அதிகாரம் 11
‘சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிரப்பப்பட்டார்கள்’
நல்ல செய்திக்குச் செவிகொடுக்காமல் எதிர்த்த ஆட்களிடம் பவுல் நடந்துகொண்ட விதம்
அப்போஸ்தலர் 13:1-52-ன் அடிப்படையில்
1, 2. பர்னபா மற்றும் சவுலின் பயணத்தின் தனிச்சிறப்பு என்ன, அப்போஸ்தலர் 1:8-ல் இருக்கிற தீர்க்கதரிசனத்தை எப்படி அவர்களுடைய வேலை நிறைவேற்றும்?
அந்தியோகியா சபைக்கு அந்த நாள் ஆனந்தம் பொங்கும் நாள். எத்தனையோ தீர்க்கதரிசிகள், போதகர்கள் இருந்தபோதிலும் தொலைதூர பகுதிகளில் நல்ல செய்தியை கொண்டுசெல்வதற்கு பர்னபாவும் சவுலுமே கடவுளுடைய சக்தியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். a (அப். 13:1, 2) இதற்கு முன்பும்கூட தகுதியுள்ள ஆண்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இருந்தாலும், கிறிஸ்தவம் ஏற்கெனவே வேர்பிடித்து பரவியிருந்த பகுதிகளுக்கே அந்த மிஷனரிகள் போனார்கள். (அப். 8:14; 11:22) ஆனால் இப்போது, நல்ல செய்தியைப் பற்றி அதிகமாகக் கேள்விப்படாத மக்கள் வாழும் இடங்களுக்கு பர்னபாவும் சவுலும் அனுப்பப்படுகிறார்கள்; இவர்களுக்குத் துணையாக மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானும் போகிறார்.
2 சுமார் 14 வருஷங்களுக்கு முன்பு, இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “எருசலேமிலும் யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் எல்லைகள் வரையிலும் எனக்குச் சாட்சிகளாக இருப்பீர்கள்” என்று சொல்லியிருந்தார். (அப். 1:8) பர்னபாவும் சவுலும் மிஷனரிகளாக சேவை செய்ய நியமிக்கப்படுகையில் இயேசுவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் நிறைவேற ஆரம்பிக்கின்றன! b
“அந்த வேலைக்காக . . . ஒதுக்கிவையுங்கள்” (அப். 13:1-12)
3. முதல் நூற்றாண்டில் தொலைதூரப் பயணங்கள் ஏன் கஷ்டமாக இருந்தன?
3 இன்றைக்கு பாய்ந்து செல்ல காரும் பறந்து செல்ல விமானமும் இருப்பதால் மக்கள் சில மணிநேரத்திலேயே பல மைல் தூரத்தை கடந்துவிட முடியும். ஆனால், கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்த நிலைமையே வேறு. தரைவழியாக பயணம் செய்வதற்கு கால்கள்தான் முக்கிய “வாகனம்.” சாலைகளும் கரடுமுரடாக இருந்தன. மிஞ்சிப்போனால் ஒரு நாளைக்கு 30 கிலோமீட்டர் தூரம்தான் போக முடியும், அதற்கே போதும் போதும் என்றாகிவிடும்! c இருந்தாலும், பவுலும் பர்னபாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற ஆர்வமாக இருந்தார்கள்; அதேசமயத்தில், அதற்குக் கடின முயற்சியும் தியாகமும் செய்ய வேண்டியிருக்கும் என்பதை தெரிந்திருந்தார்கள்.—மத். 16:24.
4. (அ) பர்னபாவையும் சவுலையும் தேர்ந்தெடுக்க எது வழிநடத்தியது, இதற்குச் சக விசுவாசிகள் எப்படிப் பிரதிபலித்தார்கள்? (ஆ) சபையில் பொறுப்புகளைக் கையாள நியமிக்கப்படும் சகோதரர்களுக்கு நாம் எப்படி ஆதரவு காட்டலாம்?
4 குறிப்பாக பர்னபாவையும் சவுலையும் ‘அந்த வேலைக்காக ஒதுக்கிவைக்கும்படி’ கடவுளுடைய சக்தி ஏன் வழிநடத்தியது? (அப். 13:2) அதற்கான காரணத்தை பைபிள் சொல்வதில்லை. ஆனால், ஒன்று மட்டும் நமக்குத் தெரியும்: அவர்களைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் கடவுளுடைய சக்தி வழிநடத்தியது. இதைப் பற்றி அந்தியோகியாவிலிருந்த தீர்க்கதரிசிகள் மற்றும் போதகர்கள் மத்தியில் சலசலப்பு உண்டானதாக பைபிளில் எந்தப் பதிவும் இல்லை. அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களிடம் போட்டியோ பொறாமையோ துளியும் எட்டிப் பார்க்கவில்லை; அதற்குப் பதிலாக, விரதமிருந்து ஜெபம் செய்த பிறகு, “அவர்கள் இரண்டு பேர்மேலும் கைகளை வைத்து அவர்களை அனுப்பினார்கள்.” அதைப் பார்த்து, பர்னபாவும் சவுலும் எவ்வளவு பூரித்துப்போயிருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். (அப். 13:3) அதேபோல், கண்காணிகள் உட்பட பொறுப்புகளைக் கையாள சபையில் நியமிக்கப்படுகிற மற்ற சகோதரர்களுக்கு நாமும் தோள் கொடுக்க வேண்டும். அவர்கள்மீது பொறாமைப்படாமல் ‘அவர்களுடைய உழைப்பின் காரணமாக அவர்களை மிக உயர்வாகக் கருதி, அவர்கள்மீது அன்பு காட்ட வேண்டும்.’—1 தெ. 5:13.
5. பர்னபாவும் சவுலும் சீப்புரு தீவில் பிரசங்கித்ததைப் பற்றி விவரிக்கவும்.
5 அந்தியோகியாவுக்கு பக்கத்தில் இருந்த செலூக்கியா என்ற துறைமுகம்வரை நடந்துபோன பிறகு, பர்னபாவும் சவுலும் சீப்புரு தீவுக்கு கப்பலேறினார்கள்; அது கிட்டத்தட்ட 200 கிலோமீட்டர் தூரப் பயணம். d சீப்புரு தீவு பர்னபாவின் பூர்வீகமாக இருந்ததால் அங்கே நல்ல செய்தியை அறிவிக்க அவர் அதிக ஆர்வமாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அந்தத் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள சாலமி என்ற நகரத்துக்கு அவர்கள் வந்துசேர்ந்த பிறகு, அவர்கள் துளிகூட காலத்தை வீணடிக்கவில்லை. உடனே, “யூதர்களுடைய ஜெபக்கூடங்களில் கடவுளுடைய வார்த்தையை அறிவிக்க ஆரம்பித்தார்கள்.” e (அப். 13:5) பர்னபாவும் சவுலும் சீப்புரு தீவின் ஒருமுனை துவங்கி மறுமுனை வரை பயணம் செய்தபோது, வழியில் இருந்த முக்கிய நகரங்களில் நல்ல செய்தியின் விதையைத் தூவியிருக்கலாம். இந்த மிஷனரிகள் போன பாதையை வைத்துப் பார்த்தால், அவர்கள் கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர் நடந்திருக்கலாம்.
6, 7. (அ) செர்கியு பவுல் யார், நல்ல செய்தியைக் கேட்க விடாமல் அவரை பர்யேசு ஏன் தடுத்தான்? (ஆ) பர்யேசுவின் எதிர்ப்புக்கு சவுல் எப்படி முற்றுப்புள்ளி வைத்தார்?
6 முதல் நூற்றாண்டில், சீப்புரு தீவில் வாழ்ந்தவர்கள் பொய்மத வழிபாட்டில் ஊறிப்போய் இருந்தார்கள். பர்னபாவும் சவுலும் தீவின் மேற்கு கடற்கரையில் இருந்த பாப்போ நகரத்தில் கால் வைத்தவுடன் இந்த உண்மை உறுதியானது. அங்கே “பர்யேசு என்ற பெயருடைய ஒரு யூதனைச் சந்தித்தார்கள்; அவன் ஒரு சூனியக்காரன், போலித் தீர்க்கதரிசி. அதோடு, “ரோம மாநில ஆளுநரான செர்கியு பவுலோடு அவன் இருந்தான்; அந்த ஆளுநர் புத்திக்கூர்மை உள்ளவராக இருந்தார்.” f முதல் நூற்றாண்டில், படித்த மேதாவிகளாக இருந்த ரோமர்கள் பலர், ஏன் செர்கியு பவுல் போன்ற “புத்திக்கூர்மை உள்ள” மனிதர்களும்கூட, முக்கியமான தீர்மானங்கள் எடுப்பதற்கு பெரும்பாலும் சூனியக்காரர்களையோ ஜோசியக்காரர்களையோ நாடினார்கள். இருந்தாலும், செர்கியு பவுல் நல்ல செய்தியால் கவரப்பட்டு, ‘கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஆர்வமாக இருந்தார்.’ பர்யேசு என்ற சூனியக்காரனால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; தொழிலுக்கு ஏற்ற மாதிரி எலிமா என்ற பெயரும் இவனுக்கு இருந்தது, இதன் அர்த்தம் “சூனியக்காரன்.”—அப். 13:6-8.
7 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திக்கு பர்யேசு எதிர்ப்புக் குரல் கொடுத்தான். சொல்லப்போனால், செர்கியு பவுலின் ஆலோசகர் என்ற செல்வாக்குமிக்க ஸ்தானத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காக... இயேசுமீது ‘அந்த ஆளுநர் நம்பிக்கை வைப்பதைத் தடுப்பதுதான்’ அவனுக்கு ஒரே வழியாகத் தெரிந்தது. (அப். 13:8) அரண்மனை மந்திரவாதி ஒருவன் செர்கியு பவுலை திசைதிருப்புவதை பார்த்துக்கொண்டு சவுல் சும்மா இருக்கவில்லை. என்ன செய்தார்? பதிவு சொல்வதைக் கவனியுங்கள்: “பவுல் என்ற சவுல் கடவுளுடைய சக்தியினால் நிறைந்தவராக, அவனை [பர்யேசுவை] உற்றுப் பார்த்து, ‘எல்லா விதமான பித்தலாட்டமும் எல்லா விதமான அக்கிரமமும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதியான எல்லாவற்றுக்கும் பகைவனே, யெகோவாவின் நீதியான வழிகளைப் புரட்டிப்போடுவதை நிறுத்த மாட்டாயா? இதோ! யெகோவாவின் கை உனக்கு எதிராக வந்திருக்கிறது; கொஞ்சக் காலத்துக்கு நீ குருடனாகி, சூரிய ஒளியைப் பார்க்காமல் இருப்பாய்’ என்றார். அந்த நொடியே அவனுடைய கண் மங்கலாகி, இருண்டுபோனது. தன் கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போவதற்கு ஆட்களை அவன் தட்டுத்தடுமாறி தேட ஆரம்பித்தான்.” g இந்த அற்புத சம்பவத்தின் விளைவு? “நடந்ததையெல்லாம் பார்த்த ஆளுநர் இயேசுவின் சீஷராக ஆனார். ஏனென்றால், அவர் யெகோவாவை பற்றிய போதனையைக் கேட்டு மலைத்துப்போனார்.”—அப். 13:9-12.
8. பவுலைப் போல நாம் எப்படித் தைரியத்தைக் காட்டலாம்?
8 பர்யேசுவைக் கண்டு பவுல் பயப்படவில்லை. அதேபோல நாமும்... நல்ல செய்தியை ஆர்வத்துடன் கேட்போரின் மனதை எதிரிகள் கெடுக்க முயற்சி செய்யும்போது பயந்து பின்வாங்கிவிடக் கூடாது. உண்மைதான், நம் பேச்சு “எப்போதும் கனிவாகவும் சுவையாகவும் இருக்க வேண்டும்.” (கொலோ. 4:6) அதே நேரத்தில் பிரச்சினையைத் தவிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, அக்கறை காட்டும் நபருக்குச் சாட்சி கொடுக்காமல் இருந்துவிடக் கூடாது. அதோடு, பர்யேசு புரட்டியதைப் போல ‘யெகோவாவின் நீதியான வழிகளைப் புரட்டுகிற’ பொய் மதத்தை வெட்டவெளிச்சமாக்க அஞ்சவும் கூடாது. (அப். 13:10) பவுலைப் போல சத்தியத்தைத் தைரியமாக அறிவிக்க வேண்டும்; நல்மனமுள்ள ஆட்களின் மனதைத் தொடும் விதத்தில் பேச வேண்டும். பவுலுடைய விஷயத்தில் நடந்ததுபோல் யெகோவாவின் ஆதரவு நமக்குப் பளிச்செனத் தெரியாவிட்டாலும், நல்மனம் படைத்த ஆட்களை சத்தியத்தின் பக்கம் ஈர்க்க அவர் தன்னுடைய சக்தியைப் பயன்படுத்துவார் என்பதில் நாம் உறுதியோடிருக்கலாம்.—யோவா. 6:44.
“ஊக்கப்படுத்துவதற்கு ஏதாவது . . . சொல்லுங்கள்” (அப். 13:13-43)
9. இன்று சபையை முன்நின்று வழிநடத்துகிறவர்களுக்கு பர்னபாவும் பவுலும் எப்படி உதாரணமாக இருக்கிறார்கள்?
9 பவுல், பர்னபா, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவான் ஆகிய மூன்று பேரும் பாப்போவைவிட்டு ஆசியா மைனரின் கடலோரத்தில் இருக்கிற பெர்கேவுக்குப் போனபோது, அதாவது சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பெர்கேவுக்கு கடல் கடந்து போனபோது, ஒரு மாற்றம் நடந்தது. அப்போஸ்தலர் 13:13-ல், “பவுலும் அவரோடு இருந்தவர்களும்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. தன்னோடு இருந்தவர்களை பவுலே முன்நின்று வழிநடத்தினார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. இருந்தாலும், இதைக் கண்டு பர்னபா பொறாமைப்பட்டதாக பைபிள் சொல்வதில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய விருப்பத்தை நிறைவேற்ற அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே உழைத்தார்கள். இன்று சபையில் முன்நின்று வழிநடத்துகிற சகோதரர்களுக்கு பவுலும் பர்னபாவும் சிறந்த உதாரணமாக இருக்கிறார்கள். இன்று கிறிஸ்தவர்கள் முக்கிய பொறுப்புகளுக்காக போட்டி போடுவதில்லை. அதற்குப் பதிலாக, “நீங்கள் எல்லாரும் சகோதரர்கள்” என்று இயேசு சொன்ன வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்கிறார்கள். “தன்னைத்தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றும் இயேசு சொன்னார்.—மத். 23:8, 12.
10. பெர்கேயிலிருந்து பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவுக்குச் செல்லும் பாதையைப் பற்றி விவரியுங்கள்.
10 பெர்கேவுக்குப் போன பிறகு பவுலையும் பர்னபாவையும் விட்டுவிட்டு மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவான் எருசலேமுக்குத் திரும்பிவிட்டார். என்ன காரணத்தினால் அவர் திடீரென கிளம்பிப் போனார் என்பதற்கு பைபிளில் எந்த விளக்கமும் இல்லை. ஆனால், பவுலும் பர்னபாவும் பெர்கேயிலிருந்து பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள்; இது கலாத்தியா மாகாணத்தில் இருந்த ஒரு நகரம். இந்த நகரத்துக்குப் பயணம் செய்வது அவ்வளவு சுலபமில்லை, ஏனென்றால் அது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,600 அடி உயரத்தில் இருந்தது. கரடுமுரடான இந்த மலைப்பாதை திருடர்களுக்குப் பேர்போன ஒரு இடமாகவும் இருந்தது. அதுமட்டுமல்ல, ஒருவேளை இந்தச் சந்தர்ப்பத்தில் பவுலுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிருந்திருக்கலாம். h
11, 12. பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவின் ஜெபக்கூடத்தில் பேசியபோது, கேட்கிறவர்களின் ஆர்வத்தை பவுல் எப்படித் தூண்டினார்?
11 பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவுக்குப் போன பிறகு, பவுலும் பர்னபாவும் ஒரு ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குப் போனார்கள். “அங்கே கூடியிருந்தவர்களுக்கு முன்னால் திருச்சட்டமும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களும் வாசிக்கப்பட்டன. அதன் பின்பு, ஜெபக்கூடத் தலைவர்கள் இவர்களிடம் ஆள் அனுப்பி, ‘சகோதரர்களே, இங்கே இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள்.” (அப். 13:15) அப்போது, பவுல் எழுந்து நின்று பேச ஆரம்பித்தார்.
12 “இஸ்ரவேல் மக்களே, கடவுள்பயமுள்ள மற்றவர்களே” என்று சொல்லி பவுல் பேசத் தொடங்கினார். (அப். 13:16) யூதர்களும் யூத மதத்துக்கு மாறியவர்களும் அங்கே இருந்தார்கள். கடவுளுடைய நோக்கத்தில் இயேசுவின் பாகத்தை அறியாத இந்த ஆட்களுடைய மனதைக் கவர பவுல் எப்படிப் பேசினார்? முதலில், யூத தேசத்தின் சரித்திரத்தைச் சுருக்கமாக சொன்னார். ‘எகிப்து தேசத்தில் அவர்கள் அன்னியர்களாகக் குடியிருந்தபோது, அவர்களை [யெகோவா] உயர்த்தியதை’ பற்றி சொன்னார்; விடுதலையான பிறகு, 40 வருஷங்களாக ‘வனாந்தரத்தில் அவர்களை [கடவுள்] சகித்துக்கொண்டதை’ பற்றியும் விளக்கினார். அதோடு, வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தை ‘இஸ்ரவேலர்களுக்குச் சொத்தாகக் கொடுத்ததை’ பற்றியும் விவரித்தார். (அப். 13:17-19) ஓய்வுநாள் அனுசரிப்பின் பாகமாக சற்று முன்பு சத்தமாக வாசிக்கப்பட்ட வேதவசனங்களை அவர் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படியென்றால், ‘எல்லா விதமான ஆட்களுக்கும் எல்லா விதமாகவும் ஆவது’ எப்படி என்பதை பவுல் தெரிந்திருந்தார் என்பதற்கு இது இன்னொரு அத்தாட்சி.—1 கொ. 9:22.
13. கேட்கிறவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் நாம் எப்படிப் பேசலாம்?
13 கேட்கிறவர்களுடைய மனதைத் தூண்டும் விதத்தில் நாமும் பிரசங்கிக்க முயற்சி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு நபருடைய மதப் பின்னணியை தெரிந்துகொண்டால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களைப் பற்றி அவரிடம் பேச முடியும். அதோடு, அந்த நபருக்குத் தெரிந்த பைபிள் வசனங்களை குறிப்பிட்டும் பேசலாம். அவருடைய பைபிளிலிருந்தே வாசிக்கச் சொல்வதும்கூட நல்ல பலனைத் தரலாம். மொத்தத்தில், கேட்கிறவர்களுடைய இதயத்தைத் தொடும் விதத்தில் பேசுவதற்குச் சிறந்த வழிகளைத் தேடுங்கள்.
14. (அ) இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை பவுல் எப்படிப் பேச ஆரம்பித்தார், என்ன எச்சரிப்பு கொடுத்தார்? (ஆ) பவுலின் பேச்சுக்கு கூட்டத்தார் எப்படிப் பிரதிபலித்தார்கள்?
14 அடுத்து... இஸ்ரவேலை ஆட்சி செய்துவந்த ராஜாக்களின் வம்சத்தில் ‘மீட்பரான இயேசு’ வந்தார் என்றும், அவருடைய முன்னோடிதான் யோவான் ஸ்நானகர் என்றும் பவுல் அவர்களுக்குச் சொன்னார். பிறகு, இயேசு எப்படிக் கொலை செய்யப்பட்டார்... எப்படி உயிர்த்தெழுப்பப்பட்டார்... என்றும் விளக்கினார். (அப். 13:20-37) “இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: அவர் மூலம்தான் உங்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைக்கும் . . . நீங்கள் விசுவாசம் வைத்தால் . . . அவர் மூலமாக உங்கள் குற்றங்கள் நீக்கப்படும்” என்றார். பிறகு அவர்களுக்கு இந்த எச்சரிப்பையும் கொடுத்தார்: “தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது உங்களுக்கு நடக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள், ‘ஏளனம் செய்பவர்களே, பாருங்கள், ஆச்சரியப்படுங்கள், ஒழிந்துபோங்கள்; ஏனென்றால், உங்களுடைய காலத்தில் நான் ஒரு செயலைச் செய்யப்போகிறேன்; அதைப் பற்றி யாராவது உங்களுக்கு விவரமாகச் சொன்னால்கூட நீங்கள் அதை ஒருபோதும் நம்ப மாட்டீர்கள்.’” பவுலின் பேச்சைக் கேட்ட மக்களின் பிரதிபலிப்பு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் இருந்தது. “அடுத்த ஓய்வுநாளிலும் இந்த விஷயங்களைப் பற்றித் தங்களிடம் பேசும்படி அங்கிருந்த மக்கள் கேட்டுக்கொண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. அதோடு, ஜெபக்கூடம் கலைந்த பின்னர், “யூதர்களும் யூத மதத்துக்கு மாறிய பக்தியுள்ள ஆட்களும் பவுலுக்கும் பர்னபாவுக்கும் பின்னால் போனார்கள்.”—அப். 13:38-43.
“நாங்கள் மற்ற தேசத்து மக்களிடம் போகிறோம்” (அப். 13:44-52)
15. ஓய்வுநாளில் பவுல் பேசிய பிறகு என்ன நடந்தது?
15 அடுத்த ஓய்வுநாளின்போது, “கிட்டத்தட்ட நகரவாசிகள் எல்லாரும்” பவுலின் பேச்சைக் கேட்பதற்குக் கூடிவந்தார்கள். ஆனால், யூதர்கள் சிலர் இதைக் கண்டு பொங்கியெழுந்தார்கள்; அதனால், “பவுல் சொன்ன விஷயங்களுக்கு முரணாகப் பேசி . . . நிந்தித்தார்கள்.” அப்போது பவுலும் பர்னபாவும் அவர்களிடம் தைரியமாக இப்படி சொன்னார்கள்: “கடவுளுடைய வார்த்தையை உங்களுக்குத்தான் நாங்கள் முதலில் சொல்ல வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதை உதறித்தள்ளி, முடிவில்லாத வாழ்வுக்கு உங்களைத் தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கிறீர்கள்! அதனால், இப்போது நாங்கள் மற்ற தேசத்து மக்களிடம் போகிறோம். ஏனென்றால், ‘பூமியெங்கும் இருக்கிறவர்களுக்கு மீட்புக்கான வழியைக் காட்டுவதற்காக உன்னைத் தேசங்களுக்கெல்லாம் ஒளியாக நியமித்திருக்கிறேன்’ என்ற வசனத்தில் யெகோவாவே எங்களுக்கு கட்டளை கொடுத்திருக்கிறார்.”—அப். 13:44-47; ஏசா. 49:6.
16. மிஷனரிகள் சொன்ன காரசாரமான வார்த்தைகளைக் கேட்டு யூதர்கள் என்ன செய்தார்கள், எதிர்ப்பு கிளம்பியபோது பவுலும் பர்னபாவும் என்ன செய்தார்கள்?
16 பவுல் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்ற தேசத்து மக்கள் சந்தோஷப்பட்டார்கள்; “முடிவில்லாத வாழ்வைப் பெறுவதற்கேற்ற மனப்பான்மையோடு இருந்தவர்கள் இயேசுவின் சீஷர்களானார்கள்.” (அப். 13:48) யெகோவாவைப் பற்றிய செய்தி அந்த நாடு முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. ஆனால், யூதர்களின் பிரதிபலிப்பு வித்தியாசமாக இருந்தது. அதனால், அந்த மிஷனரிகள் அவர்களிடம்... ‘கடவுளுடைய வார்த்தை முதலில் உங்களுக்கு சொல்லப்பட்டபோதிலும் நீங்கள் மேசியாவை உதறித் தள்ளி, கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு ஆளாகிவிட்டீர்கள்’ என்று சொன்னார்கள். நகரத்திலிருந்த பிரபலமான பெண்களையும் நகரத்திலிருந்த முக்கியமான ஆண்களையும் யூதர்கள் தூண்டிவிட்டு, “பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்தி, தங்களுடைய நகரத்துக்கு வெளியே தள்ளிவிட்டார்கள்.” அப்போது பவுலும் பர்னபாவும் என்ன செய்தார்கள்? அவர்கள் “தங்கள் பாதத்தில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு, இக்கோனியாவுக்குப் போனார்கள்.” அத்துடன் பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் கிறிஸ்தவம் முடிவுக்கு வந்துவிட்டதா? இல்லை! அந்த ஊரில் பவுலின் பேச்சைக் கேட்டு சீஷர்களாக ஆனவர்கள் “சந்தோஷத்தாலும் கடவுளுடைய சக்தியாலும் நிரப்பப்பட்டு வந்தார்கள்.”—அப். 13:50-52.
17-19. என்னென்ன விதங்களில் பவுலையும் பர்னபாவையும் நாம் பின்பற்றலாம், அப்படிச் செய்வது நமக்கு எப்படிச் சந்தோஷத்தைத் தரும்?
17 எதிர்ப்பைக் கண்டும் துவண்டுவிடாமல் இருந்த இந்த மிஷனரிகளின் முன்மாதிரி நமக்கு நல்ல பாடத்தைக் கற்றுத்தருகிறது. நல்ல செய்தியை சொல்வதற்கு இந்த உலகத்தில் இருக்கிற பிரபலமான ஆட்கள் முட்டுக்கட்டை போட்டாலும் நாம் நிறுத்திவிடுவதில்லை. அந்தியோகியாவிலிருந்த மக்கள் நல்ல செய்தியைக் கேட்காமல் போனபோது பவுலும் பர்னபாவும் என்ன செய்தார்கள் என்பதைக் கவனியுங்கள்: ‘தங்கள் பாதத்தில் படிந்த தூசியை உதறித்தள்ளினார்கள்’—இது கோபத்தை அல்ல, அவர்களுக்கு என்ன நடந்தாலும் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல என்பதையே காட்டியது. மற்றவர்கள் மாறுவார்களா இல்லையா என்பது தங்கள் கையில் இல்லை, ஆனால் தொடர்ந்து பிரசங்கிப்பது தங்கள் கையில் இருக்கிறது என்பதை இந்த மிஷனரிகள் தெரிந்து வைத்திருந்தார்கள். இக்கோனியாவுக்குப் போய் அதைத்தான் செய்தார்கள்!
18 அந்தியோகியாவில் நல்ல செய்தியை கேட்ட சீஷர்களைப் பற்றியென்ன? எதிர்ப்புகள் நிறைந்த ஒரு பகுதியில் அவர்கள் இருந்தது உண்மைதான். ஆனால், அவர்களுடைய சந்தோஷம் மக்களின் பிரதிபலிப்பைச் சார்ந்திருக்கவில்லை. “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று இயேசு சொன்னார். (லூக். 11:28) பிசீதியாவிலிருந்த அந்தியோகியாவில் வாழ்ந்த சீஷர்கள் அதைத்தான் செய்ய உறுதியாக இருந்தார்கள்.
19 பவுலையும் பர்னபாவையும் போல, நல்ல செய்தியை சொல்வதே நம் கடமை என்பதை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். நல்ல செய்தியைக் கேட்பதும் கேட்காமல் போவதும் அவரவர் விருப்பம். நாம் சொல்லும் செய்தியை மக்கள் ஏற்றுக்கொள்ளாதது போல் தோன்றினால் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். சத்தியத்தின் மதிப்பை உணர்ந்து கடவுளுடைய சக்தி நம்மை வழிநடத்த நாம் அனுமதித்தால், எதிர்ப்புகள் எரிமலையாக வெடித்தாலும், நாம் ஊழியத்தில் சந்தோஷம் காணலாம்.—கலா. 5:18, 22.
a பக்கம் 86-ல், “ பர்னபா—‘ஆறுதலின் மகன்’” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b இதற்குள் சீரியாவிலிருந்த அந்தியோகியா வரை, அதாவது எருசலேமுக்கு வடக்கே சுமார் 550 கிலோமீட்டர் வரை, சபைகள் உருவாகியிருந்தன.
c பக்கம் 87-ல், “ தரை வழியாக...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
d முதல் நூற்றாண்டில், ஒரு கப்பல் நாளொன்றுக்கு சுமார் 150 கிலோமீட்டர் வரை பயணித்தது; ஆனால், இது காற்று சாதகமாக வீசியபோதுதான். சாதகமற்ற சூழ்நிலைகளில் அதே தூரத்துக்கு போக பல நாட்கள் எடுத்தன.
e பக்கம் 89-ல், “ யூதர்களின் ஜெபக்கூடங்களில்...” என்ற பெட்டியைப் பாருங்கள்.
f சீப்புரு ரோமக் குடியரசின் ஆட்சிப்பேரவையின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. அந்தத் தீவின் பிரதான நிர்வாகி மாநில ஆளுநராக இருந்தார்.
g இது முதற்கொண்டு சவுல் என்பவர் பவுல் என்று அழைக்கப்படுகிறார். செர்கியு பவுலை கௌரவிப்பதற்காக அவர் இந்த ரோமப் பெயரைச் சூட்டிக்கொண்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், சீப்புருவிலிருந்து போன பிறகும்கூட பவுல் என்ற பெயரையே அவர் வைத்துக்கொண்டதைப் பார்க்கும்போது அதற்கு வேறு காரணம் இருக்க வேண்டுமெனத் தெரிகிறது. ஒருவேளை “மற்ற தேசத்து மக்களுக்கு . . . அப்போஸ்தலனாக” இருப்பதற்காக பவுல் என்ற ரோமப் பெயரையே அவர் பயன்படுத்தியிருக்கலாம். சவுல் என்ற எபிரெய பெயரின் கிரேக்க உச்சரிப்பு மோசமான அர்த்தமுடைய ஒரு கிரேக்க வார்த்தையை ஒத்திருந்ததால், அந்தக் காரணத்தினாலும் பவுல் என்ற பெயரையே அவர் பயன்படுத்தியிருக்கலாம்.—ரோ. 11:13.