Skip to content

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?

மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை?

“மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று வெகு காலத்திற்கு முன்பு யோபு என்ற ஒருவர் கேட்டார். (யோபு 14:14) ஒருவேளை நீங்களும் இதைப் பற்றி யோசித்திருக்கலாம். இதே பூமியில் எந்தவித தொல்லையுமில்லாத ரம்மியமான சூழலில் உங்கள் நேசத்திற்குரியவர்களோடு மீண்டும் ஒன்றுசேர முடியும் என்றால் நீங்கள் எப்படி உணருவீர்கள்?

“மரித்த உம்முடையவர்கள் . . . எழுந்திருப்பார்கள்” என்று பைபிள் வாக்குக் கொடுக்கிறது. “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்றும் அது சொல்கிறது.—ஏசாயா 26:19; சங்கீதம் 37:29.

இத்தகைய வாக்குறுதிகளில் உண்மையான நம்பிக்கை வைப்பதற்கு பின்வரும் அடிப்படை கேள்விகள் சிலவற்றிற்கு நாம் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டும்: மனிதர் ஏன் மரிக்கிறார்கள்? மரித்தோர் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள் மறுபடியும் உயிர்வாழ முடியுமென்று எப்படி உறுதியாக நம்பலாம்?

மரணம், நாம் மரிக்கையில் என்ன நடக்கிறது

மனிதர் சாக வேண்டும் என்பது கடவுளுடைய ஆதி நோக்கமே அல்ல என்பதை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. முதல் மனித ஜோடியான ஆதாமையும் ஏவாளையும் கடவுள் படைத்து, இந்தப் பூமியில் ஏதேன் என்ற பரதீஸில்—பூங்காவனம் போன்ற ஓர் இடத்தில்—அவர்களைக் குடிவைத்தார். பிள்ளைகளைப் பெற்று, இந்த முழு பூமியையும் பரதீஸாக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனால் மாத்திரமே அவர்கள் சாவார்கள்.—ஆதியாகமம் 1:28; 2:15-17.

கடவுள் காட்டிய தயவுக்கு துளியும் நன்றியில்லாமல், ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமற்போனார்கள், ஆகவே அதற்குரிய தண்டனையைப் பெற்றார்கள். ‘நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்புவாய். நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்’ என்று ஆதாமிடம் கடவுள் கூறினார். (ஆதியாகமம் 3:19) ஆதாம் படைக்கப்படுவதற்கு முன்பு அவன் எங்குமே இருக்கவில்லை; அவன் மண்ணாக இருந்தான். கீழ்ப்படியாமற்போனதால், அதாவது பாவம் செய்ததால், மண்ணுக்கு, ஒன்றுமில்லாத நிலைக்குப் போகும்படி தீர்ப்பளிக்கப்பட்டான்.

ஆகவே, மரணம் என்பது உயிரில்லாமை. இந்த வேறுபாட்டை பைபிள் இவ்வாறு காட்டுகிறது: ‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நித்திய ஜீவன்.’ (ரோமர் 6:23) மரணம் என்பது முற்றிலும் உணர்வற்ற நிலை என்பதை பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.’ (பிரசங்கி 9:5) ஒருவர் மரிக்கையில், ‘அவருடைய ஆவி பிரியும், அவர் தன் மண்ணுக்குத் திரும்புவார்; அந்நாளிலே அவர் யோசனைகள் அழிந்துபோம்’ என்று பைபிள் விளக்குகிறது.—சங்கீதம் 146:3, 4.

ஆதாமும் ஏவாளும்தான் கடவுளுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை, அப்படியிருக்க நாமெல்லாரும் ஏன் சாகிறோம்? ஏனென்றால் ஆதாம் கீழ்ப்படியாமற்போன பின்பே நாமெல்லாரும் பிறந்தோம், அதனால் அவனிடமிருந்து பாவத்தையும் மரணத்தையும் பரம்பரை பரம்பரையாக பெற்றோம். இதையே பைபிள் இவ்வாறு விளக்குகிறது: ‘ஒரே மனுஷனாலே [அதாவது, ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது; . . . இவ்வாறு மரணம் எல்லாருக்கும் வந்தது.’—ரோமர் 5:12; யோபு 14:14.

ஆனால் ‘மனிதன் செத்தாலும் அழியாத ஆத்துமா ஒன்று இருக்கிறது அல்லவா?’ என யாராவது ஒருவேளை கேட்கலாம். அழியாத ஆத்துமா இருக்கிறதென பலர் கற்பித்திருக்கிறார்கள், மரணம் என்பது மற்றொரு வாழ்க்கைக்கு ஒரு வாசல் என்றும்கூட சொல்கிறார்கள். ஆனால் அது பைபிளின் கருத்து அல்ல. மாறாக, நீங்கள் ஆத்துமாவாக இருக்கிறீர்கள், உங்களுடைய ஆத்துமா என்பது உண்மையில் நீங்களே; உடல் ரீதியிலான, மனோ ரீதியிலான பண்புகள் அனைத்தையும் உள்ளிட்ட உங்களையே அது குறிக்கிறதென கடவுளுடைய வார்த்தை கற்பிக்கிறது. (ஆதியாகமம் 2:7; எரேமியா 2:34; நீதிமொழிகள் 2:10) அதோடு, ‘பாவஞ்செய்கிற ஆத்துமா சாகும்’ என்றும் பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 18:4) சாகும்போது உடலிலிருந்து தப்பிப்பிழைக்கும் அழியாத ஆத்துமா ஒன்று மனிதனுக்கு இருப்பதாக பைபிளில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

மனிதர் எப்படி மீண்டும் உயிர்வாழ முடியும்

பாவமும் மரணமும் உலகத்தில் வந்த பின்பு, இறந்தவர்களை உயிர்த்தெழுதல் மூலம் மீண்டும் உயிருக்குக் கொண்டுவரும் தமது நோக்கத்தை கடவுள் வெளிப்படுத்தினார். இதை பைபிள் இவ்வாறு விளக்குகிறது: ‘[தனது மகன் ஈசாக்கை] மரித்தோரிலிருந்து எழுப்புவதற்கு தேவன் வல்லவராயிருக்கிறார் என்று ஆபிரகாம் எண்ணினார்.’ (ஆதியாகமம் 11:17-19) கடவுள்மீது ஆபிரகாம் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை, ஏனென்றால் சர்வவல்லவரைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே.”—லூக்கா 20:37, 38.

ஆம், தாம் தேர்ந்தெடுக்கும் ஆட்களை உயிர்த்தெழுப்ப கடவுளுக்கு வல்லமையும் இருக்கிறது, ஆவலும் இருக்கிறது. இயேசு கிறிஸ்துவே இவ்வாறு கூறினார்: ‘இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, . . . அவர்கள் எழுந்து வருவார்கள்.’—யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15.

இதைச் சொல்லி சில காலத்திற்குப் பின், இஸ்ரவேலில் நாயீன் என்ற ஊரிலிருந்து ஒரு வாலிபனை பாடையில் வைத்து ஜனங்கள் ஊர்வலமாக தூக்கிக்கொண்டு வருவதை இயேசு பார்த்தார். இறந்துபோன அந்த வாலிபனுடைய தாய் ஒரு விதவை, அவளுக்கு இவன் ஒரே பிள்ளை. அந்தத் தாய்க்கு ஏற்பட்ட மிகுந்த துயரத்தைக் கண்டு இயேசு மனதுருகினார். ஆகவே, அந்தச் சடலத்தைப் பார்த்து, “வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன்”! என்று கட்டளையிட்டார். அவன் உடனே எழுந்து உட்கார்ந்தான், இயேசு அவனை அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.—லூக்கா 7:11-17.

அந்த விதவை அடைந்த சந்தோஷத்தைப் போலவே, யூத ஜெபஆலயத் தலைவன் யவீருவின் வீட்டிற்கு இயேசு சென்றபோது அங்கிருந்தவர்களும் பெரும் சந்தோஷம் அடைந்தார்கள். எப்படியெனில், அவனுடைய 12 வயது மகள் இறந்துவிட்டிருந்தாள். ஆனால் யவீருவின் வீட்டிற்கு இயேசு வந்துசேர்ந்ததும், இறந்துபோன அந்தப் பிள்ளையின் அருகில் சென்று, “பிள்ளையே எழுந்திரு” என்று சொன்னார். உடனே அவள் எழுந்துவிட்டாள்!—லூக்கா 8:40-56.

பிற்பாடு, இயேசுவின் நண்பன் லாசரு இறந்துவிட்டான். அவனுடைய வீட்டிற்கு இயேசு வந்து சேர்ந்தபோது, லாசரு இறந்து நான்கு நாட்களாகியிருந்தன. அவனுடைய சகோதரி மார்த்தாள் ஆழ்ந்த துக்கத்தில் இருந்தாள், என்றபோதிலும் “உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசி நாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன்” என்று சொல்லி தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினாள். ஆனால் இயேசுவோ அவன் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்குச் சென்றார், கல்லை எடுத்துப்போடும்படி கட்டளையிட்டார்; பிறகு, “லாசருவே, வெளியே வா” என்று சத்தமாய் அழைத்தார். அவன் உயிரோடு வெளியே வந்தான்!—யோவான் 11:11-44.

இப்பொழுது இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: இறந்துபோன லாசரு அந்த நான்கு நாட்களும் என்ன நிலையில் இருந்தான்? பரலோகத்தில் பேரின்பமாக இருந்ததாகவோ அல்லது நரகத்தில் வாட்டி வதைக்கப்பட்டதாகவோ லாசரு சொல்லவில்லை, அப்படி பரலோகத்திலோ நரகத்திலோ இருந்திருந்தால் நிச்சயம் அதைப் பற்றி அவன் சொல்லியிருப்பான். ஆகவே, லாசரு இறந்திருந்த சமயத்தில் முற்றிலும் உணர்வற்ற நிலையில் இருந்தான். அவனை இயேசு உயிருக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால், ‘கடைசி நாளில் உயிர்த்தெழுதல்’ நடக்கும்வரை அப்படியே இருந்திருப்பான்.

உண்மைதான், இயேசு நடப்பித்த இந்த அற்புதங்களெல்லாம் தற்காலிக நன்மையைத்தான் அளித்தன, ஏனென்றால் அவரால் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் மீண்டும் இறந்துபோனார்கள். என்றாலும், இறந்தோர் உண்மையிலேயே மீண்டும் உயிர்வாழ முடியும் என்பதை 1,900 ஆண்டுகளுக்கு முன்னரே கடவுளுடைய வல்லமையால் அவர் நிரூபித்துக் காட்டினார்! ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தில் பூமியில் சம்பவிக்கப்போகும் காரியத்தை இந்த அற்புதங்களின் மூலம் இயேசு சிறிய அளவில் செய்து காட்டினார்.

அன்பானவர் மரிக்கையில்

உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஒருபுறமிருந்தாலும், மரணம் என்ற விரோதி தாக்கும்போது உங்களுக்கு மிகுந்த துக்கம் உண்டாகலாம். ஆபிரகாமுக்குத் தன் மனைவி திரும்ப உயிரோடு வருவாள் என்ற விசுவாசம் இருந்தது, என்றாலும் ‘ஆபிரகாம் சாராளுக்காகப் புலம்பி அழுதார்’ என நாம் வாசிக்கிறோம். (ஆதியாகமம் 23:2) இயேசுவைப் பற்றியென்ன? லாசரு மரித்தபோது, அவர் “ஆவியிலே கலங்கித் துயரமடைந்தார்,” அவர் “கண்ணீர் விட்டார்.” (யோவான் 11:33, 35) ஆகவே, உங்களுக்கு நேசமானவர் இறக்கும்போது கண்ணீர்விட்டு அழுவது பலவீனம் அல்ல.

ஒரு பிள்ளை இறக்கும்போது, முக்கியமாக தாய்க்கு அதைத் தாங்கிக்கொள்வது கடினமாயிருக்கும். ஆகவேதான், ஒரு தாய்க்கு கடும் துக்கம் உண்டாகும் என்பதை பைபிள் ஒப்புக்கொள்கிறது. (2 இராஜாக்கள் 4:27) நிச்சயமாகவே, பிள்ளையை இழந்த தகப்பனுக்கும் அது வேதனையாக இருக்கும். தாவீது ராஜாவின் மகன் அப்சலோம் இறந்தபோது, ‘உனக்குப் பதிலாக நான் செத்திருந்தால் நலமாயிருக்கும்’ என்று அவர் புலம்பி அழுதார்.—2 சாமுவேல் 18:33.

என்றாலும், உயிர்த்தெழுதலில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் உங்கள் துக்கம் ஆறாத்துயரமாக இருக்காது. ‘நம்பிக்கையற்ற மற்றவர்களைப் போலத் துக்கிக்க வேண்டியதில்லை’ என்று பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:13) மாறாக, ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குவீர்கள், பைபிள் வாக்குக் கொடுத்திருக்கிறபடி, ‘அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.’—சங்கீதம் 55:22.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்