Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அதிகாரம் 20

‘யெகோவாவின் வார்த்தை பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது’

‘யெகோவாவின் வார்த்தை பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது’

நல்ல செய்தி பரவுவதில் அப்பொல்லோவுக்கும் பவுலுக்கும் இருந்த பங்கு

அப்போஸ்தலர் 18:23–19:41-ன் அடிப்படையில்

1, 2. (அ) எபேசுவில் பவுலுக்கும் அவருடைய நண்பர்களுக்கும் என்ன ஆபத்து வந்தது? (ஆ) இந்த அதிகாரத்தில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

 எபேசு நகரத்தின் தெருக்கள் எங்கும் ஒரே கூட்டம், கூச்சல், கூக்குரல். ஆட்கள் திமுதிமுவென ஓடுகிறார்கள். ஒரு கும்பல் சேர்ந்துவிட்டது, ஒரு பெரிய கலவரம் வெடிக்கப்போகிறது! அப்போஸ்தலன் பவுலின் பயண நண்பர்களில் இரண்டு பேர் தரதரவென இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த முரட்டுக் கும்பல், 25,000 பேர் உட்காரக்கூடிய மாபெரும் திறந்தவெளி அரங்கம் ஒன்றுக்குள் ஆவேசமாக நுழைகிறது; கடைகள் நிறைந்த அகலமான தெருக்களில் உள்ள ஆட்களும் கும்பலோடு கும்பலாகச் சேர்ந்துகொள்கிறார்கள்; அந்தத் தெருக்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வெறிச்சோடி போகின்றன. பெரும்பாலான மக்களுக்கு இந்தக் கலவரத்துக்கான காரணம் என்ன என்றே தெரிவதில்லை; ஆனால், தங்கள் கோவிலுக்கும் தங்கள் இஷ்ட தேவதையான அர்த்தமியின் வழிபாட்டுக்கும் ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அதனால், வெறிபிடித்தவர்கள் போல் “எபேசியர்களின் அர்த்தமியே மகா தேவி!” என்று விடாமல் கோஷம் போட ஆரம்பிக்கிறார்கள்.—அப். 19:34.

2 கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி பரவாமல் இருப்பதற்காகச் சாத்தான் மறுபடியும் கலகக் கும்பலைப் பயன்படுத்துவதை நாம் இங்கே கவனிக்கிறோம். இருந்தாலும், இப்படிப்பட்ட தாக்குதல் அவனுடைய சதிவேலைகளில் ஒன்று மட்டுமே. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் ஊழியத்தையும் ஒற்றுமையையும் கெடுத்துப்போட அவன் செய்த மற்ற சதிவேலைகளைப் பற்றி நாம் இந்த அதிகாரத்தில் பார்ப்போம். அதைவிட முக்கியமாக, எப்படி அவனுடைய சதிவேலைகள் எல்லாமே தோல்வியடைந்தன என்பதையும், எப்படி “யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது” என்பதையும் பற்றிப் பார்ப்போம். (அப். 19:20) அப்படியென்றால், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களால் சாத்தானை எப்படி ஜெயிக்க முடிந்தது? நம்மால் எப்படி ஜெயிக்க முடிகிறதோ அப்படியே அவர்களாலும் ஜெயிக்க முடிந்தது. யெகோவாதான் வெற்றி தருகிறார் என்று நாம் நம்பினாலும், நம் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதோடு, ஊழியத்தைச் சிறப்பாகச் செய்ய உதவுகிற குணங்களை யெகோவாவுடைய சக்தியின் உதவியோடு வளர்த்துக்கொள்கிறோம். சரி, இப்போது அப்பொல்லோவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

“வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்” (அப். 18:24-28)

3, 4. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அப்பொல்லோவிடம் என்ன குறை இருப்பதைப் பார்த்தார்கள், அந்தக் குறையை சரிசெய்ய அவர்கள் என்ன செய்தார்கள்?

3 பவுல் தன்னுடைய மூன்றாவது மிஷனரி பயணத்தின்போது எபேசுவுக்குப் போய்க்கொண்டிருந்தார்; அந்தச் சமயத்தில், அப்பொல்லோ அந்த நகரத்துக்கு வந்தார். அவர் எகிப்திலுள்ள அலெக்சந்திரியா என்ற பிரபல நகரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு அருமையான குணங்கள் இருந்தன. அவர் திறமையாகப் பேச்சு கொடுப்பவராக இருந்தார். அதோடு, “வேதவசனங்களை நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார்.” அதுமட்டுமல்ல, “கடவுளுடைய சக்தியினால் நிறைந்து ஆர்வத்துடிப்போடு” செயல்பட்டார். ஜெபக்கூடத்தில் கூடியிருந்த யூதர்களிடம் அவர் வைராக்கியத்துடனும் தைரியத்துடனும் பிரசங்கித்தார்.—அப். 18:24, 25.

4 அப்பொல்லோ கொடுத்த பேச்சை ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் கேட்டார்கள். அவர் “இயேசுவைப் பற்றிய விஷயங்களை . . . திருத்தமாக” கற்பித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்து நிச்சயம் சந்தோஷப்பட்டிருப்பார்கள். அவை துல்லியமாக இருந்தன. ஆனாலும், அவருக்கு முக்கியமான ஒரு விஷயம் தெரிந்திருக்கவில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டார்கள்: “யோவான் பிரசங்கித்த ஞானஸ்நானத்தைப் பற்றி மட்டுமே அவருக்குத் தெரிந்திருந்தது.” கூடாரத் தொழில் செய்து எளிமையாக வாழ்ந்துவந்த இந்தத் தம்பதி, அப்பொல்லோவின் பேச்சு திறமையையும் படிப்பறிவையும் பார்த்து பயந்து அவருக்கு உதவாமல் இருந்துவிடவில்லை. பதிலாக, “அவரைத் தங்களோடு கூட்டிக்கொண்டுபோய், கடவுளுடைய வழிகளைப் பற்றி இன்னும் திருத்தமாக அவருக்கு விளக்கினார்கள்.” (அப். 18:25, 26) அப்போது, அவர் என்ன செய்தார்? கிறிஸ்தவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியக் குணமான மனத்தாழ்மையைக் காட்டினார்.

5, 6. யெகோவாவுக்குப் பிரயோஜனமானவராக இருக்க எது அப்பொல்லோவுக்கு உதவியது, அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் செய்த உதவியை அப்பொல்லோ ஏற்றுக்கொண்டார்; அதனால், இன்னும் திறமையான ஊழியரானார். அவர் அகாயாவுக்குப் போய், அங்கிருந்த சகோதரர்களுக்கு “அதிக உதவியாக இருந்தார்.” இயேசு முன்னுரைக்கப்பட்ட மேசியா அல்ல என்று வாதாடிய யூதர்களிடமும் அருமையாகச் சாட்சி கொடுத்தார். அவரைப் பற்றி லூக்கா இப்படி எழுதினார்: “இயேசுவே கிறிஸ்து என்று வேதவசனங்களிலிருந்து எடுத்துக் காட்டி, யூதர்களுடைய போதனைகள் தவறென்று முழுமையாகவும் வெளிப்படையாகவும் மிகத் தீவிரமாகவும் நிரூபித்துவந்தார்.” (அப். 18:27, 28) கிறிஸ்தவச் சபைக்கு அவர் உண்மையிலேயே ஒரு வரமாக இருந்தார். “யெகோவாவின் வார்த்தை” தடைகளையெல்லாம் வென்றுவந்ததற்கு அப்பொல்லோவும் ஒரு காரணமாக இருந்தார். அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

6 கிறிஸ்தவர்களாக நாம் மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வது மிகமிக அவசியம். நம் ஒவ்வொருவருக்கும் திறமை, அனுபவம், அறிவு என்று நிறைய வரங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவை எல்லாவற்றையும்விட மனத்தாழ்மைதான் நம்மிடம் பளிச்சென்று தெரிய வேண்டும். இல்லையென்றால், நம் வரங்களே நமக்குச் சாபமாகிவிடும். கர்வம் என்ற விஷச் செடி நமக்குள் ஆழமாக வேர்விட்டுவிடும். (1 கொ. 4:7; யாக். 4:6) நாம் உண்மையிலேயே மனத்தாழ்மையோடு இருந்தால், மற்றவர்களை நம்மைவிட மேலானவர்களாகப் பார்க்க முயற்சி செய்வோம். (பிலி. 2:3) நம்மை யாராவது கண்டித்துத் திருத்தும்போது கோபப்பட மாட்டோம், மற்றவர்கள் நமக்குக் கற்றுக்கொடுக்கும்போது காதுகளை அடைத்துக்கொள்ள மாட்டோம். அதோடு, கடவுளுடைய சக்தி வெளிப்படுத்துகிற ஒரு புதிய கருத்தைத் தெரிந்துகொண்ட பின்பு நம்முடைய கருத்துதான் சரி என்று அகந்தையாக வாதாட மாட்டோம். நாம் மனத்தாழ்மையாக இருக்கும்வரைதான் யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் பிரயோஜனமானவர்களாக இருப்போம்.—லூக். 1:51, 52.

7. பவுலும் அப்பொல்லோவும் மனத்தாழ்மைக்கு எப்படி நல்ல முன்மாதிரிகளாக இருந்தார்கள்?

7 மனத்தாழ்மை இருந்தால் பகையும் பிரிவினையும் இருக்காது. அன்றிருந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினைகளை ஏற்படுத்த சாத்தான் எவ்வளவு ஆர்வமாக இருந்திருப்பான் என்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். செயல்வீரர்களான அப்பொல்லோவும் பவுலும் எதிரிகளாகி, சபைகளில் செல்வாக்கைப் பெற போட்டிப் போட்டுக்கொண்டு இருந்திருந்தால், சாத்தானுக்கு நிச்சயம் கொண்டாட்டமாக இருந்திருக்கும்! சொல்லப்போனால், சூழ்நிலையும் அதற்குச் சாதகமாகவே இருந்தது; ஏனென்றால், கொரிந்துவிலிருந்த சிலர் “நான் பவுலைச் சேர்ந்தவன்” என்றும், சிலர் “நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவன்” என்றும் சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். ஆனால், பவுலும் அப்பொல்லோவும் இப்படிப்பட்ட பிரிவினை என்ற தீயை மூட்டிவிட்டார்களா? இல்லை! ஊழியத்தில் அப்பொல்லோ நிறைய செய்தார் என்பதை பவுல் மனத்தாழ்மையோடு ஒத்துக்கொண்டு, அவருக்கு இன்னும் நிறைய பொறுப்புகளைக் கொடுத்தார். அப்பொல்லோவும் பவுலுடைய அறிவுரையின்படி நடந்தார். (1 கொ. 1:10-12; 3:6, 9; தீத். 3:12, 13) மனத்தாழ்மையோடு ஒத்துழைப்பதில் இவர்கள் நமக்கு எப்பேர்ப்பட்ட முன்மாதிரிகள்!

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பக்குவமாக நியாயங்காட்டிப் பேசிவந்தார்” (அப். 18:23; 19:1-10)

8. எபேசுவுக்கு பவுல் எந்தப் பாதையில் போனார், ஏன்?

8 எபேசுவுக்குத் திரும்பி வரப்போவதாக பவுல் வாக்குக் கொடுத்திருந்தார், கொடுத்த வாக்கை நிறைவேற்றினார். a (அப். 18:20, 21) ஆனால், அவர் அங்கே எப்படிப் போனார் என்று கவனியுங்கள். முந்தின அதிகாரத்தில், அவர் சீரியாவிலுள்ள அந்தியோகியாவில் இருந்ததாக வாசித்தோம். அப்படியென்றால் அவர் எபேசுவுக்கு போய்ச்சேர பக்கத்திலிருந்த செலூகியாவுக்குப் போய், அங்கிருந்து கப்பலேறியிருந்தால் சுலபமாக இருந்திருக்கும். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், “மலைப்பகுதிகள் வழியாக” போனார். அப்போஸ்தலர் 18:23-லும் 19:1-லும் இருக்கிற குறிப்பைப் பார்க்கும்போது அவர் ஏறக்குறைய 1,600 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்திருக்க வேண்டும் என்று ஒரு புத்தகம் சொல்கிறது. பவுல் ஏன் இப்படியொரு கஷ்டமான பாதையைத் தேர்ந்தெடுத்தார்? அந்தப் பகுதிகளிலிருந்த ‘சீஷர்கள் எல்லாரையும் பலப்படுத்துவதற்காகவே.’ (அப். 18:23) அவருடைய மூன்றாம் மிஷனரி பயணம் முந்தைய இரண்டு மிஷனரி பயணங்களைப் போலவே சவால்மிக்கதாக இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருந்தது; ஆனாலும் அந்தச் சவாலை அவர் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். வட்டாரக் கண்காணிகளும் அவருடைய மனைவிகளும் இன்று அதே மனநிலையைக் காட்டுகிறார்கள். அவர்களுடைய சுய தியாக அன்புக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், இல்லையா?

9. சீஷர்கள் சிலர் ஏன் மறுபடியும் ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது, அவர்களிடமிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?

9 பவுல் எபேசுவுக்கு வந்துசேர்ந்தபோது, யோவான் ஸ்நானகருடைய சீஷர்களில் சுமார் 12 பேரைப் பார்த்தார். அவர்கள் யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை மட்டுமே பெற்றிருந்தார்கள். அதுமட்டுமல்ல, கடவுளுடைய சக்தியை எப்படிப் பெற்றுக்கொள்வதென்று அவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தெரிந்திருக்கவில்லை. இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் பெறுவது பற்றி பவுல் அப்போது அவர்களுக்கு விளக்கினார்; அப்பொல்லோவைப் போலவே மனத்தாழ்மையோடும் ஆர்வத்தோடும் அவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டார்கள். இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, அவர்கள் கடவுளுடைய சக்தியையும் அற்புத வரங்கள் சிலவற்றையும் பெற்றுக்கொண்டார்கள். நமக்கு என்ன பாடம்? யெகோவாவுடைய அமைப்பு செய்கிற மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொண்டு நடப்பது நிச்சயமாகவே ஆசீர்வாதங்களைத் தரும்.—அப். 19:1-7.

10. பவுல் ஏன் ஜெபக்கூடத்தைவிட்டு ஒரு பள்ளி அரங்கத்துக்குப் போய் பேச்சுகளைக் கொடுத்தார், ஊழியத்தில் இது நமக்கு எப்படி ஒரு முன்மாதிரி?

10 சீக்கிரத்திலேயே இன்னொரு மாற்றம் ஏற்பட்டது. பவுல் மூன்று மாதங்களுக்கு ஜெபக்கூடங்களில் தைரியமாகப் பிரசங்கித்தார். அவர் ‘கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி . . . பக்குவமாக நியாயங்காட்டிப் பேசிவந்தாலும்’ சிலர் காதுகொடுத்துக் கேட்காமல் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள். கிறிஸ்தவ ‘மார்க்கத்தைப் பற்றி . . . கேவலமாகப் பேசிய’ ஆட்களிடம் பிரசங்கித்து நேரத்தை வீணாக்காமல், பவுல் ஒரு பள்ளி அரங்கத்தில் பேச்சுகளைக் கொடுக்க ஆரம்பித்தார். (அப். 19:8, 9) ஆன்மீக ரீதியில் முன்னேற விரும்பியவர்கள் இனி ஜெபக்கூடத்திலிருந்து பள்ளி அரங்கத்துக்கு மாறிப்போக வேண்டியிருந்தது. நாமும்கூட பவுலைப் போலவே, நல்ல செய்தியைக் கேட்க விரும்பாதவர்களிடமும் விதண்டாவாதம் செய்கிறவர்களிடமும் பேசி நேரத்தை வீணாக்காமல் அங்கிருந்து போய்விடலாம். ஏனென்றால், நல்ல செய்தியைக் கேட்க மனமுள்ள செம்மறியாடு போன்ற ஆட்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்.

11, 12. (அ) பவுல் எப்படிப் படு சுறுசுறுப்பானவராக, சூழ்நிலைக்கு ஏற்றபடி சாட்சி கொடுப்பவராக இருந்தார்? (ஆ) பவுலைப் போலவே யெகோவாவின் சாட்சிகள் இன்று எப்படியெல்லாம் சாட்சி கொடுக்க முயற்சி எடுக்கிறார்கள்?

11 அந்தப் பள்ளி அரங்கத்தில் பவுல் தினந்தோறும் காலை சுமார் 11 மணியிலிருந்து மாலை சுமார் 4 மணிவரை பேச்சுகளைக் கொடுத்திருக்கலாம். (அப். 19:9) அது அமைதியான, ஆனால் மிகவும் சூடான நேரமாக இருந்தது; அநேகருக்கு அது, சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வெடுக்கும் நேரமாக இருந்தது; அந்த நேரத்தில் அவர் பேச்சுகளைக் கொடுத்தார். பவுல் இப்படி இரண்டு வருஷங்களுக்குக் கடினமாக உழைத்திருந்தார் என்றால், கிட்டத்தட்ட 3,000 மணிநேரம், அதாவது ஒவ்வொரு மாதமும் 125 மணிநேரம், அவர் செலவு செய்திருப்பார். b யெகோவாவின் வார்த்தை பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்ததற்கு இது இன்னொரு காரணம். பவுல் படு சுறுசுறுப்பானவராக, சூழ்நிலைக்கு ஏற்றபடி சாட்சி கொடுப்பவராக இருந்தார். அந்த நகரத்து மக்களுடைய வசதிக்கு ஏற்றபடி பவுல் தன்னுடைய அட்டவணையை மாற்றிக்கொண்டார். விளைவு? “ஆசிய மாகாணம் முழுவதிலும் வாழ்ந்துவந்த யூதர்களும் கிரேக்கர்களும் எஜமானின் வார்த்தையைக் கேட்டார்கள்.” (அப். 19:10) பவுல் முழுமையாகச் சாட்சி கொடுத்தார் என்பதில் சந்தேகமே இல்லை!

மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பிரசங்கிக்க நாம் முயற்சி எடுக்கிறோம்

12 இன்றைக்கு யெகோவாவின் சாட்சிகளாகிய நாமும் படு சுறுசுறுப்பானவர்களாக, சூழ்நிலைக்கு ஏற்றபடி சாட்சி கொடுப்பவர்களாக இருக்கிறோம். மக்களை எங்கே, எப்போது சந்திக்க முடியுமோ அங்கே, அப்போது அவர்களைச் சந்தித்துச் சாட்சி கொடுக்கிறோம். தெருக்கள், கடைகள், வண்டிகளை நிறுத்துமிடங்கள் என்று நிறைய இடங்களில் சாட்சி கொடுக்கிறோம். தொலைபேசி மூலமாகவும் கடிதம் மூலமாகவும் மக்களிடம் தொடர்புகொள்ள முயற்சி செய்கிறோம். அவர்களைச் சந்திக்க வீடு வீடாகவும் போகிறோம், அதுவும் அவர்கள் வீட்டில் இருக்கிற நேரம்பார்த்து அங்கே போக விசேஷ முயற்சி எடுக்கிறோம்.

பேய்களுடைய தாக்குதலின் மத்தியிலும் “யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது” (அப். 19:11-22)

13, 14. (அ) யெகோவா பவுலின் மூலம் என்ன செய்தார்? (ஆ) ஸ்கேவாவின் மகன்கள் என்ன தவறு செய்தார்கள், அதேபோல் கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த நிறைய பேர் என்ன தவறு செய்கிறார்கள்?

13 யெகோவா பவுலின் மூலம் ‘மாபெரும் அற்புதங்களைச் செய்துகொண்டே இருந்ததால்’ ஊழியத்தில் அருமையான பலன்கள் கிடைத்ததாக லூக்கா எழுதினார். சொல்லப்போனால், பவுல் பயன்படுத்திய கைக்குட்டைகளும் இடுப்பில் கட்டியிருந்த துண்டுகளும் சுகமில்லாதவர்கள்மீது வைக்கப்பட்டபோது நோய்கள் நீங்கின, பேய்கள் ஓடின. c (அப். 19:11, 12) சாத்தானுடைய சதிவேலைகள் இப்படித் தோல்வியடைவதைப் பார்த்து நிறைய பேர் ஆச்சரியப்பட்டார்கள், சிலரைத் தவிர!

14 “பல இடங்களுக்குப் பயணம் செய்து பேய்களை விரட்டிவந்த யூதர்கள் சிலர்,” பவுலைப் போலவே அற்புதங்களைச் செய்ய முயற்சி செய்தார்கள். இயேசுவின் பெயரிலும் பவுலின் பெயரிலும் பேய்களை ஓட்ட முயற்சி செய்தார்கள். உதாரணத்துக்கு, யூத தலைமைக் குருவாகிய ஸ்கேவாவின் ஏழு மகன்களும் அப்படிச் செய்ததாக லூக்கா சொல்கிறார். அப்போது, அந்தப் பேய் அவர்களைப் பார்த்து “எனக்கு இயேசுவைத் தெரியும், பவுலைத் தெரியும்; ஆனால், நீங்கள் யார்?” என்று கேட்டது. அதன்பின், பேய்பிடித்த மனிதன் அந்த ஏமாற்றுப் பேர்வழிகளைத் தாக்கி, காட்டு மிருகம்போல் அவர்கள்மீது பாய்ந்து, அவர்கள் எல்லாரையும் அமுக்கித் திணறடிக்கச் செய்தான்; அதனால் காயங்களுடன் அவர்கள் நிர்வாணமாக ஓடிப்போனார்கள். (அப். 19:13-16) இது, ‘யெகோவாவின் வார்த்தைக்கு’ கிடைத்த மாபெரும் வெற்றியாக இருந்தது; ஏனென்றால், பவுல் பெற்றிருந்த வல்லமைக்கும், பொய்மத ஏமாற்றுப் பேர்வழிகளுடைய கையாலாகாத்தனத்துக்கும் இருந்த வித்தியாசத்தை அந்தச் சம்பவம் நன்றாகவே எடுத்து காட்டியது. இன்றும்கூட லட்சக்கணக்கானவர்கள் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தினால் போதும் என்றும், “கிறிஸ்தவர்கள்” என்று தங்களை அழைத்துக்கொண்டால் போதும் என்றும் தவறாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இயேசு சுட்டிக்காட்டியபடி, அவருடைய தகப்பனுடைய விருப்பத்தைச் செய்கிறவர்களுக்கு மட்டுமே ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.—மத். 7:21-23.

15. ஆவியுலகத் தொடர்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் எபேசு மக்களின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?

15 ஸ்கேவாவின் மகன்களுக்கு ஏற்பட்ட அவமானம், மக்கள் மத்தியில் தேவபயத்தை உண்டாக்கியது; நிறைய பேர் இயேசுமேல் விசுவாசம் வைத்தார்கள், ஆவியுலகத் தொடர்பை விட்டுவிட்டார்கள். எபேசு நகரத்து மக்கள் மாயமந்திரப் பழக்கங்களில் ஊறிப்போயிருந்தார்கள். மந்திர வாசகங்களைப் போலவே பில்லிசூனியமும் தாயத்துக்களும் அங்கே சர்வ சாதாரணமாக இருந்தன. (இவை பெரும்பாலும் எழுத்துவடிவில் இருந்தன.) அந்தச் சம்பவத்துக்கு பிறகு, அங்கிருந்த அநேகர் தங்கள் மாயமந்திர புத்தகங்களைக் கொண்டுவந்து எல்லாருக்கும்முன் எரித்துப்போட்டார்கள்; இன்றைய கணக்குப்படி அது பல லட்சம் மதிப்புள்ளது. d “இப்படி, யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது” என்று லூக்கா எழுதுகிறார். (அப். 19:17-20) பொய் வணக்கம், பேய் வணக்கம் ஆகியவற்றின்மீது சத்தியத்துக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட வெற்றி அது! விசுவாசமுள்ள அந்த எபேசியர்கள் நமக்கு நல்ல முன்மாதிரிகள். நாமும்கூட, இன்று ஆவியுலகத் தொடர்பில் ஊறிப்போயிருக்கிற ஒரு உலகத்தில் வாழ்கிறோம். அதனால், ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட ஏதோவொரு பொருள் நம்மிடம் இருப்பது தெரிந்தால், அவர்கள் செய்தது போலவே நாமும் அதை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்! அருவருப்பான அப்படிப்பட்ட பழக்கவழக்கங்களைவிட்டு ஒதுங்கியிருக்க வேண்டும், அதற்காக என்ன தியாகம் செய்ய வேண்டியிருந்தாலும் சரி!

“பெரிய கலவரம் வெடித்தது” (அப். 19:23-41)

“நண்பர்களே, இந்தத் தொழில் நமக்கு நிறைய வருமானத்தைத் தருகிறது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.”​—அப்போஸ்தலர் 19:25

16, 17. (அ) தெமேத்திரியு எப்படி எபேசுவில் ஒரு பெரிய கலவரத்தைத் தூண்டிவிட்டான் என்று விவரியுங்கள். (ஆ) எபேசியர்கள் எப்படி மதவெறியோடு நடந்துகொண்டார்கள்?

16 “இந்த மார்க்கம் சம்பந்தமாகப் பெரிய கலவரம் வெடித்தது” என்று லூக்கா எழுதியபோது, சாத்தானுடைய சதிவேலை ஒன்றை விவரித்தார். லூக்கா எதையும் மிகைப்படுத்தி எழுதவில்லை, நடந்ததைத்தான் எழுதியிருந்தார். e (அப். 19:23) தெமேத்திரியு என்ற வெள்ளி ஆசாரி பிரச்சினையைக் கிளப்பினான். சக கைவினைஞர்களுடைய கவனத்தைக் கவருவதற்காக, தங்களுடைய சிலை விற்கும் தொழிலால் தங்கள் வாழ்க்கையே வளமாகியிருக்கிறது என்று முதலில் சொன்னான். கிறிஸ்தவர்கள் சிலை வணக்கம் செய்ய மாட்டார்கள் என்பதால், பவுலுடைய செய்தி தங்களுடைய தொழிலில் சரிவை ஏற்படும் என்று சொல்லி அவர்களை உசுப்பிவிட்டான். அதன்பின், தங்களுடைய அர்த்தமி தேவிக்கும் உலகப் புகழ்பெற்ற அவளுடைய கோவிலுக்கும் இருந்த “மதிப்பும் இல்லாமல் போய்விடும்” என்று எச்சரித்தான்; இப்படி, எபேசு நகரத்தாருடைய இனப்பெருமையையும் தேசப்பற்றையும் தூண்டிவிட்டான்.—அப். 19:24-27.

17 தெமேத்திரியு தான் நினைத்ததைச் சாதித்தான். அவனுடைய பேச்சைக் கேட்டதும் அந்த வெள்ளி ஆசாரிகள் “எபேசியர்களின் அர்த்தமியே மகா தேவி!” என்று கோஷம்போட ஆரம்பித்தார்கள்; நகரமே குழப்பத்தில் மூழ்கியது; அப்போது உருவாகிய வெறித்தனமான கும்பலைப் பற்றித்தான் இந்த அதிகாரத்தின் ஆரம்பத்தில் பார்த்தோம். f தியாக மனம் கொண்ட பவுல் அந்த அரங்கத்துக்குள் போய், கூடியிருந்த மக்களிடம் பேச விரும்பினார், ஆனால் ஆபத்தை விலைக்கு வாங்க வேண்டாம் என்று சொல்லி சீஷர்கள் அவரைத் தடுத்தார்கள். அலெக்சந்தர் என்ற ஒருவர் கூட்டத்துக்குமுன் நின்று பேச முயற்சி செய்தார். அவர் ஒரு யூதராக இருந்ததால், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே இருந்த வித்தியாசத்தை விளக்க ஆர்வமாக இருந்திருக்கலாம். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்தவர்கள் அதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கும் நிலையில் இருக்கவில்லை. அவர் ஒரு யூதர் என்று தெரிந்துகொண்டபோது, அவரைப் பேசவிடாமல், சுமார் இரண்டு மணிநேரத்துக்கு “எபேசியர்களின் அர்த்தமியே மகா தேவி!” என்று அவர்கள் விடாமல் கோஷம் போட்டார்கள். மதவெறி இன்றும் தொடர்கிறது. மக்களைக் கண்மூடித்தனமாகச் செயல்பட வைக்கிறது.—அப். 19:28-34.

18, 19. (அ) மாநகராட்சித் தலைவர் எபேசுவில் கூடிய கூட்டத்தை எப்படி அமைதிப்படுத்தினார்? (ஆ) யெகோவாவின் சாட்சிகள் சிலசமயம் அரசு அதிகாரிகளால் எப்படிப் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள், அதற்கு நம்முடைய பங்கில் நாம் என்ன செய்ய வேண்டும்?

18 கடைசியில், மாநகராட்சித் தலைவர் அந்தக் கூட்டத்தாரை அமைதிப்படுத்தினார். யோசித்து செயல்பட்ட இந்தத் திறமையான அதிகாரி கிறிஸ்தவர்களுக்காகப் பரிந்துபேசினார்; எபேசியருடைய கோவிலுக்கும் அர்த்தமி தேவிக்கும் அந்தக் கிறிஸ்தவர்களால் எந்த ஆபத்தும் வராது என்று கூட்டத்தில் இருந்த மக்களுக்கு உறுதியளித்தார்; அதோடு, பவுலும் அவரது நண்பர்களும் அந்தக் கோவிலுக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும், இப்படிப்பட்ட பிரச்சினைகளைச் சட்டப்படிதான் தீர்க்க வேண்டும் என்றும் சொன்னார். அதுமட்டுமல்ல, அவர்கள் அன்று செய்த கலவரத்துக்கு ரோம அதிகாரிகள் கடும் தண்டனை கொடுக்கலாம் என்ற முக்கியமான குறிப்பையும் சொன்னார். அத்துடன் அவர் அந்தக் கூட்டத்தைக் கலைத்தார். எரிமலையாக வெடிக்கவிருந்த பிரச்சினை அப்படியே பனிக்கட்டியாக உருகிப்போனது; இதற்குக் காரணம் அவருடைய நியாயமான வார்த்தைகள்தான்.—அப். 19:35-41.

19 விவேகமான அரசு அதிகாரி ஒருவர் இயேசுவின் சீஷர்களைப் பாதுகாக்க உதவியது இது முதல் தடவையும் அல்ல, கடைசி தடவையும் அல்ல. சொல்லப்போனால், கடைசி நாட்களைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் பார்த்த ஒரு தரிசனத்தில், இயேசுவின் சீஷர்களுக்கு எதிராகப் பாய்ந்துவந்த சாத்தானின் வெள்ளத்தை இந்தப் பூமி குடித்தது; இங்கே பூமி என்பது உலகத்தில் இருக்கிற முக்கிய அமைப்புகளில் உள்ளவர்களை அடையாளப்படுத்துகிறது. (வெளி. 12:15, 16) யெகோவாவின் மக்களுக்கு இவர்களிடமிருந்து உண்மையிலேயே உதவி கிடைத்திருக்கிறது. வணக்கத்துக்காக ஒன்றுகூடுவது மற்றும் நல்ல செய்தியைப் பிரசங்கிப்பது சம்பந்தமாக யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் உரிமைகளை ஆதரிக்கும் விதத்தில் நியாயமான நீதிபதிகள் எத்தனையோ வழக்குகளில் சாதகமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்கள். இந்த வழக்குகளில் வெற்றி கிடைத்ததற்கு நம்முடைய நல்ல நடத்தையும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பவுலின் நல்ல நடத்தையைப் பார்த்து எபேசுவிலிருந்த சில அரசு அதிகாரிகள் அவருடன் மரியாதையோடும் நட்போடும் பழகியிருக்கலாம்; அதனால்தான், அவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறையாக இருந்தார்கள். (அப். 19:31) நாமும் நம்முடைய நேர்மையான, மரியாதையான நடத்தையால் மற்றவர்களிடம் நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம். அதற்கு எங்கே, எப்போது, எப்படிப் பலன் கிடைக்கும் என்று நமக்கு இப்போது தெரியாது!

20. (அ) முதல் நூற்றாண்டிலும் இன்றும் யெகோவாவின் வார்த்தை தடைகளையெல்லாம் வென்றுவந்திருப்பதைப் பற்றி எப்படி உணருகிறீர்கள்? (ஆ) நம்முடைய நாளில் யெகோவா தருகிற வெற்றிகளைப் பார்த்து நீங்கள் என்ன செய்யத் தீர்மானித்திருக்கிறீர்கள்?

20 முதல் நூற்றாண்டில் ‘யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்த’ விதத்தைப் பற்றி வாசித்தபோது புல்லரித்தது, இல்லையா? நம்முடைய நாளில் யெகோவா தருகிற வெற்றிகளைப் பார்க்கும்போதும் நமக்கு அப்படித்தான் புல்லரிக்கிறது. அப்படிப்பட்ட வெற்றிகளில் நீங்களும் பங்கு வகிக்க விரும்புகிறீர்களா? அது எவ்வளவு சிறிய பங்காக இருந்தாலும் சரி, அப்படிச் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால், இதுவரை பார்த்த உதாரணங்களிலிருந்து இந்த குறிப்புகளைக் கற்றுக்கொள்ளுங்கள்: எப்போதும் மனத்தாழ்மையோடு இருங்கள்; யெகோவாவுடைய அமைப்பு செய்கிற மாற்றங்களை உடனடியாக ஏற்றுக்கொண்டு நடங்கள்; தொடர்ந்து கடினமாக உழையுங்கள்; ஆவியுலகத் தொடர்பை முழுமையாக ஒதுக்குங்கள்; நேர்மையான, மரியாதையான நடத்தையின் மூலம் உங்களால் முடிந்தளவு சிறப்பாகச் சாட்சி கொடுங்கள்.

a எபேசு—ஆசியாவின் தலைநகரம்” என்ற பெட்டியை, பக்கம் 161-ல் பாருங்கள்.

b பவுல் எபேசுவில் இருந்தபோது 1 கொரிந்தியர் கடிதத்தையும் எழுதினார்.

c நெற்றி வியர்வை கண்களில் வழியாதபடிக்கு பவுல் தன்னுடைய கைக்குட்டைகளை நெற்றியில் கட்டியிருந்திருக்கலாம். கிடைத்த நேரத்தில், ஒருவேளை விடியற்காலையில், கடினமான கூடார வேலையை அவர் செய்தபோது தன் இடுப்பில் துண்டுகளைக் கட்டியிருந்திருக்கலாம்.—அப். 20:34, 35.

d அவற்றின் மதிப்பு 50,000 வெள்ளிக் காசுகள் என்று லூக்கா சொல்கிறார். அவர் வெள்ளிக் காசு என்று சொன்னது தினாரியுவாக இருந்திருந்தால், ஒருவர் 50,000 நாட்களுக்கு, அதாவது கிட்டத்தட்ட 137 வருஷங்களுக்கு, வாரம் முழுவதும் வேலை செய்து சம்பாதிக்கும் பணத்தை அர்த்தப்படுத்தும்.

e இந்தச் சம்பவத்தை மனதில் வைத்துத்தான் “பிழைப்போம் என்ற நம்பிக்கையே போய்விட்டது” என்று பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதியிருந்ததாகச் சிலர் சொல்கிறார்கள். (2 கொ. 1:8) இருந்தாலும், அதைவிட ஆபத்தான சம்பவமும் அவர் மனதில் இருந்திருக்கலாம். ‘எபேசுவில் கொடிய மிருகங்களோடு போராடினேன்’ என்று அவர் எழுதியபோது, நிஜமாகவே ஒரு அரங்கத்தில் பயங்கரமான விலங்குகளோடு போராடியதை அர்த்தப்படுத்தியிருக்கலாம் அல்லது மனிதர்களால் தாக்கப்பட்டதை அர்த்தப்படுத்தியிருக்கலாம். (1 கொ. 15:32) இந்த இரண்டுமே நடந்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

f கைவினைஞர்களுடைய அப்படிப்பட்ட சங்கங்கள் ரொம்பவே சக்திவாய்ந்ததாக இருந்திருக்கலாம். உதாரணத்துக்கு, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, ரொட்டி சுடுபவர்களின் சங்கம் எபேசுவில் இதுபோன்ற பயங்கரமான கலவரத்தைத் தூண்டிவிட்டதென ஒரு புத்தகம் சொல்கிறது.