“இந்த உலகத்தின் பாகமாக இல்லை”
“இந்த உலகத்தின் பாகமாக இல்லை”
“இந்த உலகம் இவர்களை வெறுக்கிறது; ஏனென்றால், . . . [இவர்கள்] இந்த உலகத்தின் பாகமாக இல்லை.”—யோவான் 17:14.
இதன் அர்த்தம்: இயேசு இந்த உலகத்தின் பாகமாக இல்லாததால் அரசியலிலும் வேறெந்த சண்டை சச்சரவுகளிலும் அவர் ஈடுபடவில்லை. “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமாக இருந்திருந்தால், நான் யூதர்களிடம் ஒப்படைக்கப்படாதபடி என் ஊழியர்கள் எனக்காகப் போராடியிருப்பார்கள். ஆனால், என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தைச் சேர்ந்ததல்ல” என்று இயேசு சொன்னார். (யோவான் 18:36) அதோடு, தவறு என்று கடவுளுடைய வார்த்தை சொல்லும் எதையுமே செய்யக் கூடாதென்று தன் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார்.—மத்தேயு 20:25-27.
ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் பாகமாக இல்லை: ஆரம்பகால கிறிஸ்தவர்கள் “[போரில்] ஈடுபட மறுத்தார்கள்; அதற்காக அவதூறு, சிறை தண்டனை, மரண தண்டனை என எதையும் சந்திக்கத் தயாராக இருந்தார்கள்” என்று மத சம்பந்தப்பட்ட எழுத்தாளரான ஜோனத்தன் டைமன்ட் குறிப்பிட்டார். போரில் கலந்துகொள்வதைவிடக் கஷ்டங்களை அனுபவிப்பதே மேல் என்று அந்தக் கிறிஸ்தவர்கள் நினைத்தார்கள். ஒழுக்க விஷயத்திலும் அவர்கள் மற்றவர்களிலிருந்து வித்தியாசமாக இருந்தார்கள். அதனால்தான், “அதே மோசமான சகதியில் நீங்கள் அவர்களோடு [அதாவது, உலக மக்களோடு] தொடர்ந்து புரளாததால், அவர்கள் உங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, எப்போதும் பழித்துப் பேசுகிறார்கள்” என்று அந்தக் கிறிஸ்தவர்களுக்குச் சொல்லப்பட்டது. (1 பேதுரு 4:4) மற்ற மதங்களைச் சேர்ந்த மக்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்ததால், பைபிள் சொல்கிறபடி ஒழுக்கமாக வாழ்ந்த கிறிஸ்தவர்களைக் கண்டாலே அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சரித்திர வல்லுநரான வில் டியூரண்ட் எழுதினார்.
இன்று உலகத்தின் பாகமாக இல்லாதவர்கள் யார்? “போரில் கலந்துகொள்ளாமல் இருப்பது தவறு” என்று புதிய கத்தோலிக்க என்ஸைக்ளோப்பீடியா சொல்கிறது. “யெகோவாவின் சாட்சிகளைத் தவிர” மற்ற எல்லா சர்ச்சுகளுமே 1994-ல் ருவாண்டாவில் நடந்த இனப் படுகொலையில் கலந்துகொண்டதாக சுவிட்சர்லாந்தில் வெளியாகும் ஒரு பத்திரிகை சொல்கிறது.
ஜெர்மனியில் நாசிக்கள் செய்த இனப்படுகொலையைப் பற்றிப் பேசும்போது, “அப்போது நடந்த கொடுமைகளையும் அட்டூழியங்களையும் பித்தலாட்டங்களையும் எந்தவொரு பிரிவோ அமைப்போ தட்டிக்கேட்கவே இல்லை” என்று ஒரு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் புலம்பினார். ஆனால், அமெரிக்காவில் இருக்கும் படுகொலை அருங்காட்சியகத்தில் தகவல்களைச் சேகரித்த பிறகு தன் கருத்தை மாற்றிக்கொண்டார். எவ்வளவோ சித்திரவதைகளை அனுபவித்தாலும் யெகோவாவின் சாட்சிகள் நாசிக்களுக்கு அடிபணியாமல் தங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக இருந்த விஷயத்தை அவர் தெரிந்துகொண்டார்.
ஒழுக்க விஷயத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? “கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றியும் மற்ற ஒழுக்க விஷயங்களைப் பற்றியும் சர்ச் சொல்லித்தருவதை இன்று பெரும்பாலான கத்தோலிக்க இளைஞர்கள் ஏற்றுக்கொள்வதில்லை” என்று யு.எஸ். கேத்தலிக் என்ற பத்திரிகை சொல்கிறது. கல்யாணம் செய்துகொள்கிறவர்களில் பாதிப் பேருக்கும் அதிகமானவர்கள் ஏற்கெனவே சேர்ந்து வாழ்ந்தவர்கள்தான் என்று ஒரு பாதிரி சொன்னதாக அதே பத்திரிகை சொல்கிறது. ஆனால், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: “உயர்ந்த ஒழுக்கநெறிகளின்படி நடப்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.”