Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்

கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிக்கும் அன்புள்ளங்களே...

நீங்களும் அப்போஸ்தலர்களில் ஒருவராக ஒலிவ மலையில் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்கள்முன் இயேசு காட்சியளிக்கிறார்! பரலோகத்துக்கு ஏறிப் போவதற்குச் சற்றுமுன், “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொல்கிறார். (அப். 1:8) நீங்கள் எப்படி உணர்வீர்கள்?

இந்த மாபெரும் வேலையை எப்படிச் செய்து முடிப்பது என்று நீங்கள் ஒருவேளை மலைத்து நிற்கலாம். ‘நம்மால், அதுவும் கொஞ்ச பேரால், எப்படி “பூமியின் எல்லைகள் வரை” சாட்சி கொடுக்க முடியும்?’ என்று யோசிக்கலாம். இயேசு இறந்த இரவு அன்று அவர் கொடுத்த எச்சரிக்கை உங்கள் காதில் ரீங்காரமிடலாம்: “அடிமை தன் எஜமானைவிட உயர்ந்தவன் அல்ல. அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்; என் வார்த்தையின்படி நடந்திருந்தால் உங்கள் வார்த்தையின்படியும் நடப்பார்கள். நீங்கள் என் சீஷர்களாக இருப்பதால்தான் உங்களுக்கு விரோதமாக இவற்றையெல்லாம் செய்வார்கள். ஏனென்றால், என்னை அனுப்பியவரைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது.” (யோவா. 15:20, 21) இயேசுவின் இந்த வார்த்தைகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கும்போது நீங்கள் ஒருவேளை இப்படி யோசிக்கலாம்: ‘எதிர்ப்புகள் மற்றும் துன்புறுத்தல்கள் வரும்போது எப்படி நான் முழுமையாகச் சாட்சி கொடுக்க முடியும்?’

இன்றைக்கும் இதுபோன்ற கேள்விகள் நம் முன்னால் வந்து நிற்கின்றன. ‘பூமியின் எல்லைகள் வரைக்கும்,’ ‘எல்லாத் தேசத்தாருக்கும்’ முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டிய கடமை யெகோவாவின் சாட்சிகளாகிய நமக்கு இருக்கிறது. (மத். 28:19, 20) இந்த வேலையை எப்படிச் செய்து முடிப்பது? அதுவும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்?

முதல் நூற்றாண்டில் வாழ்ந்த அப்போஸ்தலர்களும் மற்ற கிறிஸ்தவர்களும் யெகோவாவின் உதவியோடு தங்கள் கடமையை நிறைவேற்றினார்கள். அதை அவர்கள் எப்படி நிறைவேற்றினார்கள் என்பதை அப்போஸ்தலர் புத்தகத்தில் இருக்கிற சிலிர்க்கவைக்கும் பதிவுகள் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றன. அந்தப் பதிவுகளை நீங்கள் ஆராய்ந்து பார்ப்பதற்கும் சுவாரசியமான சம்பவங்களின் விறுவிறுப்பை உணர்வதற்கும் உங்கள் கையில் இருக்கும் இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதல் நூற்றாண்டு சீஷர்களுக்கும் நமக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதைப் பார்த்து வியந்துபோவீர்கள். நம்முடைய வேலையில் மட்டுமல்ல, நாம் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் விதத்திலும் ஒற்றுமைகள் இருப்பதை நீங்கள் காண்பீர்கள். இவற்றைச் சிந்தித்துப் பார்க்கும்போது, யெகோவா தேவன் தனது அமைப்பைத் தொடர்ந்து வழிநடத்தி வருகிறார் என்பதில் உங்கள் நம்பிக்கை நங்கூரம் போல் உறுதியாகும்.

யெகோவா உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதிலும் அவருடைய சக்தி உங்களைத் தாங்கும் என்பதிலும் உங்கள் நம்பிக்கை பலப்பட அப்போஸ்தலர் புத்தகம் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். இதுதான் எங்கள் விருப்பமும். அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுப்பதற்கு,’ வாழ்வுக்கான பாதையில் பயணம் செய்ய மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு, உற்சாகம் பெறுவீர்களாக!—அப். 28:23; 1 தீ. 4:16.

அன்புடன்,

யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு