மத்தேயு அதிகாரங்கள் 5-7
5 அவர் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மலைமேல் ஏறினார்; அவர் உட்கார்ந்த பின்பு, சீஷர்கள் அவரிடம் வந்தார்கள். 2 அப்போது, அவர் கற்பிக்க ஆரம்பித்தார்; அவர்களிடம்,
3 “ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியோடு இருக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.
4 துக்கப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கும்.
5 சாந்தமாக a இருப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பூமி அவர்களுக்குச் சொந்தமாகும்.
6 நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்களுக்கு நீதி கிடைக்கும். b
7 இரக்கம் காட்டுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்களுக்கு இரக்கம் கிடைக்கும்.
8 சுத்தமான இதயமுள்ளவர்கள் சந்தோஷமானவர்கள்; ஏனென்றால் அவர்கள் கடவுளைப் பார்ப்பார்கள்.
9 சமாதானம் பண்ணுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவார்கள்.
10 நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள், ஏனென்றால் பரலோக அரசாங்கம் அவர்களுடையது.
11 நீங்கள் என் சீஷர்கள் என்பதற்காக மக்கள் உங்களைப் பற்றிக் கேவலமாகப் பேசும்போதும், இல்லாததையும் பொல்லாததையும் சொல்லும்போதும், உங்களைத் துன்புறுத்தும்போதும் சந்தோஷப்படுங்கள். 12 மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்; உங்களுக்கு முன்பிருந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் அப்படித்தான் துன்புறுத்தினார்கள்.
13 நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பு அதன் சுவையை இழந்தால், அதற்கு எப்படி மறுபடியும் சுவை சேர்க்க முடியும்? வெளியே கொட்டப்பட்டு, மனுஷர்களால் மிதிக்கப்படுவதற்கே தவிர வேறு எதற்கும் அது உதவாது.
14 நீங்கள் உலகத்துக்கு ஒளியாக இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கிற நகரம் மறைந்திருக்க முடியாது. 15 மக்கள் விளக்கைக் கொளுத்தி அதைக் கூடையால் மூடி வைக்க மாட்டார்கள், விளக்குத்தண்டின் மேல்தான் வைப்பார்கள்; அப்போது, வீட்டிலிருக்கிற எல்லாருக்கும் அது வெளிச்சம் தரும். 16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்; அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.
17 திருச்சட்டத்தையோ தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளையோ அழிக்க வந்தேன் என்று நினைக்காதீர்கள்; அழிக்க அல்ல, அதையெல்லாம் நிறைவேற்றவே வந்தேன். 18 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும் திருச்சட்டத்தில் இருக்கிற ஒரு சின்ன எழுத்துகூட அழிந்துபோகாது, சொல்லப்போனால் ஒரு எழுத்தின் சின்ன கோடுகூட அழிந்துபோகாது; அதில் எழுதப்பட்டிருக்கிற எல்லாமே நிறைவேறும். 19 அதனால், திருச்சட்டத்திலுள்ள ஒரு சின்ன கட்டளையைக்கூட ஒருவன் மீறினால், அதுவும் அப்படி மீறும்படி மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுத்தால் அவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டான். ஆனால், அதிலுள்ள கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறவன் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெறுவான். 20 நான் உங்களுக்குச் சொல்கிறேன்: வேத அறிஞர்களையும் பரிசேயர்களையும்விட நீங்கள் அதிக நீதியுள்ளவர்களாக இல்லையென்றால், ஒருபோதும் பரலோக அரசாங்கத்துக்குத் தகுதி பெற மாட்டீர்கள்.
21 ‘கொலை செய்யக் கூடாது, கொலை செய்கிற எவனும் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன்னுடைய சகோதரன்மேல் கடும் கோபமாகவே இருக்கிறவன் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; கேவலமான வார்த்தைகளால் தன் சகோதரனை அவமதிக்கிறவன் உச்ச நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டியிருக்கும்; ‘கேடுகெட்ட முட்டாளே!’ என்று சொல்கிறவனோ கொழுந்துவிட்டு எரிகிற கெஹென்னாவுக்குள் c தள்ளப்பட வேண்டியிருக்கும்.
23 அதனால், பலிபீடத்தில் காணிக்கை செலுத்த நீங்கள் வந்திருக்கும்போது உங்கள் சகோதரனுக்கு உங்கள்மேல் ஏதோ மனவருத்தம் இருப்பது ஞாபகத்துக்கு வந்தால், 24 அங்கேயே அந்தப் பலிபீடத்துக்கு முன்னால் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முதலில் அவனோடு சமாதானமாகுங்கள்; பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
25 உங்கள்மேல் ஒருவன் வழக்கு போட்டால், நீதிமன்றத்துக்குப் போகும் வழியிலேயே அவனோடு சீக்கிரமாகச் சமரசம் செய்துகொள்ளுங்கள்; இல்லையென்றால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான், நீதிபதி உங்களைக் காவலாளியிடம் ஒப்படைப்பார், பின்பு நீங்கள் சிறையில் தள்ளப்படுவீர்கள். 26 உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அங்கிருந்து வரும்போது சல்லிக்காசுகூட உங்கள் கையில் மிஞ்சாது.
27 ‘மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணைக் காம உணர்வோடு பார்த்துக்கொண்டே இருப்பவன் அவளோடு ஏற்கெனவே தன் இதயத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். 29 உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் d வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல். 30 உன் வலது கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு. உன் முழு உடலும் கெஹென்னாவுக்குள் e தள்ளப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.
31 ‘தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன் விவாகரத்துப் பத்திரத்தை அவளுக்குக் கொடுக்க வேண்டும்’ என்று உங்களுக்குச் சொல்லப்பட்டது. 32 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டை f தவிர வேறெந்தக் காரணத்துக்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், வேறொருவனோடு முறைகேடான உறவுகொள்ள அவளுக்குச் சந்தர்ப்பம் அளித்துவிடுகிறான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்கிறவன் அவளோடு முறைகேடான உறவுகொள்கிறான்.
33 அதோடு, ‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது; யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் சத்தியமே செய்ய வேண்டாம்; பரலோகத்தின் மீது சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது கடவுளுடைய சிம்மாசனம்; 35 பூமியின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது அவருடைய கால்மணை; எருசலேமின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் அது மகா ராஜாவின் நகரம். 36 உங்கள் தலையின் மீதும் சத்தியம் செய்ய வேண்டாம், ஏனென்றால் உங்கள் தலையில் இருக்கிற ஒரு முடியைக்கூட உங்களால் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ முடியாது. 37 நீங்கள் ‘ஆம்’ என்று சொல்வது ‘ஆம்’ என்றே இருக்கட்டும், ‘இல்லை’ என்று சொல்வது ‘இல்லை’ என்றே இருக்கட்டும். இதற்கு மிஞ்சி சொல்லப்படும் எதுவும் பொல்லாதவனிடமிருந்தே வருகிறது.
38 ‘கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்’ என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39 ஆனால் நான் சொல்கிறேன், அக்கிரமக்காரனோடு சண்டைக்கு நிற்காதீர்கள்; யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு இன்னொரு கன்னத்தையும் காட்டுங்கள். 40 ஒருவன் உங்கள்மேல் வழக்கு போட்டு உங்கள் உள்ளங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், உங்கள் மேலங்கியையும் அவனுக்குக் கொடுத்துவிடுங்கள். 41 அதிகாரத்தில் இருக்கிற ஒருவர் ஏதோவொரு வேலைக்காக ஒரு மைல் தூரம் வரச் சொல்லி உங்களைக் கட்டாயப்படுத்தினால், அவருடன் இரண்டு மைல் தூரம் போங்கள். 42 உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க g வருகிறவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்.
43 ‘மற்றவர்கள்மேல் அன்பு காட்ட வேண்டும், ஆனால் எதிரியை வெறுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 ஆனால் நான் சொல்கிறேன், உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். 45 இப்படிச் செய்யும்போது, உங்களுடைய பரலோகத் தகப்பனுக்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள். ஏனென்றால், அவர் நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் சூரியனை உதிக்க வைக்கிறார்; நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மழையைப் பெய்ய வைக்கிறார். 46 உங்கள்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் மட்டுமே நீங்கள் அன்பு காட்டினால், என்ன பிரயோஜனம்? வரி வசூலிப்பவர்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 47 உங்கள் சகோதரர்களுக்கு மட்டுமே வாழ்த்துச் சொன்னால், அதில் என்ன விசேஷம்? உலக மக்களும் அப்படித்தானே செய்கிறார்கள்? 48 அதனால், உங்கள் பரலோகத் தகப்பன் பரிபூரணராக h இருப்பது போலவே நீங்களும் பரிபூரணராக இருக்க வேண்டும்” என்றார்.
6 பின்பு அவர், “மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் முன்னால் நீதியான செயல்களைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால், உங்கள் பரலோகத் தகப்பனிடமிருந்து உங்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காது. 2 அதனால், நீங்கள் தானதர்மம் i செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போலத் தம்பட்டம் அடிக்காதீர்கள். மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டும் என்பதற்காக ஜெபக்கூடங்களிலும் தெருக்களிலும் அவர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 3 நீங்களோ தானதர்மம் செய்யும்போது, உங்கள் வலது கை செய்வது உங்கள் இடது கைக்குக்கூட தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். 4 இப்படி, மற்றவர்களுக்குத் தெரியாத விதத்தில் நீங்கள் தானதர்மம் செய்யும்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.
5 நீங்கள் ஜெபம் செய்யும்போது வெளிவேஷக்காரர்களைப் போல் இருக்கக் கூடாது; ஏனென்றால், மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஜெபக்கூடங்களிலும் முக்கியமான தெருக்களின் முனைகளிலும் நின்று ஜெபம் செய்ய விரும்புகிறார்கள். உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 6 நீங்களோ ஜெபம் செய்யும்போது உங்கள் உள்ளறைக்குள் போய்க் கதவை மூடிக்கொண்டு, யாராலும் பார்க்க முடியாத உங்கள் தகப்பனிடம் ஜெபம் செய்யுங்கள். அப்போது, எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார். 7 நீங்கள் ஜெபம் செய்யும்போது உலகத்தாரைப் போலச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்; நிறைய வார்த்தைகளைச் சொல்லி ஜெபம் செய்தால் கடவுள் கேட்பார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். 8 அவர்களைப் போல் இருக்காதீர்கள்; நீங்கள் கேட்பதற்கு முன்பே உங்களுக்கு என்னென்ன தேவை என்பது உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.
9 அதனால், நீங்கள் இப்படி ஜெபம் செய்யுங்கள்:
‘பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். j 10 உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும். உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும். 11 இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்; 12 எங்கள் கடனாளிகளை k நாங்கள் மன்னித்ததுபோல் எங்கள் கடன்களை l எங்களுக்கு மன்னியுங்கள். 13 சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்.’ a
14 மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்கள் பரலோகத் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார். 15 மற்றவர்களுடைய குற்றங்களை நீங்கள் மன்னிக்காவிட்டால், உங்கள் தகப்பனும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார்.
16 நீங்கள் விரதம் இருக்கும்போது, வெளிவேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள். b உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது. 17 நீங்களோ விரதம் இருக்கும்போது உங்கள் தலைக்கு எண்ணெய் தேய்த்து, முகத்தைக் கழுவுங்கள்; 18 அப்போது, நீங்கள் விரதம் இருப்பது மனுஷர்களுக்குத் தெரியாது, ஆனால் எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பனுக்குத் தெரியும். அதனால், எல்லாவற்றையும் பார்க்கிற உங்கள் தகப்பன் உங்களுக்குப் பலன் கொடுப்பார்.
19 பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சியும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். 20 அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சியோ துருவோ அவற்றை அழிக்காது; திருடர்களும் திருடிக்கொண்டு போக மாட்டார்கள். 21 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.
22 கண்தான் உடலுக்கு விளக்கு. உங்கள் கண் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும்; 23 ஆனால், உங்கள் கண் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால், c உங்கள் முழு உடலும் இருளாக இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்ப்பட்ட இருளாக இருக்கும்!
24 யாராலும் இரண்டு எஜமான்களுக்கு அடிமையாக இருக்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அன்பு காட்டுவான்; அல்லது ஒருவரிடம் ஒட்டிக்கொண்டு மற்றவரை அலட்சியம் செய்வான். நீங்கள் ஒரே நேரத்தில் கடவுளுக்கும் செல்வத்துக்கும் அடிமையாக இருக்க முடியாது.
25 அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம், இல்லையா? 26 வானத்துப் பறவைகளைக் கூர்ந்து கவனியுங்கள்; அவை விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை; ஆனாலும், உங்கள் பரலோகத் தகப்பன் அவற்றுக்கு உணவு கொடுக்கிறார். அவற்றைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள், இல்லையா? 27 கவலைப்படுவதால் உங்களில் யாராவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியை கூட்ட முடியுமா? 28 உடைக்காகவும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூல் நூற்பதும் இல்லை; 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், செல்வச்சீமானாக இருந்த சாலொமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்தியதில்லை. 30 விசுவாசத்தில் குறைவுபட்டவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா? 31 அதனால், ‘எதைச் சாப்பிடுவோம்?’ ‘எதைக் குடிப்போம்?’ ‘எதை உடுத்துவோம்?’ என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். 32 இவற்றையெல்லாம் பெறுவதற்கு உலகத்தார்தான் அலைந்து திரிகிறார்கள். இவையெல்லாம் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.
33 அதனால், எப்போதுமே கடவுளுடைய அரசாங்கத்துக்கும் அவருடைய நீதிநெறிகளுக்கும் முதலிடம் கொடுங்கள்; அப்போது, இவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 34 நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்” என்றார்.
7 பின்பு அவர், “மற்றவர்களை நியாயந்தீர்ப்பதை நிறுத்துங்கள், அப்போதுதான் நீங்கள் நியாயந்தீர்க்கப்பட மாட்டீர்கள். 2 மற்றவர்களை நீங்கள் எப்படி நியாயந்தீர்க்கிறீர்களோ அப்படித்தான் நீங்களும் நியாயந்தீர்க்கப்படுவீர்கள்; எந்த அளவையால் மற்றவர்களுக்கு அளக்கிறீர்களோ, அதே அளவையால்தான் அவர்களும் உங்களுக்கு அளப்பார்கள். 3 உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை கவனிக்காமல் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை ஏன் பார்க்கிறீர்கள்? 4 உங்கள் கண்ணில் மரக்கட்டை இருக்கும்போது நீங்கள் எப்படி உங்கள் சகோதரனிடம், ‘உன் கண்ணில் இருக்கிற தூசியை எடுக்கட்டுமா’ என்று கேட்க முடியும்? 5 வெளிவேஷக்காரர்களே! முதலில் உங்கள் கண்ணில் இருக்கிற மரக்கட்டையை எடுத்துப்போடுங்கள், அப்போதுதான் உங்கள் சகோதரன் கண்ணில் இருக்கிற தூசியை எப்படி எடுப்பது என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்காதீர்கள்; உங்களிடமுள்ள முத்துக்களைப் பன்றிகளுக்கு முன்னால் போடாதீர்கள்; அவை தங்கள் கால்களால் அவற்றை மிதித்துப்போட்டு, திரும்பிவந்து உங்களைக் குதறிவிடும்.
7 கேட்டுக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடிக்கொண்டே இருங்கள், அப்போது கண்டுபிடிப்பீர்கள்; தட்டிக்கொண்டே இருங்கள், அப்போது உங்களுக்குத் திறக்கப்படும். 8 ஏனென்றால், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான், தேடுகிற ஒவ்வொருவனும் கண்டுபிடிக்கிறான், தட்டுகிற ஒவ்வொருவனுக்கும் திறக்கப்படும். 9 உங்களில் யாராவது தன் மகன் ரொட்டியைக் கேட்டால் அவனுக்குக் கல்லைக் கொடுப்பாரா? 10 மீனைக் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா? 11 பொல்லாதவர்களான நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பரிசுகளைக் கொடுக்கத் தெரிந்திருக்கும்போது, உங்கள் பரலோகத் தகப்பன் தன்னிடம் கேட்கிறவர்களுக்கு நன்மையானவற்றை இன்னும் எந்தளவுக்குக் கொடுப்பார்!
12 அதனால், மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்; சொல்லப்போனால், திருச்சட்டத்தின் சாராம்சமும் தீர்க்கதரிசனப் புத்தகங்களின் சாராம்சமும் இதுதான்.
13 இடுக்கமான வாசல் வழியாகப் போங்கள்; ஏனென்றால், அழிவுக்குப் போகிற வாசல் அகலமானது, அதன் பாதை விசாலமானது; நிறைய பேர் அதன் வழியாகப் போகிறார்கள். 14 ஆனால், முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற வாசல் இடுக்கமானது, அதன் பாதை குறுகலானது; சிலர்தான் அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
15 போலித் தீர்க்கதரிசிகளைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் செம்மறியாட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு வருவார்கள்; ஆனால், உண்மையில் அவர்கள் பசிவெறிபிடித்த ஓநாய்கள். 16 அவர்களுடைய கனிகளை d வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள். முட்செடியிலிருந்து திராட்சைகளையும், முட்புதரிலிருந்து அத்திகளையும் பறிக்க முடியுமா? 17 நல்ல மரமெல்லாம் நல்ல கனியைக் கொடுக்கும், கெட்ட மரமெல்லாம் கெட்ட கனியைக் கொடுக்கும். 18 நல்ல மரம் கெட்ட கனியைக் கொடுக்க முடியாது, கெட்ட மரம் நல்ல கனியைக் கொடுக்க முடியாது. 19 நல்ல கனி கொடுக்காத மரமெல்லாம் வெட்டப்பட்டு, நெருப்பில் போடப்படும். 20 இப்படி, அவர்களுடைய கனிகளை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்.
21 என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள். 22 அந்த நாளில் நிறைய பேர் என்னிடம், ‘கர்த்தாவே, கர்த்தாவே, உங்கள் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னோமே, உங்கள் பெயரில் பேய்களைத் துரத்தினோமே, உங்கள் பெயரில் எத்தனையோ அற்புதங்களை செய்தோமே’ என்று சொல்வார்கள்; 23 ஆனால் நான் அவர்களைப் பார்த்து, ‘நீங்கள் யாரென்றே எனக்குத் தெரியாது! அக்கிரமக்காரர்களே, என்னைவிட்டுப் போய்விடுங்கள்’ என்று சொல்வேன்.
24 நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டு, இவற்றின்படி நடக்கிறவன் பாறைமேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ள மனுஷனைப் போல் இருக்கிறான். 25 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டின் மேல் மோதியபோதும், அது இடிந்து விழவில்லை. ஏனென்றால், அது பாறைமேல் அஸ்திவாரம் போடப்பட்டிருந்தது. 26 அதேசமயம், நான் சொன்ன இந்த விஷயங்களைக் கேட்டும் அவற்றின்படி நடக்காதவன் மணல்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாத மனுஷனைப் போல் இருக்கிறான். 27 கனமழை பெய்து, வெள்ளம் வந்து, பயங்கர காற்றடித்து, அந்த வீட்டைத் தாக்கியபோது, அது இடிந்து தரைமட்டமானது” என்று சொன்னார்.
28 இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள். 29 ஏனென்றால், அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.
a வே.வா., “தாழ்மையாக.”
b வே.வா., “அவர்கள் திருப்தி செய்யப்படுவார்கள்.”
c எருசலேமுக்கு வெளியே குப்பைகளை எரிக்கும் இடம். பண்டைய எருசலேமின் தென்மேற்கில் இருந்த இன்னோம் பள்ளத்தாக்கின் கிரேக்கப் பெயர். மிருகங்களும் மனிதர்களும் கெஹென்னாவுக்குள் போடப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டதற்கோ சித்திரவதை செய்யப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. அதனால், மனிதர்களுடைய ஆத்துமாக்கள் என்றென்றும் நெருப்பில் வாட்டி வதைக்கப்படுகிற, பார்க்க முடியாத ஓர் இடத்துக்கு இந்த வார்த்தை அடையாளமாக இருக்க முடியாது. மாறாக, நிரந்தர அழிவுக்கு அடையாளமாகத்தான் இயேசுவும் அவருடைய சீஷர்களும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
f இது எல்லா விதமான முறையற்ற உடலுறவுகளையும் குறிக்கிறது; போர்னியா என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்திருக்கிறது. மணத்துணைக்குத் துரோகம், விபச்சாரம், கல்யாணமாகாதவர்கள் வைத்துக்கொள்கிற உடலுறவு, ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் வைத்துக்கொள்கிற உடலுறவு, மிருகங்களோடு வைத்துக்கொள்கிற உடலுறவு ஆகிய எல்லாமே இதில் அடங்கும்.
g அதாவது, “வட்டியில்லாமல் கடன் வாங்க.”
h வே.வா., “முழுமை.”
i கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்படுகிற தானம்.
j வே.வா., “புனிதமாகக் கருதப்பட வேண்டும்.”
k வே.வா., “எங்களுக்கு எதிராகப் பாவம் செய்தவர்களை.”
l வே.வா., “பாவங்களை.”
a வே.வா., “விடுவியுங்கள்.”
b வே.வா., “தங்கள் தோற்றத்தை அசட்டை செய்கிறார்கள்.”
c நே.மொ., “உங்கள் கண் கெட்டதாக இருந்தால்.”
d அதாவது, “செயல்களை.”