Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி . . . பிரசங்கிக்கப்படும்”

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி . . . பிரசங்கிக்கப்படும்”

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி . . . பிரசங்கிக்கப்படும்”

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்.”—மத்தேயு 24:14.

இதன் அர்த்தம்: இயேசு “நகரம் நகரமாகவும் கிராமம் கிராமமாகவும் போய் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தும் அறிவித்தும் வந்தார்” என்று சுவிசேஷ எழுத்தாளரான லூக்கா சொல்கிறார். (லூக்கா 8:1) இயேசுவும்கூட, “நான் மற்ற நகரங்களிலும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்க வேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்” என்று சொன்னார். (லூக்கா 4:43) நகரங்களிலும் கிராமங்களிலும் நல்ல செய்தியை அறிவிப்பதற்கு அவர் தன் சீஷர்களை அனுப்பினார். பிற்பாடு அவர்களிடம், “பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொன்னார்.—அப்போஸ்தலர் 1:8; லூக்கா 10:1.

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்கள்: இயேசு சொன்ன வேலையை அவருடைய சீஷர்கள் உடனடியாகச் செய்ய ஆரம்பித்தார்கள். “அவர்கள் தினமும் ஆலயத்திலும் வீடு வீடாகவும் இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவித்துவந்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:42) ஆரம்பகால கிறிஸ்தவர்களில் ஒருசில விசேஷ ஊழியர்கள் மட்டுமல்ல, எல்லாருமே நல்ல செய்தியைப் பிரசங்கித்தார்கள். “கிறிஸ்தவத்துக்கு எதிராக முதல் முதலில் விமர்சனம் செய்தவர் செல்சஸ் என்ற எழுத்தாளர். ‘சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருக்கிற… கொஞ்சம்கூட படிப்பறிவே இல்லாத… கம்பளித் தொழிலாளிகளும் செருப்பு தைக்கிறவர்களும் தோல் பதனிடுகிறவர்களும்தான் சுவிசேஷத்தை வைராக்கியமாக அறிவிக்கும் ஊழியர்கள்!’ என்று அவர் ஏளனம் செய்தார்” என சரித்திர வல்லுநரான நியாண்டர் சொன்னார். சர்ச்சின் ஆரம்ப நூற்றாண்டுகள் என்ற ஆங்கில புத்தகத்தில் ஷான் பெர்னார்டி இப்படி எழுதினார்: “நெடுஞ்சாலைகள், நகரங்கள், பொது சதுக்கங்கள், வீடுகள் என [கிறிஸ்தவர்கள்] எல்லா இடங்களுக்கும் போய் எல்லாரிடமும் பேசினார்கள். மக்கள் அவர்களை வரவேற்றார்களோ இல்லையோ . . . பூமியின் எல்லைகள்வரை பிரசங்கிப்பதற்குப் போனார்கள்.”

இன்று யார் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள்? “பொதுவாக ஆன்மீக விஷயங்களில் இன்று மக்கள் ஆர்வம் காட்டாததற்கு ஒரு காரணம், பிரசங்கிக்கும் வேலைக்கும் கற்பிக்கும் வேலைக்கும் சர்ச் முக்கியத்துவம் கொடுக்காததுதான்” என்று ஆங்கிலிக்கன் சர்ச்சின் பாதிரி டேவிட் வாட்சன் எழுதினார். இவாஞ்சலிக்கல் பிரிவினரும் அட்வென்டிஸ்ட் பிரிவினரும் மற்றவர்களும் “வீடு வீடாகப் போவதில்லை” என்று கத்தோலிக்கர்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? என்ற ஆங்கில புத்தகத்தில் ஹோசே லூயிஸ் பெரஸ் குவாடலூப் எழுதினார். ஆனால், யெகோவாவின் சாட்சிகள் “முறைப்படி வீடு வீடாகப் போகிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

சுவாரஸ்யமான ஒரு உண்மையைப் பற்றி காட்டோ உச்ச நீதிமன்ற மதிப்புரை, 2001-2002 என்ற ஆங்கில பிரசுரத்தில் ஜானத்தன் டர்லே இப்படி எழுதினார்: “யெகோவாவின் சாட்சிகள் என்று சொன்னாலே, மக்கள் வேலையாக இருக்கும் நேரங்களிலும் அவர்களுடைய வீடுகளுக்குப் போய்ப் பிரசங்கிப்பவர்கள் என்பதுதான் பெரும்பாலானவர்களின் ஞாபகத்துக்கு வரும். யெகோவாவின் சாட்சிகள் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்வது அவர்களுடைய நம்பிக்கையைப் பரப்புவதற்கான வழி மட்டுமல்ல, அதுதான் அவர்களுடைய நம்பிக்கையின் அஸ்திவாரமே.”

[பக்கம் 9-ன் பெட்டி]

அடையாளம் கண்டுபிடித்துவிட்டீர்களா?

இந்தக் கட்டுரைகளில் படித்த விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இன்று யார் உண்மைக் கிறிஸ்தவர்கள் என்று நினைக்கிறீர்கள்? கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆயிரக்கணக்கான தொகுதிகளும் பிரிவுகளும் இன்று இருக்கின்றன. ஆனால், இயேசு தன் சீஷர்களிடம் சொன்னதை நினைத்துப் பாருங்கள். “என்னைப் பார்த்து, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிற எல்லாரும் பரலோக அரசாங்கத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று அவர் சொன்னார். (மத்தேயு 7:21) அதனால், பரலோகத் தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான் உண்மைக் கிறிஸ்தவர்கள். அவர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களோடு சேர்ந்து கடவுளை வணங்கினால், கடவுளுடைய ஆட்சியில் முடிவில்லாத ஆசீர்வாதங்கள் கிடைக்கும். கடவுளுடைய ஆட்சியைப் பற்றியும், அது கொண்டுவரப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் யெகோவாவின் சாட்சிகளிடம் அதிகமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!—லூக்கா 4:43.