியிடம் மூடிமறைக்காமல் சொல்லுங்கள்.
ஒரு பெரிய செலவு செய்ய வேண்டியிருந்தால் அதைப் பற்றி நீங்கள் இருவரும் முதலில் கலந்துபேசுங்கள். (நீதிமொழிகள் 13:10) நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை, உங்களுடைய பணமாகப் பார்க்காமல் குடும்பத்துடைய பணமாகப் பாருங்கள். (1 தீமோத்தேயு 5:8) பண விஷயத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் வெளிப்படையாகப் பேசும்போது, நீங்கள் இருவரும் சந்தோஷமாகவும் சமாதானமாகவும் இருக்கலாம்.
நீங்கள் என்ன செய்யலாம்?
-
கைசெலவுக்கு நீங்கள் இருவரும் தனித்தனியாக எவ்வளவு பணம் வைத்துக்கொள்ளலாம் என்று முன்னதாகவே முடிவு செய்யுங்கள்
-
பண விஷயத்தில் பிரச்சினை வரும்வரை காத்திருக்காதீர்கள், அதைப் பற்றி முன்னதாகவே பேசுங்கள்