Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 21

“எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல”

“எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல”

பவுலின் பக்திவைராக்கியமான ஊழியமும், மூப்பர்களுக்கு அவர் கொடுத்த ஆலோசனையும்

அப்போஸ்தலர் 20:1-38-ன் அடிப்படையில்

1-3. (அ) ஐத்திகு எப்படி இறந்தான்? (ஆ) பவுல் என்ன செய்தார், இந்தச் சம்பவம் பவுலைப் பற்றி என்ன காட்டுகிறது?

 பவுல் துரோவாவில் இருக்கிற ஒரு மாடி அறையில் இருக்கிறார்; சகோதரர்கள் கூட்டமாகக் கூடியிருக்கிறார்கள். அது, அவர்களோடு அவர் இருக்கப்போகும் கடைசி ராத்திரி என்பதால், ரொம்ப நேரம் பேச்சு கொடுத்துக்கொண்டிருக்கிறார். நடுராத்திரி ஆகிவிடுகிறது. அந்த அறையில் நிறைய விளக்குகள் எரிந்துகொண்டிருக்கின்றன; அதனால் அங்கே உஷ்ணமாகவும் புகைப்படலமாகவும் இருக்கிறது. அங்கே இருந்த ஒரு ஜன்னல் ஓரத்தில் ஐத்திகு என்ற இளைஞன் உட்கார்ந்திருக்கிறான். பவுலுடைய பேச்சைக் கேட்டபடியே அவன் நன்றாகத் தூங்கிவிடுகிறான், அதனால் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துவிடுகிறான்.

2 அவனுக்கு என்ன ஆனது என்று பார்ப்பதற்காக அங்கிருந்தவர்கள் கீழே ஓடிப்போகிறார்கள்; லூக்கா ஒரு மருத்துவர் என்பதால் ஒருவேளை அவர் முதலில் ஓடிப்போய்ப் பார்த்திருக்கலாம். ஐத்திகு “பிணமாக” கிடக்கிறான். (அப். 20:9) ஆனால், ஒரு அற்புதம் நடக்கிறது. பவுல் அவனை அணைத்துக்கொண்டு, அங்கிருந்தவர்களைப் பார்த்து, “கூச்சல் போடாதீர்கள், இவனுக்கு உயிர் வந்துவிட்டது” என்கிறார். ஆம், ஐத்திகுவை பவுல் உயிர்த்தெழுப்பிவிட்டார்!—அப். 20:10.

3 கடவுளுடைய சக்திக்கு இருக்கிற வல்லமையை இந்தச் சம்பவம் படம்பிடித்துக் காட்டுகிறது. ஐத்திகுவின் சாவுக்கு பவுலை யாரும் குற்றம்சாட்டியிருக்க முடியாது. ஆனாலும், அவனுடைய மரணம் அவரது முக்கியமான சந்திப்புக்குக் களங்கமாக ஆகிவிடுவதை அல்லது ஆன்மீக ரீதியில் யாருக்காவது இடறலாக ஆகிவிடுவதை பவுல் விரும்பவில்லை. அதனால் அவர் ஐத்திகுவை உயிர்த்தெழுப்பினார்; இதன் காரணமாக, சபையார் மிகுந்த ஆறுதலையும் ஊழியத்தைத் தொடர்ந்து செய்வதற்கான புதுத் தெம்பையும் பெற்றார்கள். மற்றவர்களுடைய உயிரை பவுல் உயர்வாக மதித்தார் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாகக் காட்டுகிறது. “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல” என்று அவர் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது, இல்லையா? (அப். 20:26) இது சம்பந்தமாக பவுலின் உதாரணம் நமக்கு எப்படி உதவும் என்று இப்போது சிந்திப்போம்.

“மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார்” (அப். 20:1, 2)

4. பவுல் என்ன பயங்கரமான பிரச்சினையை எதிர்ப்பட்டார்?

4 முந்தைய அதிகாரத்தில் பார்த்தபடி, பவுல் படுபயங்கரமான பிரச்சினையை எதிர்ப்பட்டார். எபேசுவில் அவர் செய்த ஊழியம் மிகுந்த அமளியை உண்டாக்கியது. அர்த்தமி தேவியின் வழிபாட்டை வைத்துப் பிழைப்பு நடத்திக்கொண்டிருந்த வெள்ளி ஆசாரிகள் ஒரு பெரிய கலவரத்தில் ஈடுபட்டார்கள். “கலவரம் ஓய்ந்த பின்பு சீஷர்களை பவுல் வரவழைத்து உற்சாகப்படுத்தினார். பின்பு, அவர்களை வழியனுப்பிவிட்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார்” என்று அப்போஸ்தலர் 20:1 சொல்கிறது.

5, 6. (அ) மக்கெதோனியாவில் பவுல் எவ்வளவு காலம் தங்கியிருந்திருக்கலாம், அங்கிருந்த சகோதரர்களுக்கு அவர் என்ன செய்தார்? (ஆ) பவுல் தன்னுடைய சகோதரர்களை எப்படிப் பார்த்தார்?

5 மக்கெதோனியாவுக்குப் போகும் வழியில், பவுல் துரோவா துறைமுகத்தில் இறங்கி, கொஞ்சக் காலம் செலவு செய்தார். கொரிந்துவுக்கு அனுப்பப்பட்ட தீத்து தன்னைச் சந்திக்க வருவார் என்று பவுல் எதிர்பார்த்தார். (2 கொ. 2:12, 13) ஆனால், தீத்து வரப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார்; அங்கே ஏறக்குறைய ஒரு வருஷம் தங்கி, “பல விஷயங்களைச் சொல்லி அங்கிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.” a (அப். 20:2) கடைசியில், தீத்து பவுலை மக்கெதோனியாவில் சந்தித்தார்; கொரிந்தியர்கள் பவுலுடைய முதல் கடிதத்தைப் படித்து மனந்திரும்பியதைப் பற்றிய நல்ல செய்தியை அவர் அப்போது பவுலிடம் சொன்னார். (2 கொ. 7:5-7) இதைக் கேட்ட பவுல், அவர்களுக்கு இன்னொரு கடிதத்தை எழுதத் தூண்டப்பட்டார்; அதுதான் 2 கொரிந்தியர்.

6 எபேசுவிலும் மக்கெதோனியாவிலும் இருந்த சகோதரர்களை பவுல் சந்தித்தது பற்றி லூக்கா விவரிக்கும்போது, “உற்சாகப்படுத்தினார்” என்ற வார்த்தையை இரண்டு முறை பயன்படுத்தினார். தன்னுடைய சகோதர சகோதரிகள்மேல் பவுலுக்கு இருந்த அக்கறையை இந்த வார்த்தை காட்டுகிறது, இல்லையா? மற்றவர்களை மட்டமானவர்களாகப் பார்த்த பரிசேயர்களைப் போல் இல்லாமல் பவுல் கிறிஸ்தவர்களைச் சக வேலையாட்களாகப் பார்த்தார். (யோவா. 7:47-49; 1 கொ. 3:9) அவர்களுக்குக் கடுமையான புத்திமதி வழங்கிய சமயத்தில்கூட அவர்களை அப்படித்தான் பார்த்தார்.—2 கொ. 2:4.

7. கிறிஸ்தவக் கண்காணிகள் இன்று பவுலின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?

7 இன்று, சபை மூப்பர்களும் வட்டாரக் கண்காணிகளும் பவுலுடைய முன்மாதிரியைப் பின்பற்ற அதிக முயற்சி எடுக்கிறார்கள். ஒரு நபரைக் கண்டிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுகூட, அவரைப் பலப்படுத்துவதில்தான் அவர்கள் குறியாக இருக்கிறார்கள். கண்டனம் செய்வதைவிட அனுதாபத்தோடு உற்சாகப்படுத்தவே அவர்கள் விரும்புகிறார்கள். அனுபவமுள்ள ஒரு வட்டாரக் கண்காணி இப்படிச் சொல்கிறார்: “நம்முடைய சகோதர சகோதரிகளில் நிறைய பேர் சரியானதைச் செய்யத்தான் விரும்புகிறார்கள்; ஆனால் விரக்தி, பயம், இயலாமை போன்ற உணர்ச்சிகளோடு அவர்கள் அடிக்கடி போராட வேண்டியிருக்கிறது.” இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு கண்காணிகள் பக்கபலமாக இருக்கிறார்கள்.—எபி. 12:12, 13.

“அவருக்கு எதிராகச் சதி” (அப். 20:3, 4)

8, 9. (அ) பவுலால் ஏன் தன் திட்டப்படி சீரியாவுக்குக் கப்பலேற முடியவில்லை? (ஆ) யூதர்கள் பவுலுக்கு எதிராக ஏன் பகையை வளர்த்திருக்கலாம்?

8 பவுல் மக்கெதோனியாவிலிருந்து கொரிந்துவுக்குப் போனார். b மூன்று மாதங்கள் அங்கே தங்கிய பிறகு, கெங்கிரேயாவுக்குப் போய் அங்கிருந்து சீரியாவுக்குக் கப்பலேறத் திட்டம் போட்டார். பின்பு, சீரியாவிலிருந்து எருசலேமுக்குப் போய், ஏழை எளிய சகோதரர்களிடம் நன்கொடைகளை ஒப்படைக்க நினைத்தார். c (அப். 24:17; ரோ. 15:25, 26) ஆனால் அப்போஸ்தலர் 20:3 சொல்கிறபடி, ‘யூதர்கள் அவருக்கு எதிராகச் சதி செய்ததால்’ அவர் தன் திட்டத்தை மாற்றிக்கொண்டார்.

9 யூதர்கள் பவுலுக்கு எதிராக பகை வளர்த்துக்கொண்டதில் ஆச்சரியமே இல்லை. ஏனென்றால், அவரை ஒரு விசுவாசதுரோகியாகத்தான் அவர்கள் நினைத்தார்கள். கொஞ்ச நாட்களுக்குமுன் கொரிந்துவிலிருந்த ஜெபக்கூடத்தில் முக்கியத் தலைவராக இருந்த கிறிஸ்பு என்பவர் பவுலுடைய பிரசங்கத்தைக் கேட்டு கிறிஸ்தவராகியிருந்தார். (அப். 18:7, 8; 1 கொ. 1:14) மற்றொரு சந்தர்ப்பத்தில், கொரிந்துவிலிருந்த யூதர்கள் பவுல்மீது பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அகாயா மாநிலத்தின் ஆளுநரான கல்லியோன் முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்குத் தகுந்த ஆதாரமில்லை என்று சொல்லி கல்லியோன் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தார்; இதன் காரணமாகவும் பவுல்மீது அவர்கள் ஆத்திரம் அடைந்திருந்தார்கள். (அப். 18:12-17) கொரிந்துவுக்குப் பக்கத்தில் இருந்த கெங்கிரேயாவிலிருந்து பவுல் சீக்கிரத்தில் கப்பலேறிவிடுவார் என்பது அந்த யூதர்களுக்குத் தெரிந்திருக்கலாம், அல்லது அப்படி அவர்கள் ஊகித்திருக்கலாம்; அதனால், அங்கே பதுங்கியிருந்து அவரைத் தாக்க சதி செய்தார்கள். அப்போது பவுல் என்ன செய்தார்?

10. பவுல் கெங்கிரேயாவுக்குப் போகாமல் இருந்ததால் அவர் ஒரு கோழை என்று சொல்ல முடியுமா? விளக்கவும்.

10 பவுல் தன்னுடைய பாதுகாப்பையும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நன்கொடைத் தொகையின் பாதுகாப்பையும் மனதில் வைத்து கெங்கிரேயாவுக்குச் செல்லாமல் மக்கெதோனியா வழியாகத் திரும்பிப் போனார். உண்மைதான், இப்படி தரைவழியாகப் பயணம் செய்வதும் ஆபத்தானதாக இருந்தது. அந்தக் காலத்தில் சாலையோரங்களில் பெரும்பாலும் கொள்ளைக்காரர்கள் பதுங்கியிருந்தார்கள். சத்திரங்கள்கூட ஆபத்தானவையாக இருந்தன. ஆனாலும், கெங்கிரேயாவுக்குப் போவதைவிட அது எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்து பவுல் அந்த வழியில் போக தீர்மானம் எடுத்தார். நல்லவேளை, அவர் தனியாகப் பயணம் செய்யவில்லை. அரிஸ்தர்க்கு, காயு, செக்குந்து, சோபத்தர், தீமோத்தேயு, துரோப்பீமு, தீகிக்கு ஆகியோர் அந்தச் சமயத்தில் அவரோடு போனார்கள்.—அப். 20:3, 4.

11. கிறிஸ்தவர்கள் இன்று தங்களைப் பாதுகாத்துக்கொள்ள என்ன முயற்சி எடுக்கிறார்கள், இந்த விஷயத்தில் இயேசு என்ன முன்மாதிரி வைத்தார்?

11 பவுலைப் போலவே, இன்று கிறிஸ்தவர்கள் ஊழியத்தின்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். சில பகுதிகளுக்கு, தனியாகப் போகாமல் கூட்டமாகப் போகிறார்கள்; இல்லாவிட்டால், இரண்டு இரண்டு பேராகப் போக முயற்சி செய்கிறார்கள். துன்புறுத்தலின்போது என்ன செய்கிறார்கள்? துன்புறுத்தலைத் தவிர்க்க முடியாது என்பது அவர்களுக்குத் தெரியும். (யோவா. 15:20; 2 தீ. 3:12) என்றாலும், அவர்கள் வேண்டுமென்றே ஆபத்தை விலைக்கு வாங்குவதில்லை. இயேசுவின் உதாரணத்தைக் கவனியுங்கள். ஒரு சமயம், எருசலேமிலிருந்த எதிரிகள் அவர்மீது கல்லெறிய முயற்சி செய்தபோது, “இயேசு அவர்களிடமிருந்து நழுவி ஆலயத்தைவிட்டு வெளியே போனார்.” (யோவா. 8:59) பிற்பாடு, யூதர்கள் அவரைக் கொல்ல சதி செய்தபோது, ‘யூதர்கள் மத்தியில் இயேசு வெளிப்படையாக நடமாடாமல், அங்கிருந்து புறப்பட்டு, வனாந்தரத்துக்குப் பக்கத்திலிருந்த நகரத்துக்குப் போனார்.’ (யோவா. 11:54) தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இயேசு முடிந்தளவு முயற்சிகளை எடுத்தார், ஆனால் அவை கடவுளுடைய விருப்பத்துக்கு எதிராக இல்லாதபடி பார்த்துக்கொண்டார். இன்று கிறிஸ்தவர்களும் அப்படியே செய்கிறார்கள்.—மத். 10:16.

“அளவில்லாத ஆறுதல் அடைந்தார்கள்” (அப். 20:5-12)

12, 13. (அ) ஐத்திகுவின் உயிர்த்தெழுதலைப் பார்த்த சகோதரர்கள் எப்படி உணர்ந்தார்கள்? (ஆ) பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களை மரணத்தில் பறிகொடுத்தவர்களுக்கு இன்று எந்த நம்பிக்கை ஆறுதலளிக்கிறது?

12 பவுலும் அவருடைய நண்பர்களும் மக்கெதோனியா வழியாக ஒன்றாகப் பயணம் செய்தார்கள், அதன்பின் வெவ்வேறு வழிகளில் போனதாகத் தெரிகிறது. பிறகு, அவர்கள் துரோவாவில் ஒன்றாக சேர்ந்தார்கள். d இதைப் பற்றி லூக்கா இப்படிச் சொல்கிறார்: “ஐந்து நாட்களுக்குள் துரோவாவிலிருந்த அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம்.” e (அப். 20:6) இங்கேதான் ஐத்திகு என்ற இளைஞன் உயிர்த்தெழுப்பப்பட்டான் என்று இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தோம். தங்களோடு இருந்த ஐத்திகுவை மீண்டும் உயிரோடு பார்த்த சகோதரர்கள் எந்தளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள் என்று கற்பனை செய்துபாருங்கள்! அவர்கள் “அளவில்லாத ஆறுதல் அடைந்தார்கள்” என்று பதிவு சொல்கிறது.—அப். 20:12.

13 உண்மைதான், இப்படிப்பட்ட அற்புதங்கள் இன்று நடப்பதில்லை. இருந்தாலும், தங்கள் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களை மரணத்தில் பறிகொடுத்திருப்பவர்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையால் ‘அளவில்லாத ஆறுதல் அடைகிறார்கள்.’ (யோவா. 5:28, 29) இந்தக் குறிப்பை யோசித்துப் பாருங்கள்: ஐத்திகு பாவமுள்ள மனிதனாக இருந்ததால், காலப்போக்கில் மறுபடியும் இறந்துபோனான். (ரோ. 6:23) ஆனால், புதிய உலகத்தில் உயிர்த்தெழுப்பப்படுபவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்கள்! இயேசுவோடு ஆட்சி செய்ய பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்கள் சாவாமையை அடைவார்கள். (1 கொ. 15:51-53) அதனால், இன்று பரலோக நம்பிக்கை உள்ளவர்களும் சரி, பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, ‘அளவில்லாத ஆறுதல் அடைகிறார்கள்.’—யோவா. 10:16.

“பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” (அப். 20:13-24)

14. மிலேத்துவில் தன்னைச் சந்தித்த எபேசு சபை மூப்பர்களிடம் பவுல் என்ன சொன்னார்?

14 பவுலும் அவருடைய நண்பர்களும் துரோவாவிலிருந்து ஆசோவுக்குப் போனார்கள்; பின்பு, மித்திலேனே, கீயு, சாமு, மிலேத்து ஆகிய இடங்களுக்குப் போனார்கள். பெந்தெகொஸ்தே பண்டிகைக்குள் எருசலேமுக்குப் போய்விட வேண்டும் என்பதில் பவுல் குறியாக இருந்தார். அவர் அந்தளவு அவசரத்தில் இருந்ததால்தான், எபேசு வழியாகப் போகாமல் வேறு வழியாகப் போகும் கப்பலில் செல்ல முடிவு செய்தார். என்றாலும், எபேசுவிலிருந்த மூப்பர்களைச் சந்தித்துப் பேச விரும்பியதால் மிலேத்துவில் வந்து தன்னைப் பார்க்கும்படி அவர்களைக் கேட்டுக்கொண்டார். (அப். 20:13-17) அவர்கள் வந்துசேர்ந்ததும் அவர்களிடம் பவுல், “நான் ஆசிய மாகாணத்துக்கு வந்து உங்களோடிருந்த நாள்முதல் எப்படி நடந்துகொண்டேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். யூதர்களுடைய சதித்திட்டங்களால் ஏற்பட்ட சோதனைகளின்போது நான் மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் எஜமானுக்கு ஊழியம் செய்தேன். நன்மையான எல்லாவற்றையும் உங்களுக்குச் சொன்னேன். பொது இடங்களிலும் வீடு வீடாகவும் உங்களுக்குக் கற்பித்தேன். அதோடு, கடவுளிடம் மனம் திருந்தி வருவதைப் பற்றியும், நம்முடைய எஜமானாகிய இயேசுமேல் விசுவாசம் வைப்பதைப் பற்றியும் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் முழுமையாகச் சாட்சி கொடுத்தேன்” என்று சொன்னார்.—அப். 20:18-21.

15. வீட்டுக்கு வீடு ஊழியம் ஏன் பிரசங்கிப்பதற்கான முக்கிய வழியாக இருந்து வந்திருக்கிறது?

15 மக்களிடம் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க இன்று நமக்கு ஏராளமான வழிகள் இருக்கின்றன. நாம் பவுலைப் போலவே, மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் போய்ப் பிரசங்கிக்கிறோம், அதாவது பேருந்து நிறுத்தங்களுக்கும், மக்கள் அதிகமாக இருக்கும் தெருக்களுக்கும், சந்தைகளுக்கும் போய்ப் பிரசங்கிக்கிறோம். இருந்தாலும், வீட்டுக்கு வீடு ஊழியம்தான் யெகோவாவின் சாட்சிகள் பிரசங்கிக்கிற முக்கிய வழியாக இருந்து வந்திருக்கிறது. ஏன்? ஒரு காரணம், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைக் கேட்பதற்கு எல்லாருக்குமே அது ஏராளமான வாய்ப்புகளை அளித்து, கடவுள் பாரபட்சமற்றவர் என்பதைக் காட்டுகிறது. இன்னொரு காரணம், நல்மனமுள்ளவர்கள் தனிப்பட்ட விதத்தில் உதவிகளைப் பெற அது கைகொடுக்கிறது. மூன்றாவது காரணம், ஊழியம் செய்கிறவர்களுடைய விசுவாசத்தையும் சகிப்புத்தன்மையையும் அது பலப்படுத்துகிறது. சொல்லப்போனால், “பொது இடங்களிலும் வீடு வீடாகவும்” பக்திவைராக்கியத்துடன் பிரசங்கிப்பதுதான் இன்று உண்மைக் கிறிஸ்தவர்களுடைய அடையாளம்.

16, 17. பவுல் எப்படி அஞ்சாநெஞ்சத்துடன் செயல்பட்டார், கிறிஸ்தவர்கள் இன்று எப்படி அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்?

16 எருசலேமில் தனக்கு என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்று பவுல் எபேசு சபை மூப்பர்களிடம் சொன்னார். “ஆனாலும், என் உயிர் எனக்கு முக்கியமல்ல, எஜமானாகிய இயேசுவிடமிருந்து நான் பெற்ற ஊழியத்தைச் செய்து முடிப்பதுதான் எனக்கு முக்கியம். ஆம், கடவுளுடைய அளவற்ற கருணையைப் பற்றிய நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுத்து என் ஓட்டத்தை முடிப்பதுதான் எனக்கு முக்கியம்” என்று அவர் விளக்கினார். (அப். 20:24) பவுல் அஞ்சாநெஞ்சத்துடன் தன் ஊழியத்தைச் செய்தார்; உடல்நலக் குறைவு, கடும் எதிர்ப்பு போன்ற எந்தச் சூழ்நிலையிலும் ஊழியத்தை விட்டுவிடவில்லை.

17 இன்றும் கிறிஸ்தவர்கள் ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சகிக்க வேண்டியிருக்கிறது. சிலர் அரசாங்கத் தடை உத்தரவுகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்ப்படுகிறார்கள். வேறு பலர், உடல் ரீதியான பிரச்சினைகளையும் மன ரீதியான பிரச்சினைகளையும் எதிர்த்து தைரியமாகப் போராடி வருகிறார்கள். கிறிஸ்தவ இளைஞர்கள் சக மாணவர்களின் தொல்லைகளைச் சமாளிக்கிறார்கள். இருந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் பவுலைப் போலவே விசுவாசத்தில் தளராமல் உறுதியாக நிற்கிறார்கள். ‘நல்ல செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுக்க’ அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

“உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள்” (அப். 20:25-38)

18. எந்த மனுஷனுடைய சாவுக்கும் தான் பொறுப்பல்ல என்று பவுலால் எப்படிச் சொல்ல முடிந்தது, எபேசு சபை மூப்பர்களாலும் எப்படி அதேபோல் சொல்ல முடியும்?

18 அடுத்ததாக, பவுல் தன்னையே உதாரணமாகக் காட்டி எபேசு சபை மூப்பர்களுக்கு ஒளிவுமறைவில்லாமல் புத்திமதி கொடுத்தார். ஆனால், அதற்குமுன் அவர்களைச் சந்திப்பது அதுவே கடைசி தடவையாக இருக்கலாம் என்று சொன்னார். அதன்பின், “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல. . . . கடவுளுடைய நோக்கங்களில் ஒன்றைக்கூட மறைத்து வைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று சொன்னார். எபேசு சபை மூப்பர்கள் பவுலைப் போலவே எப்படி எந்த மனுஷனுடைய சாவுக்கும் பொறுப்பில்லாமல் இருக்க முடியும்? அதற்கு பவுலே சொன்ன பதிலைக் கவனியுங்கள். “உங்களுக்கும் மந்தை முழுவதுக்கும் கவனம் செலுத்துங்கள். கடவுளுடைய சபையாகிய அந்த மந்தையை மேய்ப்பதற்குக் கடவுளுடைய சக்தி உங்களைக் கண்காணிகளாக நியமித்திருக்கிறது. கடவுள் தன்னுடைய சொந்த மகனின் இரத்தத்தால் வாங்கிய சபை அது” என்று சொன்னார். (அப். 20:26-28) அதோடு, “கொடிய ஓநாய் போன்ற ஆட்கள் உங்கள் நடுவில் நுழைவார்கள்” என்றும், “சீஷர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொள்வதற்காக உண்மைகளைத் திரித்துச் சொல்வார்கள்” என்றும் அவர்களை எச்சரித்தார். அதனால் அந்த மூப்பர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? “விழிப்புடன் இருங்கள். மூன்று வருஷங்கள் ராத்திரி பகலாக நான் கண்ணீரோடு உங்கள் ஒவ்வொருவருக்கும் விடாமல் புத்தி சொன்னதை ஞாபகத்தில் வையுங்கள்” என்று பவுல் சொன்னார்.—அப். 20:29-31.

19. முதல் நூற்றாண்டின் கடைசிக்குள் என்ன விசுவாசதுரோகம் முகங்காட்ட ஆரம்பித்தது, இதனால் பிற்பாடு வந்த நூற்றாண்டுகளில் என்ன நடந்தது?

19 “கொடிய ஓநாய் போன்ற ஆட்கள்” முதல் நூற்றாண்டின் கடைசிக்குள் முகங்காட்ட ஆரம்பித்தார்கள். கி.பி. 98 வாக்கில், அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “இப்போதே அந்திக்கிறிஸ்துக்கள் நிறைய பேர் வந்திருக்கிறார்கள்; . . . அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஏனென்றால் அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் நம்மிடமே இருந்திருப்பார்கள்.” (1 யோ. 2:18, 19) மூன்றாம் நூற்றாண்டுக்குள், விசுவாசதுரோகத்தின் காரணமாகக் கிறிஸ்தவமண்டல குருமார்களின் தொகுதி தோன்ற ஆரம்பித்தது; நான்காம் நூற்றாண்டில் இந்தப் போலி கிறிஸ்தவத்துக்கு பேரரசர் கான்ஸ்டன்டைன் அரச அங்கீகாரம் கொடுத்தார். மற்ற மதச் சடங்குகளை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு “கிறிஸ்தவ” முகமூடியைக் கொடுத்ததன் மூலம் மதத் தலைவர்கள் ‘உண்மைகளைத் திரித்துச் சொன்னார்கள்.’ அந்த விசுவாசதுரோகத்தின் பாதிப்புகளை இன்றுகூட கிறிஸ்தவமண்டல போதனைகளிலும் சம்பிரதாயங்களிலும் பார்க்கலாம்.

20, 21. பவுல் எப்படி தியாகம் செய்யும் மனப்பான்மையைக் காட்டினார், இன்று கிறிஸ்தவ மூப்பர்களும் அதை எப்படிக் காட்டலாம்?

20 மந்தையிடமிருந்து ஆதாயம் பெறுகிற இந்த மதத் தலைவர்கள் எங்கே, சுய தியாக வாழ்க்கை வாழ்ந்த பவுல் எங்கே! சபைக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக பவுல் தன் சொந்தக் காலில் நின்று, தன் தேவைகளைக் கவனித்துக்கொண்டார். சொந்த ஆதாயத்தைத் தேடாமல் இயேசுவின் சீஷர்களுக்கு உதவி செய்தார். அதுமட்டுமல்ல, தியாகம் செய்யும் மனப்பான்மையைக் காட்டும்படி எபேசு சபை மூப்பர்களையும் கேட்டுக்கொண்டார். “பலவீனமானவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றும், “‘வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது’ என்று எஜமானாகிய இயேசு சொன்ன வார்த்தைகளை மறந்துவிடாதீர்கள்” என்றும் சொன்னார்.—அப். 20:35.

21 பவுலைப் போலவே, இன்று கிறிஸ்தவ மூப்பர்கள் தியாகம் செய்யும் மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். மந்தைகளின் ‘இரத்தத்தை உறிஞ்சும்’ இன்றைய கிறிஸ்தவமண்டல குருமார்களைப் போல் அவர்கள் இல்லை; ஆம், ‘கடவுளுடைய சபையாகிய மந்தையை மேய்க்கிற’ இவர்கள் தங்களுடைய கடமைகளைச் சுயநலம் பார்க்காமல் செய்கிறார்கள். கர்வமாக இருக்கிறவர்களுக்கும் பதவி ஆசை பிடித்தவர்களுக்கும் கிறிஸ்தவச் சபையில் இடமில்லை; ஏனென்றால், ‘தனக்குத் தானே புகழ் தேடுகிறவர்கள்’ கண்டிப்பாக அழிந்துபோவார்கள். (நீதி. 25:27) அகங்காரம் அவமானத்தில்தான் போய் முடியும்.—நீதி. 11:2.

‘அவர்கள் எல்லாரும் கதறி அழுதார்கள்.’—அப்போஸ்தலர் 20:38

22. எபேசு சபை மூப்பர்கள் பவுலை ஏன் உயிருக்கு உயிராக நேசித்தார்கள்?

22 பவுல் காட்டிய உண்மையான அன்பில் நெகிழ்ந்துபோன எபேசு சபை மூப்பர்கள் அவரை உயிருக்கு உயிராக நேசித்தார்கள். சொல்லப்போனால், அவர் பிரிந்துபோக வேண்டிய நேரம் வந்தபோது, “அவர்கள் எல்லாரும் கதறி அழுது, அவரைக் கட்டிப்பிடித்து, பாசத்தோடு முத்தம் கொடுத்தார்கள்.” (அப். 20:37, 38) பவுலைப் போலவே சுயநலமாக நடந்துகொள்ளாமல் மந்தைக்காகத் தங்களையே தியாகம் செய்கிறவர்களைக் கிறிஸ்தவர்கள் உண்மையிலேயே மதிக்கிறார்கள், நேசிக்கிறார்கள். அப்படியென்றால், “எந்த மனுஷனுடைய சாவுக்கும் நான் பொறுப்பல்ல” என்று பவுல் சொன்னபோது அவர் பெருமையடிக்கவும் இல்லை, மிகைப்படுத்தவும் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள், இல்லையா?—அப். 20:26.

a மக்கெதோனியாவிலிருந்து பவுல் எழுதிய கடிதங்கள்” என்ற பெட்டியை இதே பக்கத்தில் பாருங்கள்.

b பவுல் கொரிந்துவுக்கு வந்திருந்த இந்தச் சமயத்தில் ரோமர் கடிதத்தை எழுதியிருக்கலாம்.

c பவுல் நிவாரணத் தொகையை ஒப்படைக்கிறார்” என்ற பெட்டியை, பக்கம் 169-ல் பாருங்கள்.

d அப்போஸ்தலர் 20:5, 6-ல் லூக்கா தன்னையும் உட்படுத்திப் பேசுகிறார்; அதனால், ஏற்கெனவே கொஞ்சக் காலம் பிலிப்பியில் இருந்த லூக்கா, அங்கே பவுல் வந்ததும் மீண்டும் அவரோடு சேர்ந்துகொண்டார் என்று தெரிகிறது.—அப். 16:10-17, 40.

e பிலிப்பியிலிருந்து துரோவாவுக்குக் கப்பலில் போக முன்பு அவர்களுக்கு இரண்டு நாள்தான் எடுத்தது; ஆனால், இந்த முறை ஐந்து நாள் எடுத்தது. ஒருவேளை, எதிர்க்காற்று வீசியது இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.—அப். 16:11.