Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 4

“கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்”

“கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்”

அப்போஸ்தலர்கள் அஞ்சாமல் செயல்படுகிறார்கள், யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார்

அப்போஸ்தலர் 3:1–5:11-ன் அடிப்படையில்

1, 2. அழகு நுழைவாசலுக்குப் பக்கத்தில் பேதுருவும் யோவானும் செய்த அற்புதம் என்ன?

 தேனீக்கள் போல் மொய்க்கும் மக்கள் கூட்டத்தின் மீது சூரியன் சுட்டெரிக்கிறது. பக்திமிக்க யூதர்களும் கிறிஸ்துவின் சீஷர்களும் ஆலயத்தின் வளாகத்துக்குள் சாரை சாரையாய் வந்துகொண்டிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரம் போனால் ‘ஜெப நேரம்.’ a (அப். 2:46; 3:1) அந்தக் கூட்டத்தாரில், பேதுருவும் யோவானும் இருக்கிறார்கள். ஆலயத்தின் அழகு நுழைவாசலை நோக்கி அவர்கள் நடைபோடுகிறார்கள். மக்களின் சலசலப்பையும் காலடி ஓசைகளையும் கிழித்துக்கொண்டு, பிறவியிலிருந்தே ஊனமாக இருந்த ஒரு நடுத்தர வயது பிச்சைக்காரனின் பரிதாபக் குரல் ஒலிக்கிறது.—அப். 3:2; 4:22.

2 பேதுருவும் யோவானும் நெருங்க நெருங்க அந்தப் பிச்சைக்காரன் வழக்கமாகப் பாடும் பல்லவியைப் பாடி பிச்சை கேட்கிறான். ஏக்கத்தோடு பிச்சை கேட்கும் அவனைப் பார்த்து அந்த அப்போஸ்தலர்கள் நின்றுவிடுகிறார்கள். “தங்கமும் வெள்ளியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன்: நாசரேத்தூர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் சொல்கிறேன், எழுந்து நட!” என்று அவனிடம் பேதுரு சொல்கிறார். கால் ஊனமுற்ற அந்த மனிதனை பேதுரு கைப்பிடித்து தூக்க... அந்த மனிதன் வாழ்வில் முதன்முறையாக காலூன்றி நிற்கிறான்! அதைப் பார்த்து மக்களுக்குப் பயங்கர ஆச்சரியம்! (அப். 3:6, 7) குணமடைந்த கால்களை அந்த மனிதன் குனிந்து பார்ப்பதையும் முதல் சில அடிகளை எடுத்து வைப்பதையும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அந்த மனிதன் சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கிறான்! சத்தமாக கடவுளைப் புகழ்கிறான்!!

3. முன்பு ஊனமாக இருந்த மனிதனும் அந்தக் கூட்டத்தாரும் பெற்ற மேன்மையான பரிசு என்ன?

3 ஆச்சரியத்தில், பேதுருவையும் யோவானையும் பார்க்க சாலொமோன் மண்டபத்தை நோக்கி மக்கள் கூட்டம் படையெடுக்கிறது. முன்பு ஒரு சமயம் இயேசு பேசிய அதே இடத்தில் நின்றுகொண்டு சற்றுமுன் நிகழ்ந்த சம்பவத்தின் உண்மையான அர்த்தத்தை பேதுரு விளக்குகிறார். (யோவா. 10:23) அங்கு கூடிவந்திருந்த மக்களுக்கும், முன்பு ஊனமாக இருந்த அந்த மனிதனுக்கும் வெள்ளியையும் பொன்னையும்விட மதிப்புவாய்ந்த ஒரு பரிசை பேதுரு அளிக்கிறார். இந்தப் பரிசு அற்புத சுகப்படுத்துதலைவிடவும் மேன்மையானது. அதுதான் மனம் திருந்துவதற்கும், பாவங்கள் துடைத்தழிக்கப்படுவதற்கும் கிடைத்த வாய்ப்பு. அதோடு, யெகோவாவால் நியமிக்கப்பட்ட ‘வாழ்வின் அதிபதியான’ இயேசுவின் சீஷராவதற்கு கிடைத்த ஒரு அருமையான வாய்ப்பு.—அப். 3:15.

4. (அ) அற்புத சுகப்படுத்துதலுக்குப் பின்பு என்ன சூழல் உருவாகிறது? (ஆ)  என்ன இரண்டு கேள்விகளை நாம் சிந்திக்கப் போகிறோம்?

4 அது ஒரு பொன்னான தினம்! ஒருபுறம், உடல் ரீதியில் குணமடைந்து ஒரு மனிதன் நடக்க ஆரம்பிக்கிறான். மறுபுறம், ஆன்மீக ரீதியில் குணமடைந்து கடவுளுக்குப் பிரியமாக நடக்க ஆயிரமாயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைத்தது. (கொலோ. 1:9, 10) இத்தருணத்தில், கிறிஸ்துவின் உண்மை சீஷர்களும் அதிகாரம் படைத்தவர்களும் “சந்திப்பதற்கு” களம் தயாராகிறது. ஆம், இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நல்ல செய்தியை அறிவிக்கும் சீஷர்களை அணைபோட்டுத் தடுக்க அந்த அதிகாரம் படைத்த கூட்டம் துடிக்கிறது. (அப். 1:8) மக்களுக்குச் சாட்சி அளிக்க ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களான’ பேதுருவும் யோவானும் பயன்படுத்திய முறைகளிலிருந்தும் நடந்துகொண்ட விதத்திலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? b (அப். 4:13) அதோடு, அவர்களும் மற்ற சீஷர்களும் எதிர்ப்பைச் சந்தித்த விதத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

‘சொந்த சக்தியால்’ அல்ல (அப். 3:11-26)

5. அந்தக் கூட்டத்தாரை பேதுரு அழைத்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

5 அங்கு கூடிவந்த மக்கள் மத்தியில் இயேசுவை மரக் கம்பத்தில் அறையும்படி கோஷம் போட்டவர்களும் இருந்ததை பேதுருவும் யோவானும் தெரிந்திருந்தார்கள். (மாற். 15:8-15; அப். 3:13-15) ஊனமான அந்த மனிதன் இயேசுவின் பெயரில் குணப்படுத்தப்பட்டான் என்று பேதுரு அஞ்சாமல் அறிவித்தபோது அவருடைய குரலில் தொனித்த தைரியத்தை யோசித்துப்பாருங்கள். சத்தியத்தின் வீரியத்தை பேதுரு கடுகளவும் குறைக்கவில்லை. கிறிஸ்துவின் கொலைக்கு உடந்தையாக இருந்த அந்த மக்களை வெளிப்படையாகக் கண்டனம் செய்தார். ஆனால் அவர்கள்மீது அவர் எந்தவித பகையும் வளர்த்துக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவர்கள் ‘அறியாமையால்தான் அப்படிச் செய்திருந்தார்கள்.’ (அப். 3:17) பேதுரு அவர்களை நோக்கி, “சகோதரர்களே” என்று அன்புடன் அழைத்தார்; கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்களைப் பற்றியே அவர்களிடம் பேசினார். இந்த மக்கள் மனம் திருந்தி கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தால் யெகோவாவிடமிருந்து “புத்துணர்ச்சி” பெறுவார்கள். (அப். 3:19) பேதுருவைப் போல் நாமும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்தியைத் தைரியமாகவும் வெளிப்படையாகவும் முழங்க வேண்டும். அதற்காக, மக்களைக் கடிந்துகொள்ளவோ நியாயந்தீர்க்கவோ கூடாது. மாறாக, அவர்களை நம் வருங்கால சகோதர சகோதரிகளாகப் பார்க்க வேண்டும். பேதுருவைப் போல், கடவுளுடைய அரசாங்கம் அள்ளி வழங்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியே அவர்களிடம் பேச வேண்டும்.

6. பேதுருவும் யோவானும் எப்படித் தாழ்மையுடனும் அடக்கத்துடனும் நடந்துகொண்டார்கள்?

6 அப்போஸ்தலர்கள் அடக்கமுள்ள மனிதர்களாக இருந்தார்கள். தாங்கள் செய்த அற்புதத்துக்காகத் தங்களுக்குப் பெருமை தேடிக்கொள்ளவில்லை. “எங்களுடைய சொந்த சக்தியாலோ பக்தியாலோ இவனை நாங்கள் நடக்க வைத்ததுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்?” என்று கூடிவந்திருந்த மக்களிடம் பேதுரு கேட்டார். (அப். 3:12) ஊழியத்தில் செய்த சாதனைகளுக்கெல்லாம் காரணம் தங்களுடைய சக்தி அல்ல, கடவுளுடைய சக்திதான் என்பதை பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும் தெரிந்திருந்தார்கள். அதனால், யெகோவாவுக்கும் இயேசுவுக்குமே எல்லா புகழையும் செலுத்தினார்கள்—அடக்கத்துடன்.

7, 8. (அ) மக்களுக்கு நாம் என்ன பரிசு கொடுக்கலாம்? (ஆ) ‘எல்லாம் புதுப்பிக்கப்படும்’ என்ற வாக்குறுதி இன்று எப்படி நிறைவேறி வருகிறது?

7 பிரசங்க வேலையில் ஈடுபடும்போது நாமும் அவர்களைப் போலவே அடக்கத்தைக் காட்ட வேண்டும். இன்றைக்கு அற்புத சுகப்படுத்துதல் செய்ய கடவுள் தம் சக்தியைக் கொடுப்பதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், கடவுள் மீதும் கிறிஸ்து மீதும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள... பேதுரு அளித்த அதே பரிசைப் பெற்றுக்கொள்ள... அதாவது பாவங்களுக்கு மன்னிப்பையும் யெகோவாவிடமிருந்து புத்துணர்ச்சியையும் பெற்றுக்கொள்ள... மக்களுக்கு நாம் உதவ முடியும். ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான ஆட்கள் அந்தப் பரிசை ஏற்று கிறிஸ்துவின் சீஷராக ஆகிறார்கள்.

8 பேதுரு குறிப்பிட்ட காலத்தில்தான், அதாவது ‘எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலத்தில்தான்,’ நாம் வாழ்ந்து வருகிறோம். “பூர்வ காலத்தில் பரிசுத்த தீர்க்கதரிசிகள் மூலம் [கடவுள்] சொன்னபடியே” 1914-ல் அவருடைய அரசாங்கம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டது. (அப். 3:21; சங். 110:1-3; தானி. 4:16, 17) அதன்பின் சீக்கிரத்திலேயே பூமியில் உண்மை மதத்தைப் புதுப்பிக்கும் வேலையை கிறிஸ்து மேற்பார்வை செய்ய ஆரம்பித்தார். அதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் ஆன்மீக பூஞ்சோலைக்குள் அழைத்து வரப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக ஆனார்கள். அவர்கள் தங்களுடைய கறைபட்ட பழைய சுபாவத்தைக் களைந்துவிட்டு, ‘கடவுளுடைய விருப்பத்தின்படி . . . உருவாக்கப்பட்ட புதிய சுபாவத்தை அணிந்துகொண்டார்கள்.’ (எபே. 4:22-24) ஊனமாக இருந்த பிச்சைக்காரனின் விஷயத்தில் நடந்ததைப் போல் இந்த மாபெரும் வேலையும் மனித முயற்சியால் அல்ல, கடவுளுடைய சக்தியாலேயே சாத்தியமாகி இருக்கிறது. பேதுருவைப் போலவே, நாமும்கூட பிரசங்கிக்கும்போது கடவுளுடைய வார்த்தையைத் தைரியமாகவும் திறமையாகவும் பயன்படுத்த வேண்டும். சீஷராக்கும் வேலையில் நாம் என்ன சாதனை படைத்தாலும் அது நம்முடைய சொந்த சக்தியால் அல்ல, கடவுளுடைய சக்தியால்தான்.

“பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது” (அப். 4:1-22)

9-11. (அ) பேதுருவும் யோவானும் பேசியதைக் கேட்டு யூதத் தலைவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) அப்போஸ்தலர்கள் என்ன செய்ய உறுதியாக இருந்தார்கள்?

9 பேதுருவின் சொற்பொழிவும் ஊனமாக இருந்தவன் போட்ட உற்சாகத் துள்ளலும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தின. உடனே ஆலய வளாகத்தை மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டிருந்த ஆலயத் தலைவரும் தலைமைக் குருமார்களும் அதைப் பற்றி விசாரிக்க வேகமாக வந்தார்கள். இவர்கள் ஒருவேளை சதுசேயர்களாக இருந்திருக்கலாம்; இந்தச் சதுசேயர்கள், ரோமர்களோடு சுமூக உறவைக் காத்துக்கொள்ள பாடுபட்ட அரசியல் புள்ளிகள், பரிசேயர்கள் பெரிதும் மதித்த வாய்மொழி சட்டத்தை ஒதுக்கித்தள்ளியவர்கள், உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றிக் கேவலமாகப் பேசியவர்கள். c அப்படியிருக்கும்போது, இயேசு உயிர்த்தெழுந்ததைப் பற்றி பேதுருவும் யோவானும் ஆலயத்தில் நின்றுகொண்டு பேசியதைப் பார்த்தபோது அவர்கள் எவ்வளவு கொதித்தெழுந்திருப்பார்கள்!

10 கொதிப்படைந்த அந்த எதிரிகள் பேதுருவையும் யோவானையும் சிறையில் தள்ளினார்கள்; அடுத்த நாள் அவர்களை யூத உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பிரபல தலைவர்கள், பேதுருவையும் யோவானையும் ‘கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்களாக’ பார்த்தார்கள். அதனால், ஆலயத்தில் உபதேசம் செய்ய அவர்களுக்கு உரிமையில்லை என்று நினைத்தார்கள். உண்மைதான், அங்கீகரிக்கப்பட்ட எந்தக் குருகுலத்திலும் அவர்கள் படிக்கவில்லை. இருந்தாலும், அவர்களுடைய வெளிப்படையான பேச்சையும் உறுதியான நம்பிக்கையையும் பார்த்து நீதிமன்றம் அசந்துபோனது. எப்படி பேதுருவாலும் யோவானாலும் இப்படிப் பேச முடிந்தது? ஒரு காரணம், “அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள்.” (அப். 4:13) அவர்களுடைய எஜமானர், வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல் கடவுளுடைய அதிகாரத்தினால் கற்பித்தார்.—மத். 7:28, 29.

11 பிரசங்கிப்பதை நிறுத்தச் சொல்லி நீதிமன்றம் அந்த அப்போஸ்தலர்களுக்குக் கட்டளையிட்டது. யூத சமுதாயத்தில், நீதிமன்ற ஆணைக்கு அதிக வலிமை இருந்தது. சில வாரங்களுக்கு முன்புதான், இயேசு இதே நீதிமன்றத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டார். அப்போது அவர் “சாக வேண்டும்” என்று அதன் அங்கத்தினர்கள் தீர்ப்பு கொடுத்தார்கள். (மத். 26:59-66) இருந்தாலும், பேதுருவும் யோவானும் மிரண்டு போகவில்லை. செல்வமும், செல்வாக்கும், அறிவும் படைத்தவர்கள் முன்னால் நின்றுகொண்டிருந்தபோது, பேதுருவும் யோவானும் தைரியமாக, அதேசமயத்தில் மரியாதையாக இப்படிச் சொன்னார்கள்: “கடவுள் சொல்வதைக் கேட்காமல் நீங்கள் சொல்வதைக் கேட்பது கடவுளுக்கு முன்னால் சரியாக இருக்குமா என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள். எங்களைப் பொறுத்தவரை, நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது.”—அப். 4:19, 20.

12. தைரியத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள எது நமக்குக் கைகொடுக்கும்?

12 இப்படிப்பட்ட தைரியத்தை உங்களால் காட்ட முடிகிறதா? உங்கள் சமுதாயத்தில் செல்வமும், செல்வாக்கும், அறிவும் படைத்தவர்களிடம் சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்போது எப்படி உணருகிறீர்கள்? குடும்ப அங்கத்தினர்களோ சக மாணவர்களோ உங்களோடு வேலை செய்பவர்களோ உங்கள் நம்பிக்கைகளைப் பற்றிக் கேலி செய்யும்போது எப்படி உணருகிறீர்கள்? மிரண்டு போகிறீர்களா? கவலைப்படாதீர்கள்! இப்படிப்பட்ட பயத்தை உங்களால் போக்க முடியும். அப்போஸ்தலர்கள் தங்களுடைய நம்பிக்கைகளை உறுதியுடனும் மரியாதையுடனும் எடுத்துச் சொல்ல இயேசு பூமியில் இருந்தபோது அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். (மத். 10:11-18) இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்’ என்று சீஷர்களுக்கு உறுதியளித்தார். (மத். 28:20) இயேசுவின் தலைமையில் செயல்படும் “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” நம்முடைய நம்பிக்கைகளை எடுத்துச் சொல்ல நமக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள். (மத். 24:45-47; 1 பே. 3:15) சபை கூட்டங்களில் கொடுக்கப்படும் போதனையின் மூலமாக, உதாரணத்துக்கு கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் மூலமாக... பைபிள் அடிப்படையில் இருக்கும் பிரசுரங்கள் மற்றும் வீடியோக்கள் மூலமாக... jw.org வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” என்ற பகுதியில் வரும் கட்டுரைகள் மூலமாக... இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது. இவற்றை நீங்கள் நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா? அப்படிச் செய்தால், உங்கள் தைரியமும் அதிகரிக்கும் நம்பிக்கையும் நங்கூரமாகும். அதோடு, அப்போஸ்தலர்களைப் போலவே, நீங்கள் கண்ட... கேட்ட... அருமையான பைபிள் சத்தியங்களைப் பற்றிப் பேசுவதை யார் தடுத்தாலும் நிறுத்த மாட்டீர்கள்.

நீங்கள் கற்றுக்கொண்ட அருமையான பைபிள் சத்தியங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதை எதுவும் தடைசெய்ய அனுமதிக்காதீர்கள்

“எல்லாரும் . . . குரலை உயர்த்தி, கடவுளிடம் . . . மன்றாடினார்கள்” (அப். 4:23-31)

13, 14. எதிர்ப்பை சந்திக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

13 பேதுருவும் யோவானும் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் நேராக சபையாரைப் பார்க்கப் போனார்கள். தொடர்ந்து நல்ல செய்தியைப் பிரசங்கிக்க தைரியம் தரும்படி அவர்கள் எல்லாரும் சேர்ந்து “குரலை உயர்த்தி, கடவுளிடம்” ஜெபம் செய்தார்கள். (அப். 4:24) கடவுளுடைய விருப்பத்தைச் செய்வதற்கு நம்முடைய சொந்த பலத்தைச் சார்ந்திருப்பது சுத்த மடத்தனம் என்பதை பேதுரு நன்றாகவே தெரிந்திருந்தார். ஏனென்றால், சில வாரங்களுக்கு முன்புதான், “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!” என்று தன்னம்பிக்கையோடு இயேசுவிடம் சொன்னார். ஆனால், இயேசு சொன்னபடியே பேதுரு மனிதனுக்குப் பயந்து தன்னுடைய நண்பராகவும் போதகராகவும் இருந்தவரை தெரியாது என்று சொல்லிவிட்டார். இருந்தாலும், தான் செய்த தவறிலிருந்து பேதுரு பாடம் கற்றுக்கொண்டார்.—மத். 26:33, 34, 69-75.

14 கிறிஸ்துவுக்குச் சாட்சியாக இருக்க உங்களுக்கு மனவுறுதி இருந்தால் மட்டும் போதாது. உங்கள் விசுவாசத்தை முறிப்பதற்கோ நீங்கள் பிரசங்கிப்பதை நிறுத்துவதற்கோ எதிரிகள் முயற்சி செய்யும்போது பேதுரு மற்றும் யோவானின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள். பலத்துக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். சபையின் உதவியை நாடுங்கள். நீங்கள் எதிர்ப்படும் சவால்களைப் பற்றி மூப்பர்களிடமும் முதிர்ச்சியுள்ள மற்றவர்களிடமும் சொல்லுங்கள். உங்கள் சார்பாக மற்றவர்கள் செய்யும் ஜெபம் உங்களைத் தாங்கும் சக்தியாக இருக்கும்.—எபே. 6:18; யாக். 5:16.

15. சில காலம் பிரசங்கிப்பதை நிறுத்தியிருப்பவர்கள் ஏன் மனம் தளர்ந்துவிடக் கூடாது?

15 முன்பு எதிர்ப்பின் காரணமாக பிரசங்கிப்பதை நீங்கள் நிறுத்தியிருந்தால் மனம் தளர்ந்துவிடாதீர்கள், தைரியத்தை வரவழைத்துக்கொள்ளுங்கள். இயேசு இறந்த பிறகு அப்போஸ்தலர்களும்கூட சில நாட்களுக்குப் பிரசங்கிப்பதை நிறுத்திவிட்டார்கள் என்பதை மனதில் வையுங்கள்; ஆனால், சீக்கிரத்தில் அவர்கள் சுறுசுறுப்பாகப் பிரசங்கிக்க ஆரம்பித்தார்கள். (மத். 26:56; 28:10, 16-20) கடந்த காலத்தில் நீங்கள் செய்த காரியத்தை நினைத்து உற்சாகம் இழந்துவிடாமல் அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்த வழிதேட முடியுமா?

16, 17. எருசலேமிலிருந்த சீஷர்களுடைய ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

16 அதிகாரிகள் நம்மை அடக்க முயற்சி செய்யும்போது கடவுளிடம் என்ன கேட்டு ஜெபம் செய்ய வேண்டும்? சோதனையிலிருந்து தங்களைக் காப்பாற்றும்படி சீஷர்கள் ஜெபம் செய்யவில்லை என்பதைக் கவனியுங்கள். ஏனென்றால், “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்” என்று இயேசு சொல்லியிருந்தது அவர்கள் மனதில் அச்சாய் பதிந்திருந்தது. (யோவா. 15:20) அதனால், எதிரிகளின் மிரட்டல்களை “கவனியுங்கள்” என்றுதான் அவர்கள் யெகோவாவிடம் கேட்டார்கள். (அப். 4:29) கடவுளுடைய விருப்பம் நிறைவேறுவதுதான் முக்கியம் என்பதை சீஷர்கள் தெரிந்துவைத்திருந்தார்கள். துன்புறுத்தலுக்கான காரணத்தை, அதாவது அவை தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறது என்பதை, புரிந்துகொண்டார்கள். மனித ஆட்சியாளர்கள் என்ன சொன்னாலும் சரி, இயேசு ஜெபத்தில் சொல்லிக்கொடுத்தது போல், கடவுளுடைய விருப்பம் ‘பூமியில் நிறைவேறியே’ தீரும் என்பதை அவர்கள் தெரிந்திருந்தார்கள்.—மத். 6:9, 10.

17 கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய ஆசைப்பட்ட அந்தச் சீஷர்கள் யெகோவாவிடம், “உங்கள் வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க உங்களுடைய ஊழியர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று ஜெபம் செய்தார்கள். அதற்கு யெகோவா எப்படிப் பதில் தந்தார்? “அவர்கள் மன்றாடி முடித்தபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அதிர்ந்தது; அவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டு, அவருடைய வார்த்தையைத் தைரியமாகப் பேச ஆரம்பித்தார்கள்.” (அப். 4:29-31) கடவுளுடைய விருப்பம் நிறைவேறுவதை எதுவுமே தடுக்க முடியாது. (ஏசா. 55:11) சூழ்நிலைமைகள் நமக்கு எவ்வளவு பாதகமாக இருந்தாலும் சரி... எதிரிகள் எவ்வளவு பலசாலிகளாக இருந்தாலும் சரி... கடவுளை நோக்கி மன்றாடினால் அவருடைய வார்த்தையைத் தொடர்ந்து தைரியத்தோடு பேச அவர் நிச்சயம் நமக்குப் பலம் தருவார்.

“மனிதரிடம் அல்ல, கடவுளிடமே” கணக்குக் கொடுக்க வேண்டும் (அப். 4:32–5:11)

18. எருசலேம் சபையில் இருந்தவர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் இருந்தார்கள்?

18 அப்போதுதான் புதிதாக உருவாகியிருந்த கிறிஸ்தவ சபை சீக்கிரத்தில் 5,000-க்கும் அதிகமானவர்களைக் கொண்ட கிறிஸ்தவ சமுதாயமாக மாறியது. d சீஷர்கள் பல்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் அனைவரும் “ஒரே மனதோடும் ஒரே யோசனையோடும்” இருந்தார்கள். (அப். 4:32; 1 கொ. 1:10) தங்கள் முயற்சிகளை ஆசீர்வதிக்கச் சொல்லி யெகோவாவிடம் கேட்டதோடு நிறுத்திக்கொள்ளாமல் ஆன்மீக விதத்தில்... தேவைப்படும்போது பொருளாதார விதத்தில்... ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகவும் இருந்தார்கள். (1 யோ. 3:16-18) உதாரணத்துக்கு, அப்போஸ்தலர்களால் பர்னபா என்று அழைக்கப்பட்ட யோசேப்பு என்ற சீஷர் தன் நிலத்தை விற்று முழு பணத்தையும் நன்கொடையாகக் கொடுத்தார். எதற்காகத் தெரியுமா? கிறிஸ்துவைப் பற்றி அதிகமாகக் கற்றுக்கொள்ள எருசலேமில் தங்கிவிட்ட தூர தேசத்து மக்களுக்கு உதவுவதற்காக!

19. அனனியாவையும் சப்பீராளையும் யெகோவா ஏன் கொன்றுபோட்டார்?

19 அனனியா-சப்பீராள் தம்பதியும்கூட தங்கள் நிலத்தை விற்று நன்கொடையாகக் கொடுத்தார்கள். ஆனால், மொத்த தொகையைக் கொடுத்தது போல் நாடகமாடினார்கள்; உண்மையில், ‘விற்ற பணத்தில் ஒரு பகுதியை ஒளித்து வைத்துக்கொண்டார்கள்.’ (அப். 5:2) இந்தத் தம்பதியை யெகோவா கொன்றுவிட்டார்—அவர்கள் கொடுத்த பணம் போதவில்லை என்பதால் அல்ல, அவர்களுடைய உள்நோக்கம் கெட்டதாக இருந்ததால்... அவர்கள் ஏமாற்றியதால். அவர்கள் ‘மனுஷர்களிடம் அல்ல, கடவுளிடமே பொய் சொன்னார்கள்.’ (அப். 5:4) இயேசு கண்டனம் செய்த வெளிவேஷக்காரர்களைப் போல, அனனியாவும் சப்பீராளும் கடவுளிடமிருந்து வரும் அங்கீகாரத்தை அல்ல... மனிதரிடமிருந்து வரும் மகிமையைத்தான் பெரிதாக நினைத்தார்கள்.—மத். 6:1-3.

20. யெகோவாவுக்குக் கொடுக்கும் விஷயத்தில் நாம் என்ன பாடம் கற்றுக்கொள்கிறோம்?

20 முதல் நூற்றாண்டில் எருசலேமில் வாழ்ந்த தாராள குணமுடைய சீஷர்களைப் போல இன்று லட்சக்கணக்கான சாட்சிகள் உலகளாவிய பிரசங்க வேலைக்காக மனமுவந்து நன்கொடை கொடுக்கிறார்கள். இந்த வேலைக்காக தங்களுடைய நேரத்தை... பணத்தை... கொடுக்கும்படி யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. சொல்லப்போனால், வேண்டாவெறுப்பாகவும் கட்டாயமாகவும் தமக்குச் சேவை செய்வதை யெகோவா விரும்புவதில்லை. (2 கொ. 9:7) நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதை அல்ல என்ன நோக்கத்தோடு கொடுக்கிறோம் என்பதைத்தான் யெகோவா பார்க்கிறார். (மாற். 12:41-44) அனனியா-சப்பீராள் மாதிரி நாம் இருக்கக் கூடாது. ஆம், சுயநலத்துக்காக... நம்முடைய மகிமைக்காக... நாம் யெகோவாவுக்குச் சேவை செய்யக் கூடாது. மாறாக பேதுரு, யோவான், பர்னபாவைப் போல், கடவுள் மேலும் மற்ற மக்கள் மேலும் வைத்திருக்கிற கபடமில்லாத அன்பினால் தூண்டப்பட்டே சேவை செய்ய வேண்டும்.—மத். 22:37-40.

a காலைநேர, மாலைநேர பலிகளையொட்டி ஆலயத்தில் பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டன. மாலைநேர பலி “ஒன்பதாம் மணிநேரத்தில்,” அதாவது பிற்பகல் மூன்று மணியளவில், செலுத்தப்பட்டது.

b மீனவரான பேதுரு துடிப்புமிக்க அப்போஸ்தலனாக” என்ற பெட்டியையும்; “ யோவான்—இயேசுவின் அன்புச் சீஷர்” என்ற பெட்டியையும் பாருங்கள்.

c தலைமைக் குருவும் முதன்மை குருமார்களும்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

d கி.பி. 33-ல் எருசலேமில் சுமார் 6,000 பரிசேயர்கள் மட்டுமே இருந்திருக்கலாம்; சதுசேயர்களும் சிலரே இருந்திருக்கலாம். இயேசுவின் போதனை பரவுவதைக் கண்டு இந்த இரு சாராரும் பயந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.