அதிகாரம் 3
“கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்டார்கள்”
பெந்தெகொஸ்தே நாளன்று கடவுளுடைய சக்தி பொழியப்பட்டதால் வந்த பலன்கள்
அப்போஸ்தலர் 2:1-47-ன் அடிப்படையில்
1. பெந்தெகொஸ்தே பண்டிகையின்போது நிலவும் சூழலை விவரியுங்கள்.
எருசலேம் வீதிகள் விழாக் கோலமாகக் காணப்படுகின்றன. a லேவியர்கள் அல்லேல் சங்கீதங்களைப் பாட... ஆலய பலிபீடத்திலிருந்து சுகந்த வாசனை விண்ணை நோக்கி எழுகிறது. (சங்கீதம் 113-118) வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. ஏலாம், மெசொப்பொத்தாமியா, கப்பத்தோக்கியா, பொந்து, எகிப்து, ரோம் போன்ற தொலைதூர பகுதிகளிலிருந்து வெள்ளம்போல் மக்கள் திரண்டு வந்திருக்கிறார்கள். b என்ன விசேஷம்? இது பெந்தெகொஸ்தே நாள், ‘முதல் விளைச்சலைச் செலுத்துகிற அறுவடைப் பண்டிகை நாள்.’ (எண். 28:26) இந்தப் பண்டிகை பார்லி அறுவடை முடிந்து கோதுமை அறுவடை ஆரம்பமாவதை அறிவிக்கிறது. இது ஒரு மகிழ்ச்சி பொங்கும் நாள்!
2. கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாள் அன்று ஆச்சரியமான என்ன சம்பவங்கள் நடக்கின்றன?
2 கி.பி. 33-ஆம் வருஷத்தில்... இளவேனிற்கால தென்றல் வீசும் ஒரு காலைப் பொழுதில்... ஒன்பது மணிவாக்கில்... வினோதமான ஒரு சம்பவம் நடக்கிறது. அது காலமெல்லாம் மறக்கமுடியாத ஒரு சம்பவம். திடீரென்று “பலத்த காற்று வீசுவது போன்ற சத்தம்” விண்ணிலிருந்து முழங்குகிறது. (அப். 2:2) இயேசுவின் சீஷர்கள் சுமார் 120 பேர் கூடியிருந்த வீட்டின் அறையே அதிர்கிறது. பின்பு, வியப்பூட்டும் ஒரு சம்பவம் நிகழ்கிறது. ஒவ்வொரு சீஷரின் தலையின் மீதும் நெருப்புப் போன்ற நாவுகள் தென்படுகின்றன. c அப்போது அவர்கள் ‘கடவுளுடைய சக்தியினால் நிரப்பப்பட்டு’ வெவ்வேறு மொழிகளில் பேசுகிறார்கள்! அந்த அறையைவிட்டு அவர்கள் வெளியே வந்தபோது, எருசலேம் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கும் மக்கள் மலைத்துப் போகிறார்கள்!! “தங்களுடைய மொழிகளில் [சீஷர்கள்] பேசுவதைக் கேட்டு” அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள்!!!—அப். 2:1-6.
3. (அ) கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று நடந்த சம்பவம் உண்மை வழிபாட்டுச் சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்று எப்படிச் சொல்லலாம்? (ஆ) பேதுரு பேசியபோது எப்படி ‘பரலோக அரசாங்கத்தின் சாவிகளில்’ ஒன்றைப் பயன்படுத்தினார்?
3 புல்லரிக்கும் இந்தச் சம்பவம் உண்மை வழிபாட்டுச் சரித்திரத்தில் ஒரு மைல்கல். ஆம், அப்போதுதான் ஆன்மீக இஸ்ரவேல் தேசம் பிறந்தது, அதாவது அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் அடங்கிய கிறிஸ்தவ சபை பிறந்தது. (கலா. 6:16) இதுமட்டுமல்ல, இன்னும் நிறைய நடக்க இருக்கிறது. எருசலேமுக்கு வந்த மக்கள் முன்பு பெந்தெகொஸ்தே அன்று பேதுரு பேசினார்; அப்போது, ‘பரலோக அரசாங்கத்தின் சாவிகளில்’ முதல் சாவியைப் பயன்படுத்தினார்; வெவ்வேறு தேசத்து மக்கள் விசேஷ பாக்கியங்களைப் பெற அந்தச் சாவிகள் வழி திறந்து வைக்கும். (மத். 16:18, 19) முதல் சாவி... யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் நல்ல செய்திக்குச் செவிசாய்க்க வழி திறந்து வைத்தது, அதாவது கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்படுவதற்கு வழி திறந்து வைத்தது. d அதனால் அவர்கள் ஆன்மீக இஸ்ரவேலின் ஒரு அங்கமாக ஆவார்கள். அதுமட்டுமல்ல, மேசியாவின் அரசாங்கத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் ஆட்சி செய்யும் வாய்ப்பைப் பெறுவார்கள். (வெளி. 5:9, 10) காலப்போக்கில், இந்தப் பாக்கியம் சமாரியருக்கு... பின்பு மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு... வழங்கப்படும். கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று நடந்த மறக்கமுடியாத சம்பவங்களிலிருந்து இன்றைய கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
“எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்” (அப். 2:1-4)
4. கி.பி. 33-ல் துளிர்விட ஆரம்பித்த சபைதான் இன்று வேர் பரப்பி நிற்கும் கிறிஸ்தவ சபை என்று எப்படிச் சொல்லலாம்?
4 மாடி வீட்டில் கூடியிருந்த அந்த 120 சீஷர்களிலிருந்துதான், அதாவது கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்ட சீஷர்களிலிருந்துதான், கிறிஸ்தவ சபை உருவானது. (அப். 2:1) அந்த நாள் முடிவதற்குள் ஆயிரமாயிரம் பேர் ஞானஸ்நானம் பெற்று சபைக்குள் சேர்க்கப்பட்டார்கள். அன்று துளிர்விட ஆரம்பித்த கிறிஸ்தவ அமைப்புதான் இன்று ஆலமரம் போல் உலகெங்கும் வேர் பரப்பி நிற்கிறது! ஆம், தேவபக்தியுள்ள ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு சமுதாயத்தின் மூலமாகத்தான், அதாவது இன்றைக்கு இருக்கிற கிறிஸ்தவ சபை மூலமாகத்தான், ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படுகிறது.’ சாத்தானுடைய உலகிற்கு சாவுமணி அடிப்பதற்குள் இந்த வேலை நிறைவேற்றப்படும்!—மத். 24:14.
5. கிறிஸ்தவ சபைக்குத் தவறாமல் போவதால் என்ன ஆசீர்வாதம்—அன்றும் இன்றும்?
5 கிறிஸ்தவ சபை... அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும் பின்வரும் காலத்தில் சேர்ந்துகொள்ளும் ‘வேறே ஆடுகளுக்கும்’ ஆன்மீக நீரை வாரிவழங்குகிற ஊற்றாகவும் விளங்கும். (யோவா. 10:16) சபை அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்த ஆதரவைப் பாராட்டி, ரோம சபைக்கு பவுல் இப்படி எழுதினார்: “உங்களைப் பார்ப்பதற்கும், கடவுள் தரும் அன்பளிப்பைக் கொடுத்து உங்களைப் பலப்படுத்துவதற்கும் ஏங்குகிறேன். சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும் என்று ஏங்குகிறேன்.”—ரோ. 1:11, 12.
6, 7. இயேசு கொடுத்த கட்டளையை இன்று கிறிஸ்தவ சபை எவ்வாறு நிறைவேற்றி வருகிறது?
6 அன்றுமுதல் இன்றுவரை, கிறிஸ்தவ சபையின் லட்சியங்கள் அதேதான். இயேசு தன் சீஷர்களுக்கு சவாலான வேலையை, அதேசமயம் சுவாரஸ்யமான வேலையை, கொடுத்தார். “எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று சொன்னார்.—மத். 28:19, 20.
7 யெகோவாவின் சாட்சிகளுடைய கிறிஸ்தவ சபை மூலமாகவே இன்றைக்கு அந்த வேலை நிறைவேற்றப்பட்டு வருகிறது. பல மொழிகள் பேசும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குப் பிரசங்கிப்பது படுசவாலான விஷயம்தான். இருந்தாலும், யெகோவாவின் சாட்சிகள் 1000-க்கும் அதிகமான மொழிகளில் பைபிள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டிருக்கிறார்கள். இன்று கிறிஸ்தவ சபையுடன் சேர்ந்து பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் நீங்கள் பங்குகொள்கிறீர்கள் என்றால்... அது சந்தோஷமான விஷயம்! இன்றைக்கு யெகோவாவின் பெயரை உலகம் முழுவதும் அறிவிக்கும் வாய்ப்பைப் பெற்ற கொஞ்சம் பேரில் நீங்களும் ஒருவராக இருப்பது எப்பேர்ப்பட்ட பாக்கியம்!
8. கிறிஸ்தவ சபை மூலமாக நமக்கு என்ன உதவி கிடைக்கிறது?
8 இந்த இக்கட்டான காலத்தில் நீங்கள் சந்தோஷத்தைத் தொலைத்துவிடாமல் இருக்க உலகம் முழுவதும் இருக்கிற சகோதரர்களை யெகோவா கொடுத்திருக்கிறார். “அன்பு காட்டுவதற்கும் நல்ல செயல்கள் செய்வதற்கும் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்; சிலர் வழக்கமாகச் சபைக் கூட்டங்களுக்கு வராமல் இருந்துவிடுவதுபோல் நாமும் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒன்றுகூடிவந்து ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்; நாள் நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று எபிரெய கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (எபி. 10:24, 25) ஆம், உற்சாகம் கொடுக்கவும் உற்சாகம் பெறவும் யெகோவா நமக்குத் தந்திருக்கும் ஒரு அன்பளிப்புதான் கிறிஸ்தவ சபை! எப்போதும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுடன் நெருங்கியிருங்கள். சபை கூட்டங்களை ஒருபோதும் தவறவிடாதீர்கள்!
அப். 2:5-13)
‘தங்களுடைய மொழிகளில் அவர்கள் பேசுவதைக் கேட்டார்கள்’ (9, 10. வேறொரு மொழி பேசும் மக்களிடம் நல்ல செய்தியைச் சொல்ல சிலர் எப்படித் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள்?
9 கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று யூதர்கள், யூத மதத்துக்கு மாறியவர்கள் என கூடிவந்திருந்த எல்லா மக்கள் மத்தியில் பரவிய பரவச அலையைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரு பொது மொழியைப் பேசியிருந்திருக்கலாம், ஒருவேளை கிரேக்கு அல்லது எபிரெய மொழியைப் பேசியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது, ”தங்களுடைய மொழிகளில் [சீஷர்கள்] பேசுவதைக் கேட்டுத் திகைத்துப்போனார்கள்.” (அப். 2:6) நல்ல செய்தியைத் தங்கள் தாய்மொழியிலேயே கேட்டபோது அவர்கள் உண்மையில் நெகிழ்ந்து போயிருப்பார்கள். இன்றைக்கு, வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் கிறிஸ்தவர்களுக்கு அருளப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அனைத்து தேசத்தாருக்கும் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்க அநேகர் தங்களையே அர்ப்பணித்திருக்கிறார்கள். எப்படி? அருகில் இருக்கிற வேறு மொழி சபைக்கு அல்லது வேறொரு நாட்டுக்குப் போய் சேவை செய்வதற்காக சிலர் புதிய மொழியைக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய முயற்சி அநேகரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டிருக்கிறது.
10 கிறிஸ்டீன் என்பவரின் அனுபவத்தைக் கேளுங்கள். இவர் ஏழு சாட்சிகளுடன் சேர்ந்து குஜராத்தி மொழியைக் கற்றுக்கொண்டார். வேலை செய்யும் இடத்தில் குஜராத்தி பேசும் ஒரு இளம் பெண்ணைச் சந்தித்தபோது அவளுடைய மொழியிலேயே “வணக்கம்” சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு ஒரே ஆச்சரியம்! கிறிஸ்டீன் எதற்காக இவ்வளவு சிரமம் எடுத்து குஜராத்தி மொழியை, அதுவும் அவ்வளவு கஷ்டமான மொழியை, கற்றுக்கொள்கிறார் என்று கேட்டாள். கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கிறிஸ்டீன் அவளுக்கு அருமையாக சாட்சி கொடுத்தார். “நீங்கள் இந்த மொழியைக் கற்றிருக்கிறீர்கள் என்றால் உங்களிடம் ஏதோவொரு முக்கியமான விஷயம் இருக்க வேண்டும்” என்று சொல்லி அந்தப் பெண் கிறிஸ்டீனைப் பாராட்டினாள்.
11. வேறு மொழி பேசும் மக்களுக்கும் நல்ல செய்தியைச் சொல்ல நாம் எப்படித் தயாராக இருக்கலாம்?
11 உண்மைதான், எல்லாராலும் அப்படி வேறொரு மொழியைக் கற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும், வேறு மொழி பேசுபவர்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்க நாம் தயாராக இருக்கலாம். எப்படி? JW லாங்குவேஜ் அப்ளிகேஷனைப் பயன்படுத்துவதன் மூலம்தான்! அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி மக்களுக்கு வாழ்த்து சொல்ல நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அதோடு, அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டும் சில வார்த்தைகளையும் அதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். மக்களுக்கு jw.org வெப்சைட்டைக் காட்டுவதற்கும், அவர்களுடைய மொழியில் இருக்கும் வீடியோக்களையும் கட்டுரைகளையும் காட்டுவதற்கும் நீங்கள் பழகலாம். இப்படிப்பட்ட கருவிகளை ஊழியத்தில் பயன்படுத்தும்போது, முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்குக் கிடைத்த அதே சந்தோஷம் நமக்கும் கிடைக்கும். மக்கள் எல்லாரும் ‘தங்களுடைய மொழிகளில் அவர்கள் பேசுவதைக் கேட்டுத் திகைத்துப்போனார்களே!’
“பேதுரு . . . எழுந்து நின்று” பேசினார் (அப். 2:14-37)
12. (அ) கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று ஒரு அற்புதம் நிகழும் என்பதை யோவேல் தீர்க்கதரிசி எப்படி முன்னரே குறிப்பிட்டிருந்தார்? (ஆ) யோவேல் தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டில் நிறைவேறும் என்று ஏன் எதிர்பார்க்கப்பட்டது?
12 வெவ்வேறு நாட்டைச் சேர்ந்த மக்கள் முன்னால் ”பேதுரு . . . எழுந்து நின்று” பேசினார். (அப். 2:14) “பலதரப்பட்ட ஜனங்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன்” என்று யோவேல் மூலம் சொல்லிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றவே வேறு மொழியில் பேசும் வரத்தை கடவுள் கொடுத்தார் என்று அவர்களுக்கு விளக்கினார். (யோவே. 2:28) பரலோகத்துக்குப் போகும் முன்பு இயேசு தன் சீஷர்களிடம், “என் தகப்பனிடம் நான் வேண்டிக்கொள்வேன்; அப்போது . . . இன்னொரு சகாயரை அவர் உங்களுக்குத் தருவார்” என்று சொன்னார். ‘கடவுளுடைய சக்தியே’ அந்தச் சகாயர் என்றும் அடையாளம் காட்டினார்.—யோவா. 14:16, 17.
13, 14. மக்களின் மனதைத் தொட பேதுரு என்ன செய்தார், அவர் பேசிய விதத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
13 பேதுருவின் இறுதி வார்த்தைகளில் உறுதி தெறித்தன: “நீங்கள் மரக் கம்பத்தில் அறைந்து கொன்ற இந்த இயேசுவையே எஜமானாகவும் கிறிஸ்துவாகவும் கடவுள் நியமித்தார் என்பதை இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் தெளிவாகத் தெரிந்துகொள்ளட்டும்.” (அப். 2:36) இயேசு மரக் கம்பத்தில் கொல்லப்பட்ட சமயத்தில் அவர்களில் நிறைய பேர் எருசலேமில் இருக்கவில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அவரைக் கொலை செய்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்ததால் அவர்களும் அந்தப் பழியை ஏற்க வேண்டியிருந்தது. ஆனாலும், சக யூதர்களிடம் பேதுரு மரியாதையுடன் பேசியதை, அவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் பேசியதைக் கவனியுங்கள். அவர்களைக் கண்டனம் செய்வது அவரது நோக்கமல்ல, அவர்களை மனந்திரும்ப வைப்பதே அவரது லட்சியம். பேதுருவின் வார்த்தைகளைக் கேட்டு அவர்கள் கோபப்பட்டார்களா? இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக, அந்த வார்த்தைகள் அவர்களுடைய “உள்ளத்தைத் துளைத்தன.” அதனால்தான், “நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று அவர்கள் கேட்டார்கள். பேதுருவின் மரியாதைக்குரிய பேச்சு அநேகருடைய மனதைத் தொட்டதால், அவர்கள் மனம் திருந்தினார்கள்.—அப். 2:37.
14 பேதுரு பேசியதைப் போல நாமும் இதயத்தைத் தொடும் விதத்தில் பேசலாம். சாட்சி கொடுக்கும்போது, வீட்டுக்காரர் சொல்கிற ஒவ்வொரு தப்பான விஷயத்தையும் நாம் திருத்த வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பதிலாக, நமக்கும் அவர்களுக்கும் ஒத்துப்போகிற விஷயங்களைப் பற்றிப் பேசுவதே நல்லது. வீட்டுக்காரரிடம் பொதுவான விஷயத்தைப் பற்றிப் பேசி, பேச்சை ஆரம்பித்துவிட்டால் அதற்குப்பின் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சாதுரியமாக நியாயங்காட்டிப் பேசலாம். பைபிள் சத்தியங்களை இப்படிப் பக்குவமாக எடுத்துச் சொல்லும்போது நல்மனமுள்ளோர் நன்றாகக் கேட்பார்கள்.
“நீங்கள் ஒவ்வொருவரும் . . . ஞானஸ்நானம் எடுங்கள்” (அப். 2:38-47)
15. (அ) பேதுரு என்ன சொன்னார், அதைக் கேட்ட மக்கள் என்ன செய்தார்கள்? (ஆ) பெந்தெகொஸ்தே நாளில் நல்ல செய்தியைக் கேட்ட ஆயிரக்கணக்கான மக்கள் எப்படி அதே நாளில் ஞானஸ்நானம் எடுக்க முடிந்தது?
15 கி.பி. 33-ல், சிலிர்க்க வைத்த அந்த பெந்தெகொஸ்தே நாளில், “மனம் திருந்துங்கள், . . . ஒவ்வொருவரும் . . . ஞானஸ்நானம் எடுங்கள்” என்று யூதர்களிடமும் யூதர்களாக மாறியவர்களிடமும் பேதுரு சொன்னார். (அப். 2:38) அதனால், சுமார் 3,000 பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள்; அவர்கள் ஒருவேளை எருசலேமில் அல்லது சுற்றுவட்டாரத்தில் இருந்த குளங்களில் ஞானஸ்நானம் எடுத்திருக்கலாம். e அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஞானஸ்நானம் எடுத்தார்களா? இந்தப் பதிவைச் சுட்டிக்காட்டி, பைபிள் மாணவரும் கிறிஸ்தவ பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைகளும் அவசரப்பட்டு ஞானஸ்நானம் எடுக்கலாமா? கூடாது. கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளில் ஞானஸ்நானம் எடுத்த யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் கடவுளுடைய வார்த்தையை ஏற்கெனவே நன்றாகப் படித்தவர்கள்... யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்த ஒரு தேசத்தின் பாகமாக இருந்தவர்கள்... என்பதை மனதில் வையுங்கள். மேலும், அவர்கள் ஏற்கெனவே தங்களுடைய பக்தியைச் செயலில் காட்டியிருந்தார்கள். உதாரணத்துக்கு, வருடாந்தர பண்டிகைக்காக சிலர் ரொம்ப தூரம் பயணம் செய்திருந்தார்கள். அதனால், கடவுளுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதில் இயேசு கிறிஸ்து வகித்த முக்கிய பங்கை உணர்ந்துகொண்ட பிறகு, தொடர்ந்து கடவுளுக்குச் சேவை செய்வதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால் இப்போது, கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் எடுத்த சீஷர்களாக!
16. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் எப்படிச் தியாக மனப்பான்மையைக் காட்டினார்கள்?
16 இவர்கள்மீது உண்மையிலேயே யெகோவாவின் ஆசீர்வாதம் இருந்தது. “இயேசுவின் சீஷர்களாக ஆகியிருந்த எல்லாரும் ஒன்றாகக் கூடியிருந்தார்கள், தங்களிடமிருந்த எல்லாவற்றையும் பொதுவாக வைத்துப் பயன்படுத்தினார்கள். தங்கள் உடைமைகளையும் சொத்துகளையும் விற்று, அந்தப் பணத்தை அவரவருடைய தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள்” என்று பதிவு சொல்கிறது. f (அப். 2:44, 45) அத்தகைய அன்பையும் தியாக மனப்பான்மையையும் காட்டவே உண்மை கிறிஸ்தவர்கள் அனைவரும் விரும்புகிறார்கள்.
17. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு ஒருவர் என்னென்ன படிகளை எடுக்க வேண்டும்?
17 ஒருவர் தன்னை கடவுளுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் பெற வேண்டுமென்றால், வேதத்தில் சொல்லியிருக்கும் நிறைய படிகளை எடுக்க வேண்டும். முதலில் கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும். (யோவா. 17:3) விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டும். தாங்கள் செய்த தவறுகளுக்காக உண்மையிலேயே வருந்தி, அவற்றைவிட்டு வெளியே வர வேண்டும். (அப். 3:19) பின்பு மதம் மாறி, அதாவது மனம் மாறி, கடவுளுடைய விருப்பத்துக்கு இசைவாக நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். (ரோ. 12:2; எபே. 4:23, 24) இதெல்லாம் செய்த பிறகு, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதை ஜெபத்தில் சொல்லி ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.—மத். 16:24; 1 பே. 3:21.
18. கிறிஸ்துவின் சீஷராய் இருப்பவர்களுக்கு என்ன வாய்ப்பு திறந்திருக்கிறது?
18 கடவுளுக்கு உங்களை அர்ப்பணித்து, இயேசு கிறிஸ்துவின் சீஷராய் ஞானஸ்நானம் எடுத்துவிட்டீர்களா? அப்படியானால், உங்களுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்திற்காக நன்றியுடன் இருங்கள். கடவுளுடைய சக்தியால் நிரப்பப்பட்ட முதல் நூற்றாண்டு சீஷர்களைப் போல, முழுமையாகச் சாட்சி கொடுப்பதற்கு... யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதற்கு... நீங்களும் அற்புதமாகப் பயன்படுத்தப்படலாம்!
a “ எருசலேம்—யூத மதத்தின் மையம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b “ ரோம்—ஒரு சாம்ராஜ்யத்தின் தலைநகர்” என்ற பெட்டியையும்; “ யூதர்கள்—மெசொப்பொத்தாமியாவிலும் எகிப்திலும்” என்ற பெட்டியையும்; “ பொந்துவில் கிறிஸ்தவ மதம்” என்ற பெட்டியையும் பாருங்கள்.
c பார்ப்பதற்குத்தான் நெருப்பு ஜூவாலைப் போல் அது இருந்தது. உண்மையிலேயே அது நெருப்பு அல்ல, ‘நெருப்புப் போன்ற நாவுகள்.’
d “‘ யூத மதத்துக்கு மாறியவர்கள்’—யார்?” என்ற பெட்டியைப் பாருங்கள்.
e இதேபோல், ஆகஸ்ட் 7, 1993-ல், உக்ரேனின் தலைநகரான கீவில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய சர்வதேச மாநாட்டில் 7,402 பேர் ஆறு குளங்களில் ஞானஸ்நானம் எடுத்தார்கள். எல்லாரும் ஞானஸ்நானம் எடுத்து முடிப்பதற்கு இரண்டு மணிநேரம் பதினைந்து நிமிடம் எடுத்தது.
f எருசலேமுக்கு வந்தவர்கள், ஆன்மீக விஷயங்களைக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள அங்கேயே தங்கிவிட்டதால் இந்தத் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. இது மனமுவந்து கொடுக்கப்பட்ட உதவி, பொதுவுடைமை கொள்கையில் சேராது.—அப். 5:1-4.