Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 2

நீங்கள் “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

நீங்கள் “எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்”

பிரசங்க வேலையைத் தலைமைதாங்கி நடத்த அப்போஸ்தலர்களை இயேசு எப்படித் தயார்படுத்தினார்

அப்போஸ்தலர் 1:1-26-ன் அடிப்படையில்

1-3. அப்போஸ்தலர்களிடமிருந்து இயேசு எவ்வாறு விடைபெறுகிறார், என்ன கேள்விகள் எழுகின்றன?

 இந்த நாள் வந்தே இருக்கக் கூடாதென்று அவர்கள் நினைக்கிறார்கள். கடந்த சில வாரங்களாகவே அப்போஸ்தலர்கள் மெய்சிலிர்த்துப் போயிருந்தார்கள்! சோகம் என்ற பாதாளத்துக்குப் போனவர்கள் இயேசு உயிர்த்தெழுந்ததும் சந்தோஷம் என்ற சிகரத்தையே தொட்டார்கள்!! இயேசு, 40 நாட்களாக சீஷர்களுக்குக் காட்சியளித்து, உபதேசமும் உற்சாகமும் ஊட்டி வந்திருந்தார். ஆனால், இந்த நாள்தான் இயேசு அவர்கள் கண்ணில் நின்ற கடைசி நாள்.

2 ஒலிவ மலையில் கூடியிருக்கும் அப்போஸ்தலர்கள் இயேசு உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொள்கிறார்கள். அவருடைய உரையை மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, இமைப்பொழுதில் எல்லாம் முடிந்துவிட்டதுபோல் தோன்றுகிறது. இப்போது அவர் தன் கைகளை உயர்த்தி ஆசி கூறுகிறார். பின்பு, மண்ணுலகிலிருந்து விண்ணுலகிற்கு ஏறிச் செல்கிறார். வைத்த கண் வாங்காமல் சீஷர்கள் அவரையே பார்த்துக்கொண்டிருக்க... ஒரு மேகம் அவர்கள் கண்களை மறைக்கிறது. இயேசு பரலோகத்துக்கு ஏறிப் போன பிறகும் அவர்கள் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.—லூக். 24:50; அப். 1:9, 10.

3 இந்தக் காட்சி அப்போஸ்தலர்களின் வாழ்வில் ஒரு திருப்புமுனை. இப்போது எஜமானர் இல்லாமல் சீஷர்கள் என்ன செய்வார்கள்? அதைப் பற்றி கவலையே படத் தேவையில்லை. ஏனென்றால், அவர் ஆரம்பித்து வைத்த முக்கியமான வேலையைத் தொடர அவர்களை ஏற்கெனவே ஆயத்தப்படுத்தியிருந்தார்! அவர்களை எப்படி ஆயத்தப்படுத்தினார்? அதற்கு அவர்கள் எப்படி வளைந்து கொடுத்தார்கள்? இன்றுள்ள கிறிஸ்தவர்கள்மீது அது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது? அப்போஸ்தலர் புத்தகத்தின் ஆரம்ப அதிகாரம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நிறைவான பதில் அளிக்கிறது.

“நம்பகமான பல ஆதாரங்கள்” (அப். 1:1-5)

4. அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா எப்படி ஆரம்பிக்கிறார்?

4 “அன்பான தெயோப்பிலுவே” என்ற வரிகளுடன் அப்போஸ்தலர் புத்தகத்தை லூக்கா ஆரம்பிக்கிறார்; இதற்கு முன்பு எழுதிய சுவிசேஷப் பதிவையும் இவருக்குத்தான் எழுதியிருந்தார். a லூக்கா சுவிசேஷத்தின் தொடர்ச்சியே இந்த அப்போஸ்தலர் புத்தகம்; அதனால்தான், சுவிசேஷப் பதிவின் கடைசியில் சொன்ன சம்பவங்களையே இந்தப் புத்தகத்தின் ஆரம்பத்திலும் லூக்கா எழுதுகிறார், ஆனால் சுருக்கமான வரிகளில்... வித்தியாசமான வார்த்தைகளில்... புதுத் தகவல்களுடன்.

5, 6. (அ) இயேசுவின் சீஷர்களுடைய விசுவாசத்தை எது பலப்படுத்தும்? (ஆ) இன்று உண்மைக் கிறிஸ்தவர்களுடைய விசுவாசம் எப்படி ‘நம்பகமான பல ஆதாரங்களால்’ அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது?

5 இயேசுவின் சீஷர்களுடைய விசுவாசக் கப்பலை எது மூழ்காமல் கொண்டு செல்லும்? “தான் உயிரோடு இருப்பதை நம்பகமான பல ஆதாரங்கள் மூலம் அவர்களுக்குக் காட்டினார்” என்று அப்போஸ்தலர் 1:3 சொல்கிறது. “அன்பான மருத்துவர்” லூக்கா மட்டும்தான் ‘நம்பகமான ஆதாரங்கள்’ என்ற அர்த்தத்தைத் தரும் வார்த்தையை பைபிளில் பயன்படுத்தியிருக்கிறார். (கொலோ. 4:14) மருத்துவ நூல்களில் பயன்படுத்தப்பட்ட இந்தக் கலைச்சொல் வெளிப்படையான, முடிவான சான்றை அல்லது ஆதாரத்தைக் குறிக்கிறது. அப்படிப்பட்ட ஆதாரத்தையே இயேசு கொடுத்தார். ஆம், ஒருமுறையோ இருமுறையோ அல்ல, பலமுறை சீஷர்களுக்குத் தரிசனமானார்—சில சமயம் ஓரிரு நபர்களுக்கு... சில சமயம் அப்போஸ்தலர்கள் அனைவருக்கும். ஒரு சந்தர்ப்பத்தில் 500-க்கும் அதிகமானவர்களுக்குத் தரிசனமானார். (1 கொ. 15:3-6) உண்மையிலேயே நம்பகமான ஆதாரம்தான்!!!

6 அதேபோல்தான் இன்று உண்மைக் கிறிஸ்தவர்களுடைய விசுவாசமும் ‘நம்பகமான பல ஆதாரங்களால்’ அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறது. அப்படியானால், இயேசு பூமியில் வாழ்ந்தார்... நம் பாவங்களுக்காக இறந்தார்... மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்... என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? இருக்கிறது! பைபிளில் பதிவாகியுள்ள கண்கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் இதற்கு உறுதியான அத்தாட்சி அளிக்கின்றன. கடவுளிடம் ஜெபம் செய்துவிட்டு, இவற்றை ஆழ்ந்து படித்தால் நம் விசுவாசம் உறுதிப்படும். மறந்துவிடாதீர்கள்: உண்மையான விசுவாசத்துக்கு உறுதியான அத்தாட்சி அவசியம், இல்லையென்றால் அது வெறும் குருட்டு நம்பிக்கையாகத்தான் இருக்கும். முடிவில்லா வாழ்வைப் பெற உண்மையான விசுவாசம் மிக மிக அவசியம்!யோவா. 3:16.

7. கற்பிப்பதிலும் பிரசங்கிப்பதிலும் சீஷர்களுக்கு இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

7 ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியும் [இயேசு] சொல்லிவந்தார்.’ உதாரணத்துக்கு, மேசியா பாடுபட்டு மரிக்க வேண்டும் என்பதைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை விளக்கினார். (லூக். 24:13-32, 46, 47) மேசியாவாக தாம் வகிக்கும் பாகத்தை இயேசு தெளிவுபடுத்திய சமயத்தில் கடவுளுடைய அரசாங்கம் என்ற முக்கியப் பொருளை வலியுறுத்தினார். ஏனென்றால், அவர்தான் வருங்கால அரசர்! கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியே இயேசுவுடைய பிரசங்கத்தின் முக்கியப் பொருளாக இருந்தது. இன்று அவருடைய சீஷர்களும் அதே பொருளைத்தான் பயன்படுத்தி பேசுகிறார்கள்.—மத். 24:14; லூக். 4:43.

“பூமியின் எல்லைகள் வரையிலும்” (அப். 1:6-12)

8, 9. (அ) அப்போஸ்தலர்கள் மனதிலிருந்த இரண்டு தவறான கருத்துகள் என்ன? (ஆ) அப்போஸ்தலர்களின் மனநிலையை இயேசு எப்படி மாற்றியமைத்தார், இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன பாடம்?

8 ஒலிவ மலையில் அப்போஸ்தலர்கள் ஒன்றுகூடி வந்திருந்தார்கள் என்று ஆரம்பத்தில் பார்த்தோம். அதுதான் பூமியில் இயேசுவுடன் அவர்களுடைய கடைசி சந்திப்பு. அப்போது, அவர்கள் ஆர்வமாக “எஜமானே, இந்தச் சமயத்திலா இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தரப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். (அப். 1:6) இந்த ஒரு கேள்வியில் அவர்கள் மனதிலிருந்த இரண்டு தவறான கருத்துக்கள் புலப்பட்டன. ஒன்று... கடவுளுடைய அரசாங்கம் மீண்டும் இஸ்ரவேலில் ஸ்தாபிக்கப்படும் என்ற எண்ணம். இரண்டு... முன்னறிவிக்கப்பட்ட கடவுளுடைய ஆட்சி ‘அந்த சமயத்திலே’ ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு. அவர்களுடைய மனநிலையை இயேசு எப்படி மாற்றியமைத்தார்?

9 அவர்களுடைய முதல் கருத்து தவறானது என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொள்வார்கள் என இயேசு அறிந்திருந்தார். சொல்லப்போனால், இன்னும் பத்தே நாட்களில் ஒரு புதிய தேசம், அதாவது ஆன்மீக இஸ்ரவேல், உதயமாவதை சீஷர்கள் பார்க்கப் போகிறார்கள்! ஏனென்றால், இஸ்ரவேல் தேசத்தாருடன் கடவுள் வைத்திருந்த உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்டது. ஆனால், அவர்களுடைய இரண்டாவது கருத்தை இயேசு அப்போதே அன்புடன் திருத்திவிட்டார்; ஆம், “தகப்பனின் கட்டுப்பாட்டிலுள்ள காலங்களையோ வேளைகளையோ நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை” என்று சொல்லிவிட்டார். (அப். 1:7) யெகோவா காலம் தவறாதவர்! முடிவு வரும் ‘நாளும் நேரமும்’ தனக்கும்கூட தெரியாது, ‘பரலோகத் தகப்பன் ஒருவருக்கு’ மட்டுமே தெரியும் என்று இயேசு பூமியில் இருந்தபோது சொன்னார். (மத். 24:36) இன்றும்கூட உலகத்தின் முடிவு எப்போது வரும்... எந்தத் தேதியில் வரும்... என்று கிறிஸ்தவர்கள் தேவையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், அவசியமில்லாத காரியத்தை எண்ணி கவலைப்படுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

10. அப்போஸ்தலர்களுக்கு இருந்த என்ன மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும், ஏன்?

10 இருந்தாலும், விசுவாசத்துக்கு மறுபெயராக விளங்கிய இயேசுவின் அப்போஸ்தலர்களை நாம் சாதாரணமாகப் பார்க்கக் கூடாது. ஏனென்றால், இயேசு அவர்களைத் திருத்தியபோது தாழ்மையோடு அதை ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுடைய கேள்வி, அவர்கள் மனதிலிருந்த தவறான கருத்தைப் படம்பிடித்துக் காட்டினாலும், அவர்களுடைய நல்ல மனநிலையையும் காட்டியது. “விழிப்புடன் இருங்கள்” என்று இயேசு அடிக்கடி அவர்களிடம் சொல்லியிருந்தார். (மத். 24:42; 25:13; 26:41) அதனால், அவர்கள் எப்போதும் ஆன்மீக ரீதியில் விழிப்பாய் இருந்தார்கள், யெகோவா விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்பதற்கு ஏதாவது அத்தாட்சி கிடைக்குமா என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த மனநிலையைத்தான் இன்றைக்கு நாமும் வளர்த்துக்கொள்ள வேண்டும். சொல்லப்போனால், ‘கடைசி நாட்களின்’ கடைசி கட்டத்தில் வாழ்கிற நாம் இன்னும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.—2 தீ. 3:1-5.

11, 12. (அ) சீஷர்களுக்கு இயேசு என்ன வேலையைக் கொடுத்தார்? (ஆ) பிரசங்க வேலையைப் பற்றி இயேசு குறிப்பிட்டபோது ஏன் கடவுளுடைய சக்தியைப் பற்றி பேசினார்?

11 எந்த விஷயத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென அப்போஸ்தலர்களுக்கு இயேசு நினைப்பூட்டினார். “கடவுளுடைய சக்தி உங்கள்மேல் வரும்போது நீங்கள் வல்லமை பெற்று, எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்றார். (அப். 1:8) எருசலேமில்... இயேசு கொல்லப்பட்ட இடத்தில்... அவர் உயிர்த்தெழுப்பப்பட்ட செய்தி முதலில் அறிவிக்கப்படும். பின்பு யூதேயாவிலும் சமாரியாவிலும் கடைசியில் உலகம் முழுவதும் அந்தச் செய்தி எதிரொலிக்கும்.

12 ‘கடவுளுடைய சக்தியை’ தரப்போவதாக வாக்களித்த பிறகு பிரசங்கிக்கும் வேலையைப் பற்றி இயேசு அவர்களிடம் சொன்னது பொருத்தமாக இருந்தது. ‘கடவுளுடைய சக்தி’ என்ற சொற்றொடர் அப்போஸ்தலர் புத்தகத்தில் 40-க்கும் அதிகமான முறை வருகிறது. கடவுளுடைய சக்தியின் உதவியில்லாமல் யெகோவாவின் விருப்பத்தை நம்மால் நிறைவேற்றவே முடியாது என்பதை உயிரோட்டமுள்ள இப்புத்தகம் மறுபடியும் மறுபடியும் உணர்த்துகிறது. அப்படியானால், அந்தச் சக்திக்காக கடவுளிடம் நாம் தவறாமல் ஜெபிப்பது எவ்வளவு முக்கியம்! (லூக். 11:13) இந்தக் கடைசி காலத்தில் அது நமக்கு ரொம்பவே அவசியம்.

13. இன்று நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்க வேலை எவ்வளவு பெரிய வேலை, அதை நாம் ஏன் ஆர்வத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்?

13 அந்தக் காலத்தில் “பூமியின் எல்லைகள் வரை” வாழ்ந்த மக்கள் தொகைக்கும், இந்தக் காலத்தில் “பூமியின் எல்லைகள் வரை” வாழும் மக்கள் தொகைக்கும் வித்தியாசம் இருக்கிறது. இருந்தாலும், முந்தின அதிகாரத்தில் சொல்லப்பட்டபடி, யெகோவாவின் சாட்சிகள் இந்த மாபெரும் பொறுப்பை மனப்பூர்வமாய் ஏற்றிருக்கிறார்கள். ஏனென்றால், பலதரப்பட்ட ஆட்கள் நல்ல செய்தியைக் கேட்க வேண்டுமென கடவுள் விரும்புவது அவர்களுக்குத் தெரியும். (1 தீ. 2:3, 4) உயிர்காக்கும் இந்த வேலையில் நீங்கள் முழுமூச்சோடு ஈடுபடுகிறீர்களா? இந்த மாதிரி திருப்தியான வேலை வேறு எதுவுமே இருக்க முடியாது! இதைச் செய்ய யெகோவா உங்களுக்குப் பலம் தருவார். இந்த வேலையைத் திறம்பட செய்ய சரியான வழிமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், சரியான மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு அப்போஸ்தலர் புத்தகம் உங்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

14, 15. (அ) கிறிஸ்துவின் வருகையைப் பற்றி தேவதூதர்கள் என்ன சொன்னார்கள், எந்த அர்த்தத்தில்? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.) (ஆ) கிறிஸ்து பரலோகத்துக்கு ஏறிப் போன “விதத்தில்” திரும்பி வந்தார் என்று எப்படிச் சொல்லலாம்?

14 இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தபடி, இயேசு பூமியிலிருந்து பரலோகத்துக்கு ஏறிப் போனபோது கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோனார். இருந்தாலும், 11 அப்போஸ்தலர்களும் அங்கேயே நின்றுகொண்டு வானத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது, இரண்டு தேவதூதர்கள் தோன்றி, “கலிலேயர்களே, ஏன் வானத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? உங்களிடமிருந்து வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இயேசு, எந்த விதத்தில் வானத்துக்குப் போவதைப் பார்த்தீர்களோ அந்த விதத்திலேயே வருவார்” என்று சொல்லி அவர்களை மென்மையாக அதட்டினார்கள். (அப். 1:11) சிலர் கற்பிப்பது போல், இயேசு அதே உடலில் வருவார் என்று தேவதூதர்கள் சொன்னார்களா? இல்லை. நமக்கு எப்படித் தெரியும்?

15 இயேசு அதே உடலில் அல்ல, ‘அதே விதத்தில்’ வருவார் என்றுதான் தேவதூதர்கள் சொன்னார்கள். b சரி, அவர் எந்த விதத்தில் மேலே சென்றார்? தேவதூதர்கள் பேசிக்கொண்டிருந்த சமயத்தில் கண்களைவிட்டு அவர் மறைந்துவிட்டார். ஆனால், சிலர் மட்டும்தான்— அப்போஸ்தலர்கள் மட்டும்தான்—இயேசு பூமியை விட்டு பரலோகத்துக்குப் போவதை, தன்னுடைய தகப்பனிடம் போவதை உணர்ந்துகொண்டார்கள். கிறிஸ்து திரும்பி வரும் விதமும் அதேபோல்தான் இருக்க வேண்டும். அதே போல்தான் இருந்தது. இன்றைக்கும்கூட, ஆன்மீக பகுத்துணர்வு உள்ளவர்கள் மட்டுமே இயேசு ராஜ அதிகாரத்தில் வந்திருப்பதை உணர்ந்துகொள்கிறார்கள். (லூக். 17:20) அவருடைய பிரசன்னத்திற்கான அத்தாட்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு காலத்தின் அவசரத்தன்மையை மற்றவர்களும் புரிந்துகொள்வதற்காக அவர்களுக்கும் அதை உணர்த்த வேண்டும்.

“யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” (அப். 1:13-26)

16-18. (அ) கிறிஸ்தவ கூட்டங்களைப் பற்றி அப்போஸ்தலர் 1:13, 14-லிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? (ஆ) இயேசுவின் தாய் மரியாளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (இ) இன்று கிறிஸ்தவ கூட்டங்கள் ஏன் முக்கியமானவை?

16 அப்போஸ்தலர்கள் “மிகவும் சந்தோஷமாக எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்” என்பதில் ஆச்சரியமே இல்லை. (லூக். 24:52) ஆனால், இயேசுவின் ஆலோசனைக்கும் அறிவுரைக்கும் தாங்கள் கீழ்ப்படிவதை எப்படிக் காட்டுவார்கள்? ‘வீட்டின் மாடி அறையில்’ அவர்கள் கூடிவந்ததாக அப்போஸ்தலர் 1:13, 14-ல் வாசிக்கிறோம். அந்தக் கூட்டங்களைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்களையும் நாம் தெரிந்துகொள்கிறோம். அந்தக் காலத்தில் பாலஸ்தீன வீடுகளில் மாடி அறைகள் இருந்தன; படிக்கட்டுகள் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்தன. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள “வீட்டின் மாடி அறை,” அப்போஸ்தலர் 12:12-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மாற்குவின் தாய்க்குச் சொந்தமான வீட்டின் மாடி அறையாக இருந்திருக்குமா? எப்படி இருந்தாலும் சரி, கிறிஸ்துவின் சீஷர்கள் அடிக்கடி ஒன்றுகூடி வருவதற்கு ஏற்ற ஓர் இடமாக, எளிமையான ஓர் இடமாக இருந்தது. ஆனால், அங்கு யாரெல்லாம் கூடிவந்தார்கள், எதற்காக?

17 அப்போஸ்தலர்களுக்கு மட்டுமே அல்லது ஆண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமாக அது இருக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். ‘சில பெண்களும்’ அங்கு வந்தார்கள்; ஏன், இயேசுவின் தாய் மரியாளும் அங்கு வந்திருந்தார். இந்தப் பதிவில்தான் கடைசியாக அவரைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. மரியாள் அங்கு வந்ததைப் பார்க்கும்போது என்ன தெரிகிறது? மரியாள் தனக்குப் பேரையோ புகழையோ தேடவில்லை; மாறாக, சக கிறிஸ்தவர்களோடு சேர்ந்து கடவுளை வழிபடவே விரும்பினார் என்று தெரிகிறது. இயேசு பூமியில் இருந்தவரை அவரை விசுவாசிக்காத மரியாளுடைய நான்கு மகன்கள் இப்போது தன்னுடன் இருந்தது மரியாளுக்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும். (மத். 13:55; யோவா. 7:5) ஏனென்றால், இயேசு உயிர்த்தெழுந்த பிற்பாடு அவருடைய சகோதரர்கள் மனம் மாறிவிட்டார்கள்!—1 கொ. 15:7.

18 இந்தச் சீஷர்கள் எதற்காகக் கூடிவந்திருந்தார்கள் என்பதையும் கவனியுங்கள். அவர்கள் “விடாமல் ஒருமனதோடு ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 1:14) சொல்லப்போனால், ஒன்றுகூடி வருவது எப்போதுமே கிறிஸ்தவ வழிபாட்டின் ஓர் முக்கியமான அம்சம். இன்று நாமும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவதற்கு... போதனையும் அறிவுரையும் பெறுவதற்கு... மிக முக்கியமாக, பரலோக தகப்பனான யெகோவாவை ஒன்றுசேர்ந்து வழிபடுவதற்கு... கூடிவருகிறோம். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் நாம் செய்கிற ஜெபங்களும் பாடும் பாடல்களும் நம் பரலோக தந்தையின் மனதைக் குளிர்விக்கும், நமக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். நம்மை ஊக்கப்படுத்துகிற இப்படிப்பட்ட பரிசுத்தமான கூட்டங்களை ஒருபோதும் தவறவிட மாட்டோம்!—எபி. 10:24, 25.

19-21. (அ) சபையில் பேதுரு முக்கிய பங்கு வகித்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆ) யூதாஸுக்குப் பதிலாக ஏன் வேறொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது, இந்த விஷயம் கையாளப்பட்ட விதத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

19 கிறிஸ்துவின் சீஷர்கள் இப்போது ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார்கள். இதைத் தீர்ப்பதில் அப்போஸ்தலன் பேதுருவே முக்கிய பங்கு வகித்தார். (வசனங்கள் 15-26) எஜமானரைத் தெரியாது என்று மூன்று தடவை சொன்ன பேதுரு இந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார் என்றால் அது பெரிய விஷயம்தானே! (மாற். 14:72) நாம் எல்லாருமே பாவம் செய்கிறவர்கள்; அதனால், உண்மையிலேயே மனந்திரும்புகிறவர்களுக்கு யெகோவா “நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்பதை நாம் அடிக்கடி ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.—சங். 86:5.

20 இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸுக்குப் பதிலாக வேறொருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பேதுரு புரிந்துகொண்டார். ஆனால், யாரைத் தேர்ந்தெடுப்பது? இயேசுவின் ஊழியக்காலம் முழுவதும் அவரோடு இருந்த... அவர் உயிர்த்தெழுந்ததற்குக் கண்கண்ட சாட்சியாக இருந்த... ஒரு நபரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பேதுரு சொன்னார். (அப். 1:21, 22) அது... ‘என்னைப் பின்பற்றியிருக்கிற நீங்களும் 12 சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் 12 கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்’ என்று இயேசு கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக இருந்தது. (மத். 19:28) அதோடு, இயேசுவின் வழியில் நடந்த 12 அப்போஸ்தலர்கள் புதிய எருசலேமின் ‘12 அஸ்திவாரக் கற்களாக’ இருக்க வேண்டும் என்று யெகோவா நோக்கம் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. (வெளி. 21:2, 14) அதனால்தான், “அவனுடைய கண்காணிக்கும் பொறுப்பை வேறொருவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் யூதாஸையே குறித்தது என்பதை பேதுரு புரிந்துகொள்ள கடவுள் உதவி செய்தார்.—சங். 109:8.

21 சரி, அந்தப் புதிய அப்போஸ்தலரை எப்படித் தேர்ந்தெடுத்தார்கள்? பைபிள் காலங்களில் நிலவிய பழக்கத்தின்படி சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள். (நீதி. 16:33) இப்படித் தேர்ந்தெடுக்கும் பழக்கம் கடைசியாக பைபிளில் இங்குதான் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், கடவுளுடைய சக்தி அருளப்பட்ட சமயம் முதல் இந்தப் பழக்கம் மறைந்துவிட்டதாகத் தெரிகிறது. அப்போஸ்தலர்கள் ஏன் சீட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைக் கவனியுங்கள். “யெகோவாவே, எல்லா இதயங்களையும் அறிந்தவரே, . . . இந்த இரண்டு பேரில் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குக் காட்டுங்கள்” என்று அவர்கள் ஜெபம் செய்தார்கள். (அப். 1:23-25) அந்த நபரை யெகோவா தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். மத்தியாவை யெகோவா தேர்ந்தெடுத்தார்; பிரசங்கிப்பதற்கு இயேசு அனுப்பிய 70 சீஷர்களில் இவரும் ஒருவராக இருந்திருக்கலாம். இப்படி, மத்தியா ‘பன்னிரண்டு’ பேரில் ஒருவரானார். cஅப். 6:2.

22, 23. இன்று சபையை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் ஏன் அடிபணிந்து நடக்க வேண்டும்?

22 கடவுளுடைய மக்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பது முக்கியம் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு ஞாபகப்படுத்துகிறது. இன்றும் சபையில் கண்காணிகளாய் சேவை செய்ய பொறுப்புள்ள ஆண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்படித் தேர்ந்தெடுக்கப்படும் கண்காணிகளுக்கு பைபிள் சொல்லும் தகுதிகள் இருக்கின்றனவா என்பதை மூப்பர்கள் கவனமாய் யோசித்துப் பார்க்கிறார்கள்; அதோடு, கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலுக்காகவும் ஜெபம் செய்கிறார்கள். அதனால், தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஆண்களை கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்பட்டவர்களாகவே சபையார் பார்க்கிறார்கள். சபையை அவர்கள் முன்னின்று வழிநடத்தும்போது அவர்களுக்கு நாம் அடிபணிந்து நடக்க வேண்டும், அப்போது சபையில் ஒற்றுமை நிலவும்.—எபி. 13:17.

கண்காணிகளுக்கு நாம் எப்போதுமே அடிபணிகிறோம்

23 இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டதைக் கண்ணாரக் கண்டபின் சீஷர்கள் பலம் பெற்றார்கள்... அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு நம்பிக்கையும் கொண்டார்கள்... இதனால் அடுத்து நடக்கப்போகும் ஒன்றுக்குத் தயாராக இருந்தார்கள். கிறிஸ்தவ சரித்திரத்தில் நிகழ்ந்த அந்த முக்கிய சம்பவத்தைப் பற்றி அடுத்த கட்டுரை பேசும்.

a சுவிசேஷப் பதிவில் இவரை “மாண்புமிகு தெயோப்பிலு அவர்களே” என்று லூக்கா அழைக்கிறார். (லூக். 1:1) அதனால், தெயோப்பிலு விசுவாசியாக மாறுவதற்கு முன்பு பிரபலமானவராக இருந்திருப்பார் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அப்போஸ்தலர் புத்தகத்தில், “அன்புள்ள தெயோப்பிலுவே” என்று மட்டுமே லூக்கா சொல்கிறார். லூக்கா சுவிசேஷத்தைப் படித்த பிறகு தெயோப்பிலு விசுவாசியாக மாறினார் என்று அறிஞர்கள் சிலர் கூறுகிறார்கள். அதனால்தான், அவரை “மாண்புமிகு” என்ற அடைமொழியை சொல்லி அழைக்காமல் சக விசுவாசியைப் போல் லூக்கா அழைக்கிறார் என்கிறார்கள்.

b இந்த வசனத்தில், ட்ரோபோஸ் (‘விதம்’ என்பது இதன் அர்த்தம்) என்ற கிரேக்க வார்த்தையை பைபிள் பயன்படுத்துகிறது; மார்ஃபே (‘வடிவம்’ என்பது இதன் அர்த்தம்) என்ற வார்த்தையை அல்ல.

c பவுல் பிற்பாடு ”மற்ற தேசத்து மக்களுக்கு . . . ஓர் அப்போஸ்தலனாக” நியமிக்கப்பட்டார், ஆனால் அந்த 12 பேரில் ஒருவராக அவர் கருதப்படவில்லை. (ரோ. 11:13; 1 கொ. 15:4-8) இந்த விசேஷ பொறுப்புக்கு அவர் தகுதி பெறவில்லை; ஏனென்றால், பூமியில் இயேசு ஊழியம் செய்த காலத்தில் பவுல் அவரைப் பின்பற்றவில்லை.